திருப்புவனம்
அருகில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணி புரிந்து வந்தவர்
அஜித்குமார் என்ற இளைஞர். அவர் நகை காணாமல் போனது சம்பந்தமாக தனிப்படை போலீசாரின்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதையால் 29..6.25 அன்று கொடூரமாகக்
கொல்லப்பட்டுள்ளார்.
முதல்
தகவல் அறிக்கை கூடப் பதியப்படாமல், விசாரணை என்ற பெயரில் மூன்று நாட்கள் பல்வேறு
இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு அந்த இளைஞர்
போலிசாரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப்
படுகொலைக்கு எதிராக மக்கள் மத்தியிலிருந்தும், எதிர்க் கட்சிகளிடமிருந்தும், தனது
கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் பரந்த அளவில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதால்,
மக்களைச் சமாதானப்படுத்தவும், எதிர்ப்பை மழுங்கடிக்கவும் ஸ்டாலின் தலைமையிலான அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அஜித்குமாரின் குடும்பத்திற்கு
ரூ.5 இலட்சம் பணமும், வீட்டு மனைப் பட்டாவும், அவருடைய தம்பி நவீன் குமாருக்கு
ஆவின் நிறுவனத்தில் வேலையும் தந்துள்ளது. தனிப்படையில் இருந்த போலீஸ்காரர்கள்
ஐந்து பேரைக் கைது செய்துள்ளது. போலீஸ் துணை கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்துள்ளது.
மாவட்ட போலீஸ் கண்பாணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.
2026
சட்டசபைத் தேர்தலில் தங்கள் கூட்டணியை யாரும் அசைக்க முடியாது என்று கூறி வரும்
ஸ்டாலினுக்கு போலீஸ் சித்திரவதையில் அஜித்குமார் இறந்தது பெரும் பின்னடைவைக்
கொண்டு வரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சேதத்தைச் சரிக்கட்டவே அவருடைய
அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை அவசர அவசரமாக எடுத்துள்ளது.
அஜித்
குமாரின் கொலை ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. போலீஸ் காவலில் சாதாரண எளிய மக்கள்
சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுவது புதிய விடயமல்ல. இவை தமிழ்
நாட்டிலும் , இந்திய அளவிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்தான். தேசிய மனித உரிமை
ஆணையத்தின் புள்ளி விவரப்படி 2021-2023 காலகட்டத்தில் மட்டும் 2000 க்கும்
மேற்பட்ட மரணங்கள் நடந்துள்ளன. அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒருவர் போலீஸ்
காவலில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு
முறை போலீஸ் சித்திரவதையாலும், அடக்குமுறையாலும், துப்பாக்கிச் சூட்டாலும் மக்கள்
கொல்லப்படும்போதும் எதிர்க்கட்சிகள் அவற்றைக் கண்டிப்பதும், மக்கள் போராடுவதும்
வாடிக்கையாக இருக்கும் அதே சமயத்தில், போலீசுக்கு ஆதரவாக இருந்து, போலீஸ் தரப்பில்
கொடுக்கும் அறிக்கையை வாசித்து போலீசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும் ஆளும்
கட்சியின் பணியாக இருந்து வருகிறது.
சாத்தான்குளம்
இரட்டைப் படுகொலை நடந்தபோது காவல் சித்ரவதைக்கு எதிரான ஒரு கூட்டியக்கம்
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது.. அதில் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க.வும்
அங்கம் வகித்தது. ஆனால் இப்பொழுது அதே கட்சி ஆட்சிக்கு வந்தும் காவல்
சித்திரவதைகளும் படுகொலைகளும் தொடர்கதையாகவே இருக்கின்றன.
“இந்தியக்
காவல் துறையின் குற்றச் செயல்களை விட இந்தியாவில் உள்ள எந்த ஒரு சட்டவிரோதக்
குழுவும் அதிகமான குற்றச் செயல்களைச் செய்யவில்லை” என்று அலகாபாத்
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.என். முல்லா கூறுகிறார். அந்த அளவுக்கு இந்தியாவிலேயே
அதிக அளவு குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்பாக போலீஸ் உள்ளது.
போலீசின்
கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாவதும், படுகொலை செய்யப்படுவதும் ஏழை, எளிய
உழைக்கும் மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும்தான். முதலாளிகளும், கருப்பு பண
முதலைகளும், கனிம வளக் கொள்ளையர்களும் எவ்வளவு பெரிய குற்றங்களைச் செய்தாலும்
அவர்கள் மீது போலீசின் விசாரணை பாயாது; அவர்களின் சுண்டு விரலைக் கூட போலீஸ்
தீண்டாது; அவர்கள் வீசும் எலும்புத் துண்டுக்காக விசுவாசமுள்ள நாயாகச் செயல்படும்.
தன்னுடைய
காலனிய ஆட்சிக் காலத்தில் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக பிரிட்டிசாரால்
ஏற்படுத்தப்பட்ட அதிகாரவர்க்க அமைப்புத்தான் போலீசும், நீதித்துறை,
ஐ.சி.எஸ்.(Indian Civil Service), ஐ.பி. (Indian Imperial Police)போன்ற பிற
அதிகாரவர்க்க அமைப்புகளும். குறிப்பாக 1857ல் நடந்த முதல் இந்தியச் சுதந்திரப்
போருக்குப் பிறகு மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காக இந்தியன் இம்பீரியல்
போலீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1947 ல் பிரிட்டிசாரிடமிருந்து இந்திய
முதலாளிகள் அதிகாரத்தைப் பெற்ற பிறகு, தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்
கொள்ளவும், சுரண்டலைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழிலாளர்களையும், பிற உழைக்கும்
மக்களையும் கட்டுக்குள் வைக்கவும் அந்த அடக்குமுறை அமைப்பை அப்படியே எடுத்துக்
கொண்டனர். சிற்சில பெயர் மாற்றங்களை மட்டுமே செய்து கொண்டனர்.
போலீஸ்,
இராணுவம், நீதித்துறை போன்ற நிரந்தரமான அதிகார வர்க்க அமைப்புகள்தான் இங்கு மக்களை
ஆளும் அமைப்பாகவும், மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அமைப்பாகவும் உள்ளது.
உண்மையில் அரசு என்பது ஒட்டுமொத்தமான இந்த அமைப்புகளைத்தான் குறிக்கிறது. இந்த
அரசு முதலாளிகளின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக நிறுவப்பட்டது. இதுதான் நிரந்தரமாக
ஆட்சி செய்து வருகிறது.
அரசாங்கம்
என்பது மக்களால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கும் கட்சியால்
அமைக்கப்படுவது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிகளின் நலன்களுக்காவே
செயல்படும். ஆனால் ஆட்சியை நடத்துவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சியால்
அமைக்கப்படும் அரசாங்கம்தான் என்ற போலியான தோற்றத்தை இந்தக் கட்சிகள் ஏற்படுத்தி மக்களை
ஏமாற்றி வருகின்றன.
இந்த
அதிகார வர்க்கத்தின் மீது நிர்வாகத்தை நடத்தும் அமைச்சரவைக்கு மட்டுமே கட்டுப்பாடு
உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளான சட்ட மன்ற
உறுப்பினர்களுக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அதிகார வர்க்க அமைப்பைப் பகைத்துக் கொள்ள
விரும்பாது. ஏனென்றால் அதிகாரவர்க்க அமைப்பைச் சார்ந்தே அவர்கள் ஆட்சி நடத்த
முடியும். அதிகாரவர்க்கம் ஆட்சியிலுள்ள கட்சிக்கு ஒத்துழைக்காவிட்டால், ஆட்சியில்
உள்ள கட்சிக்குக் கட்டுப்படாமல் அதற்கு எதிராகச் சதி வேலை செய்தால் நாட்டில்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்படும். அதன் காரணமாக
மக்களின் கோபம் ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பும். ஆட்சி விரைவில் வீழ்ந்து
விடும். அதனால்தான் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது போலீசாரின் கொடுமைகளை
எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் போலீசாரின்
சித்திரவதைகளையும், அவர்கள் செய்யும் படுகொலைகளையும் நியாயப்படுத்துகின்றன. போலீஸ்
தயாரித்து அளிக்கும் அறிக்கைகளையே அமைச்சர்களும் சட்டசபையில் வாசிக்கின்றனர்.
ஆட்சிக்கு
வரும் கட்சி அதிகாரவர்க்கத்துடன் பகைத்துக் கொள்ளாது; அதனுடன் இணங்கியே செல்லும்;
அதிகாரவர்க்கத்துடன் இணைந்து முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்யும்; முதலாளிய
வர்க்கத்திற்குத் தேவையான சட்டங்களை இயற்றும்; உரிமங்கள் வழங்குதல், அரசாங்க
ஒப்பந்தங்கள் வழங்குதல், முதலாளிகளுக்குச் சலுகைகள் வழங்குதல் ஆகிய வகைகளில்
கிடைக்கும் இலஞ்ச லாவண்யங்களில் அதிகாரவர்க்கத்துடன் பங்கு போட்டுக் கொள்ளும்.;
தன்னுடைய சொத்துகளைப் பெருக்கிக் கொள்ளும். இவ்வாறு இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடும்
ஆளும் கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்போது அடுத்த தேர்தலில்
ஆட்சியிலிருந்து அகற்றப்படும். புதிய கட்சி ஆட்சிக்கு வந்ததும் இதே கதை தொடரும்.
ஆனால் ஆளும் கட்சியுடன் கூட்டுக் களவாணியாக இருக்கும் அதிகாரவர்க்கம் மட்டும்
நிரந்தரமாக நீடிக்கும். மக்களுக்கு அதன் மீது எதிர்ப்பு இருந்தாலும் அதை அகற்ற
முடியாது. ஏனென்றால் அது நிரந்தரமான அமைப்பு.
அதிகாரவர்க்கம்
எந்தவிதமான பாதிப்புகளுக்கும் உள்ளாவதில்லை. குற்றச் செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள்
மீது துறை ரீதியான நடவடிக்கை என்று கூறி அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப
வழிவகுக்கப்படுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை
வழங்கப்படாமல் பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. அப்படி குற்றச் செயல்களில்
ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டாலும் அதற்கு எப்பொழுதும் அதிகாரவர்க்கத்தின் மிகவும்
கீழ் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே பலி ஆடுகளாக்கப்படுவார்கள். அதிகாரவர்க்கத்தின்
உயர் மட்ட அதிகாரிகள் எப்பொழுதும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
போலீசாரின்
சித்திரைவதைகளுக்கும் கொடூரமான படுகொலைகளுக்கும் முடிவு கட்ட வேண்டுமானால்
அதிகாரவர்க்க ஆட்சிமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்
பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றும் உரிமை மட்டுமல்லாமல், சட்டத்தை நடைமுறைப்படுத்தும்
அதிகாரமும் வர வேண்டும். போலீஸ் அதிகாரிகள், மற்றும் அனைத்து உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளையும்,
நீதிபதிகளையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும், அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில்
அவர்களைத் திருப்பி அழைக்கும் அதிகாரமும் மக்களின் கைகளுக்கு வர வேண்டும். அப்பொழுதுதான்
உண்மையான மக்களாட்சி மலரும்.
மு.வசந்தகுமார்
Comments
Post a Comment