(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
உலகப்புகழ்பெற்ற அறிவியல்
அறிஞர். இந்தக்
கட்டுரை மன்த்லி
ரிவ்யூ முதல்
இதழில் (1949 மே)
முதன்முதலாக வெளியிடப்பட்டது. அது பின்னர்
மன்த்லி ரிவ்யூ
இதழில் ஐம்பதாவது
ஆண்டு (1998 மே
இல்) வெளியிடப்பட்டது.)
பொருளாதாரம்
மற்றும் சமூகப் பிரச்சனைகளில் நிபுணத்துவம் பெற்றிராத ஒருவர் சோசலிசம் பற்றிக் கருத்துகளைத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? பல காரணங்களுக்காக அது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றே நான் நம்புகிறேன்.
இந்த
விடயத்தை நாம் முதலில் அறிவியல் அறிவின் கண்ணோட்டத்திலிருந்து கருத்தில் எடுத்துக்கொள்வோம். வானவியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் எந்த சாராம்சமான முறைமையியல் வேறுபாடுகளும் இல்லை என்று தோன்றலாம். நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள பரஸ்பரத் தொடர்பை முடிந்தவரை தெளிவாகப் புரிந்துகொள்ளச் செய்வதற்காக, இந்த நிகழ்வுகளின் சுற்றுவட்டக்குழு பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிகளைக் கண்டுபிடிக்க இரு துறைகளிலும் உள்ள அறிவியலாளர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மெய்நிலையில், அப்படிப்பட்ட முறைமையியல் வேறுபாடுகள் நிலவத்தான் செய்கின்றன. பொருளாதார நிகழ்வுகள் பலநேரங்களில் பல காரணிகளால் பாதிக்கப்படுகின்றன, அவற்றைத் தனித்தனியாக மதிப்பீடு செய்வது எளிதல்ல. எனவே இந்தச் சூழ்நிலைகளால் பொருளாதாரத் துறையில் பொதுவிதிகளின் கண்டுபிடிப்பு கடினமாகிறது. மேலும் கூடுதலாக, மனித வரலாற்றின் நாகரிக காலகட்டம் என்று சொல்லிக்கொள்ளப்படுகிற காலத்தின் தொடக்கத்திலிருந்து திரண்டுவந்துள்ள அனுபவம் பெருமளவுக்கு பல்வேறு காரணங்களின் செல்வாக்குக்கும் வரம்புக்கும் உட்பட்டுள்ளது. அந்தக் காரணங்கள் பொருளாதாரத்தன்மையை மட்டுமே கொண்டவை அல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றின் பெரும்பாலான பெரிய அரசுகள் படையெடுப்பின் காரணமாகவே நிலைபெற்றிருந்துள்ளன. வெற்றிபெற்ற மக்கள் வெற்றிகொண்ட நாட்டின் சலுகைபெற்ற வர்க்கத்தினராகத் தங்களை சட்டபூர்வமாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறுவிக்கொண்டார்கள். அவர்கள் நில உரிமையை தங்களுக்கான தனியுரிமையாக ஆக்கிக்கொண்டர்கள், மேலும் தங்கள் மத்தியிலிருந்தே மதகுருக்களையும் நியமித்துக்கொண்டார்கள். அந்த மதகுருக்கள் கல்வியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், அவர்கள் சமுதாயத்தின் வர்க்கப் பிரிவினையை நிரந்தரமான நிறுவன அமைப்பாக ஏற்படுத்திக்கொண்டு, சமூக விதிமுறைகளை உருவாக்கினார்கள். மக்கள் தங்களை அறியாமலே சமூக நடத்தைகளுக்கான வழிகாட்டுதல்களாக அந்த விதிமுறைகளை மிகப்பெரிய அளவுக்கு ஏற்றுக்கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்.
ஆனால்
டார்ஸ்டீன் வெப்லான் மனித வளர்ச்சியின் “உயிருண்ணிக் கட்டம் (predatory phase)” என்று குறிப்பிடுகிற வரலாற்றுப் பாரம்பரியம் என்ற கடந்தகாலத்தை உண்மையில் நாம் எங்குமே கடந்துவரவில்லை. அந்தக் கட்டத்துக்கு உரிய, அறியக் கிடைக்கிற பொருளாதாரக் காரணிகளும் அவற்றிலிருந்து நாம் வந்தடையக்கூடிய விதிகளும் கூட பிற கட்டங்களுக்குப் பொருத்தக்கூடியவை அல்ல. சோசலிசத்தின் மெய்யான நோக்கம் துல்லியமாக மனித வளர்ச்சியின் உயிருண்ணிக் கட்டத்தைக் கடந்து முன்னேறிச் செல்வதாகும், பொருளாதார அறிவியல், அதன் தற்போதைய நிலையில், எதிர்காலச் சோசலிச சமூகம் பற்றிச் சிறிதளவுகூட எடுத்துக்காட்ட முடியாது.
இரண்டாவதாக,
சோசலிசம் ஒரு சமூக அறத்தை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும் அறிவியலால் இலக்குகளை உருவாக்க முடியாது, அவற்றை மனிதர்களிடம் நிறுவ முடியாது; அறிவியல் அதிகபட்சம் சில இலக்குகளை அடைவதற்கான வழிகளை வழங்க முடியும். ஆனால் அந்த இலக்குகளே உயர்ந்த அற நெறிகளைக் கொண்ட ஆளுமைகளால் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றன --- இந்த இலக்குகள் குறைப் பிரவசமாக இல்லாமல், ஆற்றலும் உத்வேகமும் கொண்டவையாக இருந்தால் --- அவை பகுதியளவுக்கு தம்முணர்வின்றி சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கிற பல மனிதர்களால் பின்பற்றப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இக்காரணங்களுக்காக
மனிதப் பிரச்சனைகள் என்று வரும் போது, அறிவியலையும் அறிவியல் முறைமைகளையும் மிகைமதிப்பீடு செய்யாமல் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சமுதாய அமைப்பைப் பாதிக்கும் பிரச்கனைகளைக் குறித்து நிபுணர்கள் மட்டுமே கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உடையவர்கள் என்று நாம் கருதிக்கொள்ளக்கூடாது.
மனித
சமுதாயம் நெருக்கடியான காலத்தினூடாகச் சென்றுகொண்டிருக்கிறது, அதன் நிலைத்தன்மை மோசமாகச் சிதறுண்டிருக்கிறது என்று சிறிது காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தனிநபர்கள் தாங்கள் சார்ந்துள்ள குழு, பெரிதானாலும் சிறிதானாலும், அதன்பால் அக்கறையற்றவர்களாக அல்லது பகைமையாகக் கூட உணர்வது இந்தச் சூழலின் தனித்தன்மையாக இருக்கிறது. நான் சொல்ல வருவதைச் சித்தரித்துக் காட்டுவதற்கு எனது தனிப்பட்ட அனுபவம் ஒன்றை பதிவு செய்கிறேன். அறிவாளியும் நல்ல மனப்பான்மை கொண்டவருமான ஒருவரிடம் இன்னொரு போருக்கான அச்சுறுத்தல் குறித்து நான் அண்மையில் விவாதித்தேன். எனது கருத்தின்படி அந்தப் போர் மனித இனத்தின் இருத்தலை தீவிரமான அபாயத்துக்கு உள்ளாக்கும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் மேலான அமைப்பு ஒன்றால்தான் அந்த அபாயத்திலிருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டேன். “நீங்கள் ஏன் மனித இனம் அழிவதை இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்” என்று என்னுடன் உரையாடலில் ஈடுபட்டவர் மிகவும் அமைதியாகவும் அசாதாரணமான முறையிலும் கேட்டார்.
ஒரு
நூற்றாண்டுக்கு முன்பு கூட இந்த வகையிலான கூற்றினை ஒருவர் இவ்வளவு எளிதாகக் கூறியிருக்க மாட்டார் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். இது தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு வீணாக முயற்சி செய்த அல்லது வெற்றிபெறுவதில் ஏறத்தாழ நம்பிக்கையை இழந்துவிட்ட ஒருவரின் கூற்றாகும் இது வேதனை மிக்க தனிமை மற்றும் தனிமைப்படுதலின் வெளிப்பாடாகும். இன்றைய காலத்தில் ஏராளமான மக்கள் இது போன்ற துன்பத்தில் இருந்துவருகிறார்கள். இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து வெளிவர ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படிப்பட்ட
கேள்விகளை எழுப்பது எளிது, ஆனால் இவற்றுக்கு எந்த வகையிலும் உறுதியான பதிலை அளிப்பது கடினம். இருப்பினும், என்னால் முடிந்த வரையிலும் நான் முயற்சி செய்தாக வேண்டும். இருந்தாலும் நமது உணர்வுகளும் முயற்சிகளும் பலநேரங்களில் முரண்பாடாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன, எளிய சூத்திரங்கள் மூலம் அவற்றை எளிமையாக வெளிப்படுத்த முடியாது, இதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.
மனிதன்
ஒரே நேரத்தில் தனிப்பட்ட மனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிப்பட்ட மனிதனாக, அவன் தனது சொந்த இருத்தலையும் அவனுக்கு நெருக்கமானவர்களின் இருத்தலையும் பாதுகாக்கவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் முயற்சி செய்கிறான். சமூக மனிதனாக, அவன் சக மனிதர்களின் அங்கீகாரத்தையும் நேசத்தையும் பெறவும், அவர்களுடைய இன்பங்களில் பங்கு பெறவும், அவர்களுடைய துயரத்தில் ஆறுதல் கூறவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முயற்சி செய்கிறான். இந்த வேறுபட்ட, அடிக்கடி முரண்படுகிற முயற்சிகள் மனிதனின் சிறப்பான பண்புகளுக்கும் காரணமாகின்றன, மேலும் அவற்றின் குறிப்பான சேர்க்கை ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு உள்ளார்ந்த சமநிலையை அடைய முடியுமென்பதையும் சமுதாயத்தின் நலனுக்காகப் பங்களிப்புச் செய்யமுடியும் என்பதையும் தீர்மானிக்கிறது. இந்த இரண்டு முயற்சிகளின் ஒப்பீட்டளவிலான வலிமை முதன்மையாக மரபு வழியால் நிறுவப்படுகிறது. ஆனால் இறுதியாகத் தோன்றும் ஆளுமை பெருமளவுக்கு, இந்த வளர்ச்சியின்போது ஒரு மனிதன் தான் கண்டடைகிற வாழ்க்கைச் சூழலால், அவன் வளர்கிற சமுதாயத்தின் கட்டமைப்பால், அந்தச் சமுதாயத்தின் பாரம்பரியத்தால், நடத்தைகள் குறித்த அந்த சமுதாயத்தின் மதிப்பீட்டால் உருவாகிறது. “சமுதாயம்” என்ற அருவமான கருத்தாக்கம் தனிமனிதனுக்கு, அவனது சமகாலத்தவருடனும் முந்தைய தலைமுறை ,மக்கள் அனைவருடனும் அவனுக்குள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் மொத்தமாகத்தான் பொருள்படும். தனிநபரால் சிந்திக்கவும் உணரவும், முயற்சி செய்யவும், தானகவே உழைக்கவும் இயலும், ஆனால் அவன் – அவனுடைய உடல்ரீதியான, அறிவுரீதியான, உணர்வுரீதியான இருத்தலுக்கு மிகுதியான அளவுக்குச் சமுதாயத்தைச் சார்ந்திருக்கிறான் --
சமுதாயச் சட்டகத்துக்கு வெளியே அவனைப் பற்றி எண்ணிப்பார்ப்பதும், அவனைப் பற்றிப் புரிந்துகொள்வதும் சாத்தியமில்லை. அவனுக்கான உணவு, உடை, வீடு, உழைப்புக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், மற்றும் சிந்தனையின் பெரும்பகுதியான உள்ளடக்கம் ஆகியவற்றை “சமுதாயம்” தான் அளிக்கிறது, “சமுதாயம்” என்ற சிறிய சொல்லுக்குப் பின்னால் மறைந்துள்ள கடந்தகால மற்றும் நிகழ்காலத்தின் கோடிக்கணக்கான மக்களின் சாதனைகள்தான் அவனுடைய வாழ்க்கை உழைப்பின் மூலமாகச் சாத்தியமாவதற்குக்
காரணமாக இருக்கின்றன.
ஆகவே,
தனிமனிதன் சமுதாயத்தைச் சார்ந்திருப்பது இயற்கையின் நியதி, -- எறும்புகள் மற்றும் தேனீக்களின் நேர்வில் போல ---- அதை அழிக்க முடியாது. இருப்பினும், எறும்புகள் மற்றும் தேனீக்களின் ஒட்டுமொத்த உயிர் வாழ்க்கை நிகழ்ச்சிப்போக்கு இறுக்கமான, மரபுவழிப்பட்ட உள்ளுணர்வுகளால் மிகச்சிறிய விவரங்களுக்குள் அடக்கப்படுகிறது, அதே வேளையில் மனிதர்களின் சமூக வடிவமைப்பும் பரஸ்பர உறவுகளும் மிகவும் பலதரப்பட்டவை, மாற்றத்திற்கு உள்ளாகக்கூடியவை. நினைவுகள், புதிய சேர்க்கைகளை உருவாக்கிக்கொள்ளக் கூடிய திறன், வாய்மொழித் தகவல் பரிமாற்றக் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன, அவை உயிரியல் தேவைகளால் திணிக்கப்படுபவை அல்ல. அப்படிப்பட்ட வளர்ச்சிகள் மரபுவழியிலும் நிறுவனங்களிலும் அமைப்புக்களிலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, இலக்கியத்தில், அறிவியல் மற்றும் பொறியியல் சாதனைகளில், கலைப் படைப்புக்களில் தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன. குறிப்பிட்ட ஒரு பொருளில், மனிதன் தனது சொந்த நடத்தையின் மூலமும் தனது வாழ்க்கையின் மீது செல்வாக்குச் செலுத்த முடிவதும், அந்த நிகழ்ச்சிப்போக்கில் உணர்வுபூர்வமான சிந்தனை மற்றும் விருப்பம் ஒரு பங்கினை வகிக்க முடிவதும் எவ்வாறு நிகழ்கிறது என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
நாம்
நிலையானது என்றும் மாற்றமுடியாதது என்றும் கருதுகின்ற உயிரியல் கட்டமைப்பை, மனிதன் பிறப்பிலேயே மரபுவழி மூலமாகப் பெறுகிறான், இதில் மனித இனத்திற்கே உரிய பண்புகளான இயற்கைத் தூண்டல்களும் அடங்கும். மேலும் கூடுதலாக, அவனுடைய வாழ்க்கைக் காலத்தில், அவன் கலாச்சாரக் கட்டமைப்பையும் பெறுகிறான், அதை அவன் சமுதாயத்திலிருந்து தகவல் பரிமாற்றம் மூலமாகவும் பிற பல்வேறு வகைப்பட்ட தாக்கங்கள் மூலமாகவும் அடைகிறான். இந்தக் கலாச்சாரக் கட்டமைப்புத்தான் காலப் போக்கில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியதாக இருக்கிறது, மேலும் இதுவே தனிநபருக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவை மிகப்பெரிய அளவுக்குத் தீர்மானிக்கிறது. மேலோங்கியிருக்கும் கலாச்சார வடிவங்கள் மற்றும் சமுதாயத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிற அமைப்பு வகைகளைச் சார்ந்து மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவுக்கு வேறுபடலாம் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுபவற்றை ஒப்பீட்டு ஆய்வு செய்ததன் மூலம் நவீன மானுடவியல் நமக்குக் கற்பித்திருக்கிறது. இதனை, மனிதர்கள் அவர்களுடைய உயிரியல் கட்டமைப்பு காரணமாக, ஒருவரை ஒருவர் அழித்தொழிப்பது அல்லது கொடூரமான, சுயமாகச் சுமத்திக்கொண்ட தலைவிதியைச் சார்ந்திருப்பதற்கு விதிக்கப்படவில்லை என்பதை மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தப் பாடுபட்டுக்கொண்டிருப்போர், தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.
மனித
வாழ்க்கையை முடிந்தவரை மனநிறைவளிப்பதாக ஆக்குவதற்கு சமுதாயத்தின் கட்டமைப்பும் மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வொமானால், நம்மால் மாற்றியமைக்க முடியாத சில நிலைமைகள் இருக்கின்றன என்ற உண்மையைக் குறித்து எப்பொழுதும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டது போல, மனிதனின் உயிரியல் இயல்பு, அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், மாற்றத்துக்கு உட்பட்டவை அல்ல. மேலும், கடந்த சில நூற்றாண்டுகளின் தொழில்நுட்பம் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சிகள் இங்கு நிலையாக இருந்துவிடக்கூடிய நிலைமைகளை உருவாக்கியுள்ளன. தங்களுடைய தொடர்ச்சியான இருத்தலுக்குத் தவிர்க்கமுடியாத பொருட்களுடன் ஒப்பீட்டளவில் நெருக்கமாக குடியமர்ந்துவிட்ட மக்கள்தொகையினரில், தீவிரமான வேலைப் பிரிவினையும் உயர்ந்த அளவில் மையப்படுத்தப்பட்ட உற்பத்திக் கருவிகளும் முற்றமுழுக்கத் தேவையாக இருக்கின்றன. தனிநபர்கள் அல்லது ஒப்பீட்டளவில் சிறிய குழுக்கள் முற்றிலும் தன்னிறைவுடன் இருக்க முடிந்துள்ள --திரும்பிப்பார்த்தால் மிகவும் அமைதியானதாகத் தெரிகிற --- காலம் மலையேறிவிட்டது. மனித இனம் இப்போதும் கூட பூமியில் உற்பத்தியையும் நுகர்வையும் கொண்ட சமூகமாகத்தான்
இருக்கிறது என்று கூறுவது மிகையாக இருக்காது.
நமது
காலத்தின் நெருக்கடியின் சாராம்சமாக இருப்பது எது என்பது குறித்து நான் சுருக்கமாகச் சுட்டிக்காட்டக் கூடிய கட்டத்துக்கு இப்போது வந்துள்ளேன். அது தனிநபருக்கு சமுதாயத்துடன் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் தான் சமுதாயத்தைச் சார்ந்திருப்பது குறித்து எப்போதையும் விட உணர்வுபூர்வமானவராக ஆகியிருக்கிறார். ஆனால் அவர் இந்தச் சார்புநிலையை ஒரு நேர்மறையான சொத்தாக, ஓர் உயிரியல் பிணைப்பாக, ஒரு பாதுகாப்புச் சக்தியாக அனுபவிப்பதில்லை, மாறாக தனது இயற்கையான உரிமைகளுக்கு, அல்லது அவனுடைய பொருளாதார இருத்தலுக்குக் கூட அச்சுறுத்தலாகக் கருதுகிறான். மேலும், சமுதாயத்தில் அவனுடைய நிலை என்னவென்றால், அவனுடைய உருவாக்கத்தின் தன்முனைப்புகள் இடையறாமல் வலிமை அடைந்து வருகின்றன. அதே வேளையில் இற்கையாகவே பலவீனமாக இருக்கிற அவனுடைய சமூக உந்துதல்கள் படிப்படியாக சீர்குலைந்து வருகின்றன அனைத்து மனிதர்களும், சமுதாயத்தில் அவர்களுடைய நிலை என்னவாக இருந்தாலும் இந்தச் சீர்குலைவு நிகழ்ச்சிப்போக்கால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்களை அறியாமலேயே தங்கள் சொந்தத் தன்முனைப்பின் சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்கள் பாதுகாப்பின்மையை, தனிமையை, உணர்கிறார்கள். அப்பாவித்தனமான, எளிய, கபடற்ற வாழ்க்கை இன்பம் பறிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். மனித வாழ்க்கை, குறுகியதாக, மோசமான அபாயமிக்கதாக இருப்பதால், சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதன் மூலமாக மட்டுமே மனிதனால் வாழ்க்கையின் பொருளைக் கண்டறிய முடியும்.
எனது
கருத்துப்படி, இன்று இருக்கும் முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே தீமையின் மெய்யான ஊற்றுக்கண் ஆகும். நம்முன்னே உற்பத்தியாளர்களின் ஒரு பெரிய சமூகத்தைக் காண்கிறோம், அதன் உறுப்பினர்கள் அவர்களுடைய கூட்டு உழைப்பின் பயன்களை, வலுக்கட்டாயமாக அல்லாமல் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் பறித்துக் கொள்வதற்காக முடிவின்றி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விடயம் தொடர்பில், உற்பத்தி சாதனங்கள், அதாவது, நுகர்பொருட்களையும் முதலீட்டு சரக்குகளையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உற்பத்தித் திறன் முழுவதுமாக, --- சட்டபூர்வமாகவும் பெரும்பகுதியுமாகவும் கூட – தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன.
எளிமையாகச்
சொல்வதற்காக, பின்வரும் இந்த விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடமை உரிமையில் பங்குபெற்றிராத அனைவரையும், நான் “தொழிலாளர்கள்” என்று குறிப்பிடுகிறேன். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளரின் உழைப்புச் சக்தியை விலைகொடுத்து வாங்கிக்கொள்ளும் நிலையில் இருக்கிறார். உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்தி, தொழிலாளர் புதிய பண்டத்தை உற்பத்தி செய்கிறார், அந்தப் பண்டம் முதலாளியின் சொத்தாக ஆகிவிடுகிறது. இந்த நிகழ்ச்சிப்போக்கின் சாரமான அம்சம் தொழிலாளர் செய்கிற உற்பத்திக்கும் அவருக்கு அளிக்கப்படும் ஊதியத்துக்கும் இடையிலான உறவில் இருக்கிறது, இரண்டுமே மெய்யான மதிப்பில் அளவிடப்படுகிறது. தொழிலாளர் ஒப்பந்தத்தைப் பொருத்தவரை “சுதந்திரமானது,” தொழிலாளர் பெறுகிற ஊதியம் அவர் உற்பத்தி செய்கிற பொருட்களின் மெய்யான மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக தொழிலாளரின் குறைந்தபட்சத் தேவை அடிப்படையிலும் முதலாளிகளுக்குத் தேவைப்படுகிற உழைப்புச்சக்திக்கும் வேலைக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளருக்கான ஊதியம் அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை கோட்பாட்டு அடிப்படையிலும் கூடப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.
தனியார்
மூலதனம் சிலருடைய கரங்களில் குவிகிறது. அதற்கு ஒரு காரணம் முதலாளிகள் மத்தியில் உள்ள
போட்டி; இன்னொரு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப்பிரிவினை அதிகரிப்பும் சிறிய உற்பத்தி அலகுகளை ஒழித்து, பெரிய மிகப்பெரிய உற்பத்தி அலகுகளை உருவாக்குவதை ஊக்குவிக்கின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக, ஜனநாயகரீதியாக அமைக்கப்பட்ட, அரசியல் சமுதாயத்தால் கூட தடுத்துநிறுத்த முடியாத பெரும் அதிகாரத்துடன் தனியார் மூலதனத்தின் ஒரு கும்பலாட்சி உருவாகிறது. இது உண்மைதான் ஏனென்றால் சட்டமியற்றும் அமைப்புக்களின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தெரிவு செய்யப்படுகிறார்கள், அக்கட்சிகள் தனியார் முதலாளிகளால் பெருமளவுக்கு
நிதியளிக்கப்படுகிறார்கள், அல்லது அவர்களின் செல்வாக்குக்கு உட்படுகிறார்கள், முதலாளிகள் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் வாக்காளர்களை சட்டமியற்றும் அமைப்பிலிருந்து பிரித்துவிடுகிறார்கள். அதன் விளைவாக மக்களின் பிரதிநிதிகள் உண்மையில் மக்கள்தொகையில் உள்ள ஏழைகளின் நலன்களைப் போதுமான அளவுக்குப் பாதுகாப்பதில்லை. மேலும், நிலவும் நிலைமைகளில் தனியார் முதலாளிகள் தொடர்பு மூலாதாரங்களை (செய்தியிதழ்கள், வானொலி மற்றும் கல்வி) கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் பெரும்பாலான நேர்வுகளில் தனிப்பட்ட குடிமகன் புறவயமான முடிவுகளுக்கு வருவதும் அரசியல் உரிமைகளை அறிவார்ந்த வகையில் பயன்படுத்திக் கொள்வதும் மிகவும் கடினமானதாகவும் முற்றிலும் சாத்தியமற்றதாகவும் இருக்கிறது.
மூலதனம்
தனியார் உரிமை அடிப்படையில் அமைந்த பொருளாதாரம் மேலோங்கியிருக்கும் சூழ்நிலை இவ்விதமாக இரண்டு முக்கியமான கொள்கைகளால் சித்தரிக்கப்படுகிறது, முதலாவது, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன, மேலும் உரிமையாளர்கள் தாங்கள் பொருத்தமானது என்று கருதும் செயலுக்கு அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.,
இரண்டாவது தொழிலாளர் ஒப்பந்தம் சுதந்திரமானது. இந்தப் பொருளில் “தூய” முதலாளித்துவ சமுதாயம் என்று ஒன்று இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்கள் மூலமாக தொழிலாளர்களின் சிலவகையினருக்கு “சுதந்திரமான தொழிலாளர் ஒப்பந்தத்தின்” ஓரளவு மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், தற்காலப் பொருளாதாரம் “தூய” முதலாளித்துவத்திலிருந்து பெரிதும் வேறுபடுவதில்லை.
உற்பத்தி
இலாபத்துக்காக மேற்கொள்ளப்படுகிறது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்வதற்கான திறனும் விருப்பமும் கொண்டுள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; “வேலைவாய்ப்பற்ற ஒரு பெரும் படை” எப்போதும் இருந்து வருகிறது. தொழிலாளர் எப்போதும் தனது வேலையை இழக்கும் அச்சத்தில் இருக்கிறார். வேலைவாய்ப்பற்ற மற்றும் சொற்ப ஊதியம் பெறுகிற தொழிலாளர்கள் இலாபகரமான சந்தையை அளிப்பதில்லை என்பதால், நுகர்பொருள் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது, அதன் விளைவாக பெருந்துன்பம் ஏற்படுகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் அனைவருக்கும் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக
பெரும்பாலும் வேலையிழப்பையே ஏற்படுத்துகிறது. முதலாளிகளிடையே போட்டியுடன் சேர்ந்த இலாப நோக்கம் மூலதனத் திரட்சியிலும் பயன்பாட்டிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணம் ஆகிறது, அது இன்னும் கடுமையான பொருளாதார வீழ்ச்சிகளுக்கு இட்டுச் செல்வது அதிகரிக்கிறது. வரம்பற்ற போட்டி உழைப்பு பெருமளவுக்கு வீணடிக்கப்படுவதற்கும் நான் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வுநிலை முடக்கப்படுவதற்கும் இட்டுச் செல்கிறது.
இவ்வாறு
தனிநபர்கள் முடக்கப்படுவது முதலாளித்துவத்தின் மிகமோசமான தீமை என்று நான் கருதுகிறேன். நமது ஒட்டுமொத்த கல்வி முறையும் இந்தத் தீமையால் பாதிக்கப்படுகிறது. மாணவனிடம் மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்போக்கு இடையறாமல் திணிக்கப்படுகிறது. அவன் தனது எதிர்கால வாழ்வின் வளர்ச்சிக்கான தயாரிப்பாக வெற்றி பெறுவதை வழிபடப் பயிற்றுவிக்கப்படுகிறான்.
இந்த
மோசமான தீமையை ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதாவது, சமூக இலக்குகளை நோக்கி ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி முறையுடன் இணைந்த சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலமாகத்தான் அதை ஒழிக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு [பொருளாதாரத்தில், உற்பத்தி சாதனங்கள் சமுதாயத்திற்கே சொந்தமாக இருக்கின்றன, அவை திட்டமிட்ட வகையில் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தியை சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப தகவமைக்கக்கூடிய ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் உழைக்கும் திறன் கொண்ட அனைவருக்கும் வேலையைப் பிரித்துக் கொடுக்கிறது, ஒவ்வொரு ஆண், பெண், மற்றும் குழந்தைக்கும் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதமளிக்கிறது, தனிநபரின் கல்வி அவனுடைய சொந்த உள்ளார்ந்த திறமைகளை மேம்படுத்துவதுடன் கூடுதலாக, நமது தற்கால சமுதாயத்தில் அதிகாரத்தையும் வெற்றியையும் புகழ்ந்து உயர்த்திப் பிடிப்பதைப் போல அல்லாமல், அவனுக்குள் அவனுடைய சகமனிதனுக்கான பொறுப்புணர்வை வளர்த்தெடுக்க முயற்சி செய்கிறது.
இருந்தபோதிலும்,
திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் அல்ல என்பதை நினைவுபடுத்துவதும் தேவையாக இருக்கிறது. அப்படிப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரம் தனிநபரின் முழுமையான அடிமைத்தனத்தைக் கொண்டதாக இருக்கலாம். சோசலிசத்தை அடைவதற்கு மிகமிகக் கடினமான சில சமூக-அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருக்கிறது, அது எவ்வாறு சாத்தியம்? அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் பெருமளவுக்கு மையப்படுத்தப்பட்ட நிலையில் அதிகாரவர்க்கம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாகவும் செருக்குமிக்கதாகவும் ஆவதை எப்படித் தடுக்க முடியும்? தனிநபரின் உரிமைகள் எவ்விதம் பாதுகாக்கப்பட முடியும்? அத்துடன் அதிகாரவர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஜனநாயகரீதியான எதிரதிகாரத்தை எவ்வாறு உறுதிப்படுத்தமுடியும்?
சோசலிசத்தின்
குறிக்கோள்களும் பிரச்சனைகளும் குறித்துத் தெளிவு பெறுவது மாறிவரும் நமது காலத்தின் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போதைய சூழ்நிலைகளில், இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தங்குதடையற்ற விவாதம் ஒரு சக்திவாய்ந்த கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால், இந்த இதழின் தோற்றம் மிகவும் முக்கியமான பொதுச் சேவையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
தமிழில்: நிழல்வண்ணன்
நன்றி: மன்த்லி ரிவ்யூ
அறிவியல் அறிஞர்கள் தங்களது விஞ்ஞான வளர்ச்சியையும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி மட்டுமே கருத்தூன்றி செயல்படவேண்டும் என்ற சராசரி கருத்தை உடைப்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் சமூக நலனை உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தஒவ்வொரு தனி மனிதனின் நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் . அதுவே ஒரு மிகச்சிறந்த வளர்ச்சியடைந்த சமூகத்தை அமைக்க முடியும் அதற்கு பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்ல அறிவியலாளர்களின் பங்கும் மிக முக்கியமானது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ReplyDelete