Skip to main content

வெடிக்கும் பட்டாசு ஆலைகளும் பறிக்கப்படும் மனித உயிர்களும்!

 

இந்தியாவின் பட்டாசு உற்பத்தி மையமாக தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி நகரம் திகழ்கிறது. மொத்த பட்டாசு உற்பத்தியில் 80% முதல் 90% வரை சிவகாசியில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் உறபத்தி செய்யப்படும் பட்டாசுகளின் மதிப்பு தோராயமாக ரூ. 6,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. சுமார் 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அதிக அளவு அமெரிக்கா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகிறது

ஜூலை 1ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம், சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மூன்று வாரங்களில் ஜூலை 22 ஆம் தேதி சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒவ்வொரு சம்பவமும் உழைக்கும் மக்களின் உயிர்களைப் பலி வாங்கி, அவர்களின் குடும்பங்களை அழிவுக்கு உள்ளாக்கி வருகிறது.

இத்தகைய உயிரைப் பறிக்கும் ஆபத்தான இந்த வேலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் எந்தவித அக்கறையும் கொள்வதில்லை. ஏழைத் தொழிலாளர்களின் உயிர்களை இவர்கள் துச்சமெனக் கருதுகின்றனர்.

பணியிடங்களில் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். மிகவும் குறைவான கூலிக்கு அதிக நேர வேலை செய்ய வேண்டிய நிலையில் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொழிலில் அதிகளவிலான பெண்களும், குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறு, நடுத்தர முதலாளிகளின் உற்பத்தித் துறையாக திகழும் இந்த பட்டாசு ஆலைகளில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுவதில்லை. பண்டிகை காலத்தில் மட்டுமே அதிக விற்பனையாகக் கூடியதாக இது இருப்பதால், குறுகிய காலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்து பெரும் இலாபத்தை ஈட்ட வேண்டும் என்ற தொழில் முதலாளிகள் மற்றும் வணிக முதலாளிகளின் வேட்கையால் சில மாதங்கள் மிகவும் பரபரப்பான உற்பத்திக் கூடமாக மாறி விடுகின்றன பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள். தொழிலாளர்களுக்கும்  சில மாதங்கள் மட்டுமே கூலியைத் தரக் கூடிய இந்த வாய்ப்பைத் தவிர அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வேறு வழியும் இல்லை.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும், எப்பொழுதும் அச்சத்தை தரக்கூடியதாகவும் இருக்கக் கூடிய பட்டாசு தொழிலில் ஆண்டுதோறும் தொழிலாளர்களின் உயிர்ப்பலிகள் என்பது தொடர் கதையாகி வருகின்றது. (இவை விபத்துகள் என்பதை விட குறுகிய காலத்தில் பெரும் இலாபத்திற்காகக் கொடுக்கப்படும் உயிர்ப்பலிகள் அல்லது படுகொலைகள் என்பதே பொருத்தமானதாக இருக்கும்).

ஒவ்வொரு முறை நடைபெறும் உயிர்ப்பலிக்கு பின்பும், அரசு தரப்பில் "விசாரணை நடைபெறும்", "தவறு செய்பவர்களின் உற்பத்தி உரிமம் இரத்து செய்யப்படும்" என்ற கண்துடைப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. பாதுகாப்பற்ற சூழல், அனுமதிக்கப்பட்டதை மீறிய உற்பத்தி, அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் ஆகியவை அதிகாரவர்க்கத்தின் உதவியோடும் ஆட்சியாளர்களின் ஆசியோடும் .தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தின் குறிப்புகளில் 2019 முதல் 2023 வரையான காலகட்டத்தில் மட்டும் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்துகளில் 131 தொழிலாளர்கள் உயிரை இழந்துள்ளனர். 146 பேர் படுகாயம் அடைந்து உறுப்புகளை இழந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் முதல் ஆறு மாதங்களில் எட்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தகைய பெரும் இழப்புகளுக்கு முதலாளித்துவ இலாப நோக்கமும், அரசின் கையாலாகாத்தனமும் தான் காரணமாக உள்ளது, தொழிலாளர்களின் உயிருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க விடாமல், அதிகாரிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான எழுதப்படாத ஒப்பந்தங்கள் தடுக்கின்றன.

ஆபத்து மிகுந்த பட்டாசு தொழிலில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர், கிராமப்புற வறிய கூலித் தொழிலாளர்கள்தான். அவர்களுக்கு தொழிற்சாலை சட்டங்கள், பாதுகாப்பு விதிகள், தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியன குறித்து புரிதலும், வழிகாட்டுதலும் இல்லை. அதனால், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும், அதிக வேலை அழுத்தத்துடனும்தான் அவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது.

கோடிகளில் புரளும் பட்டாசு உற்பத்தியில் கிடைக்கும் வருமானம் முழுவதையுமே சுருட்டிக் கொள்ளும் தொழில் முதலாளிகளும், வணிக முதலாளிகளும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலை கொள்வதில்லை. அவர்களின் இலாபங்களில் தன் பணப் பைகளை நிரப்பிக் கொள்ளும் அதிகாரவர்க்கமும் ஏழை எளிய தொழிலாளர்களின் உயிரைத் துச்சமெனக் கருதுகிறது. ஆட்சியாளர்களும், விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படும் சமயத்தில், தமது வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சில இலட்சம் ரூபாய்களை உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி கண்துடைப்பு நாடகங்களை மட்டுமே அரங்கேற்றுகின்றனர். அத்தோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதுகின்றனர்.

தீபாவளிப் பண்டிகையைப் பெருமளவு சார்ந்திருக்கும் இந்த உற்பத்தி அத்தியாவசியமான உற்பத்தியல்ல. ஆண்டுதோறும் பல உயிர்களைப் பலியிட்டு பண்டிகைகள் கொண்டாடுவதை விட, அத்தகைய பலியைத் தடுப்பதே அறிவார்ந்த சமூகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு இது வேலையை மட்டும் வழங்கவில்லை, வலியையும், உயிருக்கு உத்திரவாதமற்ற ஆபத்தையும் தருகின்றது.

மேலும், இது சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி, அதனால் மக்களுக்கு நோய்களைக் கொண்டு வரும் ஆபத்தையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு எந்தவிதப் பயனையும் அளிக்காத பாதுகாப்பற்ற பட்டாசுத் தொழிலை தடை செய்து, அந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் என்று அரசை நிர்பந்திப்பதே தொழிலாளி வர்க்கத்தின் கடமையாக உள்ளது.

மாறன்

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...