அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் தங்களுடைய மேலாதிக்கத்துக்காக நடத்திக் கொண்டிருக்கின்ற போரின் சிதைவுகளில் உலக அமைதி உருக்குலைந்து அழிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போர்கள் உழைக்கும் மக்களின் வாழ்க்கையை, வீடுகளை, மகிழ்ச்சியை, வாழ்வாதாரங்களை சூறையாடிவிட்டன; அத்துடன் அவர்களது நூலகங்களையும்
கல்வி கற்கும் இடங்களையும் அருங்காட்சியகங்களையும், ஆவணக் காப்பகங்களையும் வரலாறுகளையும் சூறையாடிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஐரோப்பிய மேலாதிக்கங்களும் தீவிரவாதத்தை எதிர்த்துப்
போரிடுவது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், அமைதியையும் உயர்த்திப் பிடிப்பது
என்ற பொய்யின் அடிப்படையில் ஏவப்பட்ட போர்களால் ஆப்கானிஸ்தான், பெய்ரூட்,
போஸ்னியா, கம்போடியா, கிரனெடா,
ஈரான், ஈராக், கொரியா,
கொசோவோ, லாவோஸ், பனாமா, பாலஸ்தீனம், சோமாலியா, வியட்நாம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளின் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஈரான் மற்றும் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல்களும் ஐரோப்பாவும்
அமெரிக்காவும் பிரச்சினைகள் இன்றி அமைதியாக இருக்கிறது என்ற மாயையைத் தகர்த்தெறிந்து
விட்டன.
இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும்
ஈரானை மட்டும் தாக்கவில்லை; மேற்கு நாடுகளில் உள்ளதாகச் சொல்லப்படும் முற்போக்கான
பண்புகள் மற்றும் அரசியல் அமைப்புரீதியான ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படைகள் மீதும்
தாக்குதலைத் தொடுத்துள்ளது. மேலும் இவர்களது செயல்கள் ஐக்கிய நாடுகளின் சபை
மீதும், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதில் ஏற்கனவே சிதைந்துள்ள நிலையில் உள்ள அதன்
சட்டபூர்வமான உரிமைகள் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படும் இஸ்ரேலை ஆட்சி புரியும் பிற்போக்கு ஜியோனிஸ்ட் யூதர்கள் இப்போது காசாவில் உள்ள கல்லறைகளையும் குண்டுகளால் தகர்த்துக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன மக்கள் தங்களது நாட்டைக் காலனிய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள தங்களது உயிர்களைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளில் உள்ள குழந்தைகளையும் மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகளையும் தங்களது வீடுகளுக்குள் இருக்கும் பெண்களையும் கூட குறிவைத்துத் தாக்கி அழித்து வருகின்றனர்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், இஸ்ரேல் எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லாமல், எல்லாவிதமான சர்வதேச சட்டங்களையும் மீறி ஈரானை குண்டுகளால் தாக்கிக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக நடத்தப்படும் ரஷ்ய –உக்ரைன் போரில் உக்ரைன் மக்களும் ரஷ்ய மக்களும் தங்களது உயிர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஆளும் ஜியோனிச யூதப் பிற்போக்குவாதிகள், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபதியங்களுடன் இணைந்து அவர்களுடைய இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக பழங்கால நாகரிகங்களையும், மக்களையும் மட்டும் கொல்லவில்லை, கூடவே திட்டமிட்ட முறையில் உலக அளவில் உழைக்கும் மக்களின் அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் சிதைக்கிறார்கள். போர் வெறி பிடித்த இந்த ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்திய அதிகாரத்தாலும், புதிய காலனியக் கட்டுப்பாட்டாலும் பிற நாடுகளைத் தொடர்ந்து குண்டுகளால் தாக்கியும், அவற்றின் இயற்கை வளங்களைச் சுரண்டியும் நாகரிகங்களின் அடிப்படைகளைச் சிதைத்தும் வருகின்றனர்
மேலாதிக்கங்களுக்கு இந்தப் போர்களின் மூலம் ஆயுத தளவாட விற்பனைகள், இயற்கை வாயுக்கள், எண்ணை மற்றும் பிற கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலமாக கிடைக்கும் இலாபத்தின் மிகச்சிறு பகுதி ஐரோப்பிய மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தற்காலிக நிவாரணத்தை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தற்காலிக நிவாரணம் நவீன அடிமைத்தனத்திற்கு அடித்தளமாக சேவை செய்கிறது. அத்துடன் தேச நலன் என்ற பெயரில் உழைக்கும் மக்களை ஊமையாக்கும் மூலவுத்தியாகவும் இது பயன்படுகிறது.
இறுதியாக இன்னும் விரைவில் இந்தப் போர்கள் நம் அனைவரையும் விழுங்கிவிடும்; நம்முடைய மனிதப் பண்பை பறித்து விடும். மனிதப் பண்பை இல்லாமல் ஆக்குவது என்பது ஒரு போரின் நீண்ட காலத்திற்கு பிறகு உண்டாகும் விளைவல்ல; அது நெருக்கமாக, தினந்தோறும் நடக்கும் நிகழ்வுப்போக்காகும். அது வன்முறையை இயல்பானதாக மாற்றுவது, அன்றாட வாழ்க்கையில் மக்களை அந்நியர்கள் போல ஆக்குவது ஆகியவற்றின் மூலம் நம் சிந்தனையை இராணுவமயமாக்குகிறது;, நமது அன்றாட வாழ்வை மனிததன்மையற்றதாக ஆக்குகிறது. இந்த நிகழ்வுப்போக்கால் உழைக்கும் மக்கள் தங்களது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் முற்றிலுமாக இழக்கிறார்கள், ஏனென்றால் அவர்களது வாழ்க்கை முற்றிலுமாக வன்முறை, சுரண்டல் மற்றும் வாழ்வின் நிச்சயமற்றதன்மை ஆகியவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகிறது.
ஆட்சியில் உள்ள மேல்தட்டு வர்க்கத்தின் திட்டமிட்ட இந்தப் போர்கள் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சிகரமான முறையில் துன்ப துயரங்களில் ஆழ்த்துவதற்கான மூலவுத்தியாகும். இதன் மூலம் வன்முறையை அவர்களை வழி நடத்தும் கொள்கையாக ஏற்றுக் கொள்வதற்கு மக்களைத் தயார் செய்கிறது. நிலையற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை, பாதுகாப்பு இன்மை ஆகியவை தற்செயலான விளைவுகள் அல்ல; மாறாக அவை அவர்களது கருத்துகளை கேள்வி இன்றி மக்கள் ஏற்றுக் கொள்ள வைக்கவும், கட்டுப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட மூலவுத்திகளாகும். உழைப்புச் சக்தியைக் கொள்ளையடிப்பதும், இயற்கை கனிம வளங்களை அபகரிப்பதும் இயற்கையானது, தவிர்க்கமுடியாதது என்று எந்தவிதமான கேள்வியும் இன்றி ஏற்றுக் கொண்டு வாழும் மன நிலையை உருவாக்கும் சக்தி வாய்ந்த மருந்து போல ஏகாதிபத்தியங்களின் இத்தகைய செயலுத்திகள் வேலை செய்கின்றன. இத்தகைய நிலைமைகள் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்துக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கின்றன; அவை நிலைத்திருப்பதையும் அவற்றின் ஆதிக்கம் விரிவுபடுத்துவப்படுவதையும் சாத்தியப்படுத்துகின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கம் சுதந்திரம், அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகம் ஆகியவற்றின் மரணத்தைக் குறிக்கிறது. இது மக்கள் உரிமைகளின் முன்னேற்றம், குடிஉரிமை, மேலும் தனி மனித சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படைகளை அழிக்கிறது; வாழ்வதற்கான திறன், வேலை, மற்றும் தனிமனிதத் தேர்வுக்கு ஏற்ற அன்பு ஆகியவற்றைச் சீர்குலைக்கிறது.
இந்த வகையில், ஏகாதிபத்தியங்களின் போர்கள், உலக உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றைப் பெரும் ஆபத்திற்கு உள்ளாக்கி உள்ளன. இங்கு தேசிய, மதச் சார்பான அல்லது கலாச்சாரப் போர்கள் எதுவுமில்லை, இந்த மோதல்கள் எல்லாம் உழைக்கும் வர்க்கத்தைப் பிளவுபடுத்தி அவர்களை ஏகாதிபத்தியப் போர்களுக்கு இரையாக்குவதற்கான திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன; ஆகவே, உழைக்கும் வர்க்க அரசியலின் மையக் கருவாக ஏகாதிபத்தியப் போர்களை எதிர்க்கும் போராட்டங்கள் இருக்கவேண்டும்; இந்த எதிர்ப்பு உலக சமாதானத்திற்கான சர்வதேசிய விடுதலையை குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். ஏகாதிபத்தியங்களின் போர்கள் உலக அளவில் ஜனநாயகத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன; ஆகையால், மேலும் தாமதமாவதற்கு முன் உலகு தழுவிய அளவில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு தங்களின் ஜனநாயக மற்றும் குடியுரிமைக்காகப் போராட வேண்டும். அமைதிக்கான போராட்டம் என்பது உள்ளடக்கத்தில் ஏகாதிபத்தியப் போர் இயந்திரத்திற்கு எதிரான உறுதியான போராட்டமாகும். ஒன்றுபட்ட மக்கள் இயக்கங்களாலும், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட இயக்கங்களாலுமே ஏகாதிபத்தியப் போர்களை நிறுத்த முடியும்; நிலையான உலக அமைதியை சாதிக்க முடியும். சர்வதேசியம் என்பதே உலக அளவில் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டங்களின் அடித்தளம் ஆகும்.
ஆகையால், ஈரான் மற்றும் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து போராடுவது உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு
வலிமை சேர்ப்பதாகும்; மேலும் உலக அளவில் அவர்களுடைய அமைதியான,
வளமான வாழ்வுக்கான பாதையாகும். ஏகாதிபத்தியப் போர்கள் நமது பொது
எதிரியாகும்.
அவை நம்மை அழித்து நம்மை மனிதத்தன்மை அற்றவர்களாக ஆக்குகின்றன; மனித சாரத்தை அழிக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து
ஏகாதிபத்தியப் போர்களைத் தடுக்காவிட்டால், காட்டுமிராண்டித்தனமே நமக்காகக்
காத்திருக்கும்.
ஆங்கிலத்தில்: பவானி சங்கர்
நாயக்
தமிழில்: ஜெகதா
நன்றி: Countercurrents
Comments
Post a Comment