அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய கொள்ளை - லட்சக்கணக்கான மக்களின் கல்லறையின் மீது மகா கோடீஸ்வரர்களுக்கு எழுப்பப்பட்ட கோட்டை!
அமெரிக்க
அதிபர் ட்ரம்பின் 'ஒரு பெரிய அழகான
மசோதா இப்போது சட்டமாகி விட்டது. அது பெரியது-- ஆனால்
உண்மையில் அதில் அழகானது ஒன்றுமே இல்லை.
அமெரிக்க
வரலாற்றில் மிகப்பெரிய செல்வம் சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்துக்கு மாற்றப்படுவதை நாம் காணப் போகிறோம்.
அது அமெரிக்க வரலாற்றிலேயே அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டத்தில் மிகப்பெரிய மானியக் குறைப்பை ஏற்படுத்தும். அமெரிக்க மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டங்களான மருத்துவ உதவி (Medicaid), மருத்துவப் பராமரிப்பு (Medicare), மற்றும் மலிவான பராமரிப்புக்கான சட்டம் (Affordable Care Act
(ACA) ஆகியவற்றுக்கான திட்ட ஒதுக்கீட்டில் ஒரு இலட்சம் கோடிக்கும்
அதிகமான அமெரிக்க டாலர்களைக் குறைப்பது இந்த பெரிய மசோதாவின்
முக்கியமான ஒரு அம்சமாகும்.
ஏறக்குறைய
6.6 கோடி அமெரிக்க மக்கள் அல்லது 20% அமெரிக்க மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். முக்கியமாக இவர்கள் இந்த மசோதாவால் பாதிக்கப்படுவார்கள்.
மருத்துவ உதவித் திட்டம் ஒன்று மட்டுமே ஏராளமான கிராமப்புற மருத்துவமனைகளுக்கு ஆதரவான அடிப்படை உதவியாக இருக்கிறது. கிராமப்புற மருத்துவமனைகள் மக்கள் அணுகக்கூடிய நிலைமையில் இருப்பது நீண்ட காலமாகவே குறைந்து வருகிறது. மருத்துவ உதவித்திட்டத்திற்கான மானியம் குறைக்கப்படுவதால் அவை பாதிப்பில் உள்ளன.
குறைந்த
பட்சம் கிராமங்களில் உள்ள 338 மருத்துவமனைகள் உடனடியாக மூடப்படும். மாரடைப்பு வந்த தாத்தா பாட்டி
போன்ற முதியவர்கள் மருத்துவமனைகள் இல்லாததால் மரணம் அடைவார்கள் என்பது இதன் அர்த்தமாகும். ஒவ்வாமை
உள்ள குழந்தைகள் அனபைலாக்டிக் ஷாக் எனப்படும் கடுமையான
ஒவ்வாமை எதிர்வினையால் மிக மோசமாக பாதிக்கப்படும்போது
அல்லது உயிருக்கே ஆபத்தான எதிர்வினையால் பாதிக்கப்படும்போது அவர்களைக் கொண்டு செல்ல அவசர துறைகள் இருக்காது;
அதனால் குழந்தைகளின் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதனால்
மக்களுக்குக்குரிய பணத்தை சுயநலமிக்க மகா கோடீசுவரர்கள் திருட
முடியும். இந்தப் பணம் போர் ஆயுத
உற்பத்தியாளர்களின் கருவூலத்தை நிறைக்கவும், தனியார் சிறை ஒப்பந்தாரர்களின் பணப்பைகளை
நிரப்பவும் பயன்படுத்தப்படும். இந்தச் சட்ட முன்வரைவை எழுதியவர்களுக்கும்,
அது நிறைவேற வாக்களித்தவர்களுக்கும் அது ஏராளமான எளிய
மக்களின் இறப்புக்கு வழிவகுக்கும் என்பது தெரியும்.ஆனால் அது பற்றி அவர்கள்
கவலைப்படவில்லை.
வரி
மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கான நிறுவனம், வரி பிடிப்புக்கான திட்டங்களை
தீட்டும் சட்ட மாமன்றங்களின் கூட்டுக்
கமிட்டியின் தரவுகள் மற்றும் பிற நிறுவனங்களின் தரவுகளையும்
முழுமையாக அலசி ஆராய்ந்து, இந்த
மசோதாவால் யார் பயனடைவார்கள், யார்
பெரும் இழப்பைச் சந்திப்பார்கள் என்பதை பின்வருமாறு கூறுகிறது: "செல்வாக்கு மிகுந்த அமெரிக்க பணக்காரர்கள் குறிப்பாக மிக மேல்மட்டத்தில் உள்ள
ஒரு சதவிகிதம் பில்லியனர்கள் அடுத்த பத்து வருடங்களில் 1.02 இலட்சம் கோடி டாலர்களை வரிச்
சலுகையாகப் பெறுவார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் அமெரிக்க
மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டமான மருத்துவ உதவி திட்டத்திற்கான சலுகை
குறைப்புகள் மொத்தமாக 93,000 கோடி டாலர்கள் இருக்கும்".
மேலும்
ஏல் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வின்படி இந்தச் சட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் 51000 மிகை மரணங்கள் ஏற்படும்
என்று தெளிவாகக் கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு மருத்துவ ரீதியான அதாவது, மக்களின் ஆரோக்கியத்திற்கான திட்டங்கள் மற்றும் அதைப் போன்ற பிற விஷயங்களை மட்டும்
கணக்கில் கொண்டு இதைக் கூறுகின்றார்கள். அவர்கள் மக்களுக்குக் கிடைக்கும் உணவு மற்றும் உயர்ந்து
கொண்டிருக்கும் விலைவாசி ஆகியவற்றை இந்த ஆய்வில் கணக்கில்
எடுத்துக் கொள்ளவில்லை.
இது
பற்றி விரிவான விவரங்களை செனட் (பாராளுமன்ற) உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ளார்கள்; ஆனால் இந்த விவரங்களை அவர்கள்
அனுப்பாவிட்டாலும் கூட செனட் உறுப்பினர்களுக்கு,
இந்த மசோதா ஏராளமான மக்களைக் காவு வாங்கும் என்பது
தெளிவாகத் தெரியும். இதே அரசியல்வாதிகள் கோவிட்--19
பெருந்தொற்றால் 10 லட்சம் அமெரிக்கர்கள் இறந்தபோது அதைப்பற்றிக் கவலைப்படவில்லை; மேலும் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள்
இறந்ததைப் பற்றியும் இவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இன்றைக்கு அமெரிக்க அரசியலில் அவர்கள் இந்த மரணங்கள் பற்றிச்
சிறிது கூட குறிப்பிடுவது இல்லை.
அமெரிக்கா
ஆட்சியாளர்களும் அவர்களுடைய வாஷிங்டன் கூட்டாளிகளும் இதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. உண்மையில் ஏராளமான மக்களைக் கொல்லும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக
ஓட்டளித்து அதை நிறைவேற்றிய போது
பெரிய கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள். சுயநலம் மட்டுமே கொண்ட பெரும் பணக்காரர்களின் கும்பல் அமெரிக்காவை ஆளுகிறது. அவர்களின் ஆட்சியைத் தூக்கி எறிந்து, அதற்கு மாற்றாக சமத்துவம் மிக்க சோசலிச அமைப்பை ஏற்படுத்துவது இந்தக் காலகட்டத்தின் மிக அவசியமான செயலாகும்.
ஆங்கிலம்:கிரிகோரிஇ.வில்லியம்ஸ்
தமிழில் : கவிதா
(Monthly Review online ல் ஜூலை 15, 2025ல்
வெளிவந்த கட்டுரை)
Comments
Post a Comment