புதிய தொழிலாளர் சட்டங்களால் முற்றிலும் சீர்குலைக்கப்படும் தொழிலாளர் உரிமைகளின் ஏழு முக்கியக் கொள்கைகள்
இலாபத்தையே
நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், தொழிலாளர்களும் தொழிலாளர்களின் உரிமைகளும் எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நமது நாட்டில், ஏராளமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடக் கிடைப்பதில்லை. அவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக, மிகை நேர ஊதியமும் (over time) இல்லாமல், வார விடுப்பும் இல்லாமல் உழைக்கின்றனர். இப்போது நிலையான வேலையிடங்களில், நிலையான அல்லது நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களே மிகுதியாக இருக்கின்றனர்.
தொழிற்சங்க
அங்கீகாரம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவருகிறது. சமூகப் பாதுகாப்புக்கான பொறியமைவுகள் அதை அடைவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்துகின்றன, பாகுபாடுகள் காட்டுகின்றன. மேலும் கூடுதலாக, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் பல்வேறு விதமாக விளக்கங்கள்
கொடுக்கக்கூடிய வகையில் பூடகமாகவும் பல்வேறு ஆளுகை வரம்புகள் கொண்டவையாகவும் இருக்கின்றன. சட்டத்தில் இவ்வளவு பலவீனங்கள் இருந்தபோதும், இருபதாம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த ஜனநாயகத் தொழிற்சங்கங்கள் தலைமையிலான நீடித்த தொழிலாளர் போராட்டங்கள் நீதிமன்றங்களாலும் உச்சநீதிமன்றத்தாலும் கூட ஒப்புதலளிக்கப்பட்ட பல பயன்களைக் கொண்டுவந்துள்ளன. அதனால் தொழிலாளர் சட்டம் நீதிமன்றங்கள் நிர்ணயித்த முன்னுதாரணங்கள் மூலம் மிகவும் நுணுக்கமாக அணுகப்பட்டது. நீதித்துறை இலாப முறையைக் கேள்விக்கு உள்ளாக்காமல் இருந்தாலும் கூட, சில நடவடிக்கைகளின் மூலம் சிறிய அளவிலாவது நியாயத்தைத் தேட முயற்சிக்கும் இந்த ஜனநாயகத்தில், வேலைவாய்ப்பு உறவுகளில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமனற்ற அதிகார உறவை அங்கீகரித்துள்ளது.
1990களிலிருந்து, மாறிக்கொண்டிருக்கும் உலகின் புவிசார் அரசியல் வரைபடத்தில். சக்திகளின் சம பலநிலை மாறியுள்ளது, அதிகார உறவுகளில் இந்தச் சமநிலையின்மையை அங்கீகரிப்பது எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. 1991 இல், இந்தியா அரசுக் கட்டுப்பாட்டுப் பொருளாதாரத்திலிருந்து இலாப முறைக்கு ஆதரவாக நகர்ந்தது. குறிப்பாக தொழிலாளர்களுக்கு
எதிராகச் சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சிப்போக்கு வேலையிடங்களில் அனைத்து மட்டங்களிலும் முத்தரப்பு தொழிலாளர் பொறியமைவு வீழ்ச்சியடையும் அளவுக்குச் சென்றுள்ளது. நமது நாட்டில் தொழிலாளர் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லாதபோதும், நீதித்துறையின் பார்வையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அரசு நிர்வாகம் நியாயத்தை உறுதிப்படுத்துகிற தனது பொறுப்பை முற்றிலுமாக உதறிவிட்டு, முதலீட்டை ஈர்ப்பதற்காகத் தீர்மானகரமாக வேலை செய்துவருகிறது. நிர்வாகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை முதலாளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அவர்கள் விரும்பும் வகையில் பாதுகாப்பை அளித்துள்ளது.
நடைமுறையில்,
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள் அடிப்படையான தொழிலாளர் உரிமைகளை மீறுகிற வகையில் வேலைவாய்ப்பு நடைமுறைகளைச் சட்டங்களாக ஆக்கியிருக்கின்றன. அதனால் இன்றைக்குச் சட்டநிலையில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் அமுலுக்கு வருகிறபோது நடைமுறையாகி விடும். கடந்த நூற்றாண்டில் தொழிலாளர் உரிமைகளுக்கு மிகவும் முக்கியமான ஏழு கொள்கைகள் போராடி நிலைநாட்டப்பட்டன, அவை சட்டத்தின் மூலமாகவோ, வழக்குத் தீர்ப்புக்கள் அடிப்படையிலோ, ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை சார்ந்தோ பாதுகாக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தும் வகையில் அவற்றைப் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள் சீர்குலைத்துவிடும்.
முதலாவதாக,
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள் சட்டப்படி முதலாளிகளுக்கும் அவர்களுடைய
குழுமங்களுக்கும் முன்பு தொழிலாளர்களையும் அவற்றின் உறுப்பினர்களையும் சமனற்ற
நிலையில் வைக்கின்றன. விரிவான தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பை மீறுகின்றன என்ற காரணம் கூறப்பட்டு புதிய சட்டத் தொகுப்புக்களின் கீழ் தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதையே மறுப்பதற்கு வகை செய்கின்றன. குழுமங்கள் (company) சட்டத்திலோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின் கீழோ ஒரு குழுமத்துக்கு எதிராகத் தண்டிக்கும் நடவடிக்கை எடுப்பதற்கு இடமில்லை. தொழிற்சங்கங்களின் பதிவை நீக்கும் விதிமுறை
தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பதற்கு கிளர்ச்சி செய்வதற்கும் சட்டத்திற்குப் புறம்பான கொள்கைகளைப் பின்பற்றவும் இட்டுச் செல்லும். இது நியாயமான மற்றும் சட்டபூர்வமான கோரிக்கைகளை முன்வைப்பதற்குக் கூட, சட்டமியற்றும் அமைப்பே தொழிலாளர் வர்க்கத்தை குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்தித் தள்ளுவதாக ஆகிவிடும்.
இரண்டாவதாக,
இந்தச் சட்டத் தொகுப்புக்கள் “அமைப்புசார்” மற்றும் “அமைப்பு சாரா” தொழிலாளர்கள் (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட) என்று குறிப்பிடப்படும் தொழிலாளர்களிடையே தெளிவான சட்டபூர்வமான பிரிவினையை உருவாக்குகின்றன. இணைப்பாக்க பெருங்குழும (corporate) அல்லது இணைப்பாக்கமற்ற குழும நிறுவனங்களில் “முறையான” வேலைவாய்ப்பு உறவுகள் அமையப்பெறாத நிலையில், ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டத்தின் வரம்புக்கு அப்பால் தான் தொழிலாளர்கள் இருப்பார்கள். அரசாங்கம் அறிமுகப்படுத்தக்கூடிய ‘நலத்திட்டங்கள்’ மூலமாகத்தான் அவர்கள் ‘பயன்பெற’ முடியும். அவற்றைச் சட்ட உரிமை அடிப்படையில் பெற முடியாது.
அரசாங்கம் மூலதனக் குவிப்பின் இயல்பான போக்கினை ஏற்றுக்கொள்கிறது, அதே வேளையில் சட்டமியற்றும் அமைப்பு தொடர்ந்தும் மிகப்பெரிய அளவிலும் தொழிலாளர்கள் பரவலாகச் சிதறடிக்கப்படுவதை அனுமதிக்கிறது. இது மிகப்பெரும்பான்மையான தொழிலாளர்களைச் சட்டத்தின் எல்லைக்கு அப்பால் நிறுத்துவதோடு, நீதிமன்றம் மூலம் நிவாரணத்தைப் பெற இயலாமல் தடுக்கிறது.
மூன்றாவதாக,
இந்தச் சட்டத் தொகுப்புக்கள் தொழிலாளர்களுக்கான சட்டமியற்றுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதலின் கூட்டாட்சித் தன்மையைச் சீர்குலைக்கின்றன. மத்தியச் சட்டத் தொகுப்பு மாநிலங்களின் சட்டமியற்றும் உரிமைக்கு இடமளிப்பதில்லை. தொழிலாளர்களின் உயர்ந்த வாழ்க்கைத்தரம் குறித்து மாநிலங்கள் தாங்களாகச் சட்டமியற்றிக்கொள்ள அரசியல் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியல் அனுமதிக்கிறது, ஆனால் இந்தச் சட்டத் தொகுப்புக்கள் அதற்கு எதிராகச் செயல்படுவதற்குவழி ஏற்படுத்தியுள்ளது..
வேலை நேரம் குறித்த குறிப்பான சட்டமியற்றும் மற்றும் விதிகளை வகுக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டத்தொகுப்புக்கள் மாநிலங்கள் இடையிலான போட்டிக்குக் கொண்டுசெல்கின்றன. எடுத்துக்காட்டாக, எட்டு மணி நேர வேலைக்கான உரிமையை முற்றிலும் மீறும் வகையில் நீண்ட நேர வேலை நேரத்துக்காக மாநிலங்களைப் போட்டியிடச் செய்கின்றன.
நான்காவதாக,
தற்போதைய அரசாங்கத்தின் அனைத்துப் பிற சட்டங்களின் நேர்வில் போலவே, சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் முக்கியத்துவம் வாய்ந்த உரிமைகளில் திருத்தம் செய்யும் அதிகாரத்தை இந்தத் தொகுப்புச் சட்டங்கள் சட்டமியற்றும் அமைப்புகளிடமிருந்து பறித்து அதிகாரவர்க்கத்தின் கைக்குக் கொண்டு செல்கின்றன. ஒரு தனியார் குழுமத்தின் நிதிநிலை குறித்த தகவலை அறிந்துகொள்வதில் தொடங்கி, வருடாந்திர ஊக்க ஊதியத்தைக் கணக்கிடும் சூத்திரம் மற்றும் போபால் எரிவாயுக் கசிவுத் துயரத்தைத் தொடர்ந்துவந்த தொழிற்சாலை பாதுகாப்புச் சட்டமியற்றுதல், மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் பல தசாப்தங்கள் போராட்டத்திற்குப் பிறகு வென்றெடுக்கப்பட்ட உடல்நலம் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் வரை, இந்தச் சட்டத் தொகுப்புக்கள் ஒரே வீச்சில் சட்டமியற்றும் அதிகார அமைப்பிடமிருந்து நிர்வாக அமைப்பின் தனிப்பெரும் அதிகாரத்துக்கு மாற்றிவிட்டன.
ஐந்தாவதாக, அனைத்தையும் உள்ளடக்கியவை என்று கூறிக்கொண்டாலும் புதிய சட்டத் தொகுப்புக்கள் அப்படி இல்லை. அவை பாகுபாடும் கட்டுப்பாடும் கொண்டவையாக இருக்கின்றன. அவை நடைமுறைப்படுத்துவதில் விவசாயத் தொழிலாளர்களையும் வீட்டு வேலைத் தொழிலாளர்களையும் அவற்றின் வாய்ப்பெல்லைக்கு வெளியேதான் வைத்திருக்கின்றன. மாநிலங்களுக்கான கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டங்கள் இந்தச் சட்டத் தொகுப்புக்களில் இடம் பெறவில்லை. அதனால் அலுவலகங்கள், சில்லறை வணிகங்கள் மற்றும் பிறவற்றில் வேலை செய்யும் ஏராளமான தொழிலாளர்களுக்கு இச்சட்டங்களில் இடமில்லை. இந்தச் சட்டத் தொகுப்புக்கள் பெண்களின் இரவுப் பணி நேரம் குறித்துப் பேசினாலும், அவர்களுக்கு வேலையிடங்களில் பரவலாக இருந்துவரும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை குறித்துப் பேசுவதில்லை.
குறிப்பிடத்தக்கவகையில்,
பாலியல் துன்புறுத்தல், இன்னும் வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும் தீர்வு சட்டத்தின் (POSH Act) கீழேயே வருகிறது. அதற்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புக்களில் தனிப்பட்ட முறையில் சட்டங்கள் இயற்றப்படவில்லை. இதனால் இந்த அத்துமீறல்கள் தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறியமைவுக்குள் வருவதில்லை. இது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலும் வன்முறையும் தொடர்ந்து நீடித்துவருவதற்குப் பங்களிப்புச் செய்வதாக ஆகிவிடும். இந்த மோசமான அத்துமீறல்கள் தொழிலாளர் உரிமை
அத்துமீறல்களாகக் கணக்கில் கொள்ளப்படாது. இதனால் பெண்களைத் துன்புறுத்துதல் என்பது வேலையிடத்தில் ‘ஒழுங்குக்கட்டுப்பாடு’ மற்றும் ‘கட்டுப்படுத்தலுக்கான’ நடவடிக்கையாகவே இருந்துவரும். மேலும் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டம்) 1986 இந்தச் சட்டத் தொகுப்புக்களில் இடம்பெறவில்லை. அண்மையில் நிறுவன உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினர்களாக உள்ள குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை சட்டபூர்வமாக்கும் சட்டத் திருத்தத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
ஆறாவதாக,
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உறுப்பினர் அரசுகளால் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தர அளவுகளை இச்சட்டத் தொகுப்புக்கள் மீறக்கூடியவையாக இருக்கின்றன. முந்தைய அரசாங்கங்களும் இவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் மீறல்கள் கடுமையானவையாக இருக்கின்றன. இந்தச் சட்டத் தொகுப்புக்கள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முதலாவது உடன்படிக்கையான வேலை நேரம் குறித்த உடன்பாட்டை மீறுகின்றன. இந்த உடன்படிக்கை 1919 இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முதலாவது நிறுவன மாநாட்டிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 1921 இல் இந்தியாவின் காலனி அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 1949
இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 81 வது உடன்படிக்கையான தொழிலாளர் ஆய்வு குறித்து இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. தொழிலாளர் ஆய்வு முறை பத்தாண்டுகளுக்கு முன்பே சிதைக்கப்பட்டு விட்டிருந்தாலும், இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. முத்தரப்புக் கலந்தாய்வுகள் (அரசாங்கம் –முதலாளிகள் – தொழிற்சங்கங்கள்) இப்போது கடந்த காலத்தின் விடயமாக ஆகிவிட்டது. இந்தக் கலந்தாய்வுப் பொறியமைவு சுதந்திரத்துக்கு முன்பே நிறுவப்பட்டதாகும். அதேபோல, 1978 இல், கலந்தாய்வு குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு உடன்படிக்கை எண் 144 இந்தியாவால் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். கடந்த பத்தாண்டில் ஒருமுறை கூட இந்தக் கலந்தாய்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது இந்தச் சட்டத் தொகுப்புகள் குறித்தும் தொழிற்சங்கங்களுடன் எந்த ஆலோசனைகளும் நடத்தப்படவில்லை.
இறுதியாக,
‘தொழில் செய்வதை எளிதாக்குவது’ என்ற பெயரில் சட்டத்தை மீறுகிற முதலாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 இன் படி, குறைந்தபட்ச ஊதியம் அளிக்காமல் இருப்பது சிறைத்தண்டனை உட்பட தண்டிக்கக்கூடிய குற்றமாகும். உரிய ஊதியம் அளிக்காமல் இருப்பது கட்டாய உழைப்பைப் பெறுவதாகும் என்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புக்களின் படி, இந்தக் குற்றம் அபராதத் தொகை செலுத்துவதன் மூலம் முடித்துவைக்கப்படலாம். உண்மையில், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள் கட்டாய உழைப்பைப் பெறுவதற்கு முதலாளிகளுக்கு உரிமம் அளிக்கின்றன. இது பிரச்சினையின் ஒரு சிறு பகுதிதான்.
உண்மையாகச்
சொன்னால், இந்தச் சட்டத் தொகுப்புக்கள் சட்டமாக நிறைவேற்றப்படாநிலையிலும் நாட்டின் மிகப்பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு இவை யதார்த்த நிலையில் நடைமுறையில்
இருந்துவருகின்றன. நிலவும் சட்டங்கள் பெரிதாக யாருக்கும் நிவாரணங்களை அளிப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்தப் புதிய சட்டத் தொகுப்புக்களை எதிர்ப்பதும், அவற்றைத் திரும்பப்பெறச் செய்வதும், வேலையிடங்களில் உறுதியான உரிமைகளை வென்றெடுப்பதும் தங்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக தொழிலாளர் மேற்கொள்ள வேண்டிய உடனடிப் பணியாகும்.
நமது
பணியை முன்னெடுத்துச் செல்லும்போதே, உலகளாவிய நமது வரலாற்றிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் நாம் வென்றெடுக்கும் உரிமைகள் உண்மையிலேயே அனைவரையும் சென்றடைய வேண்டும், எந்த ஒரு தொழிலாளரும் சட்டத்தின் பாதுகாப்பு இல்லாமல் விடப்படக் கூடாது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் அப்போது தான் அந்த உரிமைகள் பொருள்ளதாக இருக்கும். இதுதான் நம் முன்னுள்ள அறைகூவலாகும்.
- கவுதம்
மோடி
தமிழில்:
நிழல்வண்ணன்
ஆசிரியர்
பற்றிய குறிப்பு: கவுதம் மோடி
புதிய தொழிற்சங்க முன்னெடுப்பு அமைப்பின் பொதுச் செயலாளர்.
நன்றி:
ஜனதா வீக்லி.
Comments
Post a Comment