Skip to main content

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கும் தேர்தல் ஆணையம்

 

பீகாரில் வரும் நவம்பர் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்தவேண்டிய சூழலில், தேர்தல் ஆணையம் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்' என்ற பெயரில் 2003க்குப் பிறகு யாரெல்லாம் வாக்காளர் பட்டியலில் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்களோ அவர்கள் எல்லாம் 11 வகையான ஆவணங்களின் மூலம் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என ஜுலை மாதம் 24 அன்று அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால், இந்திய அரசு மிக முக்கியமானதாகக் கருதும் ஆதார் அட்டையோ, குடும்ப அட்டையோ அல்லது வாக்காளர் அட்டையோ ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4.93 கோடி பேர் 2003 இல் வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள், 2.96 கோடி பேர் அதற்கு பின்பு வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்.

பின்னர் சொல்லபட்ட 2.96 கோடி வாக்காளர்கள், அவர்களுடைய பிறந்த தேதியையோ அல்லது பிறந்த இடத்தையோ நிரூபணம் செய்து, இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து குடியேறியுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும், பீகாரிலிருந்து வெளிமாநிலம் இடம் பெயர்ந்துள்ளவர்கள், இறந்தவர்கள் ஆகியவர்களின் பெயரை நீக்கவும், போலிவாக்காளர்களை நீக்கவும் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறுகின்றது.

ஜூலை 1, 1987 க்குமுன் பிறந்தவர்கள் பிறந்ததேதி அல்லது பிறந்தஇடம் ஆகியவற்றை நிறுவும் ஆவணத்தை தரவேண்டும், 1 ஜூலை 1987 க்கும் 2 டிசம்பர் 2004 க்கும் இடையில் பிறந்தவர்கள், பிறந்ததேதி அல்லது இடம் ஆகியவற்றோடு பெற்றோரில் ஒருவரின் ஆவணத்தை தரவேண்டும், 2 டிசம்பர் 2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் பிறந்ததேதி அல்லது இடம் ஆகியவற்றுடன் பெற்றோர் இருவரின் ஆவணத்தை சேர்த்து சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிப்பில் கூறியுள்ளது.

இதற்கு முன்னர் இதுபோன்ற வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டிருந்தாலும், இறந்தவர்களைப் பட்டியலில் இருந்து நீக்குதல், புதிய வாக்காளர்களை இணைத்தல், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். ஆனால், குடியுரிமையை நிரூபிக்கவேண்டும், அதுவும், பெற்றோர்களின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும், பெரும்பான்மை மக்களிடம் இருக்கும் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிபந்தனைகள் மூலம் ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை பறிப்பது, சிறுபான்மை மக்கள் மீது ஒருவித அச்சத்தைத் திணிப்பதுமான செயலில் அரசு இறங்கியுள்ளது

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற பெயரில் இந்தியக் குடியுரிமையை நிரூபணம் செய்யவேண்டிய பொறுப்பை ஏழைமக்களின் மீது சுமத்தித் தேர்தல் ஆணையம் அவர்களை அலைக்கழித்து வருகின்றது. குடியுரிமை குறித்தான அதிகாரத்தை கொண்டது உள்துறை அமைச்சகம் தானே தவிர தேர்தல் ஆணையம் அல்ல.

குடிமக்கள் அல்லாத ஒரு சிலரை களையெடுக்கவே இந்த நடவடிக்கை எனத் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறுகின்றார். குடிமக்கள் அல்லாதவர்கள் என்று தீர்ப்பளிக்கும் அதிகாரமும் கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது.

புதியதாக வாக்காளர் பட்டியலில் ஒருவரை இணைப்பதற்கு உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரமுடியும். ஆனால், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் மீதான இந்தச் சந்தேகத்தை எழுப்பத் தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை.

இதேபோன்று 1992 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் டெல்லி மற்றும் மும்பை பகுதியிலுள்ள வாக்காளர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமைக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. மும்பையின் 39 காவல்நிலையங்களின் மூலம் ஆய்வு நடத்தபட்டு 1.67 இலட்சம் மக்களுக்குக் குடியுரிமையை நிரூபிக்கும் சான்றை அளிக்க நோட்டீஸ் அளித்தது. டெல்லியிலும் காவல்துறை இதே போன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இது சிறுபான்மை மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும், அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதற்குமான நடவடிக்கைகள் என அந்தப் பகுதி மக்கள் கருதினர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் வாக்காளரின் குடியுரிமையை நிருபிக்கும் கடமையை அவர் மீது சுமத்த முடியுமா என்பது குறித்து 1995 ஆம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்துகின்றது. ’லால் பாபு ஹுசைன் மற்றும் பிறர்எதிர் தேர்தல் ஆணையம்வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ எம் அஹமது தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

டெல்லி, மோதியாகான் பகுதி வாழ் மக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், அவர்கள் உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்திற்காக நீண்ட நாட்களுக்கு முன்பே டெல்லிக்குக் குடிபெயர்ந்ததாகவும், தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் தங்களிடம் இல்லையென்றும், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வாக்குச்சாவடி சீட்டு, பள்ளி ஆவணங்கள் ஆகியவற்றை வைத்துள்ளதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது என்றும் தெரிவித்தனர்

டெல்லியின் மாத்தியா மகால் தொகுதியைச் சார்ந்த சஞ்சய் அமர் ஜூகி ஜோம்பர் காலனியைச் சார்ந்த 18000 குடியிருப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பல ஆண்டுகளுக்கு முன்பே உத்திரபிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து வேலை தேடி டெல்லிக்கு வந்ததாகவும், பல தசாப்தங்களாக தொடர்ந்து டெல்லியில் வாக்களித்து வருவதாகவும் தெரிவித்தனர். இவர்கள் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், குடும்ப அட்டை, டெல்லி நிர்வாகம் வழங்கிய அடையாள அட்டை, கிராம அலுவலர்களின் சான்று ஆகியவற்றை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 18,000 குடியிருப்புவாசிகளில் 300 பேரை மட்டுமே வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டது.

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவர், குடியுரிமை உட்பட தகுதி உடையவராகக் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒரு வாக்காளர், குடியுரிமை சம்பந்தமான சந்தேகங்களின் அடிப்படையில் அவர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதியற்றவர் என கருதப்பட்டால், குறிப்பிட்ட வாக்காளருக்கு அவருடைய கருத்தை தெரிவிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மேலும், அவருடைய பெயரை நீக்குவதற்கு முன்பு, இந்தியக் குடியுரிமை குறித்தான சந்தேகம் ஏற்பட்டதற்கான காரணத்தை அவருக்கு விளக்க வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சந்தேத்திற்கான அடிப்படை தவறானது என்பதை எடுத்துக்காட்ட முடியும். ஆனால், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் முன்னெடுத்த நடவடிக்கையில் உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் பின்பற்றபடவில்லை.

அரசு கோரும் ஆவணங்களான பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியன பெரும்பாலும் பீகாரின் எளிய மக்களிடையே இல்லை. மிகவும் பின்தங்கிய மாநிலமான பீகாரில் பிறப்புகள் பதிவு செய்வது என்பது மிக மிக சொற்பமான அளவே. பிறந்த தேதியைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளாத மக்கள் அங்கு அதிகளவில் உள்ளனர். பத்தாம் வகுப்பு வரை படித்து அந்தக் கல்வி சான்றிதழைக் கொண்டுள்ளவர்களும் குறைவானவர்களே. அதேசமயம் அரசும் இதுபோன்ற ஆவணங்களை வழங்குவதில் மெத்தனமாகவும், அலட்சியப் போக்குடனும் இருப்பதால், மக்கள் எந்தவிதப் பதிவுகளையும், ஆவணங்களையும் அரசிடமிருந்து பெற முடிவதில்லை. கடந்த ஆண்டு பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தின் பொழுது ஏழை, குடிசை வாழ் மக்களின் சிறுஉடைமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது. அதில் அரசு வழங்கிய ஆவணங்களும் அடித்துச் செல்லபட்டன. இழந்த ஆவணங்களை பெறுவதற்கு நீண்டதூரம் பயணம் செய்து அரசு அலுவலகங்களில் காத்திருந்தும், மக்களால் ஆவணங்களைப் பெறமுடியவில்லை. தங்களிடம் எஞ்சிய ஆவணங்களை, அதுவும் அரசால் வழங்கபட்ட ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக பீகார் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்தத் தீவிர ஆய்வு என்னும் பெயரில் குடியுரிமையை நிரூபிக்க மக்களை நிர்ப்பந்திக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இதற்கு தடைவிதிக்க மறுத்ததோடு, ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆவணமாக கருத்தில் கொள்ள வேண்டும் என ஆலோசனை மட்டுமே வழங்கியது.

ஜுன் 24 அறிக்கையைத் தொடர்ந்து மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் போதும் என ஜூலை 6 ஆம் தேதி அறிவித்தது.

ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 65 இலட்சம் வாக்காளர்கள் விடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்டு மாத இறுதிக்குள் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களின் குடியுரிமை குறித்தான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை பீகார் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால், அரசு இந்த எண்ணிக்கையோடு நிறுத்திக் கொண்டுள்ளது, இல்லையெனில், இது இன்னும் அதிகரித்திருக்க கூடும்.

ஆனாலும், ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய வாக்காளர்களான 2.96 கோடி பேரில் 65 இலட்சம் வாக்காளர்கள் என்பது 21.9 சதவீதமாகும். இந்த 65 இலட்சம் பேரில் 22 இலட்சம் பேர் இறந்தவர்களின் எண்ணிக்கை என்றும், 36 இலட்சம் பேர் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், 65 இலட்சம் பேர் யார் யார் என்பது குறித்தான விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. 2003 க்குப் பிறகு ஒருவர் வாக்காளாராக தன்னை பதிவு செய்திருப்பாரானால் அவருடைய தற்போதைய அதிகபட்ச வயது 40 ஆக இருக்கும், ஆனால், இந்த நாற்பது வயது கொண்ட வாக்காளர்களில் 22 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுவது முரண்நகையாக உள்ளது.

பீகாரில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களில் 20% மக்கள் புலம் பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். மாநிலம் விட்டு மாநிலம் மட்டுமல்ல, மாநிலத்திற்குள்ளாகவே இடம் பெயர்ந்துள்ளார்கள்.

ஒரு வாக்காளர், தான் எந்த இடத்தைத் தமது இருப்பிடமாகக் கருதுகின்றாரோ, அந்த இடத்தில் அவருக்குரிய வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும். சொந்த ஊரைவிட்டு மற்றோர் இடத்திற்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களுக்கு, அவர்களின் தற்போதைய இருப்பிடமே அவருக்குரிய வாக்குப்பதிவு செய்யும் இடமாக இருக்க வேண்டும்

அரசு தேர்தல் ஆணையம் மூலம், ஏழை எளிய மக்களின் மீது குடியுரிமையை நிறுவும் பொறுப்பைச் சுமத்தி பின்பக்க வாசல் வழியாக தேசிய குடியுரிமைப் பதிவைக் கொண்டு வர முற்சி செய்கிறது. பாஜக பீகாரில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைச் செய்து சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்க முனைகிறது. இத்தகைய தீவிர ஆய்வுமுறை இன்று பீகாரில் தொடங்கப்பட்டாலும் இது பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படும் ஆபத்து உள்ளது.

ஜனநாயக உரிமையை மறுக்கும் போக்கு என்பது மக்களின் மீதான அடக்குமுறையைத் தீவிரப்படுத்தும் போக்கின் ஓர் அங்கமாக உள்ளது. குடியுரிமைச் சான்று இல்லை என்ற அடிப்படையில் ஒருவருடையை வாக்குரிமையைப் பறிப்பது என்பது அவருடையை ஜனநாயக உரிமையை பறிப்பது மட்டுமல்ல, அவருடைய இருப்பையே கேள்விகுறியாக்கக் கூடியதாக உள்ளது. சொந்த நாட்டு மக்களையே நாடற்ற அகதிகளாக மாற்றுவதாகும்.

முதலாளியக் கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டங்களை நடத்துவதன் மூலமும் பாராளுமன்றத்தை முடக்குவதன் மூலமும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்குத் தீர்வு கண்டு விடலாம் எனக் கருதுகின்றன. ஆனால் ஆட்சியிலுள்ள பாஜக இவர்களின் போராட்டங்களைச் சிறிதும் சட்டை செய்யப் போவதில்லை. தேர்தல் ஆணையமோ பாஜகவின் எடுபிடியாக இருக்கின்றது. நீதிமன்றமோ தேர்தல் ஆணையத்திற்கு அறிவுரை கூறுவதோடு அரசியல் அமைப்பைக் காப்பாற்றும் தனது ஜனநாயகக் கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறது. இந்த நிலையில் மக்கள் ஒன்று திரண்டு வீதிகளில் இறங்கிப் போராடுவதன் மூலமே தங்களுடைய வாக்குரிமை என்ற ஜனநாயக உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 

குமணன்

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...