போர் முடிந்தவுடன் முதலாளித்துவம் தனது இருத்தலுக்கான மிகச்சிக்கலான நிலைமையை எதிர்கொண்ட உடன், அது அந்த நிலைமையைச் சமாளிக்க இரட்டைத் தந்திரங்கள் கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுத்தது. முதலாவது, அது “சிவப்பு அபாயம்” என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பியது; இது எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லாமல், உள்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தை அச்சுறுத்தி முதலாளிய அமைப்பை ஒப்புக்கொள்ள வைக்கும் திட்டமாகும். இரண்டாவது, வேறு வழி இன்றி தனது செயல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டது; அவற்றில் நான்கு கவனத்திற்கு உரியவை; அவை, முந்தைய காலனி வடிவத்தை அகற்றல், அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியான ஆட்சி நிர்வாகத்தை அமைப்பது, பெரும் திரளான வேலை வாய்ப்பின்மையைக் குறைக்க “வேண்டலை மேலாண்மை செய்வது (Demand management)” {வேண்டலை அதிகரிக்க மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது –(மொ.பெ).}என்ற கெய்னிசிய கருத்தாக்கதை ஏற்றுக் கொள்வது மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை எல்லா இடங்களிலும், குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில், செயல்படுத்துவது ஆகியவையாகும். இந்தச் சீர்திருத்தங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டன; ஏனென்றால் இவை "முதலாளித்துவம் மாற்றமடைந்து விட்டது,” அது முன்பிருந்த, மக்களை இரையாக்கும் முதலாளித்துவம் அல்ல; மாறாக புதிய “மக்களின் நலன்களுக்கான முதலாளித்துவம்" என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்கின.
போருக்குப் பிந்தைய நீண்ட காலப் பொருளாதார எழுச்சியால் நிதி மூலதனம் வலுவடைந்தது; நிதி மூலதனம் உலகம் முழுவதும் தனது எல்லையைப் பரப்பியது; அது ஆளும் தேசிய அரசுகளின் சுய ஆட்சியை வலுவிழக்கச் செய்தது. எல்லா இடங்களிலும் புதிய தாராளவாத ஆட்சி திணிக்கப்பட்டது; அதனால் போருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்தன. இதற்கு முன் எப்போதும் காணாத அளவுக்கு இப்போது இந்தப் பின்னடைவு வேகம் அடைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் மீது வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளின் துணையுடன் மிக வெளிப்படையாக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் கொடூரம் காலனிய காலங்களில் நடந்த கொடுமைகளை மிஞ்சியவையாக இல்லாவிட்டாலும் கூட, அந்த கொடுமைகளுக்கு இணையானவை; நவீன பாசிசத்தின் இந்த எழுச்சி மற்றும் முதலாளிய வர்க்கத்தின் எதேச்சாதிகாரம் ஆகியவை மக்களுக்கான ஜனநாயக உரிமை வெளியைச் சிதைத்துள்ளது: உலகளாவிய நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் காரணமாக, கெய்னிசிய "வேண்டலை மேலாண்மை செய்தல்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உலக முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சிக்கல் தீர்க்கப்பட முடியாது; மேலும் இப்பொழுது எல்லா நாடுகளிலும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான செலவினங்களை நிறுத்தும் ஒருங்கிணைந்த செயல்பாடு நடைபெற்று வருகிறது. இதனால் கிடைக்கும் பணத்தை முதலாளிகளுக்கு மடை மாற்றுவதற்கும், அதிகரிக்கும் ராணுவத் தளவாட செலவினங்களுக்கும் பயன்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 'பெரிய அழகான மசோதா' இரண்டு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது; இது மக்களின் நலத்திட்டங்களுக்கான செலவினங்களின் மீது விழுந்த மிகப்பெரும் தாக்குதல் ஆகும். அமெரிக்க அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் மக்களவையின் பட்ஜெட் அலுவலகத்தின் கணக்கின் படி , இந்த மசோதாவின் அடிப்படையில் அளிக்கப்படும் வரிச் சலுகைகள் அடுத்த பத்து வருடங்களுக்கு 4.5 இலட்சம் கோடி டாலர்களாகும். இந்த வரிச் சலுகையால் பெரும் பயனடைபவர்கள் பணக்கார வர்க்கத்தினரே. மேலும் இராணுவச் செலவினங்கள் மொத்தமாக 15000 கோடி டாலர்கள் அதிகரிக்கும்; எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பதற்காக 12900 கோடி டாலர்கள் அதிகமாகச் செலவிடப்படும். இந்தச் செலவினங்களுக்காக அமெரிக்க மக்களின் நலத்திட்டமான மருத்துவ உதவித் திட்டத்தில் 93000 கோடி டாலர்களும், பசுமை ஆற்றல் திட்டத்தில் 48800 கோடி டாலர்களும், உணவு உதவித் திட்டத்தில் 28700 கோடி டாலர்களும் குறைக்கப்படும். மருத்துவ உதவித் திட்டம் என்பது அமெரிக்க மக்களின் பலவீனமான பகுதியினரின் ----அதாவது வயதானவர்கள், ஏழைகள் மற்றும் ஊனமுற்றவர்கள் ஆகியவர்களின் மருத்துவ உதவிக்காக நடைமுறையில் உள்ள ஒன்றாகும். எனவே இந்த மசோதாவின் மூலமாக இந்தத் திட்டத்திற்குரிய நிதியைக் குறைப்பது மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் அமெரிக்க சமூகத்தின் மிக எளிய மக்களைக் குறிப்பிட்டுத் தாக்குவதாகும்; மேலும் டிரம்பின் இந்த 'பெரும் அழகிய மசோதா' அமெரிக்காவின் மிகுந்த ஏழ்மையில் வாழும் மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து பெரும் செல்வந்தர்களுக்கு கொடுக்கும் வெட்கக்கேடான கீழ்த்தரமான திட்டமாகும்.
உண்மையில் இந்த வரிச் சலுகைகள் என்பவை மக்களின் நலத்திட்டங்களுக்கான செலவைக் குறைத்துக் கிடைக்கும் பணத்தைவிட மிக மிகப் பெரியது. அதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறை அடுத்த 10 வருடங்களில் மொத்தமாக 3.4 இலட்சம் கோடி டாலர்களாக அதிகரிக்கும். இந்தப் பற்றாக் குறையைச் சரிகட்ட அமெரிக்க அரசாங்கம் தனது கணக்கில் கடன் வாங்கும், மேலும் மக்கள் நலன்களுக்கான செலவுகளைக் குறைக்கும். மக்கள் விரோதமான இந்த மடைமாற்றல் சிதைந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக என்று நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் பொருளாதார மீட்டெடுப்பு என்பது உண்மையான குறிக்கோளாக இருந்தால் அமெரிக்க அரசாங்கம் தான் வாங்கிய கடனை நேரடியாகச் செலவு செய்ய வேண்டும், ஆனால் வாங்கும் திறனை பணக்காரர்களின் கைகளில் தருகிறது; இந்த வகையில் கிடைக்கும் பொருளாதார மீட்டெடுப்புக்கான தூண்டுதல் மிகச்சிறியதே; இது பெரும் பணக்காரர்களின் செல்வத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் ஒன்றே ஆகும்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. நிதி மூலதனம் நிதிப் பற்றாக்குறையை விரும்புவதில்லை. பெரும் நிதிப் பற்றாக்குறை மூலம் பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகள் அளிப்பதற்காக நிதி மடைமாற்றம் செய்யப்பட்டாலும் கூட நிதி மூலதனம் இதை விரும்புவதில்லை. பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரியான லிஸ் ட்ரஸ் இதைத்தான் செய்ய முயற்சித்தார்; ஆனால் நிதி மூலதனத்தின் மிகப்பெரிய எதிர்ப்பால் பிரிட்டனின் பவுண்ட் -- ஸ்டெர்லிங்கின் மதிப்பு மிகப் பெரும் வீழ்ச்சி அடைந்து; அதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அவர் பிரிட்டனின் வரலாற்றில் மிகக் குறுகிய காலமே அதாவது 50 நாட்கள் மட்டுமே பதவி வகித்த பிரதமர் ஆனார். அப்படியானால் பணக்காரர்களுக்கு மிகப்பெரும் நிதியைச் சலுகைகளாக வழங்குவதற்காக டொனால்ட் ட்ரம்ப் பெரும் அளவு கடன் பெறுவதை நிதி மூலதனம் எவ்வாறு அனுமதித்தது?
டொனால்ட் டிரம்ப் மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையிலிருந்து தப்பித்து விட்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; அதாவது நிதி மூலதனம், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதைப் பற்றி அவருக்கு அழுத்தம் கொடுக்காதா? பணக்காரர்களுக்கு மடைமாற்றம் செய்வதைக் குறைக்கச் சொல்லாவிட்டாலும், மக்கள் நலன்களுக்கான செலவை மேலும் குறைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதா? ஆனால் பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அமெரிக்க டாலருக்கு தனி அந்தஸ்து இருப்பதால் ட்ரம்புக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளது. ஏனென்றால் உலகத்தின் பெருவாரியான சொத்துகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள கோடீஸ்வரர்கள் இப்போதும் அமெரிக்க டாலரை “தங்கத்திற்கு இணையானதாகக்” கருதுகிறார்கள்; அதனால் ட்ரம்பின் திட்டங்களால் மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறை உண்மையில் இருந்த போதும் அவர்கள் டாலரை விட்டு விலக மாட்டார்கள். இந்தச் சுதந்திரம் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் மக்கள் நல திட்டங்களுக்கான நிதியைக் குறைத்து, அதை பிரிட்டனின் மிகப்பெரும் பணக்காரர்களுக்கு மடைமாற்றும் செய்யத் திட்டமிட்டபோது அவருக்குக் கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்கும் அமெரிக்காவின் இன்றைய நடைமுறை, மிக விரைவில் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ உலகம் முழுவதும் பின்பற்றப்படும். இந்த ஆண்டு ஜூன் 24, 25 தேதிகளில் தி ஹேகில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் அதன் அனைத்து உறுப்பு நாடுகளும் ராணுவ செலவினங்களுக்காக அவை ஒவ்வொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக 2035--ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போது அவை இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%ஐ ராணுவத்திற்காகச் செலவு செய்கின்றன. பெரும்பாலான நாடுகளில் அவ்வளவு கூட செலவு செய்யப்படுவதில்லை. நேட்டோ உறுப்பு நாடுகள், குறிப்பாக ஐரோப்பாவில் இருக்கும் உறுப்பு நாடுகள் வரும் பத்தாண்டுகளில் இராணுவச் செலவுக்காக அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% -லிருந்து 5% அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளன.
தற்போது பிற நேட்டோ நாடுகளின் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடப்படும் நிலையில் இல்லை; அதனால்தான் உலகளாவிய நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு எதிராக அந்த நாடுகளால் ஒப்பீட்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்க முடியவில்லை. இது தவிர, ஐரோப்பாவின் பெரும்பாலான நேட்டோ நாடுகள், ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளாக இருப்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% க்கு மேல் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்க முடியாமல் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பணக்காரர்கள் மீது வரி விதிப்பது என்பது நிதி மூலதனத்தின் விருப்பத்திற்கு எதிரானது; எனவே இந்த நாடுகள் இராணுவச் செலவுக்காக நிதியை அதிகரிப்பதற்காக தங்கள் நாட்டின் உழைக்கும் மக்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் அல்லது மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க வேண்டும்.
உழைக்கும் மக்கள் மீது வரிகளை அதிகரிப்பது அல்லது நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பது ஆகிய இரண்டில் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பது எளிதாகச் செய்யக் கூடியது. ஆனால் இந்த இரண்டில் எதுவானாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இன்னும் அதிகமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% வரியை தொழிலாளர்கள் மீது சுமத்துவது மிகக் கடினமான திணிப்பாகும். சுருக்கமாகச் சொன்னால் நேட்டோ நாடுகள், ”மக்கள் நல முதலாளித்துவம்” என்று சொல்லப்பட்டதின் நாட்கள் முடிந்து விட்டன என அதிகாரபூர்வமாகத் தெரிவித்து விட்டன. இந்த உலகம் மீண்டும் “மக்களை இரை ஆக்குகிற முதலாளித்துவத்திற்கு”த் திரும்புகிறது.
நேட்டோ நாடுகள் ராணுவத்திற்கான செலவை அதிகரிக்க ஏன் முடிவு செய்தன? ஏனென்றால் மேற்கு ஐரோப்பாவிற்கு எப்பொழுதுமே ரஷ்யாவின் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த நாடுகள் சோவியத் ரஷ்யாவுடன் தொடர்ந்து கொண்டிருந்த பனிப்போரை நியாயப்படுத்த "சோவியத் அச்சுறுத்தல்" என்ற அச்சத்தை சற்றும் அணையாமல் தங்களது மக்கள் மத்தியில் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் கூட ராணுவச் செலவினங்கள் இவ்வளவு அதிகமாக இல்லை. இது தவிர, இன்றும் கூட அமெரிக்காவை கணக்கில் சேர்த்துக் கொள்ள விட்டால் கூட, ஐரோப்பிய நேட்டோ நாடுகளின் மொத்த ராணுவச் செலவில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறைவாகவே ரஷ்யா அதன் ராணுவத்திற்கு ஆண்டுதோறும் செலவு செய்கிறது. ஆகவே ரஷ்ய அச்சுறுத்தல் என்பது மக்களை ஏமாற்றும் வித்தையாகும். சிதைந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலக ஏகாதிபத்தியத்தை காப்பாற்றுவதற்காக, அதற்கு எதிரான நிலைப்பாடுகள் கொண்ட நாடுகளை அடக்கவே ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் ராணுவத்திற்கான செலவைக் கணிசமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. அதற்காகவே ஈரான் மீது குண்டு மழை தாக்குதல் நடத்தப்பட்டது; இது போன்ற பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வருங்காலத்தில் காணலாம்.
இத்தகைய தாக்குதல்களுக்காக முன்னேறிய நாடுகளின் நலத் திட்டங்களால் தொழிலாளர்கள்
இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்த பயன்களைத் தியாகம்
செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வாறாயினும், வீழ்ந்து
கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம் மிகவும் ஆபத்தானது; ஏனென்றால் அது மொத்த உலகத்தையும்
பேரழிவுக்கு உள்ளாக்கும் பெரும் வலிமை கொண்டுள்ளது. ஈரானின் அணு உலைத் தளங்கள்
மீது வெடிகுண்டுகள் வீசி நடத்திய தாக்குதல் ஏகாதிபத்தியங்களின் வெறியை உணர்த்தும்
சாட்சியாகும். இந்த நிலைமையில் ஏகாதிபத்தியத்தின் வெறி கொண்ட தாக்குதல்களை எதிர்க்க உலகு தழுவிய அளவில் மக்களுக்கு
அரசியல் அறிவூட்டுவது மிக மிக அவசியமாகும்.
பேராசிரியர் பிரபாத் பட்நாயக்
தமிழில்: ஜெகதா
நன்றி:Janata Weekly
Comments
Post a Comment