இந்தியாவின் குர்கானில் தொழிலாளர்களின் உழைக்கும் நிலைமைகள் குறித்து மனிதநேயம் கொண்ட ஒரு ஆதரவாளரின் ஒரு சிறு கட்டுரை இது. உலகம் முழுவதும் ஆளும் வர்க்கம் தனது அமைப்பின் நெருக்கடிகளுக்குக் காரணமாக “அயல் நாட்டு”த் தொழிலாளர்களைக் காட்டி அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதையும், அதன் மூலம் யுத்தத்திற்கு வழி வகுப்பதையும் விவரிக்கிறது இக்கட்டுரை.
போலீஸ், இலாபம் மற்றும் முதலாளியத்தின் நெருக்கடி
1. விதிவிலக்கல்ல - திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்முறை:
சமீப
காலத்தில் உழைக்கும் வர்க்கத்தின் மீது, குறிப்பிடத்தக்க வகையில் தாக்குதல்கள், குறிப்பாக டெல்லி, குர்கான் போன்ற இடங்களில், அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதிகார வர்க்கம், வலிமையற்ற எளிய வறிய மக்களை,
குறிப்பாக மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த வங்காள மொழி
பேசும் முஸ்லிம் மக்களை குறிப்பிடத் தக்க வகையில் அதிகமாகத்
தாக்குகிறார்கள்; அந்த ஏழை மக்கள்
குடியிருக்கும் இடங்களின் சட்டபூர்வமான நிலையை ஆய்வு செய்வது மற்றும் புலம்பெயர்ந்த அந்த ஏழைத் தொழிலாளர்களின்
தேசியத்தை சரி பார்ப்பது என்ற
பெயரில் அவர்கள் அதிகார வர்க்கத்தால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்.
இந்தத்
தாக்குதல்கள் பாரதிய ஜனதா கட்சி, ஆம்
ஆத்மி கட்சி, அல்லது குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சியின்
திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படவில்லை. மாறாக, அதிகரித்துக் கொண்டிருக்கும் ஒரு போக்கை வெளிச்சமிட்டுக்
காட்டுகின்றன -- அதாவது தப்பமுடியாத பொருளாதாரச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் முதலாளியம் தனது முரண்பாடுகளை, சிக்கல்களை
உழைக்கும் வர்க்கத்தின் மீது சுமத்துவதன் வெளிப்பாடே
தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இந்தத்
தாக்குதல்கள்.
மகாராஷ்டிரா
மாநிலத்தில் தொழிலாளர்கள் இவ்வாறு பலிகிடாக்களாக ஆக்கப்படுவது ஏராளம். “உள்ளூர் வேலை வாய்ப்பு உள்ளூர்
மக்களுக்கே,” என்ற பெயரில் - அந்த
வாய்ப்பை அபகரிக்கும் அரக்கர்கள் போல வடமாநிலத் தொழிலாளர்கள்,
குறிப்பாக பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து
வருபவர்கள், சித்தரிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு கடத்தப்படுவதும், அவர்கள்
ஒன்றிணைந்து போராடும்போது வன்முறைக்கு ஆளாவதும் நடந்து கொண்டிருக்கிறது. பிரான்ஸ், கிரீஸ், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சட்டம்
மற்றும் தேசியம் ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு இந்த எளிய தொழிலாளர்கள்
தாக்கப்படுகிறார்கள்.
குர்கானில்
தொழிலாளர்கள் குறிப்பாக மேற்கு வங்காள முஸ்லீம்கள் தகுந்த இந்தியத் தேச ஆவணங்களைக் கொண்டிருந்தபோதும்,
போலீஸ் வன்முறை, சோதனைகள் மற்றும் பொதுவான அவமானங்கள் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்தத் தொழிலாளர்களுடன் நேரடியாக உரையாடியதிலிருந்து உருவானதுதான் இந்த அறிக்கை. அந்தத்
தொழிலாளர்களின் அனுபவங்கள் விதிவிலக்கானவை அல்ல. மாறாக முதலாளித்துவம் உலக அளவில் எங்கு
சென்று கொண்டிருக்கின்றது என்பதை அறிவிக்கும் எச்சரிக்கை மணியாகும்.
2. வாழ்வதற்கான நகர்ப்புற சட்ட உரிமையும், வாழ்க்கையைக் குற்றமயமாக்குதலும்:
இந்தியாவின்
அனைத்து நகரங்களிலும் ஏழை மக்கள் வாழவே
முடியாத நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்; நாட்டின் பொருளாதரத்தைக் கட்டமைக்க ஓய்வின்றி உழைக்கின்றனர்; ஆனால், அவர்களுடைய வாழ்க்கைக்கான பாதுகாப்போ, உரிமைகளோ, அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரமோ கிடையாது. டெல்லியில், “நகரை அழகுபடுத்தல்”, “சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்”
“மாபெரும் திட்டம்”என்ற பெயரில் ஏழை
மக்கள் வாழும் குடியிருப்புகள் அழிக்கப்படுவது, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவது ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகிறது. ஆனால் இப்படிக் கொடுமையானமுறையில் தண்டிக்கப்படுபவர்கள்தான் உண்மையில் நகரங்களை உயிரோட்டம் மிக்கவைகளாக ஆக்குபவர்கள். அவர்கள்தான் இந்நகரங்களின் கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுவேலை செய்பவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் போன்றவர்கள் ஆவார்கள்.
சட்டபூர்வத்தன்மை
என்பது மூலதனத்தின் கருவி அல்லது ஆயுதம் என்பதை நாம் அறிவோம். இது
மூலதனத்தின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும். இது உழைக்கும் மக்களின்
வாழ்க்கையைக் குற்றம் நிறைந்ததாக ஆக்குவதற்கும், மற்றும் அவர்களின் வாழ்வை நிலையற்றதாக ஆக்குவதற்கும் ஒரு கருவியாகத் தந்திரமாகப்
பயன்படுத்தப்படுகிறது. அவை கேள்விக்கு உள்ளாக்கப்படும்போது
நாட்டின் அதிகாரவர்க்கமும் நீதிமன்றங்களும் தாம் சட்டத்தையே நடைமுறைப்படுத்துவதாகாகக்
கூறுகின்றன. ஆனால் இந்தச் சட்டங்களோ சொத்துடைமையை அல்லது மூலதனத்தைக் காப்பாற்றுவதற்காக எழுதப்பட்டவை, மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல.
மகாராஷ்டிரா
மாநிலத்தில் இன்னொன்றும் செயல்படுகிறது; அது பிரதேச வெறி.
“உள்ளூர் வேலைகளைப் பாதுகாப்பது”
என்ற பெயரில் வட இந்தியாவிலிருந்து வரும் மக்கள்
- குறிப்பாக இந்தி, போஜ்புரி மொழி பேசுபவர்கள் பலியாக்கப்படுகிறார்கள்.
வன்முறை மற்றும் மிரட்டல்கள் ஆகியவை சகித்துக் கொள்ளப்படுவதுடன் மட்டுமல்லாமல், மக்களின் மௌனத்தாலும், மேலும் எந்தத் தண்டனையும் இல்லாமல் போவதாலும் இவை தொடர்ந்து தடையின்றி
நடக்கின்றன. மராத்திய அல்லது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளரால் வேலை தட்டுப்பாடு ஏற்படவில்லை
-- இங்குள்ள பொருளாதார அமைப்பே இதற்குக் காரணம்.
“சட்ட அடிப்படையிலான உரிமைகள்” மற்றும்
“உள்ளூர்வாதம்” ஆகிய
முழக்கங்கள் மக்களின் உண்மையான எதிரியை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். நாட்டின் பொருளாதாரம் மிக அடிப்படையான பாதுகாப்பைக்
கூட மக்களுக்கு வழங்க முடியாத நிலையில் அரசு மிக எளிதான
பலிகிடாக்களை தேர்ந்தெடுக்கிறது; புலம் பெயர்ந்தவர்கள், முஸ்லிம்கள், ஏழைகள் ஆகியவர்கள்தான் பிரச்சினைகளுக்குக் காரணம் என ஆக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில்
இந்தத் தொழிலாளர்கள் நெருக்கடிகளை உருவாக்குவதில்லை, அவர்கள் இந்த நெருக்கடிகளுக்குப் பலியாக்கப்படுபவர்கள்.
3. நிலைமைகள் குறித்த ஆய்வு: மொழி, மதம் மற்றும் தேசிய இனம் என்ற பெயரில் குர்கானில் தொழிலாளர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள்:
குர்கான்
இந்தியாவின் செல்வம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகும்; நூற்றுக்கணக்கான பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் இருப்பிடம்; ஆடம்பரமான பல அடுக்கு மாடி
குடியிருப்புகள் நிறைந்த நகரம்.
ஆனால்
கார்ப்பரேட்டுகளின் வானளாவிய கட்டிடங்களுக்கு பின்னால் கொடூரமான உண்மை ஒளிந்து கொண்டிருக்கிறது, ஆம், அந்த நிறுவனங்கள்
மிகுந்த கண்காணிப்பின் கீழ் மிகக் குறைந்த
கூலியில் ஏராளமான முறைசாராத் தொழிலாளர்களின் உழைப்பைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.
அங்கு
சமீபத்தில் சென்றிருந்தபோது நாங்கள் சேரிகளில் வாழும் வங்காள மொழி பேசும் பல
முஸ்லிம் தொழிலாளர்களுடன் உரையாடினோம்; அவர்கள் அந்த நிறுவனங்களில் தூய்மைப்
பணியாளர்களாகவும், சரக்குகளை உரிய இடங்களுக்கு கொண்டு
சேர்ப்பவர்களாகவும் பணி புரிகிறார்கள். ஒருவர்
தூய்மைப் பணியாளராகப் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்; ஆனால் அவரது வருமானம் உணவுக்கும் உடனடி அத்தியாவசியத் தேவைகளுக்கும் கூடப் போதுமானதாக இல்லை. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வைத்துக் கொண்டிருந்தாலும் அவர் போலீசால் இரண்டு
தனித்தனி சமயங்களில் வங்காள மொழியில் பேசியதற்காக மட்டுமே மிக மோசமாகத் தாக்கப்பட்டார்.
போலீஸ்
அவரையும் மற்றவர்களையும்
'வங்காள தேசத்தவர்’ என்று குற்றம் சாட்டி, நாட்டுப் பற்று மற்றும் முஸ்லிம்கள் மீதான பயம் போன்ற காரணங்களால் மட்டுமே அவர்களது
வன்முறைத் தாக்குதல்களை நியாயப்படுத்தினர். இந்தத் தொழிலாளர்கள் கைதாவது பற்றி மட்டுமல்லாது தொடர்ந்த வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய நிரந்தரமான அச்சத்துடன் இருக்கின்றனர். மேலும் சிலர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவோமோ என்ற நிரந்தரமான அச்சத்தால்
மருந்து வாங்குவதற்காகக்
கூட வெளியே போவதற்கு மிகுந்த அச்சப்படுவதாகக் கூறுகிறார்கள்.
ஆனால்
இந்த முரண்நகை வெளிப்படையாகத் தெரிகிறது. இதே தொழிலாளர்கள் மூலதனத்திற்கு
அவர்களது உழைப்பு தேவைப்பட்டபோது இருகரம் நீட்டி நகரத்திற்கு வரவேற்கப்பட்டார்கள். ஆனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தூக்கி எறியப்படுகின்றனர்; அரக்கர்கள் போலச் சித்தரிக்கப்படுகின்றனர்; வேட்டையாடப்படுகின்றனர்.
இதை
முக்கியமாக வலியுறுத்த வேண்டும்; அவர்கள் வங்காளத்தவர்களாக இருந்தாலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
நாம் அவர்களைப் பற்றி கொண்டிருக்கும் கருத்தில் சிறிதும் மாற்றம் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளாக, சர்வதேசியவாதிகளாக நாம், தேசிய அரசு உருவாக்கியுள்ள செயற்கையான
எல்லைகளை ஒதுக்கித் தள்ளுகிறோம். எங்கிருந்து வந்திருந்தாலும் தொழிலாளி தொழிலாளிதான். அவர்கள் இந்த நகரத்தைக் கட்டமைக்கிறார்கள்.
அங்கு வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. அது விவாதத்துக்கு உரியதே
அல்ல.
4. சட்ட உரிமை என்னும் ஆயுதம் - குடியுரிமையின் வர்க்கப் பண்பு:
இன்று
குடியுரிமை பற்றிய புதிய வரையறை நயவஞ்சகமான அடக்குமுறை வடிவங்களில் ஒன்றாக உள்ளது; அது மக்களின் அடிப்படை
உரிமை என்பது மாறி செல்வம் படைத்தவர்களுக்கு
மட்டுமே உரிய சலுகை என
வரையறுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் குர்கானில் இந்த வேறுபாடு அபாயகரமான
முறையில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.
பெரும்பாலான
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், போலீசின் கொடுமையான கடும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் உட்பட அனைவரும், அதிகாரப்பூர்வமான இந்திய ஆவணங்களைக் கொண்டுள்ளார்கள். ஆதார் அட்டை, வக்காளர் அடையாள சீட்டு, வேலைக்கான அடையாள சீட்டுகள் மற்றும் கல்வி நிறுவன ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்கள். ஆனாலும் கூட அரசு இந்த
ஆதாரங்கள் குடியுரிமைக்கான போதுமான ஆவணங்கள் இல்லை என்று இவற்றை ஒதுக்கி தள்ளுகின்றது. புதிய அளவுகோல்கள் இப்பொழுது திணிக்கப்படுகின்றன; அதாவது கடவுச்சீட்டுகள், சொத்துரிமைக்கான ஆவணங்கள், நில உரிமை ஆவணங்கள்
போன்ற ஏழைகளால் எப்போதும் கொடுக்கச் சாத்தியமில்லாத ஆவணங்கள் அவசியமானதாக கேட்கப்படுகின்றன.
இது
அதிகார வர்க்கத்தின் கவனக்குறைவால் நடப்பதில்லை, மாறாக திட்டமிட்ட உறுதியான அரசியல் நடவடிக்கையாகும். சட்டபூர்வமான உரிமைக்கான ஆவணங்கள் என்ற பெயரில் இவ்வாறு
கேட்பதன் மூலம் எளிதில் பாதிக்கப்படக்கூடிய, சுரண்டப்படக் கூடிய, ஏன் எளிதாக விரட்டப்படக்கூடிய
மக்கள் கூட்டத்தை இந்த அரசு அதிகரிக்கச்
செய்து வருகிறது. இத்தகைய “அத்தியாவசியமான ஆவணங்கள்” இல்லாததால் ஒரு தொழிலாளி பாதுகாப்பற்று
இருப்பது மட்டுமல்ல அவர் வலிமையற்றவராக, நலத்திட்டங்களுக்கு
வாய்ப்பில்லாதவராக, நீதியைக்கோரமுடியாதவராக, ஏன் சுதந்திரமாக நடமாடக்
கூட முடியாதவராக ஆக்கப்படுகிறார்.
இது
வர்க்க ரீதியான தந்திரமான ஒரு திட்டமாகும். ஆம்,
அளவிட முடியாத வகையில் வங்காள முஸ்லிம்களையும் வட இந்திய புலம்
பெயர்ந்த தொழிலாளர்களையும் இது குறி வைக்கிறது;
இதன் பின்னால் மறைந்துள்ள தருக்கம் என்னவென்றால் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்தையும் தாக்குவதாகும். செல்வந்தர்கள் பிறப்புரிமை அடிப்படையில் சொத்துக்களை பெறுகிறார்கள், கடவுச்சீட்டுகளைப் பெறுகிறார்கள்; ஆனால் ஏழை மக்களோ சந்தேகத்தை
பிறப்புரிமை அடிப்படையில் பெறுகின்றனர். முதலாளியவர்க்கம் வரியை ஏய்ப்பதற்காவும் நிலத்தைக் குவிப்பதற்காவும் பரிசளிக்கப்படுகின்றனர்; உழைக்கும் வர்க்கமோ அதனுடைய இருத்தலுக்காகவே தண்டிக்கப்படுகிறது.
5. உலகளாவிய
பார்வையில்: முதலாளியத்தின் மூல உத்தியாக அடக்குமுறை:
இந்தியாவில்
நடைபெறும் நிகழ்வுகள் தனித்துவமானதல்ல. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் அரசுகள் ஒவ்வொன்றும் அவசரகால நடவடிக்கையாக மட்டும் அடக்குமுறையைத் தேர்ந்தெடுக்கவில்லை; அதை அவர்களின் பிரச்சினைகளுக்குத்
தீர்வு காண்பதற்கான மூல உத்தியாகவே அடக்கு
முறையை மேற்கொள்கின்றன. மேலும் முதலாளியத்தின் இலாபம் நெருக்கடியில்இருக்கும் நிலையில், முதலாளியம் பொருளாதார வளர்ச்சிக்கோ வேலை வாய்ப்புக்கோ உறுதி
கூறுவதில்லை மாறாக, முதலாளியத்திற்கு அடக்குமுறை தேவைப்படுகிறது.
அமெரிக்காவில்
புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள்,
குறிப்பாக சங்கங்களில்அமைப்பாகியுள்ள தொழிலாளர்கள், தொடர்ந்து இடைவிடாமல் புலம்பெயர்ந்தவர்களுக்கான சட்டங்களால் தாக்கப்படுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் சமீபத்தில்
நடந்த தொழிலாளர் போராட்டங்களில் புலம் பெயர்ந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிடங்குகளில் வேலை பார்ப்பவர்கள் மிரட்டப்பட்டார்கள்;
தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டார்கள்; மேலும் நாடு
கடத்தப்பட்டார்கள். கூறப்பட்ட காரணங்கள் எப்போதும் கூறப்படும் அதே காரணங்கள் – சட்ட
பூர்வமான உரிமைகள், பாதுகாப்பு, தேசிய நலன் ஆகியவையே; அவர்களது
நடவடிக்கையும் எப்பொழுதும் ஒரே மாதிரியே உள்ளது,
அதாவது தொழிலாளர்களின் எதிர்ப்பை உடைத்து நொறுக்குவது என்பது மட்டுமே.
பிரான்சில்,
ஆவணங்கள் அற்ற ஆப்பிரிக்கத் தொழிலாளர்களின்
மீது போலீசால் நடத்தப்படும் வன்முறை 'தேசிய அடையாளம்' என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது.
கிரீஸ் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு
புலம்பெயர்ந்தவர்கள் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அண்டை நாடான பாலஸ்தீனத்தின் மீது பொழியப்படும் குண்டு
மழை வெளிநாட்டவரிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான செயல் என்று நியாயப்படுத்தப்படுகிறது.
இந்தியாவின்
தொழிலாளர் விரோதச் சட்டங்கள் என்றாலும், அல்லது ஐரோப்பாவின் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான சட்டங்களானாலும் இவற்றின் பொதுவான அடிப்படை, நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டிருக்கும் மூலதனத்தின் நலன்களை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும். உலகு தழுவிய அளவில்
இலாப வீதம் சரிந்து கொண்டிருக்கும்போது, முதலாளியப் பொருளாதாரம் தேக்கமடைந்து இருக்கும்போது அரசாங்கங்கள் மூலதனத்தின் நலன்களை உறுதியாகப் பாதுகாக்க வேண்டும்; தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கி அல்ல, மாறாக அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி ஒழுங்குபடுத்துவதன் மூலம்.
6. ஒன்றுபடுவோம் இல்லாவிட்டால் நசுக்கப்படுவோம்!
குர்கானில்
வங்காளத் தொழிலாளர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களும்
டெல்லியில் சேரிகளில் வாழ்பவர்களைக் கொடிய குற்றவாளிகளாகப் புனைவதும், மகாராஷ்டிரா மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் துன்புறுத்துவதும் மற்றும் உலகம் முழுவதிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும் தனித்தனி நிகழ்வுகள் அல்ல. அவை அழுகிக் கொண்டிருக்கும்
பொருளாதார அமைப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட வெளிப்பாடாகும். இனிமேலும் பெரும்பான்மையான மக்களுக்கு நிலைத்த நிரந்தரமான வாழ்வாதாரத்தையும் சட்டப்பூர்வமான வாழ்க்கையையும் கொடுக்க முடியாத சீரழிந்த முதலாளியப் பொருளாதாரத்தின் வெளிப்பாடாகும் நெருக்கடியில் உள்ள முதலாளியம் பின்வாங்கவில்லை,
மாறாக மக்களைப் பழிவாங்குகிறது.
முன்பு
போல இலாபத்தை உருவாக்க முடியாத ஆளும் வர்க்கம் தனது நெருக்கடிகளை விலைவாசி
உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை,
அடக்குமுறை, அச்சுறுத்தல் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள் மீது சுமத்துகிறது. தொழிலாளர்களிடமிருந்து
எதிர்ப்புகள் கிளம்பும்போது அவற்றை முறியடிக்க சட்ட உரிமைகள், தேசியவாதம்,
மதவாதம் மற்றும் போலீஸ் ஆகிய கருவிகளைப் பயன்படுத்துகிறது.
அடக்குமுறை என்பது வலிமைக்கு அடையாளம் அல்ல, மாறாக அது அச்சத்தின் அடையாளமாகும். தொழிலாளி வர்க்கம் ஒன்றாக இணைந்தால், அமைப்பாக மாறினால், தமது வலிமையை உணர்ந்தால் என்னவாக மாறும் என்று இந்த அமைப்பு அஞ்சுகிறது. ஆகவே நமக்கு முன்னே உள்ள அதி அவசரமான கடமை இந்த வன்முறையை அம்பலப்படுத்துவதோடு மட்டும் நில்லாமல் நாம் ஒரு பெரும் அமைப்பாக ஒன்று திரண்டு போராட வேண்டும்.
குர்கானில்
வங்காளத் தொழிலாளர்களைச் சந்தித்தபோது, நாங்கள் அவர்களது வலியை, துயரங்களை ஆவணப்படுத்துவதோடு நிற்கவில்லை, நாங்கள் அவர்களுடன் போராட்டத் திட்டங்கள் குறித்து விவாதித்தோம். இந்த துயரங்களுக்கான தீர்வு
அரசாங்கத்திடம் முறையிடுவதிலோ அரசுசாரா அமைப்புகள் மூலம் முறையிடுவதிலோ இல்லை; சுதந்திரமான போராட்டக் குழுக்களை அமைப்பதிலும், தொழிலாளர்களால் வழி நடத்தப்படும் கூட்டு
அமைப்புகளை உருவாக்குவாதிலும் உள்ளது. இந்தக் குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும்; பிரதேசங்கள் கடந்து, மதங்கள் கடந்து ஒருமைப்பாட்டைக் கட்டமைக்க வேண்டும்; தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்
கம்யூனிஸ்ட்களும்
புரட்சியாளர்களும் உழைக்கும் வர்க்கத்துடன் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கு முந்திச் செல்வதோ, அவர்களுக்கு மேலாக இருப்பதோ கூடாது. நாம் அவர்களின் பிரச்சனைகளை
உன்னிப்பாகக் கேட்க வேண்டும்; நமது பகுப்பாய்வுகளை அவர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும்; எதிர்ப்புக்கான கருவிகளைக் கட்டமைக்க உதவ வேண்டும். இதன்
மூலம் முதலாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்கான அரசியல் பூர்வமான ஆயுதங்களை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால், அவர்களால் பேரரசுகளையும் கூட வீழ்த்தி விட
முடியும் என்பதை வரலாறு காட்டியுள்ளது.
இன்று
நம் முன் நிற்கும் கேள்வி
மிக வலிமையானது, எளிமையானது:
அமைப்பாவோம்
இல்லாவிட்டால் நசுக்கப்படுவோம்! உலகத் தொழிலாளர்களே ஒன்று படுவோம்!
தமிழில்:சூர்யா
நன்றி:
leftcom.org
Comments
Post a Comment