Skip to main content

முதலாளியத்திற்கு முட்டுக் கொடுக்கும் சி.பி.ஐ, சி.பி.எம் வகையறாக் “கம்யூனிஸ்ட்டுகள்”

உலகின் போலீஸ்காரனாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இன்று வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. “மீண்டும் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வர்த்தகப் போரைத் தொடுத்துள்ளார். பிற நாடுகளிலிருந்து தனது நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது கடுமையான அளவு வரிகளை உயர்த்தியுள்ளார். ‘இந்தப் பூமியின் மீது உள்ள அனைத்து நாடுகளின் மீது கடுமையான வரிகளைப் போடுவதற்கு தனக்கு வரம்பற்ற அதிகாரம் உள்ளதாக ட்ரம்ப் கருதிக் கொண்டிருக்கின்றார். அவருடைய நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை.’ என்றும், ‘நிலையற்ற இந்த வணிகச் சூழல் தொழில்களையும் நுகர்வோரையும் கடுமையாகப் பாதிக்கும்’ என்றும் என அந்த நாட்டுக் கூட்டரசின் மேல் முறையீட்டு நீதி மன்றமே அவரைக் கண்டிக்கும் அளவுக்கு அவருடைய எதேச்சதிகார நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

‘ட்ரம்ப் மோடியின் சிறந்த நண்பர். எனவே அவர் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிகளை அதிகப்படுத்தமாட்டார். சீனாதான் அமெரிக்காவின் போட்டி நாடு. எனவே அந்த நாட்டின் மீதுதான் வரிகளை அதிகப்படுத்துவார். அதனால் சீனாவில் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வரும் அமெரிக்க முதலாளிய நிறுவனங்களும் பிற நாட்டு நிறுவனங்களும் தமது மூலதனத்தை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இடம் பெயரச் செய்யும். அதன் மூலம் அதிக அளவில் அந்நிய மூலதனம் இந்தியாவிற்குக் கிடைக்கும். இவ்வாறெல்லாம் இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிய வர்க்கம் நினைத்தது; அதிக வரி விதிப்பின் காரணமாக சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் விலை அதிகரிக்கும். அதனால் அமெரிக்கச் சந்தையில் சீனப் பொருட்களுக்கான சந்தை சுருங்கும்; அந்த இடத்தைத் தான் பிடித்துக் கொள்ள முடியும் என்றும் கற்பனை செய்தது.

ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கு ஒரு கட்டத்தில் 145% வரை வரி விதித்தார்.ஆனால் அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது. மேலும் மின்சார வாகனங்கள், குறை மின்கடத்தி, ட்ரோன்ஸ், ரோபோட்ஸ், காந்த அதிர்வு அலை வரைவு (MRI scan), ஏவுகணைகள் ஆகியவற்றின் உற்பத்திக்கு மிகவும் அவசியமான அரிய புவி காந்த கனிமங்களின் உற்பத்தியிலும், சுத்திகரிப்பிலும் சீனா 90% அளவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. இவற்றை சீனா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்தது. இவை இல்லாமல் அமெரிக்காவினால் தனது நவீனத் தொழில்களைத் தொடர முடியாது. வேறு வழி இல்லாமல் அமெரிக்கா சீனாவிடம் பணிந்து போக வேண்டி நேரிட்டது. அதனால் வரியை 30% ஆகக் குறைத்தது. அதனால் இந்திய முதலாளிகளின் கனவு நிறைவேறவில்லை.

இந்தியப் பொருட்களின் மீது வரி விதிப்பதைத் தடுப்பதற்காக ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அவரைத் தாஜா செய்வதற்காக இந்தியப் பிரதமர் ஓடோடிச் சென்று பார்த்தார். அவருடைய நட்பு என்ற ஆயுதத்தை எய்து பார்த்தார். ஆனால் அவருடைய சாணக்கியத்தனம் ட்ரம்ப்பிடம் எடுபடவில்லை. தனக்கு நட்பை விட இலாபமே முக்கியம் என்று ட்ரம்ப் முதலாளிய வர்க்கத்தின் பண்புக்கு இலக்கணமாக நடந்து கொண்டார்.

ரசியாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா கொள்ளை இலாபம் அடித்து வருவதாகவும், அது மட்டுமல்லாமல் ரசியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி வருவதாகவும், அதன் மூலம் உக்ரைன் போரை நடத்துவதற்கு இந்தியா ரசியாவுக்கு மறைமுகமாக நிதி வழங்கி வருவதாகவும், ரசியாவின் உக்ரைன் போரை இந்தியாதான் நடத்துவதாகவும் ட்ரம்ப்பும் அவருடைய அதிகாரிகளின் கூட்டமும் கூறி வருகின்றன. அதனால் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25% வரிக்கும் மேலாக கூடுதலாக இன்னும் 25% வரி விதித்துள்ளது அமெரிக்கா. இது ஆகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் நோக்கம் இந்தியா ரசியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதையும், ஆயுதங்கள் வாங்குவதையும் நிறுத்தி விட்டு தம்மிடம் எண்ணெயையும் ஆயுதங்களையும் வாங்க வேண்டும் என்பதுதான். அதன் மூலம் தனது பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் இந்திய முதலாளிகள் மலிவான விலையில் கிடைக்கும் ரசிய எண்ணெய்க்குப் பதிலாக அதிக விலை கொடுத்து அமெரிக்க முதலாளிகளிடமிருந்து வாங்கி நட்டப்படத் தயாராக இல்லை.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பின் காரணமாக ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், காலணி முதலிய தோல் பொருட்கள், வைரம், இரத்தினக் கற்கள், தங்க ஆபரணங்கள், இறால், வேதியல் பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. சந்தை இல்லாத காரணத்தால் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். அதனால் பல இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இந்திய முதலாளி வர்க்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22% தான் ஏற்றுமதி ஆகிறது. மேலும் மொத்த ஏற்றுமதியில் 20%தான் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது. அதாவது மொத்தப் பொருட்களில் சுமார் 4% தான் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகிறது. அவ்வாறு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ஆகும் மொத்தப் பொருட்களில் 60% பொருட்கள்தான் 50% வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மின்னணுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை வாயு போன்ற பொருட்கள் 50% வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் இந்திய முதலாளிகளும் அவர்களுடைய ஊதுகுழல்களான ஊடகங்களும் வானமே இடிந்து விட்டது போலக் கூப்பாடு போடுகின்றன.

இந்த நெருக்கடியில் இருந்து அரசாங்கம் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என இந்திய முதலாளிகள் கோரி வருகின்றனர். மானியங்கள் வழங்க வேண்டும் என்றும், கடன்கள் வழங்க வேண்டும் என்றும், கடன்களை இரத்து செய்ய வேண்டும் என்றும், கடன்களை வசூலிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய முதலாளிகள் மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்க விரும்புகின்றனர்.

அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களை விற்கத் தடை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்காகவே பிரதமர் மோடி உள்நாட்டுப் பொருட்களையே மக்கள் வாங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.

மேலும் மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரிகள்) ஐக் குறைக்கப் போவதாகவும், அதனால் பொருட்களின் விலைகள் குறையும் என்றும், அதனால் மக்கள் பயனடைவார்கள் என்றும் மோடி திடீரென அறிவிக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைக் கொள்ளை அடித்து வந்த மோடியின் அரசாங்கம் இப்பொழுது மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டு வரியைக் குறைப்பது போல நாடகமாடுகிறது. உண்மையில் இந்த நடவடிக்கைக்குக் காரணம் மக்கள் மீது கொண்ட அக்கறை அல்ல. அமெரிக்காவில் இழந்துள்ள சந்தையைச் சரிக்கட்ட உள்நாட்டில் நுகர்வை அதிகரிக்க வேண்டும், அதற்காக வரியைக் குறைத்து பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும். அதன் மூலம் முதலாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.

மோடி அரசாங்கம் மட்டும் முதலாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கூடவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலைக் கட்சிகளும் முதலாளிகளைக் காப்பாற்ற, முதலாளிகளுக்கு ஆதரவாக செப்டம்பர் 5 ந் தேதி தமிழ் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

ஏற்றுமதித் தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, உற்பத்தித் தொழில்களைப் பாதுகாக்க ஏற்றுமதி மானியம், வரிச் சலுகை உள்ளிட்ட மாற்றுத் திட்டத்தை உருவாக்கி உதவ வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்புக் கொள்கையைக் கண்டித்தும் அந்தக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. மேலும் நாட்டின் சுய சார்புக் கொள்கையையும் ஏற்றுமதித் தொழில்களைப் பாதுகாக்கவும் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

பல கோரிக்கைகளில் ஒன்றாக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாப்பது என்ற ஒரு கோரிக்கையைச் சேர்த்து விட்டதாலேயே இது தொழிலாளி வர்க்கத்திற்கான போராட்டம் என ஆகி விடும் என அந்தக் கட்சிகள் கருதுகின்றன போலும். உண்மையில் இது முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு முட்டுக் கொடுக்கும் போராட்டமாகும். முதலாளிகள் வாழ்ந்தால்தான் தொழிலாளிகள் வாழ முடியும் என்ற முதலாளிய வர்க்கக் கண்ணோட்டத்தில் அமைந்துள்ள கோரிக்கையாகும் இது.

ஏற்றுமதித் தொழில்களை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைக் காப்பாற்றுவது பற்றிப் பேசும் இக்கட்சிகள் நாட்டில் இன்று கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் இருப்பது பற்றிக் கவலைப்படவில்லை. முதலாளிய சமூகத்தில் வேலை இல்லாத ஒரு பட்டாளம் எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முதலாளிகள் குறைவான கூலியில் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை வாங்க முடியும். எனவே இலாப அடிப்படையில் இயங்கி வரும் முதலாளிய உற்பத்தி முறையில் வேலை இன்மையை முற்றிலும் ஒழிக்க முடியாது. அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமானால் முதலாளிய உற்பத்தி முறையை அகற்றி விட்டு சோசலிச உற்பத்திமுறையைக் கொண்டு வரவேண்டும். இது கம்யூனிசக் கோட்பாட்டின் அரிச்சுவடி. ஆனால் இக்கட்சிகள் முதலாளிகளைக் காப்பாற்றுவதன் மூலம் வேலை வாய்ப்பைக் காப்பாற்றி விடலாம் எனப் பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றி வருகின்றன.

மேலும் இந்தக் கட்சிகள் காப்பாற்றத் துடிக்கும் இந்திய முதலாளிகள் இந்த நாட்டு மக்கள் மீது பற்றுக் கொண்டவர்களோ மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டவர்களோ சுய சார்புக் கொள்கையைக் கொண்டவர்களோ கிடையாது. தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளி நாடுகளில் விற்றுக் கொள்ளை இலாபம் அடித்து வருபவர்கள். உலகச் சந்தையில் போட்டி போடுவதற்காக உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டி இங்குள்ள தொழிலாளர்களின் உழைப்பை மலிவான கூலிக்குச் சுரண்டி வருபவர்கள். இவர்களுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காக தொழிலாளர்கள் தினம்தோறும் 12 மணி முதல் 14 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கோருபவர்கள்; அதற்கான சட்டங்களை அவர்களுடைய ஏஜண்டுகளான ஆட்சியாளர்களைக் கொண்டு நிறைவேற்றியும் உள்ளனர்.

ரசியாவிலிருந்து மலிவான விலைக்கு எண்ணையை அதிக அளவு வாங்குவது அம்பானியின் ரிலையன்ஸ் தொழில் நிறுவனம். அதற்கு அடுத்து வாங்குவது ரசிய-இந்திய நிறுவனமான நயாரா. ஆனால் இந்த நிறுவனங்கள் தாம் சுத்திகரிப்புச் செய்த எண்ணையை ஐரோப்பா, ஆப்ரிக்கா, பிற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் அடித்து வருகின்றன. அவை தனது இலாபத்தைக் குறைத்துக் கொண்டு இந்திய மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வழங்கவில்லை. ஏனென்றால் இந்த முதலாளிகளுக்கு நாட்டு நலனில் சிறிதும் அக்கறை இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் இலாபம்தான்.

மேலும் அண்மையில் துணி ஆலை முதலாளிகள் இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் பருத்தி மீது இருந்த 11% இறக்குமதி வரியை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்த நாட்டில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளனர் முதலாளிகள்.

முதலாளிகளுக்கு தம் நாடு, தம் மக்களின் நலன் என்ற கொள்கை எதுவும் கிடையாது. அவர்களுக்குத் தேவை இலாபம், இலாபம், இலாபம். சுய சார்பு என்பது அவர்களிடம் இல்லாத ஒன்று. இந்த இல்லாத சுய சார்புக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்த மூன்று கட்சிகளும் கூறுவதுதான் வேடிக்கை.

காலனிய காலத்தில் ஏகாதிபத்தியங்கள் தமது சந்தையை விரிவுபடுத்த நாடுகளைப் பிடிக்கும் போர்களில் இறங்கின. ஆனால் இன்று ஏகாதிபத்தியங்கள் தமது சந்தையை விரிவுபடுத்த வாய்ப்புள்ள இடங்களில் ஆயுதப் போரிலும், பிற இடங்களில் வர்த்தகப் போரிலும் இறங்குகின்றன. முதலாளியம் நீடிக்கும் வரையிலும் பொருளாதார நெருக்கடிகளைத் தவிர்க்க முடியாது. இந்தப் போர்களையும் தவிர்க்க முடியாது. உலகில் அமைதியும் நிலவாது.

முதலாவது உலகப் போருக்கான அபாயம் நிலவி வந்தபோது, அவ்வாறு போர் வந்தால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் (அன்று சமூக ஜனநாயகக் கட்சிகள்) தமது நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்றும், உலகப் போரை உள்நாட்டுப் புரட்சிகரப் போராக மாற்ற வேண்டும் என்றும், உலகப் போருக்குக் காரணமான முதலாளி வர்க்க ஆட்சியை வீழ்த்தி பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. . ஆனால் போரின் போது ஜெர்மனியில் காவுட்ஸ்கி தலைமையில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி அந்த நாட்டின் முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவு தந்து தேசிய சமூக வெறிக் கட்சியாக மாறியது. லெனின் தலைமையில் இருந்த போல்சுவிக் கட்சி மட்டுமே முதலாளிகளுக்கு இடையிலான போரை உள்நாட்டுப் போராக மாற்றி பாட்டாளி வர்க்கம் தனது விடுதலையைச் சாதிக்க உதவியது.

அன்று நடந்தது சந்தைக்காக இரத்தம் சிந்திய ஆயுதப் போர். இன்று நடப்பது சந்தைக்காக இரத்தம் சிந்தாத வர்த்தகப் போர். இன்று உண்மையான கம்யூனிஸ்டுகளின் வேலை தனது நாட்டிலுள்ள முதலாளிகளைக் காப்பாற்றுவதன் மூலம் ஏற்கனவே வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் வேலையை மட்டும் பாதுகாப்பது அல்ல, மாறாக சமூகத்தில் உழைக்கத் தகுதி வாய்ந்த அனைவருக்கும் வேலை கொடுக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான்; இன்றைய வேலை இன்மைக்கும், நெருக்கடிகளுக்கும், போர்களுக்கும் காரணமாக இருக்கும் முதலாளிய வர்க்கத்தின் அரசியலையும் பொருளாதாரத்தையும் மக்கள் முன் அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச சமூகத்தைப் படைக்க உதவுவதுதான்.

மு.வசந்தகுமார்


Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...