Skip to main content

முதலாளித்துவத்தின் சடங்குகள்!

 

முதலாளித்துவக் கதைகூறலை மேலாதிக்கம் கொண்டதாக வளர்த்தெடுப்பதற்கு முதலாளித்துவத்தின் சடங்குகள் முக்கியமானவை. கதை சொல்வதைத் தவிர முதலாளித்துவத்துக்குத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள வேறு மாற்றுக்கள் இல்லை. இயல்புக்கு மாறான மற்றும் இயற்கைக்கு மாறான செயல்முறைகளும் நிறுவனக் கட்டமைப்புக்களும் மட்டுமே தங்கள் அன்றாட வாழ்க்கையில் சாத்தியமான வாய்ப்புக்கள் என்று மக்களை ஒப்புக்கொள்ளச் செய்வதற்கு, மதங்களைப் போல, முதலாளித்துவமும் சடங்குகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் சமூக, பொருளாதார, மற்றும் சந்தை உறவுகள் தனிநபர்களாலும் சமூகங்களாலும் உள்வாங்கிக் கொள்ளப்படவேண்டும், அவற்றுக்கு அறிவார்ந்த விளக்கமளிக்க வேண்டும், அதன் மூலம் உலக வாழ்வில் அவற்றை நிரந்தரமாக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தையும் அதன் கலாச்சாரத்தையும் இயல்பானவையாகவும் இயற்கையானதாகவும் உணரச்செய்ய வேண்டும். அதற்கு இந்தச் சடங்குகள் உதவுகின்றன.

அரசியல், கலாச்சார, பொருளாதார, சமூக, மற்றும் கல்வித் திட்டங்களைக் கட்டுப்படுத்தவும் பழக்கப்படுத்தவும் ஊக்குவிக்கவும் மக்களையும் இயற்கையையும் மாயையான சுதந்திரத்தின் பெயரால் பழக்கப்படுத்தவும் முதலாளித்துவத்தின் சட்டபூர்வக் கட்டமைப்பு, சந்தை நெறிமுறைகள், ஆட்சி நடைமுறைகள், கலை, கட்டிடக்கலை, விளம்பரம், சினிமா, இசை ஆகியவை வழிவகை செய்கின்றன. இவை முதலாளித்துவம் மக்களையும் பூமியையும் பண்டமாக்கவும் அடிமைப்படுத்தவும் எல்லையற்ற சுரண்டலின் மூலம் முதலாளித்துவம் நீடித்திருக்கவும் அனுமதிக்கின்றன.

முதலாளித்துவத்தின் முதன்மையான சடங்கு, முதலாளித்துவ சமுதாயங்கள் அனைத்திலும் தனிச் சொத்து புனிதமாகக் கருதப்படுகிறது, அதை நிறுவிப் பாதுகாப்பதற்கு நிலத்தையும் பிற இயற்கை மூலவளங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கவேண்டும்.. தனிச் சொத்தினை இவ்வாறு புனிதமாக்குவது எல்லையற்ற செல்வக் குவிப்புச் செயல்முறைக்கு வழிவகை செய்கிறது; அதற்குத் துணையாக சர்வாதிகாரமோ, ஜனநாயகமோ எதுவாக இருந்தாலும் சட்டங்களும், கொள்கைகளும், கொடூரமான வன்முறையும் இருக்கின்றன; அவை தெய்வீக ஒழுங்கு அல்லது எதேச்சாதிகார ஆட்சியின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றன. சமூக மூலவளங்களை இவ்விதம் தனிச்சொத்தாக மாற்றுவது, சமகால முதலாளித்துவத்தைத் தாங்கிப் பிடிப்பதற்கான அடிப்படைத் தூணாக ஆகியிருக்கிறது. முதலாளித்துவத்தின் மீதான எந்த எதிர்ப்பும் குற்றச் செயலாகும், அது வளர்ச்சிக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, சுதந்திரத்திற்கு எதிரானது, அல்லது தேச விரோதமானது என்று முத்திரை குத்தப்படக்கூடிய நிலைமைகளை சட்டப் பொறியமைவுகளும் கொள்கைக் கட்டமைப்புக்களும் உருவாக்கியிருக்கின்றன. இப்படிப்பட்ட மேலாதிக்கக் கதைகூறல் முதலாளித்துவம் எந்தக் குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ளாமல் பிழைத்திருப்பதற்கும் வளர்வதற்கும் அனுமதிக்கிறது.

பண்ட வழிபாடு முதலாளித்துவத்தின் இன்னொரு அடிப்படையான சடங்கு ஆகும், உயிருள்ள உழைப்பும் இயற்கையும் பண்டமயமாக்கப்படுவது இந்த அமைப்பு முறையின் மையமாக இருக்கிறது. அது உற்பத்தி, மறுஉற்பத்தி, விநியோகம், பரிவர்த்தனை, மற்றும் நுகர்வு நிகழ்ச்சிப்போக்குகளில் உள்ளடங்கியுள்ள அடிப்படையான சமூக உறவுகளைப் புரிந்துகொள்ள இயலாமல் செய்கிறது. பண்ட வழிபாட்டின் மூலமாக மனிதர்கள் ஒருவருடன் ஒருவரும் இயற்கையுடனும் கொண்டுள்ள உறவுகளும் மதிப்பிழக்கச் செய்யப்பட்டு, சிதைக்கப்படுகின்றன. இது கூட்டுச் சமூகங்களைக் கலைத்து, அவர்களுடைய கூட்டு அடித்தளங்களை அரிக்கச் செய்கிறது, அவர்களுடைய ஒருமைப்பாட்டுக் கலாச்சாரங்களை அழிக்கிறது, அதற்குப் பதிலாக முதன்மையாக நுகர்வோர்களாக மட்டுமே வாழுகிற தனிமைப்பட்ட நபர்களை உருவாக்குகிறது. அப்படிப்பட்ட அந்நியமாக்கப்பட்ட சமுதாயத்தில், மனிதர்கள் இடையிலான உண்மையான பரஸ்பர உறவுகளை அகற்றி, பண்டங்கள் நுகர்வே தனிநபர் வாழ்க்கைக்கான அர்த்தத்தின் முதன்மை ஆதாரமாக ஆக்குகிறது, முதலாளித்துவத்தில் தனிநபர்களின் அன்றாட நடவடிக்கைகள்எனது இடம், எனது மகிழ்ச்சி, எனது மகிழுந்துபோன்ற பிடிபடாத எண்ணங்களால் வடிவமைக்கப்படுகின்றன..

தரப்படுத்துதல் என்பது முதலாளித்துவத்தின் இன்னொரு மூலஉத்திச் சடங்காகும்,. அது சரக்குகள், சேவைகள், முதலாளித்துவ விரிவாக்கத்தின் தேவைகளுக்கு ஒத்திசைவான கலாச்சாரம் ஆகியவற்றின் பெருந்திரள் உற்பத்தியின் கள மேலாண்மைக்கு வழிவகை செய்யும் கருத்தியல்களில் வேர்கொண்டுள்ளது. உற்பத்திப் பொருட்கள், நேரம், திறன்கள், தொழில்நுட்பங்கள், மக்கள், அவர்களுடைய படைப்பாற்றல் ஆகிய அனைத்தும் முதலாளித்துவ இலாபவேட்டைக்கு ஏற்றவகையில் தரப்படுத்தப்படுகின்றன. திறன் மேம்பாட்டுக்கும் அதிகபட்ச இலாபமீட்டலுக்கும் இந்த மூல உத்தி ஆதரவாக இருக்கிறது, அதே சமயத்தில் இது சிறு உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் கூட தீங்கிழைக்கக் கூடியதாகும், ஏனென்றால் இது பயனளிக்கும் வாய்ப்புத் தேர்வுக்கு வரம்பிடுகிறது. உழைக்கும் மக்களைப் பொருத்தவரையிலும், தரப்படுத்துதல் வட்டார உற்பத்தி மற்றும் நுகர்வுக்குத் தேவையான நிலைமைகளைச் சீர்குலைக்கிறது, அதன்மூலம் சரக்குகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன, எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சுற்றியுள்ள பல்வகை கலாச்சார நடைமுறைகளை அழித்து விடுகின்றன. இறுதியாக, உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் இலாபங்களைக் குவித்துக்கொள்வதற்கு தரப்படுத்துதல் உதவுகிறது. அதேநேரத்தில், அது தொழிலாளர்களின் வாழ்க்கையில் சலிப்பை ஏற்படுத்துகிற, ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்கிற கலாச்சாரத்தை உருவாக்கி, அவர்கள் மீது சலிப்பூட்டும் ஒரே மாதிரியான வேலையைத் திணிக்கிறது.

முதலாளித்துவம் அதன் சடங்குமயமாக்கலின் ஒரு பகுதியாகசுதந்திரமான சந்தைஎன்னும் சமூக உறவுக்கு எதிரான ஒரு கருத்தாக்கத்தைப் பரப்புகிறது. சுதந்திரமான சந்தை உண்மையில் சுதந்திரமாகவோ நியாயமாகவோ இல்லை. நடைமுறையில், அது உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மற்றும் விநியோகிப்போர் ஆகியோரிடமிருந்து விடுவித்துக்கொள்கிறது, அரசின், அரசாங்கத்தின் அல்லது பிற ஒழுங்குமுறை நிறுவனங்களின் பொறுப்புடைமை அல்லது தணிக்கையிலிருந்து தப்பிக்கிறது. அது உற்பத்தியாளர்கள் அல்லது நுகர்வோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு சமூக நிறுவனமோ பொருளாதார நிறுவனமோ அல்ல. அதற்குப் பதிலாக, முதலாளித்துவ வர்க்கத்துக்கு மேலதிக இலாபத்தைப் பெருக்குவதற்கு ஏற்றவகையில் உற்பத்தி, விநியோகம், நுகர்வு மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றைச் சூழ்ச்சித் திறத்துடன் கையாளும் வகையிலும், அதேவேளையில், உழைக்கும் மக்களைத் தங்குதடையற்ற வகையில் சுரண்டும் வகையிலும் கட்டமைக்கப்படுகிறது. சுதந்திரமான சந்தை என்பது உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் தடையில்லாமல் சுரண்டுவதற்கானது.

தனியுரிமை, தனிநபர்வாதம், மற்றும் சுதந்திரம் ஆகியவை முதலாளித்துவத்தின் புனிதச் சாத்திரங்கள் ஆகும். இந்தச் சூழமைவில் தனியுரிமை என்பது முதன்மையாக சொத்தையும் அதன் உரிமையாளர்களையும் பாதுகாக்கும் வகையிலும், அதேநேரத்தில் உழைக்கும் மக்கள் வறுமை, பட்டினி, உறைவிடம் இன்மை ஆகிய கடுமையான நிலைமைகளைத் தொடர்ந்து பொறுத்துக் கொள்கிற வகையிலும் வடிவமைக்கப்படுகிறது. ஏழை மக்களுக்குத் தனியுரிமை என்பது பலநேரங்களில் இடம்பெயர்ந்து தங்குமிடங்களாக, மரத்தடியில், போவோர் வருவோர் பார்வையிலிருந்து மறைந்துகொள்ள நெகிழித் தாள்களைக் கொண்டு சுற்றிக்கட்டப்பட்ட சாலையோரக் குடிசைகளில் வாழும் வகையில் குறுக்கப்படுகிறது, எண்படுத்தல் (digitalisation) காலகட்டத்தில், உழைக்கும் ஏழை மக்களின் தனியுரிமை என்பது அரசு அல்லது தனியார் குழும நிறுவனங்களில் கணினிச் சுட்டியில் அணுகக்கூடிய வெறும் தரவு எண்களாகச் சேமிக்கப்படுகின்றன.

தனிநபர்வாதம், சுதந்திரம் ஆகிய முதலாளித்துவச் சாத்திரங்கள், பெரும்பாலும் மரணத்துக்குப் பிந்தைய இரட்சிப்புக்கான வாக்குறுதியைப் போல, மாயையாகவே இருந்துவருகின்றன. இருப்பினும் பயன்பாடு, இன்பநாட்டம், மற்றும் திருப்தியடைதல் ஆகிய கருத்தியல்களில் வேர்கொண்டுள்ள தனிநபர்வாதம் மற்றும் சுதந்திரத்தின் பல்வேறு வடிவங்களை முதலாளித்துவம் தொடர்ந்து பரப்புகிறது. உண்மையில், தனிநபர்கள் பலநேரங்களில் உண்மையான சுதந்திரத்தையும் உடலின்பத் தேவைகளையும் கட்டமைக்கப்பட்ட, ஆசையால் உந்தப்பட்ட, நுகர்வோரிய சமுதாயத்துக்குள் பலியிடுகிறார்கள். இந்தச் சமுதாயம் பண்டச் சந்தையை நீட்டிப்பதற்கான பொருளாசைகளை நிரந்தரமாக மறுஉற்பத்தி செய்கிறது. தனிநபர் சுதந்திரம் என்று குறிப்பிடப்படுபவை கூட முதலாளித்துவ அமைப்பின் தேவைகளால் கவனத்துடன் பராமரிக்கப்பட்டு, கட்டுப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில், சுதந்திரம் பற்றிய கருத்து கட்டுக்கதையே தவிர வேறல்ல.

வன்முறைச் சாத்திரங்கள் முதலாளித்துவத்துக்குள் உள்ளார்ந்தவையாக இருக்கின்றன. மனிதர்களைச் சுரண்டுவதாக இருந்தாலும் சரி, அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவதாக இருந்தாலும் சரி, படைப்பாக்கத் திறன்களைச் சுரண்டுவதாக இருந்தாலும் சரி, அல்லது இயற்கை மூலவளங்களை அபகரிப்பதாக இருந்தாலும் சரி, முதலாளித்துவ இலாபக் குவிப்பில் அமைதியான செயல்முறை என்ற ஒரு விடயம் இல்லவே இல்லை. முதலாளித்துவ இலாபக் குவிப்பின் மையமாக வன்முறை இருக்கிறது. தனியார் பெருங்குழுமங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு முதலாளித்துவம் பெரும்பாலும் அரசு, போலீஸ், பாதுகாப்புப் படைகள், இராணுவம் போன்ற அரசு நிறுவனங்களையும் சார்ந்திருக்கிறது. உலகெங்கும், சுரங்கம் சார் தொழில்மயமாக்கலின் பெயரில் பூர்வகுடி சமூகங்கள் பல நேரங்களில் இடம்பெயரச் செய்யப்படுகின்றன அல்லது கொல்லப்படுகிறார்கள். தனியார் செல்வங்களின் இலாப வேட்டைக்காக மக்களும் இயற்கையும் சுரண்டப்படுகிறது.

பெரும்பாலான சமகால மோதல்களும் போர்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூல வளங்களுக்கான மோதல்களாக இருக்கின்றன, இவை அமைதியானதுஎன்று குறிப்பிடப்படும் முதலாளித்துவத்தின் இலாபக் குவிப்புச் செயல்முறைக்கு வன்முறை எந்த அளவுக்கு இன்றியமையாததாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பொது வெளியில் வன்முறையைக் காட்டுவதன் மூலம் வாழ்வின் மீதும் வாழ்வாதாரத்தின் மீதும் அச்சத்தை நிலைநிறுத்தி மக்கள் திரளினரை பழக்கப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது. பழங்கால வன்முறையின் பல்வேறு வடிவங்கள் அன்றாட ஆட்சி நிர்வாகத்தில் பொதிந்துள்ளன, அரசும் அரசாங்கமும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்ற பெயரில் அவற்றைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துகின்றன. இவை பொதுமக்களைப் பழக்கப்படுத்துவதற்கான கருவிகளாகும். வன்முறையை இயல்பானதாகக் காட்டுவதும் கொண்டாடுவதும் முதலாளித்துவத்துடன் ஒன்றிணைந்தவை, அவை அதன் உள்ளடக்க முறைகளாகவும் செயல்முறைகளாகவும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

பலநேரங்களில் சர்வாதிகார, பகுத்தறிவற்ற, பிற்போக்கு மற்றும் மூடநம்பிக்கை அரசியல், சமூக, கலாச்சார, மற்றும் மதவாத சக்திகளை கலாச்சார சார்பியல்வாதம் என்ற போர்வையில் முதலாளித்துவச் சாத்திரங்கள் உயர்த்திப்பிடிக்கின்றன. இந்தத் தத்துவார்த்த கட்டுக்கோப்பு, பலநேரங்களில், கலாச்சாரச் சூழமைவின் பெயரில் ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலின் பல்வேறு வடிவங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அப்படிச் செய்வதன் மூலம், அது போர், பருவகால நெருக்கடி, தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இன்றியமையாததாக உள்ள சர்வதேசியக் கண்ணோட்டத்தைச் சீர்குலைக்கிறது.

முதலாளித்துவச் சடங்குகளின் மதப்பண்புகள் சமகால முதலாளித்துவத்தையும் அதன் மனிதத்தன்மையகற்றும் அன்றாட நடவடிக்கைகளையும் தொடர்ந்து வடிவமைக்கின்றன. ஆகவே இந்த முதலாளித்துவச் சாத்திரங்களை மோதி முறியடிப்பதற்கான போட்டிச் சடங்குகள் வரவேண்டும், அதே சமயத்தில், பன்மைத்துவ, ஜனநாயக, காலனியமற்ற, பரவல்தன்மை கொண்ட மற்றும் சூழல்கேடற்ற மாற்றுக்களைக் கட்டியமைக்க வேண்டும், அதில் மக்களுக்கும் புவிக்கோளுக்கும் அமைதியும் வளமும் கொண்ட எதிர்காலத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும்.

 

பவானி சங்கர் நாயக்

தமிழில்: நிழல்வண்ணன்

நன்றி: Frontier

 

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...