நோபல் பரிசுக் குழு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஆதரவுடன் வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்களில், செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மரியா கொரினா மகடோவுக்கு வழங்கி உள்ளது. அதன் மூலம் அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவின் மீது போர் தொடுப்பதற்காக வழி செய்து உள்ளது. மரியா கொரினா வெனிசுலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஏராளமான சதிகளில் ஈடுபட்டார்; ஆனால் அவை தோல்வியில் முடிந்தன; வெனிசுலாவின் தெருக்களில் பல வன்முறையான கலவரங்களைத் தூண்டி ஏராளமானவர்களின் மரணத்துக்கு வழி வகுத்தார்; வன்மம் நிறைந்த தனது அரசியல் வெற்றிக்கு நிதி பெறுவதற்காக தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை ட்ரம்பின் "மீண்டும் அமெரிக்காவை சிறப்பானதாக்குவோம்" என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துள்ள மகா கோடீஸ்வரர்களுக்கு வழங்கத் திட்டமிட்டு செயல் புரிந்து வருகிறார்.
"அமைதியான முறையில் தனது நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முயன்றார்" என்று நோபல் பரிசுக் குழு அவரைப் பாராட்டியது. ஆனால் மரியா கொரினா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வெனிசுலாவின் மேல் ராணுவ நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தார்.
தனது நாட்டை அழிக்க இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்த ஓராண்டு காலம் கழித்து, அமெரிக்கா லிபியாவின் மீது போர் தொடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அதே முறையில் தனது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வெனிசுலாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று கேட்டார்.
வாஷிங்டனின் தனியார்மயப்படுத்தும் திட்டத்தையும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் எதிர்க்கும் இலத்தின் அமெரிக்க நாடு எதுவானாலும் பயங்கரவாதத்தையும் ராணுவ முற்றுகையையும் ஏற்படுத்த அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் (CIA) நிதி ஆதரவு பெற்ற மார்க்கோ ரூபியோவின் கைப் பொம்மை மகடோ. அது மட்டுமல்ல, மகடோ வெனிசுலாவின் ஜனாதிபதியாக மிராஃபோளோரெஸ் அரண்மனை - ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் - ஆட்சி அதிகாரத்திற்கு ஒருவேளை வந்து விட்டால், வெனிசுலாவின் முன்னாள் தலைவர் ஹ்யூகோ சாவெஸின் மக்கள் நல திட்டங்களின் எச்சங்கள் கூடத் தெரியாமல் அவற்றை முழுவதுமாக வேரோடு அழித்து விடுவார். சிலியின் சர்வாதிகாரியாக இருந்த அகஸ்ட்டோ ஜோஸ் ரமோன் பினோசெட்டின் பெண் வடிவ சர்வாதிகாரி போல இருப்பார்.
மகடோ அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலா அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக வேண்டிக் கொண்டிருக்கின்றார். இதனால் ஏராளமான மக்கள் வெனிசுலாவிலிருந்து அலையலையாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார்கள்; இதனால் உள்நாட்டு அமெரிக்கர்களின் கோபத்திற்கு உள்ளானார்கள்; இது ட்ரம்ப் பதவிக்கு வர வழி வகுத்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புலம்பெயர்ந்த வெனிசுலா மக்களை எல் சல்வடாரின் சித்திரவதை முகாம்களுக்கு இந்த ஆண்டு வலுக்கட்டாயமாக அனுப்பியபோது எதிர்பார்த்தபடியே வெனிசுலாவில் தற்போது இருக்கும் ஆட்சியை கவிழ்க்கத் தனக்கு நிதி ஆதரவு தரும் ட்ரம்ப்புக்கு ஆதரவாக மகடோ இருந்தார்.
ஆகவே, மகடோவுக்கு உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுப்பது வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ட்ரம்புக்கு மிகப் பிரமாகாசமான பச்சை விளக்கு காட்டுவது போல ஆகும். மேலும், இந்த முடிவு மேற்கு உலக பேரரசின் மென்மையான அதிகாரக் கருவியாக நோபல் குழு இருக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒபாமா முதல்முறையாக பதவிக்கு வந்த ஆரம்பத்தில் இந்தக் குழு அவருக்கு அமைதிப் பரிசைக் கொடுத்தது; அதன் மூலம் லிபியாவை மிகக் கொடூரமாக அழிப்பதற்கும், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது போர் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், காசாவை அழிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அவருக்கு அளவில்லாத சட்டபூர்வமான ஆதரவை வழங்கியது.
மகடோவின் அரசியல் வாழ்க்கையில் வாஷிங்டனின் ஆதரவும் வழிகாட்டுதலும் இல்லை என்றால் எதுவும் நடக்காது; இந்த நிலையில் நோபல் பரிசு குழுவின் இந்த முடிவானது நார்வேயின் ஆஸ்லோவில் துவங்கிய சதி வெனிசுலாவில் ஒரு போர் நடக்க வழிவகுக்கும்.
ஆங்கிலத்தில்: மேக்ஸ்
ப்ளூமென்தால்
தமிழில்: சூர்யா
ஆசிரியர் பற்றிய
குறிப்பு:
மேக்ஸ்
ப்ளூமென்தால் பல பரிசுகளைப் பெற்ற பத்திரிக்கையாளர் ஆவார். அவர் Republican Gomorrah, Goliath, The fifty one day war மற்றும் The management of Savagery உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்; அவர் ஏராளமான கட்டுரைகளை பிரசுரித்துள்ளார்; ஏராளமான வீடியோ பதிவுகளையும், Killing Gaza உள்ளிட்ட ஏராளமான ஆவணப் படங்களையும்
தயாரித்துள்ளார். ப்ளூ மென்தால் The Grayzone இணையதளத்தை
அமெரிக்காவின் திட்டமிட்ட போர்களையும் அபாயகரமான உள்நாட்டுப் போராட்டங்களை அடக்க
அதன் எதிர்வினைகளையும் வெளிச்சமிட்டு காட்டுவதற்காகத் துவங்கினார். அவரை Twitter at @Maxblumenthal வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம்


நன்று
ReplyDelete