டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் (டிசிஎஸ்)
12000 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யபடும் அபாயம் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு
முன்பு செய்திகள் வெளிவந்த நிலையில் முதலில் அதனை மறுத்த நிறுவனம், பின்னர் ஒத்துக்கொண்டது.
ஆனால், மொத்தமுள்ள 6 இலட்சத்து 13 ஆயிரம் தொழிலாளர்களில் இந்த ஆண்டு மட்டும் 30 ஆயிரம்
தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்ற இருப்பதாக டிசிஎஸ் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில், ஐடி துறையில் மிகக் குறைந்த
கூலியில் பணியாற்றக் கூடியவர்களாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் உள்ளது. வளர்ந்த நாடுகளில்
தொழிலாளர்களின் ஊதியம் அதிகளவில் இருப்பதால், பின் தங்கிய நாடுகளில் இருந்து உழைப்புச்
சக்தியை இறக்குமதி செய்வது அல்லது மூலதனத்தை ஏற்றுமதி செய்வது அல்லது அயல் பணி ஒப்படைப்பு
முறையில் வேலைகளை ஒப்படைப்பது என்று முதலாளிகள் குறைவான கூலியில் வேலை செய்யக் கூடிய
திறன் பெற்ற தொழிலாளர்களைச் சுரண்டுகின்றனர். அந்த வகையில் இந்திய முதலாளி வர்க்கமானது,
இந்தியச் சந்தை மற்றும் சர்வதேசச் சந்தைகளுக்கான தகவல் தொழில் நுட்பச் சேவையை குறைந்த
கூலியில் வழங்கக்கூடிய திறன் பெற்ற தொழிலாளி வர்க்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது; இந்தத்
தொழிலாளி வர்க்கத்தை கடுமையாகச் சுரண்டுவதன் மூலம் சர்வதேசச் சந்தையில் சேவைத்துறையில்
குறிப்பிடத்தக்க பங்கைக் கைப்பற்றி கொழுத்த இலாபம் அடைந்து வருகின்றது.
தகவல் தொழில்நுட்ப துறையில், உலகளவிலான அயல்பணிகளில்
50 சதவீதத்தை இந்திய நிறுவனங்கள் பெறுகின்றன. உலகளவில் இந்திய ஐ டி துறை நிறுவனங்களின்
பங்களிப்பு 5.1 சதவீதமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய ஐடி துறையின்
மொத்த சந்தை மதிப்பு உள்நாட்டுச் சந்தைகளுக்கான பங்கு 5,100 கோடி டாலர்களாகவும், சர்வதேச
சந்தைகளுக்கான பங்கு 19,400 கோடி டாலர்களாகவும் உள்ளது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீத பங்கையும், மொத்த ஏற்றுமதியில்
25.6 சதவீத பங்கையும் ஐடி துறை கொண்டுள்ளது.
பணியில் இருக்கும் தொழிலாளர்களின் திறன் பொருந்தி
வராமையின் காரணமாக தொழிலாளர்களை வெளியேற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிசிஎஸ்
தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் வரவினால் மட்டும் இந்த மாற்றம் நிகழவில்லை, எதிர்காலத்
திறன்களை கருத்தில் கொண்டு இது நடைபெறுவதாகவும், இது ஆட்குறைக்கும் செயலல்ல, தொழிலாளர்களைப்
பணியில் அமர்த்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்கின்றார் டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி.
வாடிக்கையாளர்கள் குறைவான ஊழியர்களைக் கொண்டு
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் மூலம் செயல்படக் கூடிய சிறிய நிறுவன அமைப்புகளையே
விரும்புகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட
வேலைமுறைகளையே வாடிக்கையாளர்கள் விரும்புவதால், அத்தகைய செயற்கை தொழிநுட்பச் சேவைத்திட்டங்களை
அளிக்க கூடிய வகையில் தொழிலாளர்களின் திறன் தேவைபடுவதாகவும் இதனால், இத்தகைய புதிய
திறன்களை பெற்ற தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவது நிறுவனத்திற்குத் தேவையாக உள்ளது
எனவும் டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி தெரிவிக்கின்றார்.
பணியில் இருக்கும் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான
திட்டத்தை முன்னெடுக்காமல், புதியதாகப் படித்து வெளிவரும் இளைஞர்களை குறைந்த கூலியில்
சுரண்ட இத்தகைய வெளியேற்ற நடவடிக்கைகளில் முதலாளி வர்க்கம் எப்பொழுதும் ஈபட்டு வருகின்றது.
தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பது மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதன்
மூலமாக இலாபத்தை அதிகரிப்பது என்ற நோக்கில் முதலாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
ஐடி துறைகளில் தொழிலாளர்கள் 10 மணி நேரம் முதல்
14 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கபடும் நிலையில் அவர்கள் எவ்வாறு நேரம் ஒதுக்கி
தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்? அதிகளவிலான வேலைப்பளுவை தொழிலாளர்களின்
மீது திணிப்பதன் மூலம், அவர்களின் உழைப்பு நேரத்தை அதிகளவில் சுரண்டும் வழிகளில் ஈடுபடுகின்ற
முதலாளி வர்க்கம், தொழிலாளர்கள் தங்கள் தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரத்தையும்,
வாய்ப்பையும் வழங்குவதில்லை. திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளையும், அதற்கான
சூழல்களையும் உருவாக்க வேண்டிய கடமை ஐடி நிறுவனங்களுக்கு உண்டு. ஆனால், பெயரளவிற்கு
சில பயிற்சிகளை வழங்கி விட்டு, புதிய தொழில்நுட்ப வளர்சிக்கு இவர்கள் பொருத்தமில்லை
எனக் கூறி அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இத்தகைய தீவிர சுரண்டலும், தொழிலாளர்களைக் கசக்கிப்
பிழிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் டிசிஎஸ் நிறுவனத்தில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும்
இந்த நிலைமைதான் நீடிக்கின்றது. இன்போசிஸ் 2024 ஆம் ஆண்டில் 26,000 பேரையும், விப்ரோ
24,500 பேரையும் வெளியேற்றியுள்ளது. அக்செஞ்சர் நிறுவனம் கடந்த 3 மாதத்தில் மட்டும்
சர்வதேச அளவில் 10,000 பேரை வெளியேற்றியுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, இண்டெல்
உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளன.
2024 ஆம் ஆண்டு மட்டும் சர்வதேச அளவில் 1.5 இலட்சம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் மாத நிலவரப்படி 204 ஐடி நிறுவனங்களில் இருந்து இந்த ஆண்டில் 90 ஆயிரம் தொழிலாளர்கள்
வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தித்தாள் தெரிவிக்கின்றது.
வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்க நாடுகளுக்கு
ஐடி துறை சார்ந்த எளிமையான வேலைகள் அயல்பணி ஒப்படைப்பு மூலம் ஏற்றுமதி செய்யபடுவது
அதிகரித்து வருகின்றது. இந்தியாவைக் காட்டிலும் மிக குறைந்த செலவில் இந்தப் பணிகள்
இங்கு முடிக்கப்படுவதால், இத்தகைய வாய்ப்புகளை இந்திய முதலாளி வர்க்கம் இழந்து வருகின்றது.
ஆனால் திறன்மிக்க வேலைகளில் இந்தியத் தொழிலாளர்களின் தேவை இன்னும் சந்தையில் இருந்து
வருகிறது.
ஒரே மாதிரியாக, திரும்பத் திரும்ப செய்யப்படும்
வேலைகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயந்திரமயமாக்கப்பட்டு
வருகின்றன. செயற்கை நுண்ணறிவின் வரவு, பல்வேறு துறைகளில், வேலைகளின் எண்ணிக்கையைக்
குறைத்து தொழிலாளர்களை வெளியே தள்ளி வருகின்றது. ஐடி துறையிலும் இதே நிலைதான் நீடிக்கின்றது.
முதலாளிகளுக்கிடையே எழும் போட்டிகளின் விளைவாக, ஒவ்வொரு முதலாளியும் புதிய தொழில்நுட்பத்தைப்
புகுத்தி செலவைக் குறைத்துச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில் இறங்குகிறார்.
ஆனால், ஒட்டுமொத்தத்தில் உற்பத்தியின் மொத்த அளவு குறையவில்லை. மாறாக உற்பத்தியில்
ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைக்கப்படுகின்றது. அதனால் சந்தை
சுருங்குகிறது. ஒரு கட்டத்தில் முதலாளிகளின் உற்பத்தி தேக்கடைந்து பொருளாதார நெருக்கடியில்
சிக்கித் திணறுகின்றது.
சமீபத்திய, டிரம்ப்பின் அச்சமூட்டும் பொருளாதார நடவடிக்கைகளால், அமெரிக்க நிறுவனங்கள் ஐடி துறைக்கான செலவினங்களைக் குறைத்துள்ளன. இதனால் தங்கள் வருவாயை ஈடுகட்டவும், இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அதிக சம்பளம் பெறும் நீண்டகால அனுபவம் பெற்ற தொழிலாளர்களை வெளியேற்றி அவர்களுக்குப் பதிலாக குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தவும் ஐடி நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.
பணியில் இருக்கும் தொழிலாளர்களின் ஊதியச் செலவு
அதிகரித்து வரும் நிலையில், அதனை விடக் குறைவான ஊதியத்தில் அதிக நேரத்தில் பணிபுரிய
கல்லூரிகளிலிருந்து வெளியே வரும் இளைஞர் பட்டாளம் தயாராக இருப்பதால், முதலாளிகளுக்கு
இது கொழுத்த இலாபத்தை தரக் கூடிய நல்வாய்ப்பாக உள்ளது. படித்து விட்டு வெளியே வரும்
தொழிலாளர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்தத் திட்டத்தையும் அரசு
முன்னெடுப்பதில்லை. அவர்கள் உழைப்புச் சந்தையில் போட்டியாளர்களாக நிறுத்தப்படுவதால்,
முதலாளிகள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். தொழிலாளர்களின் திறன்களை
மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சிகளுக்கான செலவும், பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற தொழிலாளர்களுக்கு
வழங்கப்படும் ஊதியமும் அதிகளவில் இருப்பதால், அதனை விடப் பன்மடங்கு குறைவான ஊதியத்தை
படித்து விட்டு வெளியே வரும் இளைஞர்களுக்குக் கொடுத்தால் போதுமானதாக உள்ளது.
இத்தகைய வெளியேற்றமும், தொழிலாளர்களின் மீதான
சுரண்டலும், ஐடி துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, உழைப்புச் சக்தியை விற்பதை
தவிர ஏதுமற்ற தொழிலாளி வர்க்கம் முழுவதன் நிலைமையும் இதுதான். ஐடி துறை தொழிலாளர்களுக்கு
எந்தப் பிரச்சனையும் இல்லை, அவர்கள் கணிசமான அளவில் ஊதியம் பெறக்கூடியவர்களாக உள்ளனர்
என்ற மாயை உடைக்கபட்டு வருகின்றது. ஐடி தொழிலாளர்களின் ஊதியங்கள் வெட்டப்பட்டு வருவதும்,
அவர்களை வேலையிலிருந்து துரத்துவதும் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதனை தனித்தனி துறைகளின்
சிக்கலாகவோ, தனித்தனி நாடுகளின் சிக்கலாகவோ, தனித்தனி நிறுவனங்களின் சிக்கலாகவோ பார்க்காமல்
ஒட்டு மொத்த உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் சிக்கலாகப் பார்க்க வேண்டும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது முதலாளிகளின்
இலாபத்தைப் பெருக்குவதற்காக ஆட்குறைப்பு ஆயுதமாக பயன்படுத்தபட்டு வருகின்றது. ஆனால்,
மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளி வர்க்கம் வேலை இல்லாமல் இருக்கும் போது,
உற்பத்தி செய்த பொருட்களைச் சந்தையில் விற்க முடியாமல் தேக்கம் ஏற்படுகின்றது. இதனால்,
முதலாளித்துவப் பொருளுற்பத்தி நெருக்கடியில் சிக்கி வருகின்றது, பல்வேறு சீர்த்திருத்த
நடவடிக்கைகள் அல்லது அழிப்புகளின் மூலம் இந்த நெருக்கடிகள் தள்ளிப் போடப்பட்டு வருகின்றன.
இந்த நெருக்கடிகளின் விளைவாக எழுந்த மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் வர்க்க
உணர்வுபெற்ற பாட்டாளி வர்க்கத் தலைமை இன்மையின் காரணமாக மீண்டும் மற்றுமொரு முதலாளி
வர்க்கத்தின் பிரதிநிதிகளிடம் ஆட்சி அதிகாரத்தை கைமாற்றித் தருகின்றன.
இந்த நிலையில், முதலாளி வர்க்கத்தின் தாக்குதல்களை
எதிர் கொள்ளவும் அவற்றை முறியடிக்கவும் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள்
அனைவரும் அமைப்பாக ஒன்று திரள வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல், பிற துறைகளில் உள்ள
தொழிலாளர்கள் அனைவருடனும் கைகோர்க்க வேண்டும். ஒன்றுபட்ட, வர்க்க உணர்வும் அமைப்பு
பலமும் கொண்ட. தொழிலாளி வர்க்கத்தினால் மட்டுமே முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கும்
அடக்குமுறைக்கும் முடிவு கட்ட முடியும்.
- குமணன்
Comments
Post a Comment