22.10.2025-இல் 'ஏற்றுமதிக்கான விவசாயப் பொருட்களை அதிக அளவில் விளைவிக்க வேண்டும்' என்று இந்திய விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் தனது உரையில் அறிவுறுத்தினார். இதன் பொருள் இந்திய விவசாயிகள் உணவு தானியங்களை விளைவிப்பதிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக அயல்நாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதே ஆகும். இது சமீபகாலமாக உலக வங்கி போன்ற நிறுவனங்களும் அவற்றின் குரலை எதிரொலிக்கும் இந்திய பொருளாதார வல்லுநர்களும் மிக உறுதியாக வெளிப்படையாக வலியுறுத்திக் கொண்டிருப்பதாகும்; இதுவே ஏகாதிபத்திய நாடுகளின் வேண்டுதலும் ஆகும். ஏகாதிபத்திய நாடுகள், உதாரணமாக அமெரிக்கா அந்த நாட்டின் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களின் மொத்த மதிப்பில் பாதிக்கும் மேலாக கடந்த பல வருடங்களாக அவர்களுக்கு மானியங்கள் வழங்குகின்றது; இந்த விவசாயிகள் அவர்களுடைய நாட்டின் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் விளைபொருட்களை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். ஆகையால் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற நாடுகள் தங்களது விளை நிலங்களை உள்நாட்டுத் தேவைக்கான உணவுப் பொருள்கள் உற்பத்தியில் இருந்து விலக்கி, ஏற்றுமதிக்கான பயிர்களை---- அவர்களுக்கு தேவையான ஆனால் அந்த நாடுகளில் விளைவிக்க முடியாத பயிர்களை விளைவிக்க வேண்டும் என்று விரும்புகின்றன; ஏகாதிபத்தியங்களின் தேவைகளுக்கு ஏற்றபடி விளைவிக்கவே இந்திய விவசாயிகளுக்கான மோடியின் அறிவுரை உள்ளது.
மோடி அரசாங்கத்தின் மிக மோசமான மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகள் உணவு தானியங்களுக்கான உற்பத்தியில் இருந்து விலகி ஏகாதிபத்தியங்களின் தேவைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். அரசாங்கம் விவசாய விளைபொருட்களுக்காக அறிவித்த குறைந்தபட்ச விலை உத்தரவாதம் முதலில் பணப் பயிர்களுக்கு நீக்கப்பட்டது; ஆனால் உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் நீடித்தது; இது உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும் நீக்குவதற்கான திட்டமாகும்; உணவு தானியங்களுக்கான ஆதார விலையை நீக்குவது என்பது அவற்றை விளைவிப்பதற்கான ஆர்வத்தை குறைத்து, அவற்றை விளைவிக்கும் நிலப்பரப்பை குறைக்கும். ஆனால் விவசாயிகள் இந்த திட்டங்களுக்கு எதிராக ஒரு வருட காலம் நீடித்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள்; இந்தப் போராட்டத்தின் விளைவாக உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இது ஏகாதிபத்தியங்களுக்கும் அதற்கு ஒத்தூதும் மோடி அரசாங்கத்திற்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது; இருப்பினும் ஏகாதிபத்தியங்களோ அல்லது மோடியின் அரசாங்கமோ அவர்களது திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடவில்லை; ஏற்றுமதிக்கான பணப் பயிர்களை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவித்த மோடியின் சமீபத்திய உரை ஏகாதிபத்தியங்களின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான தொடர்ந்த முயற்சியே ஆகும்.
இந்திய விவசாயிகளின் போராட்டத்தின் போது இந்திய அரசாங்கப் பொருளாதார வல்லுநர்களும் உலக வங்கியின் திட்டங்களுக்கேற்ப செயல்படுபவர்களும் இந்திய விவசாயிகள் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதிலிருந்து விலகி பணப் பயிர்களை விளைவிப்பது அவர்களின் நன்மைக்காகவே என்றும், மேலும் அத்தகைய மாற்றத்தைத் தடுப்பது உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டமே என்றும் வாதாடினார்கள். ஆனால் இந்திய விவசாயிகள் இவர்களின் திட்டத்தை தெளிவாகவே அறிந்திருந்தார்கள். பணப்பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கிய பிறகு உலகச் சந்தையில் இந்த பணப்பயிர்களுக்கான விலைகளின் கடுமையான ஏற்ற இறக்கங்கள் அவர்களைப் பாதித்ததை அவர்கள் மிகத் தெளிவாக அறிந்திருந்தார்கள். இதனால் பணப்பயிர்களை விளைவிக்கும் விவசாயிகள் மிகக் கடுமையான ஆபத்துக்கு ஆளானார்கள். மேலும் பணப் பயிர் உற்பத்திக்கு அதிக அளவு முதலீடு தேவைப்பட்டது. பணப் பயிர்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டபோது பணப் பயிர்களை விளைவிப்பதற்காக அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்; கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள்--- பணப் பயிர்களை விளைவித்த விவசாயிகள் மட்டுமே என்று இல்லாமல் பிற விவசாயிகளையும் உள்ளடக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை அனுபவித்து அறிந்த அவர்களுக்கு ஒரே பாதுகாப்பாக இருந்த உணவு தானியங்களின் மீதான குறைந்தபட்ச ஆதார விலையும் நீக்கப்பட்டால் அவர்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பும் போய் விடும் எனக் கருதி , அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை அவர்கள் தீவிரமாக எதிர்த்தார்கள். ----- விவசாயிகளது நலனுக்காக செயல்படுவதாகக் கூறப்படும் பிரதம மந்திரி மற்றும் உலக வங்கியின் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிடும் பொருளாதார வல்லுநர்களை விட, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை முழுவதுமாக நீக்கப்பட்டால் தாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மிகக் கொடுமையான வாழ்க்கை பற்றி அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.
பணப்பயிர்களின் விலைகள் வீழ்ச்சி அடையும்போது அதற்காக அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ஏற்படும் துன்பங்கள் மட்டுமல்லாது, உணவுப் பயிர் உற்பத்தியில் இருந்து பணப்பயிர் உற்பத்திக்கு பெரிய அளவில் மாறுவதால் இன்னொரு அபாயமும் உள்ளது; உணவுப் பயிர்களை விளைவிக்கும் நிலத்தை பணப்பயிர்களை விளைவிப்பதற்காக மாற்றுவதால் நாட்டுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் உணவு பாதுகாப்பு என்பது இல்லாமல் போகிறது; இது இனிமேல்தான் ஏற்படும் என்பது மட்டுமல்ல, உண்மையில் ஏற்கனவே இந்த நிலைமை பஞ்சங்கள் வடிவில் வெளிப்பட்டுள்ளன. இத்தகைய பஞ்சங்கள் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில், உலகமயமாக்கலின் விளைவாக உணவுப் பயிர்களுக்கு பதிலாக பணப் பயிர்களை விளைவிக்க அவர்களது விளைநிலம் மாற்றப்பட்டதால் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். பொருளாதார வல்லுநர் அமியா குமார் பக்சி, ‘The Perilous passage’ (ஆபத்து நிறைந்த பாதை) என்ற தனது புத்தகத்தில் இத்தகைய பஞ்சங்களை மிகச் சரியாக "உலகமயமாக்கலின் விளைவான பஞ்சங்கள்" என்று கூறுகிறார்.
இத்தகைய பஞ்சங்கள் வருவதற்கான காரணம்: ஒரு நாடு பணப்பயிர்களை விளைவித்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும்போது, ஏதாவது ஒரு வருடத்தில் அந்த நாடு விளைவித்து ஏற்றுமதி செய்த பணப்பயிர்களின் விலைகள் சரியும்போது, அந்த நாடு இறக்குமதி செய்த உணவு தானியங்களுக்காகக் கொடுக்க வேண்டிய அளவு அந்நியச் செலாவணியை பணப் பயிர்கள் சம்பாதித்து இருக்காது. ஏனென்றால் உணவு தானியங்களின் விலைகள், பணப்பயிர்களின் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விடக் குறைவான மாற்றங்களுக்கு உள்ளாகும்; ஒரு குறிப்பிட்ட வருடத்தில் உணவு தானியங்களின் விலை அந்த நாடு ஏற்றுமதி செய்த பணப் பயிர்களின் அளவுக்கு விலை குறைந்து இருக்காது; அதனால் ஒவ்வொரு தனிநபருக்குமான உணவு தானியங்களின் அளவு குறைவதை அந்த நாடு தடுக்க முடியாது. இதனால், அங்கு பஞ்சம் உருவாவதற்கான நிலைமைகள் தோன்றிவிடும்.
ஒரு நாடு எப்படியாவது மக்களுக்கு விநியோகிப்பதற்குத் தேவையான அளவுக்கு உணவு தானியங்களை சர்வதேசச் சந்தையில் இருந்து பெற்றாலும் உதாரணத்திற்கு, அத்தகைய கடுமையான பஞ்ச நிலைமைகளில் உணவு தானியங்களை மற்ற நாடுகளிலிருந்து உதவியாகப் பெற்றாலும் மேலும் ஒரு பிரச்சனை உள்ளது; “உணவு உதவி” என்ற பெயரில் பிற நாடுகளில் இருந்து உணவு கிடைத்த போதும் கூட, உற்பத்தி செய்த பணப்பயிர்களின் விலை குறையும்போது, அவற்றை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு உணவு தானியங்களைச் சந்தையிலிருந்து வாங்கும் சக்தி இருக்காது. எனவே, வறுமையில் உழலும் விவசாயிகளுக்கு, உணவு தானியங்கள் மானியங்களுடன் கிடைத்தால் மட்டுமே உண்மையில் அது அவர்களுக்கு 'உணவு உதவி'யாகும்; அரசாங்கம் மானியங்கள் கொடுக்காமல் அல்லது தேவையான அளவிற்கு உணவு தானியங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாகக் கொடுக்காவிட்டால், பஞ்சம் மற்றும் அதன் கொடுமைகளைத் தவிர்க்க முடியாது.
இது பஞ்சங்கள் ஏற்படுவதற்கான நிலைமைகள் அல்லது குறைந்தபட்சம் சத்து குறைபாடு அதிகரிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கும்; மேலும் உணவுப் பயிர்கள் உற்பத்தியை விட பணப்பயிர் உற்பத்தியில் வேலை வாய்ப்பு குறைவு. அதாவது உணவுப் பயிர் உற்பத்தியில் இருந்து பணப்பயிர் உற்பத்திக்கு மாறும் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இந்த நிலைமையில் ஒரு நாடு தனது மக்களுக்கு தேவையான அளவு உணவு தானியங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலாவணியை வைத்திருந்தாலும் இப்படி வேலை இழந்தவர்களிடம் சந்தையில் உணவு தானியங்களை வாங்கும் அளவுக்கு பணம் இருக்காது. பஞ்சம் போன்ற நிலை நாட்டில் உருவாகும். பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென் தெளிவாக கூறியது போல 'இந்த நிலைமை' , "பரிமாற்றத் தகுதி தோல்வி (Failure of Exchange Entitlement-FEE )" நிலைமையாகும்; அதாவது இவ்வாறு வேலை இழந்தவர்களுக்கு தங்களுக்குத் தேவையான உணவை வாங்குவதற்கு அவசியமான பொருளாதார வசதி இருக்காது. இந்த நிலைமை இதற்கு முன்பு விளக்கியது போல 'தேவையான அளவு உணவு தானியங்கள் இல்லை' (Food Availability Decline-FAD)என்ற நிலைமைக்கு மாறானது. ஆனால் பரிமாற்றத் தகுதி தோல்வி (Failure of Exchange Entitlement-FEE )" ------ பணப்பயிர் உற்பத்தியில் வேலை வாய்ப்புகள் அதிகமாக இல்லாத போது உதாரணத்திற்கு பழத் தோட்டங்களில் உள்ள நிலைமை போல இருக்கும்போது அந்த நிலைமை ஏற்படாலாம்; ஆனால் தேவையான அளவு உணவு பொருட்கள் இல்லை' (Food Availability Decline-FAD) என்ற நிலைமை நிச்சயமாக உருவாகும்.
இது, நாட்டு மக்களின் தேவைக்கான உள்நாட்டு உணவு பொருள் உற்பத்தியைக் குறைத்து, பணப்பயிர் உற்பத்திக்கு பெருவாரியான நிலப்பரப்பை மடைமாற்றம் செய்யும்போது, புதிய தாராளமயமாக்கலால் தெற்கு உலகின் பல நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்காவில் நடந்ததைப் போல பஞ்சங்கள் உண்டாவதற்கான நிலைமைகளை உருவாக்கும். இந்தியா உணவு பயிர் உற்பத்தியில் இருந்து இது வரை மாறாததால், இத்தகைய பஞ்சங்களைத் தவிர்த்து வந்துள்ளது; ஆனால் ஏகாதிபத்தியங்களின் கட்டளைகளுக்கு அடி பணிந்து போகும் பிரதம மந்திரியின் அறிவுரைப்படி இந்திய விவசாயிகள் நடந்தால் பஞ்சங்களுக்கான சூழ்நிலைகள் இந்த நாட்டிலும் உருவாகும்.
மேலும், "உலகமயமாக்கலால் உருவாகும் பஞ்சம்" என்பது மட்டும் இல்லாமல், உணவு தானியங்களுக்காக இறக்குமதியைச் சார்ந்து இருப்பது முழுவதும் சரியானது அல்ல என்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தனது கட்டளைகளுக்கு அடிபணியாத நாடுகளுக்கு அமெரிக்கா தனது திட்டத்தின்படி ஒரு தலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துகிறது. அது பிற ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன், பல நாடுகளுக்கு எதிராக, குறிப்பாக கியூபா, ஈரான், ரஷ்யா, வடகொரியா மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளின் மீது ஒரு தலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தப் பொருளாதாரத் தடை நடவடிக்கை பலவிதமாக உள்ளது. இந்த நாடுகளுடன் தான் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அமெரிக்கா தடுத்து வருகிறது. ஒரு நாடு உணவு தானியங்களுக்காக இறக்குமதியைச் சார்ந்து இருந்தால், அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் உணவு தானியங்கள் இறக்குமதிக்கான தடை விதித்து அந்த நாட்டில் மிகப்பெரும் சீரழிவை, பஞ்சத்தை ஏற்படுத்தும்; மேலும் வேறு வெளிநாடுகளில் இருக்கும் அந்த நாட்டின் அந்நியச் செலாவணி ஏகாதிபத்தியங்களால் பறிமுதல் செய்யப்பட்டால் தனது மக்களின் தேவைக்காக உணவு தானியங்களை வாங்கும் சக்தியை அந்த நாடு இழக்கும்; இந்த நிலைமைகளில் அந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் சீரழிவுக்கு உள்ளாவார்கள். ஏகாதிபத்திய உலகின் அனைத்து ஆட்சியாளர்களின் ஒப்புதலுடனும் காசாவில் நடக்கும் இனப்படுகொலை, ஒரு நாடு ஏகாதிபதியங்களுக்கு எதிரான நிலை எடுத்தால் அதன் மக்கள் அடையும் சீரழிவுக்கு மிகச் சரியான வாழும் உதாரணமாகும்.
உண்மையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக வெளிப்படையாக வர்த்தகத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திவரும் நிலையில், உணவு தானியங்களுக்காக இறக்குமதியைப் பெரிதாக சார்ந்து இருக்கும் ஒரு நாடு தனது நாடு சார்ந்த திட்டங்களை வகுக்கும் சுய ஆட்சியை இழக்கும் என்பது உறுதி. உணவு தானியங்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலை, இன்று ஒரு நாட்டை ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாடு என்ற நிலைக்குக் கீழ் இறக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது.
இந்திய விவசாயிகளுக்கு பணப் பயிர்களை விளைவிக்க வலியுறுத்தும், அதாவது மிகப்பெரிய ஏகாதிபத்தியங்களின்
ஆணைப்படி இந்திய விவசாயிகளை உணவு தானியங்களுக்குப் பதிலாக பணப்பயிர்களை விளைவிக்கக் கூறும் இந்திய
பிரதமர் மோடிக்கு, தனது நாட்டு மக்கள் எதிர்கொள்ள இருக்கும் சீரழிவைப் பற்றிய உணர்வு சிறிதும் இல்லை. இது பெரும் ஆச்சரியம்
அளிக்கிறது.
ஆங்கிலம்:
பிரபாத் பட்நாயக்
தமிழில்
: கவிதா
(பீப்பிள்'ஸ் டெமாக்ரசி பத்திரிக்கையில் 19.10.2025--இல் பிரசுரமானது)





Comments
Post a Comment