Skip to main content

மனிதகுலத்திற்கு எதிரான மரண வியாபாரிகள்!

 


முதலாளிய உற்பத்திமுறை இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது. மென்மேலும் இலாபத்தைப் பெருக்குவதும் மூலதனத்தைக் குவிப்பதும்தான் அதன் நோக்கம். தொடர்ந்து சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளவும், மேலும் சந்தையை விரிவாக்கவும் அது பல வழிகளை மேற்கொள்கிறது.

தொழில்நுட்பத்தில் மேம்பாடு

தொடர்ந்து தொழில்நுட்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேவைகளைப் புதியதாக உருவாக்கி தன் உற்பத்தியைத் தொடர்வதும் இலாபம் சம்பாதிப்பதும் ஒரு வழி. எடுத்துக்காட்டாக, அலைபேசியை (cellphone) எடுத்துக்கொள்வோம். அதில் புதிய புதிய மாற்றங்களை தொழில்நுட்பத்தின் மூலம் புகுத்துவதன் மூலம் முந்தைய தயாரிப்புகளை (models) கால வழக்கு ஒழிந்துபோகச் செய்கிறது. மேம்பாடு செய்யப்பட்ட அலைபேசிகளுக்கு புதிய சந்தையை உருவாக்குகிறது. அது போலவே, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் என நுகர்வுப் பொருட்கள் அனைத்திலும் புதிய புதிய மேம்பாடுகளைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் கொண்டு வந்து முதலாளியம் தொடர்ந்து தனது சந்தையைத் தக்க வைத்துக் கொள்கிறது.

அது போலவே, தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக நுகர்வுப்பொருட்களைத் தயாரிக்கும் இயந்திரங்களிலும் தொடர்ந்து புதிய புதிய மாற்றங்களை முதலாளியம் கொண்டுவருகிறது. அதன் மூலம் தொடர்ந்து சந்தையைத் தக்க வைத்துக்கொள்ளவும் விரிவடையவும் செய்கிறது.

போர்களும் மறுகட்டுமானமும்

முதலாளியம் தனது சந்தையைத் தக்க வைத்துக் கொள்ளவும் விரிவாக்கவும் மேற்கொள்ளும் இன்னொரு வழி போரில் ஈடுபடுவதும், போர்களைத் தூண்டுவதும் ஆகும். முதலாளி வர்க்கம் இலாபம் சம்பாதிக்க போர் இரு வழிகளில் பயன்படுகிறது. ஒன்று, போரின் மூலம் ஆயுத விற்பனை நடைபெறுகிறது. அதன் மூலம் இலாபம் அடைய முடிகிறது. இன்னொரு புறம், போரினால் அழிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றையும் பிற உட்கட்டுமானங்களையும் மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அவை முதலாளியத்திற்கு புதிய சந்தையை உருவாக்குகின்றன

எடுத்துக்காட்டாக, 2023 அக்டோபரிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம். இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இத்தாலி ஆஸ்திரேலியா, செர்பியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்தன. அமெரிக்கா மட்டும் 420 கோடி டாலர் (ரூ.37, 170 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு ஆயுதங்களை வழங்கிய நாடு ஜெர்மனி. அது 56.4 கோடி டாலர் (ரூ.4991 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது. கனடா 6 கோடி டாலர் (ரூ. 531 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களையும், இங்கிலாந்து 18 கோடி பவுண்டு (ரூ 208 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. இந்தியா 13 கோடி டாலர்களுக்கும் (ரூ 1150 கோடி )மேலான மதிப்புள்ள ட்ரோன்களையும் ராக்கெட்டுகளையும் பிற இராணுவத் தளவாடங்களையும் வழங்கியுள்ளது.

இந்த ஆயுத விற்பனை மூலம் உலக ஆயுத உற்பத்தியாளர்கள் பல்லாயிரம் மக்களின் உயிரைப் பறித்து பெரும் இலாபம் சம்பாதித்தனர். இந்த ஆயுதங்களைக் கொண்டுதான் காசாவில் இரண்டாண்டுகள் நடந்த போரில் இஸ்ரேல், கொடுங்கோல் ஆட்சியாளன் நெதான் யாகு தலைமையில், குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 70,000 பாலஸ்தீனர்களை இனப் படுகொலை செய்தது. சுமார் 1,70,000 மேலானவர்களைப் படுகாயம் அடையச் செய்தது. பல்லாயிரக் கணக்கான மக்களை முடமாக்கியது. பல்லாயிரக் கணக்கான மக்களின் கண்களைப் பறித்தது. ஆயுதங்களை விற்று இலாபம் சம்பாதிக்கும் இந்த மரண வியாபாரிகளின் வெறிதான் இந்த மாபெரும் மானுடத் துயரத்திற்குக் காரணமாக அமைந்தது.

அது மட்டுமல்ல, இஸ்ரேலின் கொடூரமான ஆக்கிரமிப்பு யுத்தத்தால் காசாவில் இருந்த 81% கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. சுமார் 92% குடியிருப்புகள் அழிக்கப்பட்டு மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். சுமார் 90% பள்ளிக் கட்டிடங்களும், 84% மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டன. 80% விவசாய நிலம் சேதமடைந்தது. நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கிணறுகளில் 82.8% அழிக்கப்பட்டன. 92% ஆலிவ் எண்ணெய் வித்து உற்பத்தி அழிக்கப்பட்டது விவசாயத்துறையில் மட்டும் ஏற்பட்ட இழப்பு 200 கோடி டாலர்களாகும் (ரூ.17, 700 கோடி).

போரினால் அழிவுற்ற காசா பகுதியை மறுகட்டமைப்பு செய்வதற்கு 7000 கோடி டாலர்கள் (ரூ.6, 19,500)தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக்ரமிப்புப் போருக்கு பல்லாயிரம் கோடி டாலர்களுக்கு ஆயுதங்களை விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்த முதலாளிகள் இப்பொழுது மறுகட்டமைப்பு என்ற பெயரில் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கொள்ளையடிக்கப் போகின்றனர்

அதே போல, 2022 பிப்ரவரியிலிருந்து கடந்த மூன்றாண்டுகளுக்கும். மேலாக நடந்து வரும் ரசியா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஜூன் 2025 வரையிலும் 7500 கோடி டாலர்கள் (ரூ.6,63, 750) கோடி மதிப்புள்ள ஆயுதங்களை விற்றுள்ளது. ஜெர்மனி, இங்கிலாந்து, போலந்து போன்ற நேட்டோ (NATO) நாடுகள் 8470 கோடி டாலர்கள் (ரூ.7,50,000கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்றுள்ளன. அமெரிக்கா தான் விற்ற ஆயுதங்களின் மதிப்புக்கு ஈடாக உக்ரைனின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. இந்தப் போர் இதுவரையிலும் உக்ரைன் மற்றும் ரசியாவைச் சேர்ந்த பல்லாயிரம் மக்களைப் பலிகொண்டுள்ளது.

ஆயுத உற்பத்தி

ஆயுத உற்பத்தி என்பது முதலாளிய நாடுகளின் பொருளாதாரத்தில் இன்று முக்கிய பங்கை வகிக்கிறது; வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. ஆயுத உற்பத்தி செய்யும் முதலாளிகள் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளுக்குப் பெரும் நன்கொடைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர். ஒரு நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

இன்று உலகிலேயே அதிக அளவு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. உள்நாட்டு உற்பத்தியில் இது மிகப்பெரும் பங்கை வகிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் அது 29,900 கோடி டாலர்கள் (ரூ.26,46,150 கோடி)மதிப்புக்கொண்ட ஆயுதங்களை அந்த நாட்டில் ஆயுதம் உற்பத்தி செய்யும் முதலாளிகள் விற்றுள்ளனர். இந்த முதலாளிகள் நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்குக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டும். உலகெங்கும் போர்களை உருவாக்குவதன் மூலம் தமது ஆயுதங்களுக்கான சந்தைகளை உருவாக்க வேண்டும். அதன் மூலம் பெரும் இலாபம் அடைய வேண்டும். அது தான் அவர்களுடைய நோக்கம்.

அமெரிக்காவின் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் ஆயுத வியாபாரிகளின் ஏஜண்டாகச் செயல்படுகிறார். இன்று வர்த்தகப் போர் என்ற நிர்ப்பந்தத்தைக் கொடுத்து தனது நாட்டு ஆயுதங்களை விற்று வருகிறார். இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, தைவான், சவுதி அரேபியா எனப் பல நாடுகளையும் வர்த்தகப் போரைப் பயன்படுத்தி ஆயுதங்களை வாங்க வைத்துள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல, அனைத்து முதலாளிய நாடுகளின் பொருளாதாரத்திலும் இன்று ஆயுத உற்பத்தி கணிசமான பங்கை வகிக்கிறது. 2024-25 நிதி ஆண்டில் இந்தியா ரூ. 23,622 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இது 34 மடங்கு அதிகமாகும். 2029 ஆம் ஆண்டில் ரூ 50,000 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

மரண வியாபாரிகளுக்கு முடிவு

ஒரு புறம் உலகம் முழுவதும் முதலாளிகள் தமது பொருட்களை விற்பதற்கான சந்தைகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் சந்தையை விரிவாக்கவும் ஆக்கிரமிப்புப் போர்களில் ஈடுபடுகின்றனர். அல்லது போர்களைத் தூண்டி விடுகின்றனர். அதன் மூலம் தமது பொருட்களுக்கான சந்தையைத் தக்க வைத்துக்கொண்டு கொள்ளை இலா'பம் அடைகின்றனர். இன்னொரு புறம் அந்தப் போர்களுக்குத் தேவையான ஆயுதங்களை விற்பதன் மூ-லம் கொள்ளை இலாபம் அடைகின்றனர். போர்களின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, நாட்டை அழித்த பிறகு மறுகட்டுமானம் செய்வது என்ற பெயரில் பெரும் கொள்ளை அடிக்கின்றனர்.

முதலாளி வர்க்கம் ஆயுத உற்பத்திக்கும் இராணுவத்திற்கும் செலவிடும் நிதியை மக்கள் நலன்களுக்குப் பயன்படுத்தினால் உலகில் வறுமையை ஒழித்து விட முடியும். கல்வி, மருத்துவம். வேலை வாய்ப்பு என மக்களின் தேவைகளை நிறைவு செய்துவிட முடியும். ஆனால் இலாப அடிப்படையிலான உற்பத்தி முறையைக் கொண்டுள்ள முதலாளியம் இருக்கும்வரை இது சாத்தியமில்லை. முதலாளிகள் மரண வியாபரிகளாகத்தான் இருப்பார்கள்.

மனித குலத்திற்கு எதிரான இந்த மரண வியாபாரிகளுக்கு முடிவுகட்ட வேண்டுமானால் இலாப அடிப்படையில் இல்லாமல் மக்களின் நலன், மக்களின் தேவைகள் என்ற அடிப்படையில் உற்பத்தி முறையைக் கொண்டிருக்கும் சோசலிச சமூக அமைப்பு இப்புவியில் கட்டமைக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களின் சுதந்திரமான கூட்டமைப்பும் பகிர்வும் சந்தைக்கு முடிவு கட்டும். போர்களுக்கு முடிவு கட்டும். மனித குலத்தை விடுவிக்கும்.

மு.வசந்தகுமார்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...