Skip to main content

வெனிசுலாவைக் குறி வைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மக்கள் முறியடிப்பார்கள்!

 

வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ தென் அமெரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க இடதுசாரி தலைவர்; இவரது ஆட்சியில் வெனிசுலாவின் பொருளாதாரம் ஏறக்குறைய முழுமையாக சிதைந்துள்ளது; இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் தாய் நாட்டை விட்டுப் பிற நாடுகளுக்கு அகதிகளாக ஓடினார்கள். என்றாலும் உலக வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தால் அமெரிக்காவை மனிதநேயமிக்க நாடாகக் கருத எந்த அடிப்படையும் இல்லை. வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற வேண்டும்; அதற்குத் தடையாக இருக்கும் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்த்துத் தனக்கு ஏவல் செய்யும் ஒரு பொம்மை அரசை அங்கு ஆட்சியில் அமர்த்த வேண்டும். இந்த நோக்கத்துடன் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை, அந்த நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யவிடாமல் சுற்றி வளைத்தல் ஆகியவையே வெனிசுலாவின் பொருளாதாரச் சிதைவுக்கு முக்கியமான காரணங்களாகும்.  

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜெர்மனி, பிரிட்டன், போலந்து, நெதர்லாந்து உட்பட்ட 23 ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலாவின் ஜுவன் கைடோவை, மதுரோவுக்கு எதிராக அவரை அழித்தொழிக்க, அந்த நாட்டின் தலைவராக 20.01.2017 முதல் 20.1.2021 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் அங்கீகரித்தன; ஆனால் உலகின் பிற நாடுகள் இதைத் துளியும் அங்கீகரிக்கவில்லை; வெனிசுலா மக்களும் அங்கீகரிக்கவில்லை. 

மதுரோ கொலம்பியாவிலிருந்து கொகைன் என்னும் போதைப் பொருளை அமெரிக்காவிற்குள் கடத்துகிறார் என்ற அபாண்டமான பொய்யைப் பரப்பி வெனிசுலா மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருகிறார் ட்ரம்ப். அதன் மூலம் அதன் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார். 

ட்ரம்ப் வெனிசுவேலாவில் ட்ரென் டெ அராகுவா மற்றும் கார்ட்டெல் டெ லோஸ் சோல்ஸ் என்னும் இரண்டு குற்றக் குழுக்கள் போதைப் பொருட்கள் கடத்தல்கார்களாக மட்டுமல்ல தீவிரவாதிகளாகவும் இருப்பதாக எந்தவிதமான உறுதியான ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுவதோடு, மதுரோவே கார்டெல் குழுவின் தலைவர் என்றும் குற்றம் சாட்டுகிறார். . இதை மதுரோ உறுதியாக மறுத்து, "போதைப் பொருள்களுக்கு எதிரான போர்" என்ற பெயரில் தன்னைப் பதவியில் இருந்து விலக்கி, தனது நாட்டின் மிகப்பெரிய எண்ணை வளத்தைக் கைப்பற்ற அமெரிக்கா வகுக்கும் திட்டம் இது என்கிறார். 

உண்மை என்னவென்றால், வெனிசுலா அதிகாரிகள் இந்த ஆண்டில், தங்கள் நாட்டு வழியாகக் கடத்தப்பட இருந்த 64 டன் கொகைனை கைப்பற்றி இருக்கிறார்கள்- ஒருவரைக் கூட கொல்லாமல்! 

அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு நிர்வாகத்தின் 2020 -ஆம் ஆண்டின் அறிக்கை 3/4 அளவு கொகைன் பசிபிக் கடலின் வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறது; மிகச் சிறிய அளவே கரீபியன் கடல் மார்க்கமாக கடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் போதைப் பொருளுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் பசிபிக் பெருங்கடலில் மிகச் சிறிய அளவிலும் கரீபியன் கடல் மார்க்கத்தில் மிகப்பெரிய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக் கூறி இதுவரையிலும் பல படகுகளைத் தாக்கி அழித்துள்ளது அமெரிக்கா; அதில் 90 பேருக்கும் அதிகமான சாதாரண மக்கள் இது வரையிலும் கொல்லப்பட்டுள்ளார்கள்; ட்ரம்ப் தன்னுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க இது வரையிலும் 1 மில்லி கிராம் போதைப் பொருளைக் கூடக் கைப்பற்றவில்லை. ட்ரம்ப்பின் நிர்வாக அமைப்பு அதற்கான வலுவான ஆதாரம் எதையும் இன்று வரை உலகுக்கு அறிவிக்கவில்லை. எனவே இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தை அடியோடு மீறும் நடவடிக்கையாகும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான வல்லுனர்கள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சர்வதேசச் சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்துள்ளார்கள். 

10.12.’25 அன்று ஸ்கிப்பேர் என்னும் வெனிசுலாவின் எண்ணைக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. அதை ஒரு கடற்கொள்ளை என்றும், கடத்தல் என்றும், சர்வதேச கடற்பரப்பில் நடந்த அத்து மீறல் என்றும் வெனிசுலா கடுமையாகக் கண்டித்துள்ளது. 17.12.’25 அன்று வெளியிலிருந்து வெனிசுலாவிற்குள்ளும் வெனிசுலாவிலிருந்து வெளியிலும் எந்த எண்ணைக் கப்பல்களும் செல்லவிடாமல் முழுமையான முற்றுகையை ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த முற்றுகையை ‘ஒரு யுத்த நடவடிக்கை’ எனக் கூறி அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாண காங்கிரஸ் பிரதிநிதி ஜோக்கின் காஸ்ட்ரோ கண்டித்துள்ளார். 

அமெரிக்காவுக்கு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் புதிதல்ல; 2001 ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலை நிறுத்துவதாகப் பொய் கூறி ஆப்கானிஸ்தானில் நுழைந்து 20 ஆண்டுகள் கழித்து தாலிபன் தீவிரவாத குழுவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு 2020-இல் அங்கிருந்து வெளியேறியது; 2003-- ஆம் ஆண்டு இராக் பெரும் அளவு அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி பெரும் போரை நடத்தி ஏராளமான மக்களைக் கொன்று குவித்தது; அங்கு அத்தகைய ஆயுதங்கள் ஒன்று கூட இல்லை; அமெரிக்காவை எதிர்த்த அதிபர் சதாம் உசேனை அழித்து ஒழிப்பதற்கான கபட நாடகமே இது என்று உலகம் புரிந்து கொண்டது. 

இது எல்லாவற்றையும் விட மேலான விசயம் ஒன்று உள்ளது. வெனிசுலாவின் மீதும் அதை சுற்றிலும் உள்ள வான் வழியை முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டதாக 29.11.2025 அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டளையிட்டார்; ஆனால் "போதைப்பொருள் ஊடுருவலைத் தடை செய்வதற்கான நடவடிக்கை" என்று வெனிசுலாவின் வான் வழியை மூடுவதாக அறிவிப்பதற்கு முதல் நாள் ஹோண்டுரா நாட்டின் முன்னாள் அதிபரான ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னான்டஸை மன்னிப்பதாக அறிவித்தார்; உண்மையில் ஹெர்னான்டஸ் 400 டன் கொகைனை தனது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தியவர். இவரின் மீது இந்த குற்றத்தை நிரூபித்தது அமெரிக்காவின் நீதித்துறை; மேற்கு வர்ஜினியாவில் 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் அவருக்கு மன்னிப்பு வழங்கத் தயக்கம் காட்டவில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க மக்களின் நலனின் மீதுதான் எத்தனை அக்கறை ட்ரம்புக்கு! 

வெனிசுலாவின் வான் வழியை மூடுதல் என்பது வெனிசுவேலா மக்களின் மீது தொடுக்கப்படும் மிகக் கொடூரமான தாக்குதல் ஆகும்; ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான வெனிசுலா மக்கள் பொருளாதார வீழ்ச்சியால் அகதிகளாகச் சென்றவர்கள்; குறிப்பாக வெனிசுலாவின் மீது அமெரிக்காவால் நடத்தப்பட்ட கழுத்தை நெரிக்கும் கொடூரமான பொருளாதாரத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு அகதிகளாகத் தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்கள். பொதுவாக குளிர்கால விடுமுறையின் போது அவர்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினரைச் சந்திக்க வருவார்கள்; இந்தத் தடையின் காரணமாக அவர்களால் தங்களது குடும்பத்தைச் சந்திக்க முடியாது. இந்த வான்வெளித் தடையை அமெரிக்க அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை; ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொள்ளவில்லை; ஏன் சர்வதேச சட்டத்தின்படி தன்னுடைய வான்வெளி தடத்தில் பூரண உரிமையும் அதிகாரமும் கொண்ட வெனிசுலா இதற்குக் கட்டுப்படவில்லை; இராக்கில் வான்வழி தடையைச் செயல்படுத்திய முன்னாள் ராணுவ அதிகாரியான ஜெனரல் டேவிட் டெப்டூலா டிரம்ப்பின் ஆணை குறித்து கேள்வி எழுப்புகிறார். எதற்கும் பதில் இல்லை! 

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரத் தடைகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க சதிவேலைகள், கொலை முயற்சிகள்போட்டி அரசாங்கம் அமைப்பது, தந்திரமான நடவடிக்கைகள், அந்த நாட்டின் தேர்தலில் முறைகேடான இடையூறுகளை ஏற்படுத்துவது, தந்திரமான முறைகளில் உண்மைகளை மறைத்து ஆட்சியாளருக்கு தீவிரமான எதிர்ப்புகள் இருப்பது போல போலிப் பிரச்சாரங்கள் மூலம் போராட்டங்கள் நடத்துவது, கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சாரங்களின் மூலம் மக்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பது, அவர்களின் மனஉறுதியைக் குலைப்பது என்று பல வடிவங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பிற நாடுகளின் மீது தாக்குதலை நடத்தி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. போர்க்களத்தில் நடக்கும் போருக்கு ஈடான கொடூரமானது இந்த வடிவம்; இதனால் உணவு, மருந்துகள், அத்தியாவசியமான எரிபொருளை நம்பி வாழும் ஏறக்குறைய பல லட்சம் மக்களுக்கு இந்த அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இத்தகைய வழி முறைகளில் இபொழுது வெனிசுலா மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். 

ஆனாலும் வெனிசுலா மீது கடந்த 25 வருட காலமாக அமெரிக்கா நடத்திவரும் ஆட்சி மாற்றச் சதிகள் தோல்வி அடைந்தே வந்துள்ளன. 2002 ஆம் ஆண்டு அப்போதைய வெனிசுலாவின் தலைவரான ஹ்யூகோ சாவெஸை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிய அமெரிக்கா சதி செய்தது. ஆனால் உடனடியான மக்களின் எழுச்சியால் சாவெஸ் மீண்டும் வெனிசுலாவின் தலைவர் ஆனார். இதை ஒரு நூற்றாண்டுக்கு முன் உலகுக்கு வெனிசுலா மக்கள் வெளிப்படுத்திய வீரம் செறிந்த போராட்டத்துடன் வெனிசுலா - கனடாவின் சமூக அறிவியல் அறிஞர் மரியா பயெஸ் விக்டர் ஒப்பிடுகிறார். 1902 ஆம் ஆண்டு ஆங்கிலேய மற்றும் ஜெர்மன் பீரங்கித் தாங்கிக் கப்பல்கள் வெனிசுலாவைத் தாக்கி நாட்டுக்குள் புகுந்து அவர்களால் வெனிசுலாவின் மீது கட்டாயமாக மூர்க்கத்தனமாக திணிக்கப்பட்ட கடன்களை உடனடியாக திருப்பித் தர வற்புறுத்தினர்; அன்றைய வெனிசுலாவின் தலைவர் சைப்ரியானோ கேஸ்ட்ரோவிடம் அவர்களுக்குக் கொடுக்க பணமோ அல்லது எதிர்த்துத் தாக்க படை பலமோ இல்லை. ஆனால் அவர் தாய்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்: "வெனிசுலாவின் மக்களே! நமது தாய் நாட்டின் புனிதமான மண்ணை மூர்க்கத்தனமான அயல்நாட்டினரின் கால்கள் அசுத்தப்படுத்துகின்றன." அந்த அறைகூவலால் சாமானிய மக்கள் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் போர்க்களத்தில் இறங்கினார்கள். அயல்நாட்டு கப்பற்படை முன்னேற முடியாமல் நிலை நிறுத்தப்பட்டது; அவர்கள் தங்கள் படை பலத்தால் தகர்க்க முடியாத உறுதியான எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை; வெனிசுலாவின் மீதான தங்களின் வெற்றி மிக எளிதாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்; ஆனால் அவர்களுடைய கருத்து மிகத் தவறானது என்பது மக்களால் நிரூபிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெனிசுவேலா மக்களின் வெறுப்புக்கு மட்டுமல்ல தனது சொந்த நாட்டின் 60% மக்களின் வெறுப்புக்கும் ஆளாகியுள்ளார்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பாலஸ்தீனத்தின் காசா இனப்படுகொலைக்கு ஏராளமான ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா கொடுத்தது; இதனால் பாலஸ்தீன மக்கள் மட்டுமல்ல அமெரிக்க மக்களும் கடுமையான பொருளாதார சிக்கலில் துன்பப்படுகிறார்கள்; அது மட்டுமல்லாமல் சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் இழைத்த ஊழல்வாதியான நெதன்யாகுவுக்கு மிக வெளிப்படையாக ஆதரவளிக்கிறார்; அவருடைய பார்வையில் அமெரிக்க மக்களைப் போதையில் ஆழ்த்தும் போதைப் பொருள் கடத்தும் ஹோண்டுரா நாட்டின் முன்னாள் அதிபரான ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னான்டஸ், தாய்நாட்டு மக்களுக்கே துரோகம் இழைத்த சர்வதேச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காசா இனப்படுகொலைக் குற்றவாளியான நெதன்யாகு மன்னிப்புக்குரியவர்கள்; அவர்களை விசாரிக்கும் நீதிபதிகள் பைத்தியங்கள்; தனக்கு ஓட்டளித்து அதிபராக்கிய மக்களின் நலனை பொருட்படுத்தாத ட்ரம்ப் சொந்த நாட்டின் 60% மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். ஆணவமிக்க இவரது திட்டங்களால் இப்பொழுது பாதையறியாமல் அமெரிக்கா திகைத்து நின்று கொண்டிருக்கிறது; 

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா நிலத்திலும் நீரிலும் போர் புரிய நாலாயிரத்து ஐநூறு கடற்படைத் துருப்புகளை வெனிசுலாவின் கரிபிய மற்றும் பசிபிக் கடலில் நிறுத்தியுள்ளது; வெனிசுவேலாவுக்கு உரிமையான வான் தடத்தை மூடி, மாறாக பென்டகன் வான்வழி தாக்குதலுக்கான விமானங்களை கொண்ட USS ஜெரால்ட் R.ஃபோர்ட். ப்புவர்ட்டோ, F-35 தாக்கும் விமானங்கள் மேலும் MQ-9 ட்ரோன்கள் ஆகியவற்றை வெனிசுலாவின் எல்லைகளில் கண்காணிப்புக்காகவும் தாக்குதலுக்காகவும் பணித்துள்ளது. இதன் மூலமாக அமெரிக்கா மிகத் தெளிவாக --- வெளிப்படையாக வெனிசுலாவில் தன் கைப் பொம்மையான ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான திட்டத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஆனால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அயல்நாட்டு முற்றுகையை முறியடித்த பொலிவெரியன் புரட்சியின் தாக்கம் அந்த மக்கள் மனதில் வேரூன்றியுள்ளது; 1902 ஆம் ஆண்டு ஆங்கில, ஜெர்மன் போர்க் கப்பல்களையும் பீரங்கிகளையும் வெற்றிகொண்ட அனுபவம் அந்த மக்களின் மரபில் பதிந்துள்ளது; அத்துடன் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சதி வேலையை மக்கள் எழுச்சியின் மூலம் முறியடித்த வெற்றி அனுபவமும் அவர்களுக்குள் நிறைந்துள்ளது. தங்களுடைய வானம், பூமி, நிறுவனங்கள், இயற்கை வளங்கள், இறையாண்மையைக் காக்க உறுதி கொண்ட மனதுடன் வெனிசுலா மக்கள் இருக்கின்றனர். வெனிசுவேலா மக்கள் மட்டுமல்ல, 33 லத்தின் அமெரிக்க நாடுகளின் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களும் ஒன்றிணைந்து ஏகாதிபத்தியப் போர் வெறியை அடக்குவார்கள்.

 

- ஜெகதா

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...