ஊழலற்ற
ஆட்சியை நடத்தி வருவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக கட்சி 2024-2025 நிதி
ஆண்டில் மட்டும் முதலாளிகளிடமிருந்து 6088 கோடி ரூபாய்களை தேர்தல் நிதியாகப்
பெற்றுள்ளது. 2023-2024 நிதி ஆண்டில் அது முதலாளிகளிடமிருந்து பெற்ற தேர்தல் நிதி
3967 கோடி ரூபாய்கள். தேர்தல் பத்திரம் மூலம் நிதி வசூலிப்பது சட்ட விரோதமானது என
உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் தேர்தல் அறக் கட்டளைகள் என்ற அமைப்புகளின்
மூலம் முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். அவை
மட்டுமல்லாமல் தனி நபர்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வருகின்றன.
2023-2024
நிதி ஆண்டில் 1129 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி
2024-2025 நிதி ஆண்டில் 522.13 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. இதை
விட 12 மடங்கு அதிகமாக பாஜக பெற்றுள்ளது. ஆட்சியில் உள்ள கட்சிக்குத் தேர்தல் நிதி
அளிப்பதன் மூலம்தானே முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் ஒப்பந்தங்களையும்
இலட்சக்கணக்கான ரூபாய் மானியங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற முடியும்.
முதலாளிகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் பணத்தை
வாரி இறைத்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமரும் இவர்கள் முதலாளிகளின்
ஏஜண்டுகளாகச் சேவை செய்கின்றனர்; முதலாளிகளுக்குத் தேவையான சட்டங்களை, மக்கள்
விரோதச் சட்டங்களை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றனர். நிதி அளிக்கும்
முதலாளிகளுக்குச் சலுகை காட்டுகின்றனர். மக்களுடைய வரிப் பணத்திலிருந்து
இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக அளிக்கின்றனர்; முதலாளிகளுடன் சேர்ந்து
இவர்களும் அவற்றில் கொள்ளை அடிக்கின்றனர்.
முதலாளிகளிடமிருந்து
பெறும் இலஞ்சத்தை தேர்தல் நிதி என்ற பெயரில் சட்டபூர்வமாக்கி உள்ளனர் இந்த
முதலாளிகளின் ஏஜண்டுகள். இலஞ்சத்தின் மீதும் ஊழலின் மீதும் கட்டப்பட்டுள்ள இந்த
அமைப்பைத்தான் ஜனநாயக ஆட்சி என்று இந்த முதலாளியக் கட்சிகளும் அவர்களின்
ஊதுகுழல்களான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தம்பட்டம் அடித்து வருகின்றன.

Comments
Post a Comment