Skip to main content

இலாப வெறி முதலாளியத்திற்கு முடிவு கட்டும்!

 

2005ல் கொண்டு வரப்பட்ட ‘மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப்’ பதிலாக ‘வளர்ந்த இந்தியாவிற்கான ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம் அளிக்கும் திட்டம் (Viksik Bharath Gurantee for Rozgar and Ajeevika Mission Gramin)’ என்னும் சட்டத்தை அவசர அவசரமாக டிசம்பர் 18 ந்தேதி எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பாஜக ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

2005ல் கொண்டு வரப்பட்ட திட்டம் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலைக்கான உரிமை என்ற கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் முதலாளியப் பொருளாதார அமைப்பின் நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்பதுதான் உண்மையாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளிலிருந்து முதலாளிய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்து வரும் புதிய தாராளவாதக் கொள்கை சமூகத்தில் கடுமையான பொருளாதார ஏற்றத் தாழ்வை உருவாக்கக் கூடியதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காத வளர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் மூலதனச் செறிவு கொண்ட தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. அதனால் உள்நாட்டின் மொத்தப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சி பெற்றாலும் அதன் பயன் மக்களைச் சென்றடையாமல் சிறுபான்மையாக உள்ள பெரும் முதலாளிகளுக்கே செல்லுகிறது. மக்களின் வாழ்வு துயரமிக்கதாக மாறியுள்ளது. மக்களின் மத்தியில் தாங்க முடியாத அளவுக்கு வறுமையும் பசியும் நீடித்தால் அது ஆளும் வர்க்கத்தின் ஆட்சிக்கே ஆபத்தாக முடியும். அந்த ஆபத்திலிருந்து தப்பவே ஆளும் வர்க்கம் மக்களைப் முழுப்பட்டினி போடாமல் அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி வகுக்கும் திட்டமாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தை ஆளும் வர்க்கம் கொண்டு வந்ததற்கு இன்னொரு காரணம் முதலாளிய உற்பத்திக்கான சந்தையை விரிவுபடுத்துவதாகும். சமூகத்தில் கணிசமான மக்கள் வறுமையில் இருக்கும்போது, தேவையான பொருட்களைக் கூட அவர்களால் சந்தையில் வாங்க முடியாது. அதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை முதலாளிகளால் சந்தையில் விற்க முடியாது. பொருட்கள் விற்கப்படாத நிலையில் முதலாளிகளால் இலாபம் பெற முடியாது; மூலதனத்தைப் பெருக்க முடியாது. எனவே முதலாளிய உற்பத்தி முறை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் சந்தை தேவை. அதற்காக மக்கள் மத்தியில் வாங்கும் சக்தியை உருவாக்க வேண்டும். அதற்காகவே கிராமப்புற மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்வதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. தேங்கித் துருப்பிடித்துப் போன முதலாளிய உற்பத்திச் சக்கரத்தைத் தற்காலிகமாக ஓட வைப்பதற்கான மசகு எண்ணைதான் இந்தத் திட்டம். இந்தக் கீனிசியத் திட்டம் கீனிசியப் பொருளாதாரவாதியான மன்மோகன் சிங் பிரதமாராக இருந்தபோது கொண்டு வரப்பட்டதில் வியப்பேதுமில்லை. 

இந்தத் திட்டத்தை கார்ப்பொரேட் முதலாளிகளும் பண்ணை முதலாளிகளும் தொடக்கத்திலிருந்தே விரும்பவில்லை. ஏனென்றால் இந்தத் திட்டத்தால் கிராமப்புறங்களில் கூலியின் அளவு உயர்ந்தது. முன்பை விட அதிகமான கூலி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் பண்ணை முதலாளிகளுக்கு கிடைக்கும் இலாபம் குறைந்தது. அதனால்தான் இந்தப் புதிய திட்டத்தில் விதைப்புக் காலங்களிலும் அறுவடைக் காலங்களிலும் அறுபது நாட்களுக்கு வேலை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மக்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்காக பண்ணை முதலாளிகளுக்கு மலிவான விலைக்கு தங்கள் உழைப்புச் சக்தியை விற்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிராமப்புறங்களில் ஏற்படும் கூலி உயர்வு அதன் தொடர்ச்சியாக நகர்ப்புறங்களில், தொழில்துறைத் தொழிலாளர்களின் கூலியிலும் உயர்வை ஏற்படுத்தும். எனவேதான் கார்பொரேட் முதலாளிகளும் இந்தத் திட்டத்தை விரும்பவில்லை. கார்ப்பொரேட் முதலாளிகளின் ஏஜண்டான மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை ‘தோல்வியுற்ற திட்டம்’ என்றார். தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அவருடைய அரசாங்கம் குறைத்து வந்தது. அதன் மூலம் அந்தத் திட்டத்தின் செயல்பாட்டைக் குறைத்து வந்தது. 20-21 ல் இந்தத் திட்டத்திற்கான ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு ரூ.1,11,170 கோடியாக இருந்தது. அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 24-25ல் ரூ.86,000 கோடியாக மாறியது. இந்தத் திட்டத்திற்கு அதிக அளவு செலவு செய்தால் அதற்கான செலவைச் சரிக்கட்ட தங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் குறைக்கப்படும் என்று பெரும் முதலாளிகள் கருதுகின்றனர். அதனாலும் அவர்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

கார்ப்பொரேட் முதலாளிகள் மற்றும் பண்ணை முதலாளிகள் ஆகியோரின் விருப்பத்திற்கு ஏற்ப மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டம் என்ற பெயரில் இப்பொழுது கிராமப்புற வேலை வாய்ப்புக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

பழைய திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள்தான் வேலை வழங்கப்பட்டது. ஆனால் இந்தப் புதிய திட்டத்தில் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும் உண்மையில் அது நடைமுறைக்கு வராமல் இருப்பதற்கான பல அம்சங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது.

பழைய திட்டத்தில் திட்டத்திற்கான மொத்தக் கூலியையும் ஒன்றிய அரசாங்கம் வழங்கியது. திட்டத்திற்கான பொருட்கள் செலவில் ஒன்றிய அரசாங்கம் 75 விழுக்காட்டையும் மாநில அரசாங்கங்கள் 25 விழுக்காட்டையும் ஏற்றுக் கொண்டன. ஆனால் புதிய திட்டத்தின் படி திட்டத்தின் மொத்தச் செலவில் 60 விழுக்காட்டை மட்டும் ஒன்றிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். 40 விழுக்காட்டை மாநில அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி முறையினால் தங்களுடைய வருவாய்க்கான ஆதாரங்களை இழந்துள்ள மாநில அரசாங்கங்கள் இந்தச் செலவினை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் உள்ளன. எனவே மாநிலங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் கைவிடப்படும்.

மேலும் பழைய திட்டத்தில் கிராமப் பஞ்சாயத்து அளவில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்படும். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு கிராமப் பஞ்சாயத்திடம் இருந்தது. அதாவது வேலைக்கான தேவை கீழே இருந்து உருவாக்கப்பட்டது. ஆனால் புதிய திட்டத்தின்படி ஒன்றிய அரசுதான் தான் ஒதுக்கும் நிதிக்கு ஏற்ப எந்தத் திட்டங்களை உருவாக்கலாம், அவற்றை நாட்டின் எந்தப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தலாம் எனத் தீர்மானிக்கும். எனவே பழைய திட்டத்தில் இருந்த கிராமப் பஞ்சாயத்துகளுக்கான உரிமையும், கீழிருந்து வேண்டப்படும் வேலைக்கான உரிமையும் இந்தத் திட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின்படி தங்களுடைய கொள்ளை இலாபத்திற்கான நலன்கள் காப்பாற்றப்பட்டதாக கார்ப்பொரேட் முதலாளிகளும் பண்ணை முதலாளிகளும் பெரும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இந்தப் புதிய திட்டம் கிராமப் புறங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளும். 24-25ல் மட்டும் பழைய திட்டத்தின்படி 15.99 கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளன. அவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேல் பெண்கள். இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். அதன் மூலம், அவர்களுடைய வாங்கும் சக்தியையும் இழப்பார்கள். அது சந்தையைச் சார்ந்துள்ள முதலாளிய உற்பத்திமுறைக்கு பெரும் நெருக்கடியைக் கொண்டு வரும். ஏற்கனவே அமெரிக்காவின் வர்த்தகப் போரினால் சந்தையை இழந்துள்ள இந்திய முதலாளிகள் இந்தத் திட்டத்தினால் உள்நாட்டில் வேலை இழப்பினால் ஏற்படும் சந்தை இழப்பால் மேலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். மக்களின் மத்தியில் நிலவும் வேலை இன்மையும், வறுமையும், பசியும் பெரும் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடியை உருவாக்கும்.

முதலாளிகளிடமிருந்து முதலாளியத்தைக் காப்பாற்ற வேண்டியுள்ளது என்று இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு முறை கூறினார். ஆனால் முதலாளியத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர்களின் இலாப வெறியே விரைவில் முதலாளியத்தை அழிவுக்குக் கொண்டு வந்து விடும். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது.


மு. வசந்தகுமார்

Comments

  1. இக் கட்டுரை 100 நாள் வேலைத் திட்டத்தையும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 125 நாள் வேலைத் திட்டத்தையும், அதன் பின்னணியில் உள்ள முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தையும் தெளிவாக விளக்கியிருக்கிறது.

    100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்ட நேரத்தில் ஆளும் முதலாளி வர்க்கத்தின் சூழ்நிலையையும், தற்போது அதை முற்றிலுமாக முடக்குவதற்கான முயற்சியையும் கட்டுரை குறிப்பிடுகிறது. மாநில அரசாங்கங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமானது இதை படிப்படியாக ஒழித்துக் கட்டுவதுதானென கட்டுரை குறிப்பிடுவது மிகவும் சரியான கருத்தாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...