வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மதுரோ போதைப் பொருளை அமெரிக்காவிற்குக்
கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத்
தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத்
தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப்
போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக்
கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு
செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு
சென்றார்.
இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும்,
ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க
விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும்
அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன.
உண்மையில் மதுரோ போதைப் பொருட்களைக் கடத்தும் கும்பலின் தலைவரோ
பயங்கரவாதியோ அல்ல. ட்ரம்ப்பின் நோக்கமும் போதைப்பொருட்களைத் தன் நாட்டில் நுழைய விடக்
கூடாது என்பதல்ல. ஏனென்றால் இதே ட்ரம்ப்தான், 400 டன் கொகைனை தனது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள்
கடத்தியதற்காக, அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா நீதிமன்றத்தால் 45 ஆண்டுகள் தண்டனை
வழங்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் தலைவர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னான்டசை விடுவித்தார். எனவே போதைப் பொருட்கள்
கடத்தல் என்பது என்பது வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு போலிக்
காரணம்தான். இதே போலத்தான் அமெரிக்கா 2003ல் ஈராக்கின் சதாம் உசேன் பெரும் அழிவு தரக்கூடிய ஆயுதங்களை
வைத்திருப்பதாக ஒரு பொய்யான காரணத்தைக் கூறி அந்த நாட்டின் மீது படை எடுத்து சதாம்
உசேனைக் கைது செய்து கொன்றது; அதன் எண்ணெய் வளத்தைக்
கைப்பற்றியது.
அமெரிக்க எண்ணெய் நிறுவன முதலாளிகள் வெனிசுலாவின் மூலவளமாக
உள்ள எண்ணையைக் கொள்ளையடிக்க மதுரோ தடையாக இருந்தார். சுமார் 3 கோடி மக்களைக் கொண்ட
சிறிய நாடான வெனிசுலா உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் 17% ஐ தன்னிடம் கொண்டுள்ளது.
அதாவது 300 பில்லியன் (30000கோடி) பேரல்கள் இருப்பு உள்ளது. இது அமெரிக்காவில் உள்ள
எண்ணெய் இருப்பை விட ஏறக்குறைய நான்கு மடங்காகும். இந்த வளத்தைக் கைப்பற்றத்தான் ட்ரம்ப்
மதுரோ மீது பொய்யாகக் குற்றம் சாட்டினார். மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து
அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றதும் ‘அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் இனி வெனிசுலாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை இயக்கும். அவை அமெரிக்காவிற்குப் பணத்தைச் சம்பாதிக்கும்’ என்று ட்ரம்ப் தனது உண்மையான
நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
‘வெனிசுலா திருடிய அமெரிக்க எண்ணெயையும், நிலத்தையும், சொத்துக்களையும்
திருப்பித் தர வேண்டும்’ என ட்ரம்ப் கடந்த மாதம் கூறினார். அதாவது மதுரோவுக்கு முன்பு
வெனிசுலாவின் தலைவராக இருந்த ஹுகோ சாவேஸ் காலத்தில் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள்
நாட்டுடைமையாக்கப்பட்டன. அதைத்தான் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டார். வெனிசுலாவைத் தொடர்ந்து
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கவிடாமல் தடுக்கப்பட்டதை ட்ரம்ப்பால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை.
1999ல் ஹுகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் எண்ணைய் நிறுவனங்களை
நாட்டுடைமையாக்கினார்; எண்ணெய் மூலம் கிடைத்த இலாபங்களை மக்களின் வறுமையை ஒழிக்கும்
திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தை சோசலிசப் பாதையில் கட்டமைக்க
முயன்றார். தனக்கு அருகாமையில் உள்ள ஒரு நாட்டில் சோசலிச சமூகம் உருவாவதை அமெரிக்க
ஏகாதிபத்தியம் அவ்வளவு எளிதில் அனுமதித்து விடுமா? அதனால் சாவேசை 2002ல் அமெரிக்கா
ஒரு சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ஆட்சியிலிருந்து அகற்றியது. இருப்பினும் பெரும்
மக்கள் எழுச்சி மூலம் அந்தச் சதிகாரர்கள் முறியடிக்கப்பட்டு சாவேஸ் 48 மணி நேரத்திற்குள்
மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
இலத்தின் அமெரிக்க நாடுகள் அனைத்திலிருந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
தனது சுரண்டல் மூலம் பெற்ற வருமானத்தில் பாதிக்கும் மேல் வெனிசுலாவிலிருந்து பெற்று
வந்தது. அதனால் இழந்த வெனிசுலாவை எப்படியாவது திரும்பப் பெற்று விட வேண்டும் அமெரிக்க
ஏகாதிபத்தியம் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தது.
சாவேசு காலத்திலேயே வெனிசுலாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை
அமெரிக்கா விதித்தது. 2013 ல் சாவேசுக்குப் பிறகு மதுரோ ஆட்சிக்கு வந்தபோதும் அது தொடர்ந்தது.
பொருளாதாரத் தடைகள் மூலம் வெனிசுலாவின் பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளியது. நாட்டில்
பொருட்களின் பற்றாக் குறை, கருப்புச் சந்தை, வாழ்க்கைக்கான செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றின்
மூலம் மக்களின் வாழ்க்கையில் நெருக்கடி உருவாகியது. ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டுப்
புலம் பெயர்ந்தனர். மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதன் மூலம் ஆட்சி மாற்றத்தைக்
கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டது.
2019ல் தன்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்திலேயே வெனிசுலாவில்
ஜுவான் ஹைடோ தலைமையில் ஒரு போட்டி அரசாங்கத்தை
ஏற்படுத்த முயற்சி செய்தார் ட்ரம்ப். ஆனால் அவர் முயற்சி வெற்றி பெறவில்லை. பிறகு அண்மையில்
நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆதரித்து
நாட்டில் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டி வந்தது. தான் ஆட்சிக்கு வந்தால் வெனிசுலாவை
அமெரிக்காவின் கொள்ளைக்கு முழுவதுமாகத் திறந்து விடப் போவதாக மச்சாடோ வாக்குறுதி அளித்தார்.
இப்போது அமெரிக்கா நடத்தியுள்ள ரவுடித்தனத்திற்கு மச்சாடோ முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரோவின் தலைக்கு 5 கோடி டாலரைப் பணயமாக
அறிவித்தது அமெரிக்கா; கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து வெனிசுலாவைச் சுற்றி வளைத்து
போர்ப் பதற்றத்தை உருவாக்கி வந்தது. இறுதியாக அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்குத்
தயாராக இருப்பதாக மதுரோ அறிவித்த நிலையில் இரவோடு இரவாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ
நடவடிக்கை மூலம் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு
சென்றுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஒரு நீதி மன்றத்தில் மதுரோவும் அவருடைய மனைவியும்
குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர். இறையாண்மைமிக்க ஒரு நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு தலைவரை போதைப் பொருட்களைக் கடத்தினார், அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதங்களை வைத்திருந்தார்
எனக் குற்றம் சாட்டி அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்க உள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
அமெரிக்கப் பாராளுமன்றமான காங்கிரசின் ஒப்புதல் இல்லாமலேயே
ட்ரம்ப் அனைத்து சர்வதேச சட்ட விதிகளையும், ஐக்கிய நாடுகளின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின்
இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து இந்தக் கொடூரமான செயலை நிறைவேற்றி உள்ளார். பெரும்பான்மையான அமெரிக்கா மக்கள் ட்ரம்ப்பின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லை. அமெரிக்க எண்ணெய் நிறுவன முதலாளிகளின்
கொள்ளை இலாபத்திற்காகவே இந்த நடவடிக்கையைத் தன்னிச்சையாக ட்ரம்ப் எடுத்துள்ளார்.
வெனிசுலாவுடன் ரசியா இராணுவ ஒப்பந்தம் வைத்துள்ளது. சீனா
வெனிசுலாவில் பெரும் அளவு முதலீடு செய்துள்ளது. வெனிசுலாவின் 80% எண்ணெயயை சீனா வாங்குகிறது.
ஆனால் இந்த இரண்டு நாடுகளும் அந்த நாட்டின் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தடுத்து
நிறுத்தத் தவறி விட்டன. ரசியா அமெரிக்காவின் செயலைக் கண்டித்ததோடு நிறுத்திக் கொண்டது.
ரசியா வெனிசுலாவிற்கு ஆதரவாக வராததற்குக் காரணம் ரசியாவிற்கும்
அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம்தான் எனக் கருதலாம். ரசியா - உக்ரைன் போரில் ரசியா
கைப்பற்றிய உக்ரைனின் நிலப்பகுதிகளை ரசியாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என உக்ரைனுக்கு
ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்; அதன் மூலம் ரசியாவிற்கு ஆதரவாக இருக்கிறார்.
அதன் காரணமாகவே வெனிசுலாவின் மீதான ட்ரம்ப்பின் ஆக்கிரமிப்பை புடின் கண்டு கொள்ளவில்லை
எனக் கருதலாம். ஏகாதிபத்தியங்கள் தமது நலன்களுக்காக
நாடுகளைப் பிரித்துக் கொள்வதில் ஒன்றுபட்டுள்ளன.
“அமெரிக்கா மதுரோவையும் அவருடைய மனைவியையும் உடனடியாக விடுதலை
செய்ய வேண்டும். பேச்சு வார்த்தைகள் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்”
எனக் கூறுவதோடு தனது கண்டனத்தை நிறுத்திக் கொண்டது சீனா. அமெரிக்காவின் இந்த இராணுவத்
தாக்குதலை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாளை தைவானைக் கைப்பற்றி தன்னோடு
சேர்த்துக் கொள்ளலாம்.
நமது அண்டை நாடான இலங்கை கூட அமெரிக்காவின் செயலைக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா கண்டிக்கவில்லை; வெனிசுலாவில் நடைபெற்ற செயல் கவலை அளிப்பதாக உள்ளது என்ற வார்த்தைகளோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது. மதுரோவின் ஆட்சி வீழ்ந்து விட்டதால் தமக்கு வெனிசுலாவின் எண்ணைக் கிணறுகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று இந்திய முதலாளி வர்க்கம் கணக்குப் போடுகிறது. ஏற்கனவே இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு குழுமம் (ONGC) வெனிசுலாவின் எண்ணைக் கிணறுகளில் அன்றைய மதிப்பில் ரூ.4000 கோடி முதலீடு செய்திருந்தது. சாவேஸ் அந்த நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கியதால் ONGC தனது முதலீட்டை இழந்தது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வெனிசுலா வந்தால் தனது முதலீட்டை வட்டியுடன் சேர்த்து ரூ. 9000 கோடியாகத் திரும்பப் பெற முடியும் என இந்திய ஆளும் வர்க்கம் திட்டமிடுகிறது அதனால்தான் வெனிசுலா மக்களுக்கு உதட்டளவில் மட்டும் அனுதாபத்தைத் தெரிவிக்கின்றது.
இஸ்ரேல் காசாவில் இனப் படுகொலைகளை நடத்தி வந்தபோது உதட்டளவில்
மட்டும் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வந்த இந்திய ஆளும் வர்க்கம்,
அதே சமயத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி இலாபம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தது;
காசாவில் நடந்த இனப் படுகொலைகளுக்கும் உடந்தையாக இருந்தது. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு
நீதி, நியாயம் என்பது எல்லாம் வெறும் வேடம்தான். அதன் ஆன்மா இலாபத்தில்தான் உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுலாவை மட்டும் இன்று ஆக்கிரமிக்கவில்லை;
தனது இலாபத்திற்காக அடுத்து ஈரானைக் குறி வைக்கிறது. ஈரானில் இப்பொழுது நடந்து வரும்
மக்கள் போராட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நாட்டு மக்களின் பாதுகாவலனாக வேடம்
பூண்டு அந்த நாட்டைக் கபளீகரம் செய்ய நினைக்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் எண்ணெய்
வளத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. கிரீன்லாந்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க அதைத்
தன்னுடன் இணைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகளையும்
மீறி ட்ரம்ப் அறிவிக்கின்றார்; அடுத்து கொலம்பியாவையும் மெக்சிக்கோவையும் ஆக்கிரமிக்கத்
திட்டமிட்டுள்ளார்.
வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்
உலகளவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கு மண்டலங்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவும்
எண்ணெய் மற்றும் இயற்கை கனிம வளங்களுக்காகவும் சந்தைக்காகவும் வெறி நாய் போல சிறிய
நாடுகளை அபகரிக்கும் செயலில் இறங்கியுள்ளது; பெரிய நாடுகளைப் பணிய வைக்க வர்த்தகப்
போரை நடத்தி வருகிறது. உலகெங்கும் போர்ப் பதற்றங்களையும் போர்களையும் உருவாக்கி வருகின்றது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் விரைவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஓர் உலக
யுத்தமாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இன்னொரு உலக யுத்தம் மூண்டால் அது அணு ஆயுதங்களின்
யுத்தமாகவே இருக்கும். அந்த யுத்தம் மனிதகுலத்தைப் பூண்டோடு ஒழித்து விடும். எனவே மனிதகுலம்
இப்பூவுலகில் நீடிக்க வேண்டுமானால் அனைத்து நாட்டு மக்களும் ஒன்றிணைந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
மட்டுமல்லாமல் உலகில் உள்ள பிற ஏகாதிபத்தியங்களுக்கும் சேர்த்து முடிவு கட்ட வேண்டும்.
மு.வசந்தகுமார்





Well written article bringing in past history of US aggression. The images are excellent especially the ones with skeleton head depicting nations which have been finished. As usual I differ on the solution given. People cannot do much. It is the Heads of Government to take action. As you have written, China and Russia have voices their concern only. But two countries in Europe namely Belgium and Italy have strongly sent signals of withdrawing from NATO if US does the same thing in Greenland. The ball is now in the court of European Union
ReplyDeleteand they may pressurise US to stop such acts. A threat to US of withdrawing from NATO could be the Ist step. Will they do is a big question. If it is done then even Ukraine -Russia war peace plan could be worked out. A joint forum of EU, Latin American countries should be formed. Russia and China would support. I do understand it is a big asking.