Skip to main content

ஜார்ஜ் ப்ளாய்டும் - இடையப்பட்டி முருகேசனும்

   நேற்று (23.6.2021) சேலம் மாவட்டம் இடையப்பட்டி முருகேசனும் அவருடையை இரண்டு நண்பர்களும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வரும் பொழுது அவர்களைப் பிடித்த  உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் முருகேசன் மீது கண் முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். அதனால் முருகேசன் உயிர் இழந்துள்ளார்.

         முருகேன்  மீது  வெறித்தனமாக  லத்தியைக்  கொண்டு தாக்கிய பொழுது 'சார், சார், அடிக்காதீங்க விடுங்க, சார்' என அவர் கெஞ்சுவதைக் காணொளியில் காணமுடிகிறது. ஆனால், அவர் அடி தாங்க முடியாமல் வலியால் கதறுவதையும்   பொருட்படுத்தாமல், ஈவு இரக்கம் சிறிதும் இல்லாமல் அவர் உயிர் போகும் அளவுக்கு அந்த அதிகார வெறி கொண்ட உதவி ஆய்வாளர்  தாக்கியுள்ளார். 

           இந்தக் காணொளி அமெரிக்க போலிஸ் அதிகாரி கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மீது நடத்திய  கொடூரமான தாக்குதலை நமக்கு நினைவுபடுத்துகிறது. அப்பொழுது  ஜார்ஜ் பிளாய்ட், 'என்னால் மூச்சு விட முடியவில்லை, ப்ளீஸ், ப்ளீஸ்' எனத் தொடர்ந்து  சொல்லிக் கொண்டே இருக்கிறார்.  ஆனால்,  எட்டு நிமிடங்களுக்கும் மேலாக, அவருடைய கழுத்தின் மீது காலை வைத்து  இறுக்கி அவரை மூச்சுத் திணற வைத்துச் சாகடித்தான் இன வெறி கொண்ட   ஒரு வெள்ளைப் போலீஸ்காரன்.

           இங்கு மது குடிப்பது சட்ட விரோதமனதல்ல.  அரசே சாராயக் கடைகளை நடத்தி மக்களைக் குடிக்கப் பழக்கி வருகிறது. அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் அடைந்து வருகிறது.  இந்த நிலையில் முருகேசனை அடிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அவர் மது அருந்தி இருந்ததுதான் காரணமா? உறுதியாக அது காரணமாக இருக்க முடியாது. அப்படியே அவர் வேறு ஏதாவது சட்ட விதிகளை மீறி இருந்தால் கூட அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே அந்தப் போலிஸ் அதிகாரியின் கடமையாக இருக்க முடியும். அதை விட்டு அவரை உயிர் போகும் அளவுக்கு அடிப்பதற்கு போலிசுக்கு சட்டப்படி என்ன அதிகாரம் உள்ளது?

    மக்களை போலிஸ் அடிப்பதற்கு சட்டப்படி எந்த அதிகாரமுமில்லை; மக்களை போலிஸ் அடிப்பது என்பது சட்டவிரோதமானது  என்ற கருத்தை இங்குள்ள ஆட்சியாளர்கள் வலியுறுத்துவதில்லை. அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இங்கு எடுக்கப்படுவதும் இல்லை. போலிசின் சித்திரவதைகளால் மனித உயிர்கள் பலி கொள்ளப்படும் சமயங்களில் மட்டும் மக்களின் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், மக்களை அமைதிப்படுத்தவும் பணி இடை நீக்கம் போன்ற சில கண் துடைப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.  சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் சில ஆண்டுகளில் அவர்கள் மீது  குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டு, மீண்டும் பதவிக்கு வந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பதவி உயர்வும் பெறுகின்றனர்.

    இங்குள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான். அடிமை நாட்டில் உள்ள அடிமைகளை ஆள்வதற்காக எஜமானர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அவை. மக்கள் மீது அதிகார வர்க்கம் எவ்வளவுதான் அடக்குமுறைகளைச் செலுத்தினாலும் அதிகாரவர்க்கத்தைத் தண்டிக்க முடியாத வகையிலும், அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் அந்தச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தச் சட்டங்களை அப்படியே எடுத்துக் கொண்டு ஆங்காங்கு  சில பிரிவுகளை மாற்றியமைத்து, மக்களை அடக்கி ஒடுக்க இங்குள்ள ஆளும் முதலாளிய வர்க்கம் பயன்படுத்தி வருகிறது. அதனால்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி  மக்கள் மீது அடக்குமுறைகளைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பது சாத்தியமாவதில்லை.

        அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசின் ஒடுக்குமுறை கருவிகளான போலீசு, இராணுவம், நீதிமன்றம் ஆகியவை எப்பொழுதும் அடக்குமுறைகளையும், வன்முறைகளையும்  ஏவி வருகின்றன. இதன் மூலம் மக்களிடையே எப்பொழுதும் ஒருவித அச்ச உணர்வை உளவியல் ரீதியாக உருவாக்கி வருகிறது ஆளும் வர்க்கம்.  அரசுக்கு எதிராக மக்கள் கருத்துகள் தெரிவிப்பதையோ, போராடுவதையோ முடக்குவதற்கான செயல்பாடுகள்தான் இவை.

        2020 ஜூன் 9 ஆம்தேதி அன்று ஜார்ஜ் பிளாய்ட்டின் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க மக்களின் தொடர் போராட்டங்கள் அந்த அரசைப் பணிய வைத்தன. ஜார்ஜ் பிளாய்ட்டை படுகொலை செய்த போலிஸ் அதிகாரி டெரெக்சாவின்மீது கொலை வழக்கு பதிவு  செய்து, கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று, நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட்டின் பெயரிலேயே போலிஸ்  சீர்த்திருத்த மசோதாவையும் அமெரிக்க அரசு தாக்கல் செய்துள்ளது. கொலை நடந்து 10 மாதங்களிலேயே விரைவான விசாரணை  நடத்தப்பட்டு  தண்டனை  வ ழங்கபட்டுள்ளது.

         ஆனால், ஏறக்குறைய இதே காலகட்டத்தில் 2020 ஜூன் 19 ஆம் தேதியன்று சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸை படுகொலை செய்த வழக்கில் போலிஸ் அதிகாரிகள் கைது மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணை இன்னும் தொடக்க கட்டத்திலேயே உள்ளது. இந்த விசாரணை முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதே நிலைமைதான் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட இடையப்பட்டி முருகேசன் வழக்கிற்கும் நிகழும்.  மக்களின் கோப உணர்ச்சிகளை தணிக்க போலிஸ் அதிகாரி பெரியசாமி கைது செய்யப்பட்டாலும், அவர் மீதான வழக்கும்  கிடப்பில்  போடப்படும்.

        தன்னிடம் உள்ள அதிகார பலத்தைக் கொண்டு மக்கள் மீது தன்னுடைய வன்முறையை  நிகழ்த்தும் அரசின் போக்கு தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய ஒன்றியம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருக்கும் குறைந்தபட்ச உரிமைகள் கூட இங்கு மறுக்கப்படுகின்றன. இந்த உரிமைகளைப்  பெறுவதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

        ஜார்ஜ் பிளாய்டின் நினைவாக அமெரிக்காவில் போலிஸ்  சீர்த்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உரிமைகளைப் பற்றிய மக்களிடையே இருந்த விழிப்புணர்வும் ஒற்றுமையும் போராட்ட குணமுமே அத்தகைய சீர்திருத்த மசோதாவுக்குக் காரணமாக இருந்தன. மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று ஒற்றுமையுடன் போராடுவதன் மூலமே இங்கும் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்! உறுதிப்படுத்த முடியும்!

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ் நாடு

Comments

  1. 100% கரெக்ட். அங்கேயும் பல போராட்டங்களுக்கு அப்புறம்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. விரைவான தீர்ப்பளித்தது. இங்கும் போராட்டங்கள் பலனளிக்கும். ஆனால் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் என்ன அடுத்த கிரகத்திலிருந்து வந்தவர்களா? அவர்களுக்கு தெரியாதா என்ன செய்ய வேண்டும் என்று. போராட்டம் செய்துதான் ஒவ்வொன்றையும் சாதிக்க வேண்டுமா? அதிகார வர்க்கம் யோசிக்க வேண்டும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்