14.02.2023 அன்று
’வடவர் வருகையும் தமிழ்நாடும்’
எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தியாகு அவர்கள் பேசிய
உரையை விமர்சனம் செய்து ’வடவர் வருகையும் தியாகுவின் முதலாளிய வர்க்க சேவையும்’
(https://senthazhalmagazine.blogspot.com/2023/02/blog-post_25.html) என்னும் தலைப்பிட்ட விமர்சனக் கட்டுரையைச் செந்தழல் இணைய இதழில்
25.02.2023 அன்று வெளியிட்டிருந்தோம்.
தோழர் தியாகு அவர்கள் ‘தாழி’ எனும் மின்னிதழில்
‘தமிழ் மக்களுக்கான சேவையும் குடியாட்சியக்
கோரிக்கைகளும்’ எனும்
தலைப்பில் பதிலுரை அளித்திருந்தார். இந்தப் பதிலுரையில் நாம் முன்வைத்த விமர்சனங்களுக்கான
பதில்களை விடக் கேள்விகளாகத் தொக்கி நிற்பவைகளே அதிகம்.
இதில் ஒரு செய்தியை மட்டும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு
வந்துவிட்டு தியாகுவின் பதிலுரையை ஆய்வு செய்வோம். தியாகு அவர்களின் கருத்தரங்கு உரையில் வடமாநிலத் தொழிலாளர்கள்
வருகையைத் தடுக்கவேண்டும் எனப் பேசியதாக விமர்சன உரையில் குறிப்பிட்டிருந்தோம்,
ஆனால், அவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றே கூறியிருந்தார்.
வார்த்தைகளிலும் அதன் பொருளிலும் வித்தியாசம் இருந்தாலும்,
என்னுடைய பதிலுரையில் எந்த மாற்றமும் இல்லை,
ஏனெனில் இரண்டும் சாரம்சத்தில் ஒன்றே (ஒரே விளைவேயே கொண்டு வரும்) என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இனி தியாகுவின் பதிலுரைக்குள் நுழைவோம்.
பதிலுரையை இரண்டு பாகங்களாகப் பிரித்து அளிக்கின்றோம்.
1. அரசியல் ரீதியாக தியாகுவின் மறுப்புகள்
குறித்து 2. தியாகுவினைக் குறிப்பிட்டுச் சுட்டப்படும்
பதிவுகள் குறித்து.
மூன்றாவதாக, தியாகு அவர்களின் ‘தமிழ்
மக்களுக்கான சேவையும் குடியாட்சியக் கோரிக்கைகளும்’ என்னும் விமர்சனக் கட்டுரையை
பின்னிணைப்பாக இணைத்துள்ளோம்.
I
நாம் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி மட்டுமே பேசுவது
போன்றும்,
மற்ற சுரண்டப்படும் வர்க்கங்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்
பற்றிப் பேசவில்லை என்றும் தியாகு கருதுகிறார் போலும்.
எப்படி இந்த முன்முடிவிற்கு வந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
சமூகத்தின் படிநிலையில் கடைசிப் படியில் உள்ள தொழிலாளி
வர்க்கம் விடுதலை பெற வேண்டுமானால் சமூகத்திலுள்ள அனைத்துச் சுரண்டப்படும்
வர்க்கங்களும், ஒடுக்கப்படும் வர்க்கங்களும் விடுதலை பெற வேண்டும். அப்பொழுதுதான்
தொழிலாளி வர்க்கமும் விடுதலை பெற முடியும். இது மார்க்சியம் அறிந்தவர்களுக்கு
அரிச்சுவடிப் பாடம். தொழிலாளி வர்க்கமே ஒடுக்குண்ட சாதி மக்கள், பெண்கள் ஆகியோரை
உள்ளடக்கியதுதான். ஆகப் பெரும்பான்மையான மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளர்
வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். முதலாளி வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டமானது
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகள், சிறு உடைமையாளர்களை நட்பு சக்தியாகக் கொண்டு நடைபெறும்.
அரசியலதிகாரத்தில் இருக்கும் முதலாளிய வர்க்கத்திற்கு எதிரான அணிச் சேர்க்கையில்
இவர்கள் இடம் பெறுவார்கள். ஆனால், தியாகுவோ நாங்கள் தொழிலாளர் வர்க்கத்தின்
நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்வது போலவும் விவசாயிகள், சிறு உடைமையாளர்கள்,
மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரைப்பற்றி அக்கறை கொள்வதில்லை என்று கூறி எங்களைத்
தனிமைப்படுத்த முயற்சி செய்கிறார். அவர் என்னவோ சமூகத்தில் உள்ள அனைத்துப்
பிரிவினர்களைப் பற்றியும் அக்கறை கொள்வது போலப் பாவனை செய்கிறார்.
ஆனால், தியாகு அரசியலதிகாரத்தில் இருக்கும் முதலாளி வர்க்கத்தின் பிரிவுக்குச்
சேவை செய்யத் துணிகிறார் என்பதே எமது விமர்சனம். அதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.
தொழிலாளர்களின் இடப் பெயர்வு பிரச்சனையைப் பற்றிப் பேசும்பொழுது
தியாகு ஏன் (இதர வர்க்கங்கள் பற்றிய) இந்தக் கேள்வியை எழுப்புகிறார்.
அவர் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை புரிகிறார் என்று குறிப்பிட்டதாலா?
அவர் எப்படி முதலாளிய வர்க்கத்திற்குத் துணை புரிகிறார் என்பதை
முந்தைய விமர்சனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் அதனை மீள்பதிவு செய்கிறோம்.
தமிழ்
நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்குக் காரணம் பிற இனங்களைச் சேர்ந்த
தொழிலாளர்கள்தான் என்று கூறுவதன் மூலம், இங்குள்ள முதலாளிகள் பிற இனங்களைச் சேர்ந்த
தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மலிவாகச் சுரண்டுவதை அவர் மறைக்கிறார்; வேலையின்மை என்ற பிரச்சினைக்குக்
காரணம் நிலவும் முதலாளிய அமைப்புதான் என்பதை மறைத்து விட்டு, பிற இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான்
எனக் கூறி, பகையை மூட்டி, தொழிலாளர்களின் ஐக்கியத்தைக்
குலைக்கிறார்; முதலாளிய வர்க்கத்தைக் காப்பாற்ற முனைகிறார்.
. . .
தொழிலாளர்களின்
இத்தகைய நிலைமைகளுக்குக் காரணமான முதலாளித்துவ உற்பத்திமுறையை வீழ்த்துவதற்கு இவர்கள்
தயராக இல்லை. சில சில்லறைச் சீருத்திருத்தங்கள்
மூலம் தங்களுடைய அரசியல் பிழைப்பை நிலை நிறுத்தி ஆளும் முதலாளி வர்க்கம் தொடர்ந்து
நீடிப்பதற்கு வழிவகுக்கின்றனர். தியாகு போன்றவர்களின் முழக்கங்களும் இத்தகைய தன்மையதே.
. . .
ஒட்டு
மொத்தத்தில் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சேவகம் செய்வதற்கான அதிகாரவர்க்கத்தை
எப்படி வடிவமைக்க வேண்டும் என்று தியாகு ஆலோசனை வழங்குகிறார். தியாகு போன்றவர்களின் இத்தகைய உரைகள் தொழிலாளர்களிடையே
பகையுணர்வுகளைத் தூண்டி ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்றவே பயன்படும்.
நாம் அவருடைய நடைமுறைச் செயல்பாடுகளிலிருந்து (கருத்தரங்க உரை) கோடிட்டுக் காட்டினோம், ஆனால், தியாகுவோ
இந்திய வல்லரசியத்திடமிருந்து தமிழ்நாட்டுத்
தொழிலாளருக்கு விடுதலை தேவை.
தமிழ்நாட்டு முதலாளர்க்கும்
விடுதலை தேவை.
அனைத்துத் தமிழ் மக்களுக்கும்
விடுதலை தேவை.
என்று இந்தப் பதிலுரையில் தம்முடைய முதலாளிய வர்க்கச் சேவையைத்
தெளிவுபடுத்தியுள்ளார். நாம் கொடுத்த தலைப்பை அவரே ஒப்புக்கொண்ட பின்னர் ஏன் மிரள வேண்டும்?
தியாகு குறிப்பிடும் இந்திய வல்லரசியம் என்பது என்ன?
இந்திய வல்லரசியத்தில் வீற்றிருக்கும் வர்க்கங்கள் எவை?
இந்தியா என்பது அனைத்து தேசிய இனங்களும் வாழும்
மாநிலங்களைக் கொண்ட ஒரு பல்தேசிய இன நாடு. இந்தியா என்பது இந்தியாவைக் காலனியாதிக்கம் செய்த பிரிட்டனைப் போலத்
தமிழ்நாட்டிலிருந்து தனித்துப் பிரிந்து இருப்பதல்ல. அனைத்து மாநிலங்களும் இணைந்த
பகுதிக்குப் பெயர் அது. தேசிய இனங்கள் அனைத்தும் தனித்தனியே பிரிந்து விட்டால்
இந்தியா ஒன்று இல்லை. ஆனால் தியாகு போன்றவர்கள் இந்தியா ஒன்று தனித்து இருப்பது
போலவும் அது தமிழ்நாட்டின் மீதும் பிற தேசிய இனங்களின் மீதும் வல்லாதிக்கம் செய்து
வருவதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இந்திய அரசு என்பது தனித்து இல்லை. அது அனைத்து தேசிய
இனங்களையும் சேர்ந்த முதலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டதாகும்.
பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்தியாவின் பரந்த சந்தையும் உழைக்கும் மக்களும்
அவர்களுக்குத் தேவை. அதன் மூலம்தான் அவர்கள் உழைக்கும் மக்களைச் சுரண்டித் தன்
இலாபத்தைப் பெருக்கமுடியும். அதற்காகப் பரந்த இந்தியாவைக் கட்டிக் காப்பாற்ற
வேண்டும். அனைத்துத் தேசிய இன முதலாளிகளின் நலன்களும் அதில்தான் அடங்கியுள்ளன.
ஏற்கனவே இந்திய அரசியலதிகாரத்தில் பங்கு கொண்டு பெரும் பயன்களை
அடைந்து கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தை மீண்டும் தேசிய இன அடிப்படையில் தனியாகப்
பிரித்துத் தனிச் சிம்மாசனத்தில் அமர்த்துவேன் என்று தியாகு போன்றவர்கள் முன்னெடுப்பதை
தேசிய இன முதலாளிகள் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ்
நாட்டிலுள்ள சிறு, குறு, நடுத்தர முதலாளிகளுக்குக் கூட இந்தியா என்ற பரந்த
சந்தையும், இந்தியா முழுவதிலுமிருந்து எளிதாகக் கிடைக்கக் கூடிய மலிவான கூலித்
தொழிலாளர்களும் தேவைப்படுகின்றனர். அவர்கள் எல்லாம் கூடத் தமிழ்நாடு தனியாகப்
பிரிந்து போவதை விரும்பமாட்டார்கள். தியாகு
போன்றவர்களின் முன்னெடுப்பெல்லாம் குட்டி முதலாளிய வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்பதே பாட்டாளி வர்க்கக் கட்சியின் நிலைப்பாடு. இந்தத் திட்டம்தான் பல்தேசிய நாடான இந்தியாவிற்கும் பொருத்தமானது என்றும் கூறி வருகிறோம்.
தியாகுவோ எங்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதில்
தடை உள்ளது போலக் கூறுகிறார்? மேலும் அவருடைய தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்து
தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், சுயநிர்ணய உரிமை பற்றிய அவருடைய கருத்து லெனினால்
முன்வைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கக் கோட்பாடு அல்ல. அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் ஜனநாயகத்தையும்
சமத்துவத்தையும் உறுதிப்படுத்தும், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய
சுயநிர்ணயக் கோட்பாட்டை லெனின் வைத்த அதே சமயத்தில் அது பல்வேறு தேசிய இனங்களைச்
சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு எதிராக இருக்கக் கூடாது என
வலியுறுத்துகிறார்.
ஆனால் தியாகுவோ ‘வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்றோ, வடநாட்டுத்
தொழிலாளர்களைச் சண்டையிட்டுத் துரத்த வேண்டுமென்றோ கூறவில்லை’ என்றும், ‘சுயநிர்ணய
அடிப்படையில் இறைமையுள்ள மற்ற நாடுகளைப் போல தமிழ்நாட்டுக்கும் கடவுச்
சீட்டுகளையும், நுழைவு இசைவும் வழங்கும் அதிகாரம் தேவை எனக் கூறுகிறோம். இது
தொழிலாளர் கண்ணோட்டம்தான்’ என்கிறார். அதன் மூலம் அவர் பிற இனங்களைச் சேர்ந்த
தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். ஆனால் இது முற்றிலும்
தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு எதிரானது என்பதையும், உண்மையில் பாட்டாளி
வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் கீழே தரப்பட்டுள்ள
மூன்றாவது அகிலத்தின் தீர்மானம் விளக்குகிறது என்பதை தியாகுவின் கவனத்திற்குக்
கொண்டு வருகிறோம்.
1922ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் அகிலத்தின் நான்காவது
காங்கிரசில் ”கீழ்த்திசை நாடுகள் பற்றிய ஆய்வுரைகள்” என்னும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது:
அச்சுறுத்தும் ஆபத்தைக்
கருத்தில்கொண்டு,
ஏகாதிபத்திய நாடுகளின்
கம்யூனிஸ்ட் கட்சிகள்–அமெரிக்கா,
ஜப்பான், பிரிட்டன்,
ஆஸ்திரேலியா மற்றும்
கனடா – போருக்கு எதிரான பிரச்சாரத்தோடு மட்டும் தங்கள் கடமையைக்
கட்டுப்படுத்திக் கொள்ளாமல்,
இந்த நாடுகளில் உள்ள
தொழிலாளர்கள் இயக்கத்தினைச் சீர்குலைக்கும் காரணிகள் மற்றும் தேசிய, இன முரண்பாடுகளை முதலாளிகள் பயன்படுத்துவதை அகற்றுவதற்கான
அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குடியேற்றம் பற்றிய
வாதங்கள் மற்றும் மலிவான வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்கள் ஆகியவையே இந்தக் காராணிகளாகும்.
இன்று, தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் சர்க்கரைத் தோட்டங்களில்
வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களை ஆளெடுக்கும் முறையில் முதன்மையான வழி
ஒப்பந்தமுறையாகும்.
இது இந்தியா மற்றும்
சீனாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருகிறது.
இந்த நிகழ்வு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு ஏகாதிபத்திய
நாடுகளிலுமுள்ள தொழிலாளர்களை,
குடியேற்றத்திற்கு
எதிராகவும் வெள்ளை நிறமல்லாத இன மக்களுக்கு எதிராகவும் சட்டங்களை இயற்ற வேண்டும்
எனக் கோருவதற்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தச் சட்டங்கள்
வெள்ளை இனத் தொழிலாளர்களுக்கும் வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களுக்கும் இடையேயேயான
முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துகின்றன.
தொழிலாளர்கள்
இயக்கத்தின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தவும் சிதறடிக்கவும் செய்கின்றன.
அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள்
குடியேற்றத்தைத் தடை செய்யும் சட்டங்களுக்கு எதிராகத் தீவிரமான பிரச்சாரத்தை
முன்னெடுக்க வேண்டும்.
இந்தச் சட்டங்களால்
தூண்டப்பட்ட இன வெறுப்பின் காரணமாக இந்த நாடுகளின் பாட்டாளி மக்கள் திரளும்
பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
முதலாளிகளும் இத்தகைய குடியேற்றத்
தடைச் சட்டங்களை எதிர்க்கின்றனர்.
ஏனெனில் மலிவான, வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களைத் தடையில்லாமல் இறக்குமதி
செய்வதால் வெள்ளை இனத் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்து ஆதாயத்தைப் பெறமுடியும். முதலாளிகளின் உள்நோக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு பதிலடி
கொடுப்பதற்கு இங்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது.
அது குடியேற்றத் தொழிலாளர்கள்
ஏற்கனவே உள்ள வெள்ளையினத் தொழிலாளர்களின் சங்கத்தில் இணைக்கப்படவேண்டும். அதே நேரத்தில்,
வெள்ளை நிறமல்லாத
தொழிலாளர்களின் ஊதியத்தை வெள்ளை இனத் தொழிலாளர்களின் ஊதியத்திற்குச் சமமாக
உயர்த்தப்பட வேண்டும் எனக் கோரவேண்டும்.
கம்யூனிஸ்ட்
கட்சிகளின் இத்தகைய முயற்சி முதலாளித்துவ உள்நோக்கங்களை அம்பலப்படுத்தும். கூடவே சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் எந்தவிதமான இன
வேறுபாட்டிற்கும் இடமளிக்காது என்பதை வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களுக்கு
உணர்த்தும்.
இந்த நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கு,
சரியான கொள்கைகளை
வகுக்கவும்,
பசிபிக்
பிராந்தியத்தில் உள்ள அனைத்து இனப் பாட்டாளி வர்க்கத்தையும் செயலூக்கத்துடன்
ஒருங்கிணப்பதற்குப் பொருத்தமான அமைப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் பசிபிக்
நாடுகளில் உள்ள புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒரு பசிபிக்
மாநாட்டைக் கூட்டவேண்டும்.
(Theses
on the Eastern Question, www.marxist.org)
மேலும், தமிழகத் தொழிலாளர்கள் கூலி அடிமைகளாக
மட்டுமல்லாமல் தேசிய அடிமைகளாகவும் இருப்பதாகத் தியாகு குறிப்பிடுகிறார்.
தேசிய அடிமைகள் என்றால் எந்தத் தேசிய இனத்திற்குத் தமிழ்த் தேசிய
இனம் அடிமையாக உள்ளது என்பதைத் தியாகு தெளிவுபடுத்துவாரா? தேசிய இன அடிப்படையில் சில தேசிய இனங்களுக்குச் சலுகைகள் அளிப்பதும்,
மற்றவைகளுக்கு சமத்துவத்தை மறுப்பதும்
என ஆளும் வர்க்கங்கள் செயல்படுவதானது அந்தக் குறிப்பிட்ட தேசிய இனங்களின் நலனுக்காக
அல்ல,
மாறாக, தேசிய இனங்களிடையே கசப்புணர்வுகளை உருவாக்கி அதன் மூலம் வர்க்க
ஒற்றுமை ஏற்பட்டு விடாதபடி தடுப்பதற்கேயாகும்.
மொழி, இனம், வட்டாரம் சார்ந்து எழக்கூடிய சிக்கல்களுக்கு முரணற்ற குடியாட்சியத்தின்
அடிப்படையில் தீர்வு காண வேண்டாமா என்கிறார் தியாகு. பிற தேசிய இனத் தொழிலாளர்கள் உள்ளே நுழைவதைக் கட்டுப்படுத்தவேண்டும்
என்பதுதான் தியாகுவின் முரணற்ற குடியாட்சியத்தின் அடிப்படையிலான தீர்வா? தன் தீர்வின் அடிப்படையில் அமைந்துள்ள முதலாளிய அமைப்பில்
முரணற்ற குடியாட்சியம் (ஜனநாயகம்) இருக்குமா? நிச்சயம்
இருக்காது. முதலாளிய வர்க்கத்திற்குத்தான் அங்கு ஜனநாயகம்
இருக்கும். அது உழைக்கும் மக்கள் மீது சர்வாதிகாரமகாவே இருக்கும்.
இப்பொழுது நிலவி வரும் இந்திய ஆட்சிப் பணிக்குப் பதிலாக தமிழ்நாட்டிற்குத்
தனியாக தமிழ்நாடு ஆட்சிப் பணி அமைந்தாலும் அது முதலாளிய வர்க்கத்திற்குப் பணிபுரியும்
அதிகார அமைப்பாகவே இருக்கும். அது மக்களுக்கானதாக இருக்காது. அதைச் சில சான்றுகளுடன்
சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அதற்குப் பதில் அளிக்காமல் அனைத்துலக ஆட்சிப்
பணிதான் எமது கோரிக்கையா எனத் தியாகு திசை திருப்புகிறார். தியாகு கூறும் இறைமை
கொண்ட தமிழ்நாட்டில் முரணற்ற ஜனநாயகம் நிலவாது என்பதை லெனினுடைய வார்த்தைகளின் வழியாகவும்
சேர்த்துக் கூறுவோம்.
முதலாளித்துவத்தில் எவ்வளவுதான் ஜனநாயகம்
இருந்தாலும் சரி,
பெண் என்பவள் “வீட்டடிமையாகதான்”
நீடித்திருந்திருக்கிறாள். படுக்கையறையிலும்,
அடுப்பங்கரையிலும், குழந்தைகளைப் பேணி வளர்த்துத் தாலாட்டும் இடங்களிலும் அடைபட்டுக்
கிடக்கும் அடிமையாக இருக்கின்றாள்.
அது போலவே, தொழிலாளிகளும்,
விவசாயிகளும் (மக்களும்)
‘தம்முடைய சொந்த’ மக்கள் நீதிபதிகளையும்,
அதிகாரிகளையும், பள்ளி ஆசியர்களையும்,
பஞ்சாயத்துகாரர்களையும் (ஜுரிகளையும்)
தேர்ந்தெடுக்கும் உரிமையும், முதலாளித்துவத்தில் அடைவதற்கரியது, அடைய இயலாதது,
தொழிலாளிகளும், விவசாயிகளும் பொருளாதார வகையில் கீழ்ப்படிந்தவர்களாக, (அடிமைப்பட்டவர்களாக)
இருக்கின்றனர் என்ற காரணத்தினால்
ஜனநாயகக் குடியரசு விசயத்திற்கும் அது பொருந்துகின்றது.
(ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவுபடுத்தும்
ஒரு கேலிச் சித்திரமும், பக்- 105,
1916 ஆகஸ்ட் –
அக்டோபர்).
மேலும், தியாகு அடிப்படை முரண்பாடு, முதன்மை முரண்பாடு
பற்றிப் பேசுகிறார். முதலாளிய சமூகத்தில் முதலாளி – தொழிலாளி முரண்பாடு அடிப்படை
முரண்பாடு என்றும், முதலாளியச் சமூகம் நிலவும் வரையிலும் இந்த அடிப்படை முரண்பட்டு
நீடிக்கும் என்றும், ஆனால் அந்த அடிப்படை முரண்பாடே எல்லாக் கட்டத்திலும்
நீடிக்கும் முதன்மை முரண்பாடாக இருக்கும் என்று நாங்கள் கருதுவதாகக் கூறுகிறார். எல்லாக்
காலத்திலும் முதலாளி – தொழிலாளி முரண்பாட்டை மட்டுமே ஒற்றை முரண்பாடாக வரித்துக்
கொள்ளும் தவறில் நாங்கள் வீழ்ந்து விட்டதாகக் கூறுகிறார்.
முதன்மை முரண்பாடு பற்றி மாவோ கூறும்போது,
“சிக்கலான ஒரு பொருளின் வளர்ச்சிப்
போக்கில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் இன்றியமையாத ஒன்று முதன்மை
முரண்பாடாகும். இதன் இருத்தலும், வளர்ச்சியும் பிற முரண்பாடுகளின் இருத்தலையும்
வளர்ச்சியையும் தீர்மானிக்கவோ செல்வாக்கு செலுத்தவோ செய்கின்றன.
எடுத்துக்காட்டாக, முதலாளிய
சமூகத்தில் முரண்பாட்டில் உள்ள இரு சக்திகளான பாட்டாளி வர்க்கமும் முதலாளிகளும்
முதன்மை முரண்பாடாக அமைகின்றன. எஞ்சியுள்ள நிலவுடைமை வர்க்கத்திற்கும்
முதலாளிகளுக்குமிடையிலும், விவசாயக் குட்டி முதலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும்
இடையிலும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயக் குட்டி முதலாளிகளுக்கும்
இடையிலும், ஏகபோகமற்ற முதலாளிகளுக்கும் ஏகபோக முதலாளிகளுக்கும் இடையிலும்,
முதலாளிய ஜனநாயகத்திற்கும் முதலாளியப் பாசிசத்திற்கு இடையிலும், முதலாளிய
நாடுகளுக்கு இடையிலும், ஏகாதிபத்தியத்திற்கும் காலனிகளுக்கு இடையிலும் உள்ள பிற முரண்பாடுகளை
இம்முதன்மை முரண்பாடு தீர்மானிக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ செய்கிறது.”
(மாவோ, முரண்பாடு பற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்,
பக்.461-62 , தொ.1 விடியல் பதிப்பகம்,2012)
இங்கு மாவோ முதலாளிய சமூகத்தில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையில் உள்ள முரண்பாடு
அடிப்படை முரண்பாடாக மட்டுமின்றி முதன்மை முரண்பாடாகவும் நிலவுகிறது என்று
கூறுவதைப் பார்க்கின்றோம். இந்த முதன்மை முரண்பாடே, பிற முரண்பாடுகளை தீர்மானிப்பதாகவும்,
செல்வாக்கு செலுத்துவதாகவும் இருப்பதாக மாவோ கூறுகிறார். இந்த முதன்மை முரண்பாடே இந்திய
முதலாளிய சமூகத்திலும் நிலவுகிறது. இந்தியா என்ற கட்டமைப்பை
முதலாளிய வர்க்கம் தனது சுரண்டல் நலனுக்காகக் கட்டிக் காப்பாற்றி வருகிறது.
உழைக்கும் மக்களைச் சுரண்டியும், அடக்கியும், ஒடுக்கியும் வருகிறது. பல்வேறு
முரண்பாடுகளுக்கும் அதுவே முதன்மைக் காரணமாக இருக்கிறது. அவற்றில் ஒன்றாகவே,
பல்வேறு தேசிய இனங்களும் மொழி உரிமை, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, சமத்துவம்
மறுக்கப்பட்டு வருகின்றன. முதன்மை முரண்பாட்டைத் தீர்ப்பதன் மூலமே பிற
முரண்பாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும். இந்திய முதலாளிய வர்க்கத்தின் கையிலுள்ள
அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைக்கு வரும்போது மட்டுமே சுரண்டலுக்கு
முடிவு கட்டப்படும். அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமத்துவத்தையும்
ஜனநாயகத்தையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமையக்கூடிய சோசலிச அரசு உத்திரவாதப்படுத்தும்.
ஆனால் தியாகுவோ மத்தியிலுள்ள அரசுக்கும் தேசிய
இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் முதன்மை முரண்பாடு எனத் தனது நோக்கத்திற்கு
ஏற்பத் தனது அகநிலையிலிருந்து முதன்மை முரண்பாட்டைக் கட்டமைக்கிறார். தமிழ்த்தேச
முதலாளிகளுக்கும் விடுதலை வேண்டும் என்கிறார். தமிழ் மக்களைச் சுரண்ட தமிழ்
முதலாளிகளுக்கு உரிமை கோருகிறார். தமிழ்த்தேசிய இன முதலாளிகளின் தலைமையில்
இறையாண்மை கொண்ட தமிழ்த்தேசத்தைக் கட்டமைக்க விரும்புகிறார். ஆனால் அது
முதலாளிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்காது. அனைவருக்கும்
ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாது. பிற முரண்பாடுகளையும் தீர்க்காது. ஒரு அடிமை நுகத்தடியிலிருந்து
விடுவித்து இன்னொரு அடிமை நுகத்தடியில் தமிழ் மக்களைச் சிக்க வைக்கும்.
இறுதியாக, முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கானது எவ்வாறு தேசிய இனங்களை
ஒன்றோடொன்று கலக்கச் செய்யும் என்பதை லெனினுடைய வார்த்தைகளைக் குறிப்பிட்டு முதல்
பகுதியை நிறைவு செய்து கொள்ளலாம்
“முதலாளித்துவத்தின் உலக வரலாற்று வழிப்பட்ட போக்கு – தேசிய இனப் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்திடலும் தேசிய இன வேறுபாடுகளை
மறையச் செய்தலும் தேசிய இனங்களை ஒன்று கலக்க வைப்பதுமான அந்தப்போக்கு. கழிந்து செல்லும் ஒவ்வொரு பத்தாண்டையும் தொடர்ந்து இந்தப் போக்கு
மேலும் மேலும் வலிமையடைந்து வருகிறது.
முதலாளித்துவத்தைச் சோசலிசமாக
உருமாறச் செய்யும் மாபெரும் உந்து சக்திகளில் ஒன்றாகும் இது”.
(தேசிய இனப் பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் – தே.இ.பா.வ.ச - பக்-33)
மேலும் தொடர்ந்து லெனின் கூறுகிறார்:
“தேசியவாதத் தப்பெண்ணங்களால்
மூழ்கடிக்கப்படாதவர் எவரும், முதலாளித்துவமானது தேசிய
இனங்களை ஒன்று கலக்கச் செய்திடும் இந்த நிகழ்ச்சிப்போக்கு வரலாற்று வழிப்பட்ட மாபெரும்
முன்னேற்றத்தைக் குறிப்பதாகும், பல்வேறு இருட்டு முடுக்குகளில்,
முக்கியமாய் ருசியாவைப் போன்ற பிற்பட்ட நாடுகளில் தேசிய இனமுரட்டுப்பிடிவாதம்
தகர்க்கப்படுவதைச் சுட்டுவதாகும் என்பதைக் காணத்தவற முடியாது”.
(தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் – தே.இ.பா.வ.ச – பக்-36)
II
பதிலுரையின் தொடக்கத்திலேயே தியாகு நம்மை மிரளவைக்கிறார்.
அதாவது நாம் கொடுத்திருக்கும் தலைப்பு மிரட்டலான தலைப்பாம்!!
நம்முடைய விமர்சனமானது பொருத்தமற்றது என்பதை அம்பலப்படுத்தி
அவர் மார்க்சியத்தை நிலைநிறுத்தியிருக்க வேண்டும், ஆனால், தலைப்பிற்கே நம்மை மிரள வைக்கிறார். அடுத்து வடவர் சிக்கல் குறித்து என்னுடைய பார்வையை முன்வைக்கவில்லை
என்று கூறுவதோடு தியாகுவின் தலையில் கல்லைப் போட்டு மவுனமாக போவதாகக் கூறுகிறார்.
இந்த இரண்டு இடங்களிலும் அவருடைய இந்தச் சொல்லாடல்களைக் கண்டால்
மிரள வைப்பது யார் என்பது வாசகர்களுக்குப் புரியும்.
தியாகு மீண்டும் எனது விமர்சனத்தைப் படித்துப் பார்க்க வேண்டும்
எனக் கேட்டுக் கொள்கிறேன். அதில் முன்வைக்கபட்டுள்ள கருத்துகள் வடவர் பிரச்சனையில் என்ன கருத்தாக்கத்தை முன்வைக்கிறது
என்பது தெரியவில்லையா?
அந்தப் பிரச்சனையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எப்படி அணுகுவது
என்று ஒவ்வொரு வாதத்திலும் விவரித்திருப்பதோடு அதன் முடிவாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம்.
தியாகுவிற்காக மீண்டும் அதனை அப்படியே கொடுக்கிறோம்.
எனவே, தமிழகத்திற்குள் வருகை தரும்
அனைத்துத் தேசிய இனத் தொழிலாளர்களையும் இங்குள்ள தொழிலாளி வர்க்கம் சகோதரப் பாட்டாளி
வர்க்கமாய் அங்கீகரித்து வர்க்கப் போராட்டத்திற்கு அவர்களையும் தயார் படுத்தவேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத
நிலைமைக்குக் காரணம் இங்கு நிலவும் முதலாளித்துவ உற்பத்திமுறையும் அதனைக் கட்டிக் காப்பாற்றிவரும்
ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கத்தினரும்தான் என்பதைத் தமிழகத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் வாழும் அனைத்துத்
தேசிய இனப்பாட்டாளிகளுக்கும் விளக்கவேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தேசிய இனப்பாட்டாளிகளின்
ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் ஆட்சியதிகாரத்தைப்
பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதற்கான தயாரிப்புகளைச் செய்யவேண்டும். இதுவே, தற்போதைய நிலைமையில் பாட்டாளி
வர்க்கத்தின் வேலைத்திட்டமாக இருக்கவேண்டும்.
மேலும், இது குறித்து விரிவாகவே 03.01.23 அன்று ’இடம் பெயர் தொழிலாளர் சிக்கலில் இனவாதமும் பாட்டாளி வர்க்க
நிலைப்பாடும்’ (https://senthazhalmagazine.blogspot.com/2023/01/blog-post.html) என்ற பெயரில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். தியாகு அவர்களுக்கும் வாட்ஸ்ஆப்பில் அப்பொழுது அனுப்பியிருந்தேன். ஒரு வேளை அது அவருடைய கவனத்துக்கு வராமல்
போயிருக்கலாம். இந்தக் கட்டுரையின் மீதும் தியாகு அவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.
தியாகுவை தேர்ந்தெடுத்தது ஏன்?
வடமாநிலத் தொழிலாளர் சிக்கல்
குறித்துச் சமீபகாலமாக இனவாதக் குழுக்கள் தொழிலாளர்களிடையே நச்சுக் கருத்துக்களைப்
பரப்பிப் பகையுணர்வு ஊட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதனை அம்பலபடுத்திப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில்
எப்படி அதனை அணுக வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டதுதான் மேற்குறிப்பிட்ட ‘இடம் பெயர் தொழிலாளர் சிக்கலில் இனவாதமும் பாட்டாளி வர்க்க
நிலைபாடும்’ கட்டுரை ஆகும். தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து இத்தகைய இனவாத
நச்சுக் கருத்துக்களைப் பரப்பி வந்ததால் பெ.மணியரசனின் இரட்டை நிலைப்பாட்டையும், குட்டி முதலாளித்துவப் போக்கையும் விமர்சனம் செய்து இந்தக்
கட்டுரை எழுதப்பட்டது. மேலும், தமிழ்தேச இறையாண்மை இதழில் இந்தச் சிக்கல் தத்துவார்த்த
ரீதியில் தீர்த்துவிட்டதாக பாரி என்பவர் கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார். அந்தக் கட்டுரையிலும் எப்படி இனவாதப் போக்குகள் மிகுந்துள்ளன
என்பதையும் மேற்குறிப்பிட்ட கட்டுரை அம்பலப்படுத்தியுள்ளது. எனவே, தியாகுவை மட்டும் நாம் விமர்சிக்கவில்லை என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறோம்.
வடவர் வருகையும் தமிழ்நாடும்
எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தியாகுவின் உரையின் காணொளி மட்டும் எனக்குக் கிடைத்தது. இது குறித்துக்
கருத்துகளைச் சில தோழர்கள் கேட்டார்கள். தோழர் தியாகு மார்க்சிய
அடிப்படைகளை அறிந்தவர் என்ற பார்வை தமிழக இளைஞர்களிடையே குறிப்பிட்ட
அளவில் தாக்கம் செலுத்தியுள்ளது. ஆனால், அவருடைய அரசியல்
மார்க்சியத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல என்பதைப் புரிந்துள்ளோம். பல்வேறு
மார்க்சிய விரோதப் போக்குகளை விமர்சனத்திற்குட்படுத்திச் சரியான பாதையில் இளைஞர்களையும், தொழிலாளர்களையும் வழி நடத்த வேண்டிய தேவையிருப்பதால் தியாகு
உரை மீது விமர்சனக் கட்டுரையை எழுதினோம். இது தியாகுவின் மீதான விமர்சனம் மட்டுமல்ல. இதே கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்
அனைத்து இயக்கங்கள் மீதான விமர்சனமும் ஆகும். எனினும், குறிப்பான இந்தப் பிரச்சனை குறித்து நாம் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்
வேறு தலைப்புகளுக்குள் சென்றும், பதில் அளிக்காமல் எதிர்க் கேள்விகள்
வைப்பதுமாகப் பதிலுரையில் தோழர் தியாகு அணுகியுள்ளார்.
-
குமணன்
பின்னிணைப்பு:
தமிழ் மக்களுக்கான சேவையும்
குடியாட்சியக் கோரிக்கைகளும்
“வடவர் வருகையும் தியாகுவின்
முதலாளிய வர்க்க சேவையும்!” ஆனால் நான் மிரளவில்லை. ஆம், அப்படித்தான் என்று கையை உயர்த்தி
விடுகிறேன்.
ஆம், இன்றைய தமிழ்நாட்டில் மக்கள்
சேவை என்பது தொழிலாளர் வகுப்புக்கான (வகுப்பு = வர்க்கம்) சேவையாக மட்டும் இருந்தால்
போதாது. ஒடுக்குண்ட தமிழ்த் தேசத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டியுள்ளது.
ஒடுக்குண்ட தமிழ்த் தேசத்தின் ஒரு பகுதியான உழவர்களுக்காகச் சேவை செய்தாக வேண்டும்.
உழவர்கள் என்றால் உழவுத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. மாணவர்கள், இளைஞர்கள், ஒடுக்குண்ட
சாதி மக்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை சமயத்தவர், பெண்கள்
என்று அனைவருக்கும் சேவை செய்தாக வேண்டும். இவர்களில் யாரெல்லாம் தொழிலாளர்கள் என்று
பிரித்துப் பார்த்து சேவை செய்ய வேண்டும், வேறு யாருக்கு உதவினாலும் அது முதலிய வகுப்புக்கு
(முதலாளிய வர்க்கத்துக்கு) சேவை செய்வதாகி விடும் என்ற புரிதல் எனக்கில்லை. நேரடியாகவே
சொல்கிறேன். தமிழ்நாட்டு ‘முதலாளிய வர்க்கத்துக்கு’ சேவை செய்ய நான் விரும்புகிறேன்.
இதில் வெட்கப்பட ஏதுமில்லை. சிறு குறு இடைத்தரத் தொழில்கள் என்று நுட்பமாகச் சொல்கிறார்களே,
இந்தத் தொழில்களின் உரிமையாளர்களும் முதலாளர்கள் என்ற முறையில் சுரண்டுகிறவர்களே, மிகைமதிப்பு
(உபரிமதிப்பு) ஈட்டுகிறவர்களே, அவர்களுக்கும் பாட்டாளிகளுக்குமான முரண்பாட்டில் நான்
பாட்டாளிகள் பக்கமே நிற்கிறேன்.
ஆனால் இந்தச் சிறு முதலாளர்கள்
– தமிழ்நாட்டின் தேசிய முதலாளர்கள் – பெருமுதலாளர்களோடும் அவர்களின் கையிலிருக்கும்
இந்திய வல்லரசோடும் (அதாவது இந்திய ஏகாதிபத்தியத்தோடு) முரண்பட்டு நிற்கும் போது நான்
இந்தத் தமிழ் முதலாளர் பக்கம் உறுதியாக நிற்கிறேன். இந்திய வல்லரசியத்திடமிருந்து தமிழ்நாட்டுத்
தொழிலாளர்க்கு விடுதலை தேவை, தமிழ்நாட்டு முதலாளர்க்கும் விடுதலை தேவை; அனைத்துத் தமிழ்
மக்களுக்கும் விடுதலை தேவை.
‘தியாகு எப்படியெல்லாம் முதலாளிய
வர்க்க சேவை செய்கிறார்’ என்பதற்கான சான்றுகளை குமணன் அடுக்குகிறார். அவரது கட்டுரையின்
தலைப்பை மறந்து விடாதீர்கள்: “வடவர் வருகையும் தியாகுவின் முதலாளிய வர்க்க சேவையும்”
-- வடவர் வருகை என்ற சிக்கல் குறித்து என் உரையை எடுத்துக்காட்டும் குமணன் அச்சிக்கல்
குறித்துத் தன் பார்வை என்று ஏதாவது சொல்ல வேண்டாமா? வடவர் என்று யாருமில்லை என்றோ,
வடவர் வருகை என்று ஒரு சிக்கலே இல்லை என்றோ சொல்கிறாரா? அல்லது சிக்கலே இல்லாத ஒன்று
சிக்கலாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா? எதையாவது சொல்லுங்கள். தியாகுவின் தலையில்
கல்லைப் போட்டால் போதும் என்று மௌனமாய்க் கடந்து போகாதீர்கள்.
வெளியாரை வெளியேற்ற வேண்டும்
என்றோ, வடநாட்டுத் தொழிலாளர்ககளைச் சண்டை போட்டுத் துரத்த வேண்டும் என்றோ நான் சொல்லவில்லை.
ஒவ்வொரு தேசத்துக்குமான தாயக உரிமையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டின் தன்-தீர்வு
(சுய நிர்ணய) உரிமை அடிப்படையில் தமிழ்நாட்டுக் குடியுரிமை வேண்டும், அதற்கான சட்டத்
திருத்தம் தேவை என்பது என் கோரிக்கை. இது ஓர் அடிப்படையான குடியாட்சிய உரிமை. இது தமிழ்
மக்களுக்கான உரிமை மட்டுமல்ல. அனைத்துத் தேசங்களுக்குமான உரிமை. இந்தக் கோரிக்கையைத்
தொழிலாளர்தம் கண்ணோட்டத்திலேயே ஆதரிப்பதில் என்ன தடை?
மொழி, இனம், வட்டாரம் சார்ந்து
எழக் கூடிய சிக்கல்களுக்கு முரணற்ற குடியாட்சியத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதா?
அல்லது அப்படி எந்தச் சிக்கலும் இல்லை என்று கண்ணை மூடிக் கொள்வதா?
தமிழ்த் தேசம் இறைமையற்று நிற்கிறது
என்பதால்தான் குடியுரிமைக் கோரிக்கை எழுப்புகிறோம். இறைமையுள்ள மற்ற நாடுகளுக்கு இருப்பது
போல் தமிழ்நாட்டுக்கும் கடவுச் சிட்டையும் நுழைவிசைவும் கேட்கிறோம். தாயக உரிமை மறுக்கப்பட்டுள்ள
வரை தமிழ்த் தொழிலாளர்களும் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். கூலியடிமைகளாக மட்டுமல்லாமல்
தேசிய அடிமைகளாகவும் இருப்பார்கள். குமுகியத்துக்கான (சோசலிசத்துக்கான) போராட்டத்தில்
குடியாட்சியத்துக்கான (சனநாயகத்துக்கான) போராட்டம் ஓர் இன்றியமையாத கட்டம். குடியாட்சியத்தின்
நிறைவாக்கமே குமுகியம்.
எளிய உண்மை ஒன்றை உங்களுக்குச்
சுட்டிக்காட்ட வேண்டும். முதலாளர் – தொழிலாளர் முரண்பாடு என்பது குமுகத்தின் (சமூகத்தின்)
அடிப்படை முரண்பாடுகளில் ஒன்று. முதலியம் உள்ள வரை அது அப்படித்தான் இருந்து வரும்.
ஆனால் இந்த அடிப்படை முரண்பாடே எல்லாக் கட்டத்திலும் முதன்மை முரண்பாடாக இருக்கும்
என்று குமணன் போன்ற தோழர்கள் கருதிக் கொள்வது போல் தெரிகிறது. இதனால் முதன்மை முரண்பாட்டை
அலட்சியம் செய்வது மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் தொழிலாளர்-முதலாளர் முரண்பாட்டை
மட்டுமே ஒற்றை முரண்பாடாக வரித்துக் கொள்ளும் தவற்றில் விழுந்து விடுகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை
என்ற எளிய குடியாட்சியக் கோரிக்கையைக் கூட இவர்களால் அறிந்தேற்க முடியவில்லை. தமிழ்நாட்டில்
இந்திய ஆட்சிப் பணி எதற்கு? தமிழ்நாடு ஆட்சிப் பணி என்பதுதானே சரி? என்று கேட்டால்
இதனால் தீர்வு கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். அப்படியானால் ‘ஐசிஎஸ்’ மீண்டு வரட்டும்
என்பார்களா? ஒவ்வொரு குடியாட்சியக் கோரிக்கை குறித்தும் இதே அளவுகோலைப் பயன்படுத்தினால்
என்னாகும்? மக்களைச் செயலின்மையில் ஆழத்திப் புரட்சித் தாலாட்டு பாடித் தூங்க வைக்கலாம்.
இந்திய ஆட்சிப் பணி கூடாது,
தமிழ்நாடு ஆட்சிப் பணி வேண்டும் என்பது என் கோரிக்கை. இரண்டுமே சிக்கலுக்குத் தீர்வில்லை
என்பதால் அனைத்துலக ஆட்சிப் பணி வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா?
[உரையாடல் வளர்வதைப் பொறுத்து
மேலும் சில எழுதுவேன். இதற்கிடையில் என் மறுமொழியை செந்தழல் வெளியிடும் என்று நம்புகிறேன்.
தாழி அன்பர்களும் உரையாடலில் பங்கேற்கலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். 103, 116 ஆகிய
தாழி மடல்களை மீண்டும் எடுத்துப் படியுங்கள்.]
Comments
Post a Comment