ஊசி துளைக்கப்பட்ட கரங்கள்
அவள் கரங்களின் சித்திரவேலைப் பின்னலில்
பேரழகு வடிவங்கள் மிளிர்ந்தன
அழுக்கடைந்த சிறிய இருட்டறையில்
ஒளிமிக்க நிலாக்களும் விண்மீன்களும்
அவளுடைய தோல் போர்த்திய கரங்களால்
ஆடைகளில் உயிர்பெற்று மின்னின.
குவிந்து கிடந்த நூற்கண்டுகள்
அவளுடைய ஊசி துளைத்த விரல்களால்
இரவின் ஒளியில் மின்மினிகளாய்
துணிமணிகளில் மாயம் புரிந்தன
கடிகாரம் நள்ளிரவு மணியை ஒலித்தபோது
அவளது காய்த்துப் போன கரங்களால்
அவள் படைத்த மெல்லிய அலங்கார ஆடைகளை
அணியும் பேறு அவளுக்கில்லை என்பது
அவளுக்குத் தெரியும்
அனைத்து வலிகளும்
உங்கள் வாழ்வின் அனைத்து உயிராற்றல்களையும்
உறிஞ்சக் கூடிய ஒரு கருந்துளையின்
ஆற்றல் போல் வருவதில்லை
சில வலிகள்
நீங்கள் உருவாக்கிய அந்தக் கணத்தில்
உங்கள் கரங்களிலிருந்து பறித்துச் செல்லப்படும் போது.
பளிச்சிடும் வண்ண ஆடைகள்
வடிவத்திலும் வரும்.
மகிழ்ச்சியற்ற கொண்டாட்டம்
அவர்கள் ஜொலிக்கும் சிவப்பு வண்ண
மேலங்கிகளை அணிந்திருக்கிறார்கள்
இடுப்பில் தங்கமென மின்னும் கச்சைகள்
படாபடோபமான மணவிழாத் தலைப்பாகை
தூரத்தில் இருந்தாலும் கூட்டத்தில்
அவர்கள் தனித்துத் தெரிகிறார்கள்
ஆனால் அவர்களை யாரும் பார்க்கவில்லை
தங்களுடன் கொண்டுவந்த
பித்தளை இசைக்கருவிகளை இசைத்தவாறே
பின்னணியில் அவர்கள் கரைந்து போனார்கள்
மணவிழா அரங்குக்கு பேருந்தில் வந்து
இறங்கியதிலிருந்து அனைவரும் ஆயத்தமாகும் வரை
மணிக் கணக்கில் காத்திருந்தார்கள்
அவர்கள் உரத்து எழுப்பிய இசையில்
அழகிய ஆடை அணிந்த மனிதர்கள்
மகிழ்ச்சியுடன் நடனமாடினார்கள்
ஆனால் இசைக் கலைஞனிடமிருந்து
ஒருவர் எதிர்பார்ப்பதைப் போல
அவர்கள் விழிகள் மூடியிருக்கவில்லை
அவர்களுடைய முகங்கள்
இசையின் களிப்பில் மகிழ்ந்திருக்கும்
அமைதியான முகக்கவசமாக இல்லை.
அவர்கள் சோர்ந்து போயிருந்தார்கள்
அவர்கள் அணிந்திருந்த மின்னும் ஆடைகளால்
கண்களின் கருவட்டங்களை மறைக்க முடியவில்லை
அவர்களுடைய உற்சாகம் பொங்கும் இசையால்
அவர்களுடைய அவநம்பிக்கையை
மறைக்க முடியவில்லை.
அவர்கள் பிற சிறுசிறு வேலைகள் தவிர்த்து
சிறிது கூடுதலாகப் பணம் ஈட்ட வந்திருந்தார்கள்
அவர்கள் மகிழ்ச்சி பொங்கத் திரிந்த
விருந்தினர்களைக் கவனித்தார்கள்
வான வேடிக்கைகளைக் கவனித்தார்கள்
குதிரைமீது வந்த மணமகனைக் கவனித்தார்கள்
ஆனால் எந்தக் கொண்டாட்ட மனநிலையும்
அவர்களுடைய இதயங்களுக்கு ஒளியூட்டவில்லை
இரவினூடே அழகிய வண்ண உடைகளில் திரும்பிய அவர்கள்
காரை உதிர்ந்த சுவர்களில்
தங்கள் இசைக்கருவிகளைத்
தொங்கவிட்டார்கள்
தழும்பேறிய மனிதர்கள்
வியர்வையும் கரிப்புகையும் படிந்திருந்தன
அவர்களுடைய முகங்களில்
அவர்களுடைய உருவங்கள் மாறியிருந்தன
நிலக்கரி சுமக்கும் இயந்திரங்களைப் போல
குறுகிய பாதாளப் பாதைகளில்
புழுதி நிறைந்த காற்றைச் சுவாசித்து
நுரையீரல்கள் கருத்துத் தடித்தன
அவர்களுடைய பாதங்களுக்கடியில்
அகழ்வுண்ட பூமி துடித்தது.
மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன
மண் வாரி இயந்திரத்தின் கொடுங்கரங்களால்
மண் சுரண்டி எடுக்கப்பட்டது.
அவர்கள் தழும்பேறிய பூமியில்
உழைத்துக் கொண்டிருக்கும்
தழும்பேறிய மனிதர்கள்.
மூன்று கவிதைகளும் அலிகாரைச் சேர்ந்த மாணவர், எழுத்தாளர்.
மாளிகா இக்பால் மே நாளை ஒட்டி எழுதியவை.
தமிழில்: நிழல்வண்ணன்
நன்றி: countercurrents.org.
நன்று.
ReplyDeleteThree different situations how they labour for their livelihood for others to enjoy. Really nice 👍
ReplyDeleteமூன்று கவிதைகளும் அருமை. எழுதிய
ReplyDeleteதோழர் இக்பாலுக்கும்,
மொழி பெயர்த்த
தோழர்
நிழல் வண்ணன் அவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகளும், வணக்கங்களும்..
அதிலும் மகிழ்ச்சியற்ற கொண்டாட்டங்கள் கவிதை மனதை பிசைந்துவிட்டது.