Skip to main content

மாருதி சுசுகியின் புதிய தொழிலாளர் சங்கத்தின் தோற்றம் -பல்லாண்டு கால ஒன்றுபட்ட போராட்டங்களின் வெற்றி!

 

ஜனவரி 5' 2025 - புதிய தொழிற்சங்கம் ஒன்று உருவாகியுள்ளது; உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றிலும் தொழிற்சங்க இயக்கங்களின் வரலாற்றிலும் தனித்துவம் வாய்ந்த நிகழ்வாக மாருதி சுசுகி நிறுவனத்தின் நிரந்தரமில்லாத தொழிலாளர்களின் சங்கம் உருவாகி உள்ளது. 

இந்தச் சங்கம் மாருதி சுசுகி நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட நிரந்தரமான தொழிலாளர்களின் முயற்சியாகும்; வேலையில்லாத, வருமானம் இல்லாத, முக்கியமாக எந்த முக்கியமான தொழிற்சங்கங்களின் ஆதரவும் இல்லாதவர்களின் ஒன்றுபட்ட இடைவிடாத போராட்டத்தின் விளைவாகும்.  

அந்த நிகழ்ச்சியின்போது நான் ஒரு பார்வையாளனாக அங்கு இருந்தேன். 

2012 ஆம் ஆண்டில், தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு முரணாக மாருதி சுசுகி போராட்டக் கமிட்டியின் உறுப்பினர்களாக இருந்த நிரந்தரத் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போதிலிருந்து அந்தத் தொழிலாளர்கள் தங்களது பணியை மீண்டும் பெறவும், நிரந்தரமாக்கப்படாத தொழிலாளர்களுக்காகவும் தொடர்ந்து போராடி வந்தார்கள்.  

இந்தப் போராட்டக் குழு பழைய குர்கானில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்திருந்தது. நூறு பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை ஆனால் காலை 11:30 மணிக்கு 1000 பேரில் தொடங்கி வர வர 3000 பேராக அதிகரித்தது. 

கடல் போல் திரண்ட அந்த கூட்டத்தில் ஒருவர் கூட 30 வயதிற்கு மேற்பட்டவர் இல்லை. அவர்களில் ஏராளமானவர்கள் தொழிற்சங்க தலைவர்களின் உரைகளைப் பதிவு செய்து கொள்ள அலைபேசிகளை வைத்திருந்தார்கள். வேதனை நிறைந்த முகங்களுடன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாக உள்வாங்குவதன் அடையாளமாக, மெல்லிய தலையசைப்போடு, தங்களின் வேதனைகளை வெளிப்படுத்திய உரையாற்றுபவர்களின் உரை மீது அவர்களது கண்கள் நிலைத்திருந்தது; எதிர்காலத்தில் போராட்டங்களுக்கு அவர்கள் தந்த வழிகாட்டுதல் ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொண்டதை இடி போன்ற அவர்களின் கரவொலி அறிவித்தது.  

செப்டம்பர் 18' 2024 முதல் போராட்டக் குழு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தது. அந்த போராட்டத்தின் குறிக்கோள் மாருதி சுசுகி நிறுவனத்தால் தவறான முறையில் வேலைநீக்கம் செய்யப்பட்ட நிரந்தரமான தொழிலாளர்கள் மீண்டும் வேலையைப் பெறுவது அல்லது இழப்பீட்டைப் பெறுவது என்பதாக இருந்த போதிலும், குர்கானிலும் மனேசாரிலும் பணிபுரிந்து வரும் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகவும் தனது போராட்டத்தைத் தொடர்ந்தது. துண்டுப் பிரசுரங்கள், சிறு பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றின் மூலம் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அவர்கள் தங்களது ஒற்றுமையை உறுதிப்படுத்தினர். 2011 ஆம் ஆண்டிலிருந்து மாருதி சுசுகி ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது அதிகரித்ததிலிருந்து உருவான போராட்டங்களின் வரலாற்றுப் பகுதியாகும் இது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் போராட்டத்திற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் அந்நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பின் மாருதி சுசுகி நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை நீக்கியது. அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட காலம் வரை என்ற அடிப்படையில் வேலையில் அமர்த்துவது என்ற கொடூரமான முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மாருதி சுசுகி நிர்வாகம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் உள்ள ஒற்றுமையை ஒழிக்க, நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தை ரூ.1,30,000 -ஆக அதிகரித்தது. அதே சமயத்தில் பணி நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அதே வேலைக்காக நிரந்தரத் தொழிலாளர்களின் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ வழங்கியது. 

இந்த ஊதிய உயர்வு அந்த நிறுவனத்தின் லாபத்தில் இருந்து தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படவில்லை; மாறாக, 83 சதவிகித தொழிலாளர்களுக்கான நிரந்தர வேலையை மறுத்ததன் மூலம் கிடைத்ததாகும். இப்போது மாருதி சுசுகி நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 17 சதவிகிதம்தான், மீதமுள்ள நிரந்தரப்படுத்தப்படாத தொழிலாளர்கள், ரூபாய் 12.000-த்திலிருந்து அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் ஆவார்கள். 

அவர்களது ஊதியத்தில் உள்ள வேறுபாடுகள் தொழிலாளர்களை வெவ்வேறு வகையாகப் பிரித்தலின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது; பயிற்சி பெறுபவர்; 1, 2, 3 என்று வகைப்படுத்தப்பட்ட தற்காலிக ஊழியர்கள்; C1, C2 என்று வகைப்படுத்தப்பட்ட அன்றாடக் கூலிகள் மற்றும் பலவகைப்பட்ட திறன் படைத்தவர்கள் என்று பல பிரிவுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நிர்வாகம் நிரந்தர ஊழியர்களின் சங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது; அந்தச் சங்கம் நிரந்தரப்படுத்தப்படாத ஊழியர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. 

போராட்டக் குழு நிரந்தரமற்ற ஊழியர்களின் நிலைமை குறித்து ஆராய்ந்தது; அதன் அடிப்படையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நிரந்தரமற்ற ஊழியர்களாக பணிபுரிந்து கொண்டிருப்பதையும் அவர்கள் ஒரு போதும் நிரந்தரப்படுத்தப் படாததையும் கண்டறிந்தது.  

அந்தத் தொழிற்சாலைக்குள் பணிபுரியும் நிரந்தரமாக்கப்படாத ஊழியர்களின் சார்பாக முன்பே போராட்டக் குழு ஏராளமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் ஆணையருக்கு எழுதப்பட்ட கடிதம் போராட்டக் குழுவின் உறுப்பினரான சுரேந்திர கவுசிக் அவர்களால் தொழிலாளர் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.  

அதன்பின், 2012 ஆம் ஆண்டிலிருந்து மாருதி சுசுகி ஊழியர்களுக்காக வேலை செய்து வரும் தொழிற்சங்கத் தலைவர் ஆன அமித் சக்கரவர்த்தி நிரந்தரப்படுத்தப்படாத அனைத்து ஊழியர்களின் கோரிக்கைகளைக் கொண்டிருந்த ஒரு கடிதத்தை வாசித்தார். அவற்றில் ஒன்று, சோனிபாட்டில் ஹர்கோடாவில் துவங்கப்படும் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கு, அந்த நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் நிரந்தரமாக்கப்படாத 30,000 தொழிலாளர்களில் இருந்து புதிய தொழிலாளர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் மிக அடிப்படையான கோரிக்கை, சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்ற இயற்கை நீதியின் அடிப்படையிலும், தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையிலும் வைக்கப்பட்டதாகும். 

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏராளமான கிளைகளில் நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர்கள் இல்லை; அதே வேலைகளை நிர்ந்தரமாக்கப்படாத தொழிலாளர்கள் சில வார பயிற்சிகளுக்குப் பிறகு செய்து வருகின்றனர், அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்கள் ஒரு ஆண்டு காலத்திலும் பன்முகத் திறன் படைத்த உழைப்பாளர்கள் இரண்டு வருடகாலத்திலும் பணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஏழு மாதங்களுக்குப் பிறகு தற்காலிக ஊழியர்களும் (TW-1,2,3) வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கு பதிலாக அன்றாட தொழிலாளிகளின் மற்றொரு குழு அடுத்த ஏழு மாதங்களுக்கு பணியில் அமர்த்தப்படுகிறது.  

ராளமான தொழிலாளர்கள் மாருதி சுசுகி நிறுவனம் அவர்களது வாழ்விலிருந்து மகிழ்ச்சியை கொடூரமாக உறிஞ்சி விட்டதாகவும், நல்ல வேலை கிடைக்கும் என்ற அவர்களது நம்பிக்கையைச் சிதைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். 2017-ஆம் ஆண்டு தற்காலிகப் பணியாளர் 1 - பிரிவில் ஜார்கண்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி வேலையில் அமர்த்தப்பட்டார். ஏழு மாதங்கள் கழித்து அவர் பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். சில மாதங்கள் கழித்து அவர் மீண்டும் அழைக்கப்பட்டு இந்த முறை, தற்காலிகப் பணியாளர் 2 - பிரிவில் பணியில் அமர்த்தப்பட்டார். ஆனால், மீண்டும் 7 மாதங்கள் கழித்து பணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மூன்றாவது முறை, தற்காலிகப் பணியாளர் 3 - பிரிவில் பணியில் அமர்த்த அழைக்கப்பட்டார். அந்தத் தொழிலாளி தன்னை நிரந்தர ஊழியர் ஆக்கப்படலாம்; மிக கொடுமையான வறுமையில் மண்குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த தனது குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்தார். ஆனால் மீண்டும் அவரது நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டு இப்பொழுது வேலை இல்லாதவராக இருக்கிறார். 

மற்றொரு தொழிலாளி தனக்குத் திருமணம் ஆகி விட்டதாகவும், பணி நிரந்தரமாக்கப்படாத‌போது முன்பு மாருதி தொழிற்சாலையின் கதவுகளின் வெளியே நின்று கதறி அழுததாகக் கூறினார்; ஆனால் இப்போது அவர் நிரந்தரமான பணிக்கான தனது உரிமைக்காக உறுதியுடன் போராடத் தயாராக இருப்பதாக கூறுகிறார்.  

செப்டம்பர், 2024--இல் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவின் உறுப்பினரான குஷி ராம் என்பவர், அவர்களது குழு நிரந்தரமாக்கப்படாத தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவளிக்கும், ஆனால் அவர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்றும், அவர்கள் தங்களுக்காக 10, ஜனவரி 2025 அன்று தொழிலாளர் ஆணையரிடம் பேச வேண்டும் என்றும் கூறிய போது அதை ஆமோதிப்பதன் அடையாளமாக பெருத்த கரவொலி உண்டானது.  

இந்த பிரச்சனையில் அரசாங்கத்தின் நிலை என்ன 

ஒன்றிய அரசாங்கம் மற்றும் மோட்டார் வாகன தொழில் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்தியா தொழில் துறையில் வலிமை மிக்க சக்தியாக உருவாவதற்கான குறிக்கோளின் அடிப்படையில் வாகன தொழில் துறையின் மேம்பாட்டிற்கான திட்டம் - 2047-ஐ வரையறுத்துள்ளனர். 

மோட்டார் வாகன தொழில் துறையின் 2016--2026 -- இன் திட்டம், இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய வாகன தொழில்துறை ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அமைந்தது; இந்தத் திட்டம் 6.5 கோடி நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உருவாக்குவதாக உறுதி அளித்தது. ஆனால் இந்தத் திட்டம், இந்த வேலைகள் நிரந்தரமற்றவை என்பதையும் பெரும்பாலும் குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழேயே வழங்கும் என்பதையும் சொல்லாமல் மறைத்தது. இதில் மிக அபாயகரமான ஏமாற்று என்னவென்றால் ஒரு தொழிலாளி வேலையில் இருந்து தூக்கி எறியப்பட்டு - அதாவது தற்காலிகப் பணியாளர் 1 என்னும் பிரிவில் இருந்து 7 மாதங்கள் கழித்து நீக்கப்பட்டு, பிறகு 4 மாதங்கள் கழித்து தற்காலிகப் பணியாளர் 2 பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டு மீண்டும் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கடைசியாக தற்காலிகப் பணியாளர் 3 பணியில் மாற்றப்படுவார்; இது மூன்று வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக கணக்கில் கொள்ளப்படும். 

பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணி நிரந்தரமற்ற தொழிலாளர்களை 10.01.2025 வரை தங்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்களுக்கு அடிப்படையான தங்கும் இடத்தை மூங்கில்களால் அமைத்துக் கொடுத்தனர்; அவர்களோடு தங்களின் உணவைப் பகிர்ந்து கொண்டனர்; அதோடு தொழிற்சங்கத்தின் அடிப்படை அரசியலையும் கற்றுக் கொடுக்கின்றனர். அவர்கள் தங்களது போராட்டம் முற்றிலும் அமைதியாகவும், சட்டத்தைச் சிறிதும் மீறாததாகவும் நடைபெறுவதை தெளிவாக உறுதிப்படுத்தினர்.  

ஆனால் தேசங் கடந்து தொழில் நடத்தும் நிறுவனங்களை - தான் தொழில் புரியும் நாட்டின் சட்டங்களைச் சிறிதும் மதிக்காத, அந்நாட்டு மக்களைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்த நிறுவனங்களை யார் கட்டுப்படுத்துவது 

பணி நிரந்தரமற்ற இந்தத் தொழிலாளர்கள் சமூக மாற்றத்தை விரும்பும் புரட்சியாளர்கள் அல்ல--அவர்கள் கேட்பது எல்லாம் தங்களது குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய மதிக்கத்தக்க ஒரு வேலை மட்டுமே. அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்று உறுதியளித்த அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கும் நாளான 76 வது குடியரசு தினத்தை கொண்டாடும் ஒரு நாட்டில் இதை எதிர்பார்ப்பது மிக அதிகபட்சமானதா

 

ஆங்கில மூலம்: நந்திதா ஹக்சர்

தமிழில்: கவிதா

 நன்றி: Janata weekly

 

 

Comments

  1. Excellent hard work and struggles by the workers forming a new Union when the established union kept silent on the issue. The CPIM has edited the article and posted it on its web page. Doublespeak to the core. The full version is not given.
    https://cpim.org/maruti-suzuki-how-a-new-generation-of-young-workers-fight-on

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...