Skip to main content

சலுகைகளைக் காட்டி மக்களை ஏமாற்றும் முதலாளியக் கட்சிகள்!

 

நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ந்தேதி பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ‘இந்தியா’ கூட்டணியும் தம்முடைய தேர்தல் அறிக்கைகளில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளன.

‘இந்தியா’ கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓர் அரசாங்க வேலை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 உதவித் தொகை, அனைத்துப் பெண்களுக்கும் மாதம் தோறும் ரூ.2500 உதவித் தொகை, விதவைப் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் மாதம் தோறும் ரூ.1500 உதவித் தொகை, அனைவருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனப் பல சலுகைகளுக்கு உறுதி அளித்துள்ளது.

எதிர்க் கட்சிகள் தேர்தலின் போது மக்களுக்கு இலவச சலுகைகளை அறிவிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தைச் சூறையாடுகின்றன; அதனால் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்ட முடிவதில்லை என எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்து வரும் பாஜக நடைமுறையில் தனது போலித்தனத்தை அம்பலப்படுத்திக் கொள்கிறது. கர்நாடகாவிலும் மராட்டியத்திலும் நடந்த சட்ட சபைத் தேர்தல்களில் அதன் தலைமையில் இருந்த கூட்டணி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பல சலுகைகளை அறிவித்ததை நாம் அறிவோம்.

அதே போல பீகார் தேர்தலிலும் அதன் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பல சலுகைகளை அறிவித்துள்ளது. ஒரு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அது அறிவித்துள்ளது. பட்டியல் இன மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.2000 உதவித் தொகை, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.9000 உதவித் தொகை, மீனவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 9000 உதவித் தொகை, அனைவருக்கும் இலவசப் பொது விநியோகம் (Free Ration), அனைவருக்கும் 125 யூனிட் வரையிலும் இலவச மின்சாரம் எனப் பல சலுகைகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

மக்களுடைய வாக்குகளைப் பெற எத்தகைய பொய்யான வாக்குறுதிகளையும் அளிக்கத் தயாராக உள்ளன இந்தக் கட்சிகள். எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அளிக்கப்படும் வாக்குறுதிகள் இவை. ஆட்சிக்கு வந்ததும் அளிக்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும் இந்தக் கட்சிகள் நிறைவேற்றிவிடுவதில்லை.

தான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 இலட்சம் வரவு வைக்கப்படும் என்ற உலகமகாப் பொய்யைக் கூறி 2014 ல் பாஜக ஆட்சிக்கு வந்ததை நாம் அறிவோம். அந்த வாக்குறுதிக்கு நேர்ந்த கதியையும் நாம் அறிவோம்.

அதே போல், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்குவோம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் போன்ற உறுதிமொழிகளை அளித்து 2021ல் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்குவதற்குப் பதிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தூய்மைப் பணியாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றி வருகிறது தி.மு.க.வின் ஆட்சி. அதனுடைய ஐந்து ஆண்டு கால ஆட்சி முடியும் தறுவாயிலும் அரசு ஊழியர்களுக்கு இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வரவில்லை.

மேலும் இந்தக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு உதவித் தொகையாக வழங்கப் போகும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்திலிருந்து வருபவை. ஆனால் ஆளும் இந்த முதலாளியக் கட்சிகளோ ஏதோ மக்கள் மீது கருணை கொண்டு தங்கள் சொத்துக்களிலிருந்து இலவசமாக சலுகைகளை அளிப்பது போல நாடகமாடி வருகின்றன. மக்களின் வரிப் பணத்திலிருந்துதான் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்; அதை அவர்களுடைய உரிமைகளாகக் கருதுகின்றனர். ஆனால் மக்களுக்கு வழங்குபவற்றை மட்டும் சலுகைகள் எனக் கூறுகின்றனர்.

மக்களுக்குச் சேவை செய்பவர்களாகக் கூறிக் கொள்பவர்கள் மக்களின் எஜமானர்களாக இருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் இவர்கள் தங்களுடைய எஜமானர்களான முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மானியங்களாக வாரி வழங்குகின்றனர். ஆனால் அவற்றை வளர்ச்சிக்கான உதவிகள் என்கின்றனர். அதனால் வளர்ச்சி பெறுவது முதலாளிகள்தானே தவிர மக்கள் அல்ல. முதலாளிகளின் வளர்ச்சிதான் இவர்களுக்கு நாட்டின் வளர்ச்சியாக உள்ளது.

கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது இலஞ்சலாவண்யங்கள் மூலமும் கமிஷன்கள் மூலமும் சுருட்டிய பணத்தைத் தேர்தலின் போது வாக்குகளைப் பெற மக்களுக்குக் கொடுப்பது ஒரு வகை. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் வரிப் பணத்திலிருந்து சலுகைகளை அளித்துத் தங்கள் வாக்கு வங்கியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது இன்னொரு வகை. இந்தச் சலுகைகளை ஏழை மக்களுக்கு, வறுமையில் உள்ளவர்களுக்கு மட்டும் என்று அறிவிப்பதில்லை. அவ்வாறு அறிவித்தால் மற்றவர்களின் வாக்குகள் கிடைக்காது. அதனால்தான் வசதி உள்ளவர்கள், வசதி அற்றவர்கள் என்ற பாகுபாடின்றி பெண்கள் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகை, கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் எனச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.

மக்களும் இந்தச் சலுகைகளைத் தம் மீது இரக்கம் கொண்டு ஆட்சியாளர்கள் வழங்குவதாகக் கருதுகின்றனர். இவர்கள் அளிக்கும் சலுகைகள் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதில்லை. வறிய நிலையிலிருந்து மீள எப்பொழுதும் வழி வகுப்பதில்லை. எப்பொழுதும் மக்களை வறிய நிலையில் வைத்துக் கொண்டு அவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது போல நாடகமாடித் தங்களுடைய வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் அந்தக் கட்சிகளின் நோக்கம்.

மக்களுக்குத் தேவைப்படுவது சலுகைகள் அல்ல. அவர்களுக்குத் தேவை கட்டணமில்லாத் தரமான கல்வி, கட்டணமில்லா சிறந்த மருத்துவம், அனைவருக்கும் வேலை, வயதான காலத்தில் கண்ணியமான வாழ்க்கை நடத்தும் அளவிற்கான ஓய்வூதியம். இவை அனைத்தும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்குமான உரிமைகள். இவற்றிற்கு உறுதி அளிக்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் சில சில்லறைச் சலுகைகளை வழங்கித் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதன் மூலம் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

 

மு.வசந்தகுமார்

Comments

  1. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரங்களில் அறிவிக்கும் சலுகைகள் குறித்து மிகவும் தெளிவான ஆய்வை இந்த கட்டுரை முன்வைத்துள்ளது. மக்களுடைய உரிமைகளைப் பறித்தும், வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டியும் வருகின்ற முதலாளி வர்க்கக் கட்சிகள், சில 'சலுகைகளை' தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் அளிப்போம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை அவர்கள் நிறைவேற்றுவதும் கிடையாது. தோழர் சுட்டிக்காட்டியிருப்பது போல, பழைய ஓய்வூதியம், மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை போன்ற வாக்குறுதிகள் அப்பட்டமாக மறுக்கப்படுகின்றன, முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, உரிமை கோருகின்றவர்கள் அடாவடித் தனமாகத தாக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். நடைமுறைப்படுத்தும் சில சலுகைகளும், பெரும் முதலாளி வர்க்கத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலாபத்தை கொடுக்கக் கூடியவைகளாக உள்ளன.

    இன்னொரு பக்கம், முதலாளி வர்க்கத்திற்கு பின்புலமாக உள்ள நடுத்தட்டு மக்களிடம் இதே அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ஊதாரித்தனமான (உழைக்கும்) மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதால், மக்களுக்குத் தேவையான முக்கியமான திட்டங்களில் செலவழிக்க அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று பிற்போக்குத் தனமான பரப்புரை செய்து, மக்களைப் பிளவுபடுத்துகிறார்கள். அரசுக் கருவூலத்தைத் பெரு முதலாளிகளுக்கு திறந்து விட்டு சேவை செய்கின்ற முதலாளி வர்க்கக் கட்சிகள் உலக மகா யோக்கியர்கள் போலவும், உழைக்கும் மக்கள் இலவசங்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை நடத்தி வருவதாகவும் பிற்போக்கு சக்திகளும், முதலாளி வர்க்க ஊடகங்களும் பரப்புரை செய்து வருகின்றன.

    கட்டுரையில் தோழர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளதைப் போல, உழைக்கும் மக்கள் ஒரு நவீன கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான அனைத்தும் மறுக்க முடியாத உரிமைகளாக அவர்களுக்குக் கிடைக்கும் வகையில் இந்த சமுதாய அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது இன்றைய காலக் கட்டத்தின் தேவையாக இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...