Skip to main content

போரும் அமைதியும்!

 இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் உக்கிரம் பெற்றுள்ள  நிலையில், பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே  உணவு, தண்ணீர் கிடைக்காமல் பசி, பட்டினியோடு முற்றுகைக்குள் முடக்கியதும், மருத்துவமனைகளை குண்டுவீசி அழித்ததும், வகைதொகையில்லாமல் அப்பாவிப் பொதுமக்களை, குழந்தைகளை, பெண்களைக் கொன்றதும் பார்த்து உலகெங்கும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனக் குரல் சமீப காலத்தில் கோபாவேசமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. கண்மூடித்தனமான இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேலையும், அதனை ஆதரித்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவையும் எதிர்த்து, அந்தந்த நாட்டு அரசுகளை அச்சுறுத்தும் அளவிற்கு மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மனிதனை மனிதன் பகைக்கும் சிறு புள்ளியிலிருந்து விரிந்ததுதான் போர் எனும் எல்லையற்ற மோதலின் பெருவெளி. மனிதனை மனிதன் ஏன் பகைக்கவேண்டும்? காடுகளுக்குள் வாழ்ந்த விலங்குகள் தங்கள் பகுதிக்குள் வேற்று விலங்குகளை வரவிடாமல் விரட்டின. அவைகள் உணவுக்காக குறிப்பிட்ட தங்கள் பகுதியின் விளைச்சலையே சார்ந்திருந்தன. அவற்றை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதே காரணம். ஏனையவற்றுக்கு தங்கள் பகுதியின் பற்றாக்குறையே வேற்றிடப் பரவலுக்குக் காரணம். இந்த அடிப்படைதான்  காட்டில் வசித்த ஆதிமனிதனுக்கும் இடப்பெயர்வையும், மோதலையும் அவசியமாக்கியது. இதுதான்  நம் மூதாதையர் மோதலுக்கு மூலவிசையாயிருந்தது. இவைகள் போரோ, யுத்தமோ அல்ல; இருத்தலுக்கான மோதல்கள்.

போர் எதிர்ப்பு என்பதன் பொருள் என்ன? போரின் விளைவுகளுக்கு எதிராகப் போராடுவதா? போருக்கானக் காரணங்களை கண்டறிந்து அவற்றை அகற்றுவதா? என்பதே தற்போது நம்முன் உள்ளக் கேள்வி. எந்தப் போருக்கும் அடிப்படை ஆளும் வர்க்கம்தான். அதுதான் போர் வெறிகொண்டு பெரும் மோதலை உருவாக்குகிறது. எப்போதும் போரினால் பாதிப்புக்கு ஆளானவர்கள் மக்கள் என்பதால்  அவர்கள் எப்போதுமே போருக்கு எதிரானவர்களே. போரின் இறுதியில் நிலங்களை கையகப்படுத்துவதும், நாடு பிடிப்பதும், அடிமைகளை பெருக்கிக்கொள்வதும், சந்தைகளை விரிவாக்கிக்கொள்வதும், தோற்ற நாட்டின் அனைத்து வளங்களையும் வளைத்துக் கொள்வதும் ஆளும் வர்க்கங்களே. போரில் காயமடைவதும், கை, கால் இழப்பதும், வாழ்க்கை இழந்து  கடைசியில் மரணமடைவதும் இருதரப்பிலும் மக்களே. அதை தேசப்பற்று, தியாகம், வீரமரணம் என்று கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டுபோய் மக்களை மடைமாற்றி பலனடைவது ஆளும் வர்க்கம்தான். எனவே மக்களுக்கு எப்போதும்  போர்களில் ஏற்பேயில்லை; எதிர்ப்பே.

போர், போர் என முழங்கிய சாம்ராட் அசோகன் கலிங்கத்துப் போரின் முடிவில் ‘புத்தம் சரணம் கச்சாமி’ என மெளனித்துக் கொண்டான் என்பதுதானே வரலாறு. அரசர்களில் விதிவிலக்கானவன் அவன். ஆனால் அவன் தளபதிகளும், சிற்றரசர்களும், நிலக்கிழார்களும் போர்களைத் தொடராமல்  பேரரசை பலவீனப்படுத்துவதாக உள்ளுக்குள் கொந்தளித்துப் போயிருப்பார்கள். போரின் கொடுமைகள் வரலாற்றின் நெடுகிலும் மனிதனுக்குக் கொண்டுவந்து சேர்த்தக் கொடைதான் என்ன? கொடுமையான துயரங்களும், வேதனைகளும் தானே. பெண்களும், குழந்தைகளும் சூறையாடப்பட்டு கொல்லப்படும் துயரம் கொடுந்துயரம்தானே. இயக்கங் குறைந்த முதியவர்கள், ஏலாதவர்களின் கொடூரச் சாவுக்குக் காரணமாய் நிற்பவை போர்கள்தானே.

போருக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு முன்னால், கடந்தகால வரலாற்றில், போரின் விளைவுகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தங்கள் கிளர்ச்சியின் மூலம் போருக்கு முடிவு கட்டியிருக்கிறார்களா? அப்படியொன்றும் பெரிதாக இல்லையென்றாலும் விதிவிலக்காக, வியட்நாம் மீதான அமெரிக்கப் போரைச் சொல்லலாம். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக, அதிகாரவர்க்கக் கூலிப்படையாக  நின்று போர் நடத்திய அமெரிக்க அரசை, அமெரிக்க மக்கள் வீதிகளில் திரண்டு பின்வாங்க வைத்தார்கள். போரை விரிவாக்க நினைத்த அரசுக்கு, இன்னும் அதிகமான ராணுவ வீரர்கள் தேவைப்பட்டார்கள். கட்டாய ராணுவ சேவைக்கு வந்து இணையுமாறு அரசு உத்தரவு பிறப்பிக்க, அதன் எதிர்வினையாக இளைஞர்கள் போர் எதிர்ப்பு இயக்கங்களைத் தொடங்கினார்கள். அப்படியான ஒன்றுதான்  ஹிப்பி  இயக்கம். அரசு பிறப்பித்த வாரண்டை கிழித்தெறிந்த அந்த இயக்கத்தவர்கள், அரசின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உள்நாட்டிலிருந்து வெளியேறி வேற்றுநாடுகளுக்கும் சென்று நாடோடிகளாய்த் திரிந்தார்கள். போர் எதிர்ப்பில் வலுவாக இருந்த அவர்களை தேசத்துரோகிகள், போருக்குத் துணிவில்லாத கோழைகள் என்று ஆளும் வர்க்கத்தின் முகவர்களாகிய    அரசியல் தலைவர்களும், அவர்களின் ஊதுகுழலான  ஊடகங்களும் கேவலப்படுத்தியதையும் தாண்டி, அவர்களுக்கான மக்கள் ஆதரவைப் பார்த்து அதிர்ந்து போனது அரசு. 

அமெரிக்காவின் ஓகியோ மாநில கெண்ட் பல்கலைக்கழகத்தில் 4-7-1970 ல் அமைதியாக நடந்த வியட்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நான்கு மாணவர்களை தேசியக் காவல் படையினர் சுட்டுக்கொன்றார்கள். இது இன்றுவரை “கெண்ட் அரசக் கொலை” என்றே அறியப்படுகிறது. இது நடந்து பத்து நாட்கள் கழித்து மிசிசிபியில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  மாநிலப் பல்கலைகழக மாணவர்கள் இரண்டு பேர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  வரலாற்றில் எப்போதும்  இல்லாத அளவுக்கு 1966க்கும் 1973க்கும் இடையில் ஐந்து லட்சம்(5.03 லட்சம்) அமெரிக்கத் துருப்புக்கள் போர் எதிர்ப்பைக் காரணமாக்கி இராணுவத்தைவிட்டு வெளியேறினர். அதே அளவிலான மக்கள்  கட்டாய ராணுவ சேவையை எதிர்த்து, அரசின் கெடுபிடிக்கு அஞ்சி, சொந்த ஊரைத் துறந்து வெளியேறினார்கள். போர் எதிர்ப்பில் இவர்களும் சேர்ந்து கொள்ளவே  இப்போது போருக்கு எதிரான மக்களின் மனநிலை உச்சம்பெற்று, அமெரிக்க மக்கள்தொகையில் மூன்றில் இரண்டுப் பங்கினர் அரசுக்கு எதிராகத் திரண்டனர். மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, 1972-ல் கட்டாய ராணுவ சேவை ஆணையை திரும்பப் பெற்று, தன்னார்வ ராணுவ சேவை முறையை கொண்டுவந்தார் அதிபர் நிக்சன். மக்கள் நிர்ப்பந்தம் காரணமாகவே வியட்நாம் போரையும்  அமெரிக்க அரசு கடும் விளைவுகளுக்குப் பிறகு  முடித்துக்கொண்டது. விளைவுகளுக்கு எதிரானப் போராட்டம் முதன்முறையாக வரலாற்றில்  வென்றது இதுதான்-ஆனால்  கடும் சேதத்திற்குப் பிறகு, போர் எதிர்ப்பு அமைப்பாகத் தொடங்கிய ஹிப்பி இயக்கம், பிறகு உலகம் முழுவதும் பரவிய நிலையில் கட்டற்ற சுதந்திரத்தைக் கோரும் அமைப்பாக மாறிப்போனது வேறு கதை.

இப்போது போருக்கான காரணங்களைப் பார்க்கலாம். ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமைகள் உற்பத்திக் கருவிகள் போலப் பயன்படுத்தப்பட்டதால் போரில் அடிமைகள் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அந்த குறுகிய வட்டத்திற்குள்தான் போரும் போருக்கான காரணங்களும் நிலவின. நிலவுடைமை சமூகத்தில்தான் போர்கள் முழுமையாக  உருப்பெற்றன. தனியுடைமைதான் சொத்துடைமையைப் பெருக்குவதற்கான கருவியாகப் பெரும் போர்களைத் தோற்றுவித்தது. நாடுகளைக் கைப்பற்றுவதன் மூலம் நிலப்பறிப்புச் செய்தன. நிலவுடைமை சமூகத்தில் நிலங்களும், அடிமைகளும் உற்பத்தி சக்திகள் என்ற வகையில் அவற்றை கைப்பற்றிக்கொள்ள போர்கள்  நிலவுடைமையின் ஆளும்வர்க்கத்துக்கு, அவசியமாயிருந்தது. சொந்த மக்களிடமிருந்து கட்டாய உழைப்பையும், விவசாயிகளிடமிருந்து விளைச்சலில் பங்கும், வியாபாரிகளிடமிருந்து சந்தை வரி, நிலவுடைமை வளர்ந்த வணிகக் கட்டத்தில் விற்பனை வரியும் நிலவுடைமையின் வருவாயாக இருந்தது. அன்றைக்கு ஆளும் வர்க்கமாயிருந்த சிற்றரசர்களுக்கும், விவசாயப் பண்ணைகளுக்கும் இவர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்த அரசர்களுக்கும் தங்களின் மென்மேலுமான வளர்ச்சி, நிலப்பறிப்பு, சொத்துடைமைப் பெருக்கம் இவற்றுக்காக அக்கம்பக்கத்து அரசர்களோடு போர் செய்து அவர்களின் நாடுகளையும் கைப்பற்றிக்கொள்வது அவசியமானதாகக் கருதினர். இந்தப் பேராசை உருப் பெற்றபோது பேரரசுகள் (சாம்ராஜ்ஜியங்கள்) எழுந்தன. நிலவுடைமையின் தொடக்கத்தில் அரசனுக்குக் கட்டுப்படாத குழுக்களாகப் பெருங்கொள்ளையர்களும் இருந்தார்கள். பின்னர் அவர்கள் ஒடுக்கப்பட்டு முறைபடுத்தப்பட்ட கொள்ளைகளின் தலைமையாக அரசன் தன்னை நிறுவிக் கொண்டான். 

அடுத்து வந்த வணிகக் கட்டத்தில் கடற்பயணங்களும், புதிய நில கண்டுபிடிப்புக்களும் வளர்ந்தன. அது புதிய கண்டிபிடித்தலும், கண்டுபிடித்த நாடுகளை தத்தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுமான காலனிய காலகட்டம். வணிகத்தின் வழியாக மேலாண்மை பெற்று நாடு பிடிக்கும் போர்கள் நடைபெற்றன. அப்போது வணிக வர்க்கம் முக்கியத்துவமான வர்க்கமாக உயர்ந்தது. இதனால் கடற் பயணத்தில் ஈடுபட்டு புதிய தேசங்களையும், சந்தைகளையும் நிறுவிக்கொள்ள ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், போர்த்துக்கல், ஹாலந்து(டச்சு), ஸ்பெயின், டென்மார்க்(டேனிஷ்) இவற்றுக்குள் சந்தைபிடிக்கும் போட்டிகள் போர்களாக விரிந்தன. ஐரோப்பாவிலும், காலனிய தூர தேசங்களிலும் இந்தப் போர்கள் நடைபெற்றன. இதில் பிரிட்டனில், முடியாட்சியை அலங்காரப் பதவியாக்கிவிட்டு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி என்ற பெயரில் முதலாளிகளே அதிகாரத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மற்ற ஐரோப்பிய நாடுகளில் முடியாட்சி நிலவியது. இது முற்றிலும் வணிக மேலாதிக்கத்துக்கானப் போர் என்பதும், முதலாளிய  வர்க்கமே பிரிட்டனில் ஆளும் வர்க்கமாக இருந்ததனாலும் பிரிட்டனுக்கு கூடுதல் வாய்ப்பாக அமைந்தது. 

இதனால் காலனியப் போர்களில் பிரிட்டன் முன்னிலை பெற்று மற்ற முடியாட்சி நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியது. அந்த நாட்டின் வணிக வர்க்கம் தன் சொந்த நலன்களுக்காக போர் நடத்தி உலகின் பெரும்பகுதியை ஒட்டச்சுரண்டியது. அது ”சூரியன் மறையாதப் பேரரசாக” மாறியது இப்படித்தான். இந்த காலகட்டத்தில் பிரிட்டன் உலகம் முழுவதுமிருந்த தன் காலனி நாடுகளிலிருந்த தாது வளங்களை, கச்சாப் பொருட்களை கொள்ளை கொண்டுபோய் முழுமையான பொருட்களாக்கி சந்தைபடுத்துவதிலும் தலைமை பெற்றது. பிரிட்டன் நடத்தியப் போர்களும் அதன் பேரழிவுகளும் கொஞ்சநஞ்சமல்ல. அடிமைகொண்ட மக்களின் ரத்தத்தை ஆறாகப் பெருக்கடுத்து ஓடச் செய்தது. பிரிட்டன் மட்டுமல்ல எல்லாக் காலனியாதிக்க நாடுகளும் அடிமைகளைக் கையாள்வதிலும், போரில் அவர்களை வதைப்பதிலும் தங்களுக்குள் போட்டியிட்டன என்றே சொல்லலாம். 

முதலாளியக் கட்டத்தில் சந்தைக்கானப் மறுபங்கீட்டிற்கான போர்கள் பிரதானமாகிப் பெரும் வேகமெடுத்தன. இதன் காரணமாக “அனைத்துப் போர்களையும் முடிவுகட்ட வந்த இறுதிப் போர்”என்று வர்ணிக்கப்பட்ட  முதல் உலகப் போர் தொடங்கியது. ஆஸ்திரிய இளவரசரின் கொலை உடனடிக் காரணமாகச் சொல்லப்பட்டாலும் உண்மைக் காரணம் வேறு. ஐரோப்பாவில் பிரிட்டனுக்கு அடுத்துத் தொழிற்புரட்சியில் முன்னேறிய ஜெர்மனுக்கு சந்தைகள் இல்லை; இனிப் புதிதாகக்   கண்டுபிடிக்க இந்தப் புவிப் பரப்பில் இடமுமில்லை. இருக்கிற சந்தையைப் பறித்தால்தான்  உண்டு என்ற நிலையில்  ஜெர்மனி முதல் உலகப் போருக்கு வித்திட்டது தான் உண்மைக்காரணம். பழைய காலனியாதிக்க நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்டவையும், ரஷ்யாவும் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளெனவும், ஜெர்மன், ஆஸ்திரியா - ஹங்கேரி பேரரசு, துருக்கி (ஒட்டமன் பேரரசு) மைய நாடுகளெனவும் இரு தரப்பாகி மோதிக்கொண்டன. ஆளும் வர்க்கங்களின் சந்தைக்கான போரில், போருக்கு சம்பந்தமில்லாத காலனி ஆதிக்கத்தில் இருத்தப்பட்டிருந்த நாடுகளின் மக்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். போரின் முடிவில் பழைய சக்திகளே வென்றன. போரில் 90 லட்சம் ராணுவ வீரர்களும், 50 லட்சம் பொதுமக்களும்  உயிரிழந்தனர். 2.3 கோடி பேர் காயம் பட்டு ஊனமாயினர். போர்ச்சூழலில் பரவிய இன்புளூயன்சா நோய்க்கு பல லட்சம் பேர் பலியானார்கள். சந்தைக்காக பழைய காலனியாதிக்க நாடுகள் தன் காலனிகளை இழக்க சம்மதிக்காமல் போரின் ஒரு தரப்பாகவும், அவற்றைத் தன் வணிகத்திற்காக, உற்பத்திக்காக  பறித்தெடுக்கவுமான மற்றொரு தரப்பாகவும் இருதரப்பின் ஆளும் வர்க்கங்களும்    ரத்தவேட்டைக்கான களத்தை முதல் உலகப் போராக அமைத்துக்கொண்டன. அவற்றின் பேராசைக்கான நர பலிகள்தான் இத்தனையும்.

அதன் பிறகு வந்த இரண்டாம் உலகப் போரில், முதல் உலகப் போரில் தோல்வியின் காரணமாக கடும் இழப்புக்கு ஆளாகியிருந்த ஜெர்மனி தன் பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு மீண்டும் ஒரு சந்தை பிடிக்கும், காலனி கைப்பற்றுதலுக்கான, சந்தை மறுபங்கீட்டிற்கான போரை முன்னெடுத்தது.  பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஒரு பக்கமும்,ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான்,இன்னொரு புறமும் நின்று போர் செய்தன. இப்போதும் இரு தரப்பினரின் அரசுகள்  அதனதன் ஆளும் வர்க்கங்களை, அவற்றின் உடைமையை பெருக்கிக்கொள்ளும் தீராத வெறியை பிரதிநிதித்துவப்படுத்தின. உயிர் இழப்புகளை, ஊனங்களை ஏற்படுத்தி, மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும்  போர்களில் இறங்கினர். சோவியத் ரசியா மீது பாசிசக் ஹிட்லர் தனது தாக்குதலைத் தொடுத்தபோது வேறு வழியில்லாமல், சோவியத் ரசியாவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த யுத்தத்தில் இறங்க வேண்டியதாகி விட்டது; ஜெர்மனிக்கு எதிரான தரப்பில் அது களம் இறங்கியது. இந்த இரண்டாம் உலகப்போரில் 2 கோடி ராணுவ வீரர்களும், 4 கோடி மக்கள் நேரடியாகவும், 1.5 கோடி மக்கள் நோய், பசி, பட்டினியாலும் ஆக 7.5 கோடி பேர் உயிரிழந்தார்கள்.போருக்கு நேரடி சம்பந்தமில்லாமல், பிரிட்டனுக்காகப் போரிட்ட இந்திய ராணுவ வீரர்கள் 87,000 பேர் கொல்லப்பட்டனர். போர் நடைபெற்ற காலத்தில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சமும், போர்க்காலக் காலனியாட்சி அந்த  அவலத்தைத் தீர்க்காமல் விட்டதும்- அப்போது உணவு இறக்குமதியை மறுத்ததுமான  பிரிட்டனின் செயலால் இந்தியாவில் பொதுமக்கள்  மூன்று லட்சம் பேரும் உயிரிழந்தனர்.

இன்றைய இஸ்ரேல் போரும் அப்படித்தான். இரண்டாம் உலகப் போரின் முடிவில்  காலனியாதிக்க நாடுகள் பலவீனமான பின்பு காலனிய நாடுகளுக்கு  உலகம் முழுக்க அரசியல் சுதந்திரம் அளிப்பது என்றும் வளர்ந்த நாடுகள் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நாடுகளின் சந்தை, மலிவான மனித உழைப்பு இவற்றைப் பகிர்ந்து கொள்வதெனவும் முடிவானது. இதன் காரணமாக, பின்தங்கிய நாடுகளில் பழைய காலனியாதிக்கம் முடிவுக்கு வந்து அங்கே  முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்திற்கு வந்தது. போரில் புதிய சக்தியாக எழுந்த அமெரிக்காவும் காலனியாதிக்க நாடுகளோடு போட்டியிட்டு தனக்கான சந்தையைப் பிடித்துக்கொண்டது. பிரிட்டனுக்கு இந்தியா போன்ற காலனிய நாடுகளை இழப்பது பெரிய விஷயமில்லை என்றாலும் எண்ணெய் வள நாடுகளை அப்படியிழப்பதில் சம்மதமில்லை. அவை  தங்கள் கைகளை விட்டுப் போனால் கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யா மேலாதிக்கத்துக்கு வருமோ என்ற அச்சம் மட்டுமல்ல எண்ணெய் வள நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்காகவும்  இஸ்ரேலை தங்கள் அடியாளாக அங்கே இருத்தினார்கள். எப்போதோ நடந்ததாகச் சொல்லப்படுகிற புராண நம்பிக்கையின்(பைபிள் கதைகள்) அடிப்படையில்  பிரிட்டன் -அமெரிக்காவால் மத்தியக் கிழக்கில் அரபு நாடுகளின் மத்தியில்  பாலஸ்தீனத்தில் நிர்மாணிக்கப்பட்டது  இஸ்ரேல். அதிலிருந்தே அரேபிய நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல் நிலைதான். அது மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்த யூதர்களை தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி சிறிய பகுதியான இஸ்ரேலில் குவிய ஆரம்பித்தார்கள். ஆக்கிரமித்த இடத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை இன்னமும் ஆக்கிரமிப்பைத் தொடரவும் பாலஸ்தீனத்தை இல்லாமல் ஆக்குவதற்குமான போரையும் இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

முதலாளிய வர்க்கம் தான், தன் இலாபத்தையும் மூலதனத்தையும்  பெருக்கிக் கொள்வதற்காக, மக்களை அடிமைத்தளையில் இருத்தி, அவர்களின் கடும் உழைப்பைச் சுரண்டி வாழ்க்கையை நிர்க்கதியாக்கி, அவர்களைப் பிரித்தாண்டு  வெவ்வேறு வகையான பூசல்களுக்கும், முடிவில்லாப் போர்களுக்கும் இட்டுச் சென்று கொண்டேயிருக்கிறது. உலகிலிருந்து முதலாளிய வர்க்க ஆதிக்கத்தை அப்புறப்படுத்துவதுதான் போருக்கான காரணத்தை களைந்தெறியும் ஒற்றை வழிமுறை. அப்போது  முதலாளிய  வர்க்கத்திற்கு உருவத்தை வழங்கிடும் தேசியம், தேசிய இனம் என்ற எல்லைப் பாகுபாடுகள் இற்றுப்போய்  சம உரிமைகளோடான சர்வதேசியம் உயிர்பெறும். அதை முதலாளியத்தை அப்புறப்படுத்திவிட்டு சோசலிசத்தைக் கொண்டு வரும் பொதுவுடைமைப் புரட்சியின் வழியாகத்தான் சாத்தியப்படுத்தமுடியும். போரற்ற உலகை அடைவதற்கான  இறுதிப் போர் என்பது  புரட்சிதான்; அதுதான் போரின் விளைவுக்கல்ல, போரின் காரணங்களுக்கு எதிரான போராட்டமாக அமைந்து, மனிதகுலம்  விரும்புகிற நிலையான  அமைதியைக் கொண்டுவரும்.

                                                                            - பாவெல் சூரியன்


Comments

  1. பல 10 ஆண்டுகளாக இருளும் பிரச்சினை. Say No to War.

    Ler UN send the Secrity council to இஸ்ரேல்.
    அமைகாவின் veto அதிகாரம் எனும் நச்சு பாக் பிடுங்க பட வேண்டும்.

    நன்று

    ReplyDelete
  2. ஏகாதிபத்தியப் போர்களின் வரலாற்றுப் பின்னணியை இக் கட்டுரை சுருக்கமாக எடுத்துரைக்கிறது. காலனிய சூழ்நிலையில் காலனியாதிக்க நாடுகள் நடத்திய நாடுகளைப் பிடிக்கும் போரில் துவங்கி தற்போதைய இஸ்ரேல் போர் வரை போர்களின் மைய நோக்கம், அந்தந்த ஆளும் வர்க்கத்திற்கு வளங்களைக் கொள்ளையிடிப்பதும், சந்தையை விரிவுபடுத்துவதுமே நோக்கம் என்பதையும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

    வியட்நாமில் அமெரிக்கா தோற்று வியட்நாமை விட்டு ஒட வேண்டியதற்கு முக்கிய காரணம் வியட்நாம் மக்களுடைய வீரஞ்செறிந்த போரும், அந்தப் போருக்கு அங்கிருந்த கம்யூனிஸ்டு கட்சி தலைமை அளித்ததுமே மிக முக்கிய காரணமாகும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் வியட்நாம் போருக்கு எதிராகவும், வியட்நாமிய மக்களுக்கு ஆதரவாகத் திரண்டெழுந்தது அமெரிக்காவின் முகத் திரையைக் கிழித்தெறியவும், போரை முடிவுக்குக் கொண்டு வரவும் உதவி செய்ததை நாம் மறக்க முடியாது.

    "உலகிலிருந்து முதலாளி வர்க்க ஆதிக்கத்தை அப்புறப்படுத்துவதுதான் போருக்கான காரணத்தை களைந்தெறியும் ஒற்றை வழிமுறை.....
    . .......அதை முதலாளியத்தை அப்புறப்படுத்திவிட்டு சோசலிசத்தைக் கொண்டு வரும் பொதுவுடைமைப் புரட்சியின் வழியாகத்தான் சாத்தியப்படுத்தமுடியும். போரற்ற உலகை அடைவதற்கான இறுதிப் போர் என்பது புரட்சிதான்" என்று தோழர் மிகவும் தெள்ளத் தெளிவாக தொகுத்துக் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.

    பாட்டாளி வர்க்கப் புரட்சியும், உலகெங்கிலும் சோசலிசத்தை நிலை நாட்டுவது மட்டுமே, வர்க்கப்பகைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, போர்களுக்கும் முடிவு கட்டும் என்பது உண்மை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...