1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் தொடங்கிய கட்சிகளின் மாநாடு (COP -- The Conference of Parties) பருவநிலை மாற்றங்கள், அவற்றால் உலக அளவில் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த பருவநிலை மாற்றம் மீதான ஐ.நா.வின் கட்டமைப்பு மாநாடு (UN Framework Convention on Climate Change (UNFCCC) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. பல்வேறு விவாதங்களின் விளைவாக 1997-ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டோவில் நடைபெற்ற COP 3-வது மாநாடு முதன் முறையாக முதலாளிய நாடுகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பசுமைக் குடில் வாயுக்களை 2008--2012 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய அளவை சட்டபூர்வமாகக் குறித்தது.
2015 பாரிசில் நடந்த COP21 மாநாடு பூமியின் அதிகரிக்கும் வெப்ப அளவை 2 சென்டிகிரேடு குறைப்பதை அதிகபட்ச அளவாகவும் 1.5 சென்டிகிரேடை குறைந்தபட்ச அளவாகவும் நிர்ணயித்தது; மேலும் இதற்காக ஒவ்வொரு நாடும் தீர்மானமான அளவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா, கரீபியன், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகள் என ஏறத்தாழ 200 நாடுகள் இணைந்து ஒவ்வொரு நாட்டின் தலைமையில் இந்த மாநாடு
நடந்து கொண்டிருக்கிறது. COP 30 மாநாடு அண்மையில் நவம்பர் 10 முதல் 21 வரை பிரேசிலின்
பெலேமில் நடைபெற்றது.
இந்த மாநாடு வரலாற்றில் முதல் முறையாக இந்த பிரச்சினையின் அடிப்படை காரணமான காடு அழித்தலால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள, நாம் வாழும் பூமியின் நுரையீரலான அமேசான் காட்டின் வாசலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைவதால் உண்டாகும் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் செயல்பாட்டாளர்கள், சர்வதேச அரசியல் அதிகாரிகள், மற்றும் சர்வதேச புதைபடிவ எரிபொருள் தரகர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் நாம் வாழும் பூமியை பாதுகாப்பது குறித்து விவாதித்தார்கள்.
2035---ஆம் ஆண்டுக்குள் உலகின் பணக்கார நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு 30000 கோடி அமெரிக்க டாலர்கள் தருவதாக அசர் பைஜானில் நடந்த COP29 மாநாட்டில் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் பிறகு அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கின.
புவி வெப்பத்தை அதிகரிக்கும் பசுமைக்குடில்
வாயுக்கள் பணக்கார நாடுகளின் தொழிற்சாலைகளில் இருந்தே பெருமளவில் வெளியேறுகின்றன. அந்த
முதலாளிகளின் கால்வருடியான அரசாங்கங்கள் அவர்களுக்கு எதிராக விரலைக் கூட அசைக்காது.
அவர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் செயல்படும். அதனால் வழக்கம் போல பணக்கார நாடுகள்
பின் வாங்குகின்றன.
இந்தப் பின்வாங்கல் அதிர்ச்சி அளிக்கவில்லை.
மேலும் உலகின் பணக்கார நாடுகள் தங்களது நாடுகளில் வெளியேறும் பசுமை குடில் வாயுக்களின் அளவைக் குறைப்பது மற்றும் பருவநிலை மாற்றத்தை சீர்படுத்துவதற்காக 2035--ஆம் ஆண்டுக்குள் 1.3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்களை பொருளாதாரப் பங்களிப்பதாக ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்தும் பின்வாங்கியுள்ளன.
பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் உலக நாடுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது; மேலும் பெலெமில் நடந்த COP30 மாநாட்டிற்கு தனது நாட்டில் இருந்து ஒரு பிரதிநிதியைக் கூட அனுப்பவில்லை. இந்த மாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் பங்கு கொண்டிருந்த போதும் அந்த நாடுகளில் ஆதிக்கம் பெற்றுள்ள பிற்போக்கு வலதுசாரிகளின் அரசாங்கங்கள் தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குகின்றன.
நவம்பர் மாதம் 15-ந் தேதி மாநாடு நடைபெற்று
வந்த பெலேமின் வீதிகளில் சுமார் 70,000 மக்கள் சுற்றுச் சூழல் அழிப்புக்கு எதிராகவும்
ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மாநாடு நடைபெற்று
வந்த நாட்களில் தொடர்ந்து பழங்குடி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள், விவசாயிகள்,
தொழிலாளிகள் எனப் பல்வேறு அமைப்பினரும் கனிம வளங்களுக்காகவும் எண்ணெய்க்காகவும் நிலக்கரிக்காகவும்
வனங்களையும் இயற்கை வளங்களையும் சுற்றுச் சூழலையும் முதலாளிகள் அழித்து வருவதைக் கண்டித்து
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
எதிர்பார்த்தது போலவே COP30 மாநாடு வெறும் வேண்டுகோள்களுடன் முடிவுற்றது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இயற்கையை அழிவிலிருந்து மீட்கவும் புவி வெப்பமடைதலைத் தடுக்கவும் வனங்களை அழிக்கக் கூடாது என்றும், புதிய வனங்களை உருவாக்க வேண்டும் என்றும், புதைபடிவ எரிபொருள்களான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் மாநாடு நிறைவுற்றது. ஆனால் பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரி பொருட்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எண்ணெய்க் கிணறுகளின் முதலாளிகள் மற்றும் அவர்களுடைய ஏஜண்டுகளில் நிதி ஆதரவால் நடைபெறும் இது போன்ற மாநாடுகளிலிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் முக்கியமானவை தான் என்றாலும் கூட இன்று வலதுசாரிகளின் வலிமை பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், காசாவில் இனப்படுகொலை, உக்ரைன் -- ரஷ்ய போர் மற்றும் கியூபாவின் மீதான மேற்கு உலக நாடுகளின் வெறித்தனமான பொருளாதாரத் தடை என்று மக்கள் துன்பங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ---பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக அதிஅவசர நடவடிக்கைகள் இத்தகைய சூழ்நிலையில் தேவையா? மேலும் இது உலகளாவிய அரசியல் தீர்வுகளுக்கும் அவசியமானது என்றாலும் உடனடி நடவடிக்கை தேவையா? எனக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
தொழில்மயமாதலுக்குப்பின் இந்த உலகத்தை முதலாளித்துவம் கழுத்தை நெருக்கி மூச்சுத் திணற வைக்கிறது; பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை நியாயமானதா நியாயம் அற்றதா என்று வேறுபடுத்துவதில்லை; தனது இலாபத்திற்கான ஆதாரங்களை ஒன்றுக்கு பின் ஒன்று என்று வரிசைப்படுத்துவதில்லை; அது தனது கோரக் கரங்களை எல்லாவற்றின் மீதும் எல்லா இடங்களிலும் வைக்கிறது.
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் 'மூலதனம்’ மற்றும் ‘இயற்கையின் இயங்கியல்,
' ஆகிய படைப்புகளில் இலாபம் ஒன்றே குறிக்கோளாய் வெறியுடன்
செயல்படும் முதலாளித்துவம் மனிதர்களைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கையையும் அதன்
வளங்களையும் சூறையாடும் என்கிறார்கள்.
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முதலாளியத்திற்கு எதிரான போராட்டம் கம்யூனிஸ்டுகளின் அனைத்துப் போராட்டங்களிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே, கம்யூனிஸ்டுகள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த வலிமையான, ஆழமான அறிவுடன் முதலாளியத்திற்கு எதிரான தங்களது ஆவேசமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
முதலாளித்துவம் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும், காடுகளில் வாழும் அரிய உயிரினங்களையும் தாவரங்களையும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உற்பத்திக்காக அழிக்கிறது; இதன் விளைவே பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் சிதைவும். முதலாளித்துவமே புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும்போது அது எவ்வாறு காடுகளையும் இயற்கை வளத்தையும் காப்பதற்கான, புவி வெப்பமடைவதைத் தடுக்கும் திட்டத்தில் பங்களிக்க முடியும்? மேலும், இன்றைய சூழ்நிலையில் இத்தகைய உற்பத்தி அதிக செலவையும் மாறாக குறைந்த இலாபத்தையும் கொண்டுள்ளது; இந்தச் சிக்கலான நிலைமையை சமாளிக்கவே, அமெரிக்காவும் பிற மேற்குலக நாடுகளும் 2015--ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்குகின்றன; மேலும் தாங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட தெற்குலக நாடுகளுக்கு உதவுவதற்காக அறிவித்த நிதியில் ஒரு சிறிய பங்கைக் கூட வழங்கவில்லை.
பிரிட்டனின் தொழிலாளர் கட்சி அரசாங்கம் மின்சார உற்பத்திக்கான புதை படிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்த போதும் இன்னும் வட கடலில் தொடர்ந்து எண்ணெய் மற்றும் வாயு உற்பத்திக்கான அனுமதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது; மேலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மரத் துகள்களை எரித்து மின் உற்பத்தி செய்யும் வடக்கு யார்க் ஷயரில் உள்ள டிராக்ஸ் மின் நிலையத்திற்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை வழங்குகிறது.
உலக முதலாளித்துவத்தின் இத்தகைய போக்கால்
நாம் இன்று ஆஸ்திரேலியாவிலும் கலிபோர்னியாவிலும் இன்னும் ஏராளமான நாடுகளிலும் காட்டுத்
தீ, வெள்ளம், வறட்சி, பஞ்சம், உணவு உற்பத்தியில் பாதிப்பு ஆகியவற்றால் மக்கள் விவசாயத்தில் இருந்து விலகி தொழிற்சாலைகள்
நிறைந்த நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
மீண்டும் சரி செய்ய முடியாத பாதிப்புகளை உலகத்திற்கு ஏற்படுத்தும் பவளப் பாறைகளின் அழிவு, நிலம் சார்ந்த உயிரினங்களின் அழிவு, மழைக்காடுகளின் அழிவு, மற்றும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள்
உடைந்து சிதைவதையும்,
மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் கார்பனை
தன்னுள் நிறைத்திருக்கும் நிலத்தடி உறை பனி உருகுவதையும், கடல் நீரோட்டங்கள் சிதைவதையும் நம் வாழ்நாளில்
நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மழையே அறியாத நாடுகளில் பெரு மழையையும், வறட்சியை அறியாத பகுதிகளில் கொடுமையான
வறட்சியையும் பார்க்கிறோம்.
இது உலகின் எங்கோ ஒரு பகுதியில் மட்டும் நடப்பதில்லை; நமது நாட்டிலும் பயிர் விளைச்சலை பாதிக்கும் அளவுக்கு அதிகமான மழையையும், வறட்சியையும், புதர்க்காடுகளில் மீண்டும் மீண்டும் பற்றி எரியும் தீயையும், கார்பன் டை ஆக்சைடை அதிக அளவில் உருவாக்கும் அடுக்குமாடிகள் நிறைந்த நகரங்களையும், பெருக்கெடுத்து ஓடும் நாசகரமான வெள்ளத்தையும் பார்க்கிறோம். நமது நாட்டின் தலைநகர் டில்லியிலும் இன்னும் பல பெரிய நகரங்களிலும் மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு அடைந்துள்ளதையும் பார்க்கிறோம். இவை அனைத்திற்கும் காரணம் முதலாளித்துவம் தனது இலாப வெறிக்காக இயற்கையைக் கண்மூடித்தனமாக அழித்து வருவதுதான்.
உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு இயற்கையையும்
சூழலியலையும் அழித்து வரும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட அறைகூவல் விடுத்து
ஃபிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், பெல்ஜியத்தின் உழைப்பாளர் கட்சியும்
ஒன்றிணைந்து COP30
மாநாட்டுக்கு ஓர் அறிக்கை அளித்துள்ளனர்.
பிற நாட்டு கம்யூனிஸ்ட் தோழர்களுடன் ஒன்றிணைந்து போராடுவது, அதுவும் முதலாளிய சுரண்டலுக்கு
அடிப்படையான இயற்கை
வளச் சுரண்டலுக்கு எதிராக ஒன்றிணைந்து
போராடுவது, பாதிக்கப்பட்டுள்ள, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுடன் இணைந்து போராடுவது அனைத்து கம்யூனிஸ்ட்டுகளின்
அடிப்படைக் கடமையாகும்.
சூர்யா






நன்று. ஆம்.
ReplyDeleteஇயற்கை பாதுகாப்பு
கம்யுனிஸ்ட் கடமை...!!!