இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று
தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம்
வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி
நேரம் வேலை செய்வதாகவும் கூறினார்.
இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார்,
சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு
இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள்
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு
6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார்.
2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம்
என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும்,
பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு
தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை
எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் இலாபத்தைப்
பெருக்க தொழிலாளர்களின் உயிர்களைப் பலியிட துணிகின்றார்.
இன்போசிஸ் நாராயண மூர்த்தி அறிவித்த இரண்டு
நாட்களுக்குப் பிறகு மோடி அரசு புதிய தொழிலாளர் சட்டங்கள் 21.11.2025 முதல் நடைமுறைக்கு
வருவதாக அறிவித்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுக்கும்
வேலையைப் பெரும்பாலான மாநில அரசுகள் முடித்திருந்தாலும், இன்னும் சில மாநிலங்களில்
முடிக்கப்படவில்லை. இதனால், புதிய தொழிலாளர் (விரோதச்) சட்டங்கள் அமலாவதில் கால தாமதம்
ஏற்பட்டு வந்தது. எனினும் முதலாளிகள் புதிய சட்ட விதிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த
வேண்டும் என வெளிப்படையாகவே கோரி வந்தனர். இடைக்கட்டமாக, பழைய சட்டங்களிலேயே சில திருத்தங்களைச்
செய்து மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வந்தன. எனினும், முதலாளி வர்க்கம் புதிய தொழிலாளர்
சட்டத் தொகுப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்திய
அரசு திடீரென சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாக அறிவித்துள்ளது.
மார்ச் 2026க்குள் விதிமுறைகள் வகுக்கும் வேலையினை
முழுமை பெறச் செய்து ஏப்ரல் 2026 முதல் முழுவதுமாக நடைமுறைக்குக் கொண்டு வர இந்திய
அரசு திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சட்ட வடிவமாக்கப்பட்டு ஐந்து
ஆண்டுகள் ஆகியும், தொழிலாளி வர்க்கம் இதற்கு எதிரான போராட்டங்களைக் கூர்மைப்படுத்தவில்லை.
புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை எவ்விதம் பறிக்கின்றன என்பது குறித்தும்,
தொழிற்சங்க உரிமைகளும், குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் ஆக்கப்பட்டது குறித்தும்,
இடதுசாரி இயக்கங்களும், தொழிற்சங்கத் தலைமைகளும் தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்லவேயில்லை;
கொண்டு செல்லவும் விரும்பவில்லை.
எப்பொழுதெல்லாம், இந்திய அரசோ அல்லது மாநில
அரசுகளோ இந்தச் சட்டத் திருத்தங்கள் குறித்து அறிவிப்புகளைச் செய்கின்றனவோ அப்பொழுது
மட்டும் தொழிற்சங்கத் தலைமைகள் பெயரளவிற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன; ஈனக்குரலில்
தங்கள் முனகலை வெளிப்படுத்தின.
ஆட்சியில் இருக்கும் பிஜேபியின் தொழிற்சங்க
அணியான பாரதிய மஸ்தூர் சங்கம் தான் அதிகளவிலான தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட சங்கமாக
உள்ளது. ஊதிய சட்டத் தொகுப்பையும், சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பையும் உடனடியாக நடைமுறைக்கு
கொண்டுவர வேண்டும் என அது வெளிப்படையாகவே அறிவிப்பு செய்துள்ளது. தொழில் உறவுகள் மற்றும்
பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சட்டத் தொகுப்புகளில் சில திருத்தங்களைச்
செய்ய வேண்டுமென அது கோரியுள்ளது.
எதிர்கட்சியான காங்கிரசு கட்சி பெயரளவிற்கு
எதிர்ப்புகளைத் தெரிவித்ததோடு தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டது.
காங்கிரசின் தொழிற்சங்க அணியான ஐஎன்டியூசி இரட்டை
நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. சஞ்சீவி ரெட்டி தலைமையிலான பிரிவு புதிய தொழிலாளர் சட்டத்தை
எதிர்ப்பதாகக் கூறினாலும், அதற்காக வலுவான போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
Confederation of Central Trade Unions (CONCET) என்ற கூட்டமைப்பில் உள்ள கே கே திவாரி
மற்றும் ரஜ்னீஷ் சேத் ஆகியோர் தலைமையிலான ஐஎன்டியூசியின் மற்றொரு பிரிவு அரசின் புதிய
தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முடிவினை வரவேற்கின்றது.
இடது சாரி கட்சிகளின் பிரதான தொழிற்சங்கங்களான
ஏஐடியூசி, சிஐடியூ ஆகியன கடந்த ஐந்தாண்டுகளாக, இது குறித்தான தொடர் பிரச்சார இயக்கங்களை
எடுத்து இந்தச் சட்டத்தொகுப்புகளால் தொழிலாளிகள் எவ்வாறு கடுமையான பாதிப்புகளுக்கும்
நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள் என்பதைத் தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி போராட்டக்
களங்களைக் கட்டி எழுப்பி இருக்க வேண்டும். தொழிலாளருக்கு விரோதமான இந்தச் சட்டத் தொகுப்புகளை
இரத்து செய்ய அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவேண்டும். ஆனால்
அந்தக் கட்சிகளின் தலைவமையின் கீழ் இருந்த தொழிற்சங்கங்கள் பெயரளவிற்கான போராட்டங்களையே
நடத்தி வந்தன; அணிகளை ஏமாற்றும் தந்திரங்களையே செய்து வந்தன.
2020 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட விவசாயிகளுக்கு
விரோதமான மூன்று வேளாண்மைச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டு காலம் வீரம் செறிந்த
பெரும் போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் அரசு அந்த மூன்று சட்டங்களையும் இரத்து செய்யச்
செய்தனர். அண்மைக் காலத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திலிருந்து இடதுசாரிக் கட்சிகள்
படிப்பினைகளைக் கற்றிருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்திச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அந்தக் கட்சிகள் தங்களுடைய சமரசவாத, சந்தர்ப்பவாத நடைமுறைகளால் தொழிலாளி வர்க்கத்தின்
நலன்களுக்கு எதிராகத் துரோகம் செய்து வருகின்றன.
தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரான சட்டங்களையும்
முதலாளிய வர்க்கச் சுரண்டலையும் எதிர்த்து கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தொழிலாளர்களும்
ஒன்று திரண்டு போராடுவதன் மூலமே தங்கள் நலன்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால்
இங்குள்ள சீர்திருத்தவாத இடதுசாரிக்கட்சிகளும் முதலாளியக் கட்சிகளும் தமக்கென்று தனித்தனியாக
தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைய விடாமல் பிளவுபடுத்தி
வருகின்றன.
இந்த இடதுசாரி கட்சிகளுக்கு தொழிலாளர்களைச்
சுரண்டலிலிருந்து விடுதலைக்கு வழி நடத்திச் செல்லும் அரசியல் திட்டம் இல்லை. அவை தொழிலாளர்கள்
மத்தியில் சோசலிசம் பற்றிய உணர்வையும் சோசலிச அமைப்பு பற்றிய பார்வையையும் உருவாக்குவதில்லை;
அதற்கு மாறாக, தொழிலாளர்களைத் தமக்கான வாக்கு வங்கிகளாகவும், தொழிற்சங்கங்களை தமக்கான
நிதி ஆதாரங்களாக மட்டுமே வைத்திருக்க விரும்புகின்றன. தொழிலாளர்களை வர்க்க உணர்வற்ற
நிலையில் வைத்து, அவர்களின் எண்ணிக்கையையும், அரசிற்கு எதிரான எதிர்ப்புணர்வுகளையும்
காட்டி முதலாளியக் கட்சிகளுடன் பேரம் பேசி சில சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகளைப் பெற
முனைகின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும்பான்மையான
நாடுகளில் சீர்த்திருத்தவாதத்தில் மூழ்கி, முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்பின் வழியாகவே
ஆட்சியைக் கைப்பற்றி சோசலிசத்தை நோக்கி முன்னேற முடியும் என்ற பாராளுமன்றவாதம் இடதுசாரி
இயக்கங்களிடம் வேரூன்றியுள்ளது.
சமீபத்தில் தெற்காசிய நாடுகளான இலங்கை, வங்காளதேசம்,
நேபாளம் ஆகிய நாடுகளில் எழுந்த நாடு தழுவிய அளவிலான மக்கள் கிளர்ச்சிகள் ஆட்சியில்
இருக்கும் நபர்களை மாற்றியதே தவிர, ஆளும் வர்க்கத்தினை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தவில்லை.
வேலையின்மை, குறைவான கூலி, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற நெருக்கடிகளால் வெகுண்டெழுந்த
இளைஞர்களும், மாணவர்களும் ஆட்சியாளர்களையும், அவர்களுடைய பரிவாரங்களையும் நாட்டை விட்டே
ஓட வைத்தனர். ஆனால், இந்தக் கிளர்ச்சிகளுக்குத் தலைமை தாங்கும் வகையில் வலுவான பாட்டாளி
வர்க்கம் இல்லை, தொழிலாளி வர்க்கம் போதிய வர்க்க உணர்வு பெறாமல் மழுங்கடிக்கப்பட்டு
வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் பெயரளவிற்கான ஆதரவினை மட்டுமே போராட்டக்காரர்களுக்கு
அளித்தனர். அவர்கள் இந்த போராட்டங்களுக்குத் தலைமையேற்று, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும்
போராட்டங்களாக மாற்றும் அளவுக்குப் போதிய வர்க்க உணர்வு கொண்டவர்களாகவும் அமைப்பு பலம்
கொண்டவர்களாகவும் இல்லை.
இந்த நாடுகளில் மக்களால் தூக்கியெறியப்பட்டவர்களுக்குப்
பதிலாக, ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பிரிவு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன. உழைக்கும்
மக்களுக்கு எந்த வித நன்மையையும் இந்தப் போராட்டங்கள் அளிக்கவில்லை. மீண்டும் அவர்களை
வறுமையிலும், வேலையின்மையிலும், சுரண்டலிலுமே நீடிக்க வைத்திருக்கின்றன. இது இந்திய
தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமான தொழிலாளி வர்க்கத்திற்கும் பெரும்
படிப்பினையாகும்.
முதலாளித்துவ உற்பத்தி முறை நவீன தொழில் நுட்ப
வளர்ச்சியின் காரணமாக, எந்திரமயமாக்கலையும், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டையும் கொண்டு
உற்பத்தியை மேலும் மேலும் நவீனப்படுத்தி வருகின்றது. இது உற்பத்தித் திறனை அதிகரித்து
உபரி மதிப்பின் அளவை, அதாவது இலாபத்தை அதிகரிக்கிறது. அதே சமயத்தில் தொழிலாளர்களின்
எண்ணிக்கையினை அதிவேகமாகக் குறைத்து வருகின்றது. உபரிமதிப்பின் அளவினை மேலும் அதிகரிக்க
வேலை நேர அதிகரிப்பு மற்றும் கூலியின் அளவினைக் குறைத்தல் மூலமாக தொழிலாளர்களின் மீதான
உழைப்புச் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. அதற்காகவே இத்தகைய சட்டங்கள்
முதலாளி வர்க்க அரசால் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
முதலாளித்துவமானது தொழிலாளர்களை வரைமுறையின்றி
சுரண்டுவதற்கு ஏற்ப தொழிலாளர்கள் கடந்த காலத்தில் போராடிப் பெற்ற உரிமைகளையும், நலத்திட்டங்களையும்
பறிப்பதற்கான நடவடிக்கையே இதுபோன்ற தொழிலாளர் சட்டத்திருத்தங்கள்.
உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தி, உபரி மதிப்பை
அதிகரிக்க முயற்சி செய்தாலும், வேலையின்மை, நிரந்தரமற்ற வேலை, குறைந்த கூலி ஆகியவற்றின்
காரணமாக வாங்கும் சக்தியை தொழிலாளர்கள் இழக்க நேரிடுவதால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்
சந்தையில் தேங்கும் அபாயம் ஏற்படும். இது ஒட்டு மொத்தமாக முதலாளித்துவ உற்பத்தி முறையை
நெருக்கடிக்குள் தள்ளும்.
ஒரு புறம், வருவாயின்றி வறுமையில் மக்கள், மறுபுறம்
வாங்குவாரின்றி தேங்கிப் போன உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள். இந்தக் கடுமையான பொருளாதார
நெருக்கடியில் மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களில் குதிக்கின்றனர். பாட்டாளி வர்க்கத்தின்
முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் தொழிலாளர்கள் அரசியல்படுத்தப்பட்டு அணிதிரட்டப்படாமல்
இருப்பதால், பாட்டாளி வர்க்கத்தால் மக்கள் எழுச்சிக்குத் தலைமை வகிக்க முடிவதில்லை.
அதனால் மக்களின் எழுச்சியும், தியாகமும் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக,
ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளை மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுகின்றது. 2010 ஆம் ஆண்டுகளில்
மத்திய கிழக்கு நாடுகளிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்காசிய நாடுகளிலும் நடந்த
மக்கள் எழுச்சிகளும் அதனை ஆளும் வர்க்கமே மீண்டும் கைப்பற்றிக் கொண்டதுமே சாட்சியாக
உள்ளது.
முதலாளித்துவ உற்பத்தி முறையானது மென்மேலும்
நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக்
கொள்ள பாட்டாளி வர்க்கம் போதிய அமைப்பு பலமும், வர்க்க உணர்வும் பெற்றிராத நிலையில்,
முதலாளி வர்க்கம் தன்னுடைய வாழ்வினை நீடித்துக் கொள்கிறது.
பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக இருக்கும்
ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளி வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க உணர்வையும்
சோசலிச உணர்வையும் ஊட்ட வேண்டும். அதன் மூலமே முதலாளி வர்க்கக் கட்சிகள் மற்றும் பாராளுமன்றவாத
இடதுசாரிக்கட்சிகளின் தலைமையின் கீழ் அணி திரண்டுள்ள தொழிலாளிகள் அக்கட்சிகளின் உண்மைத்
தன்மையைப் புரிந்து கொள்வார்கள். பல்வேறு கட்சிகளின் கீழ் பிளவுபட்டுக் கிடக்கும் தொழிலாளர்கள்
வர்க்க உணர்வு பெற்று ஓரணியாகத் திரள்வார்கள். தங்கள் விடுதலையைச் சாதிப்பார்கள். அத்தகைய
வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டிய பெரும் பொறுப்பு இன்று உண்மையான பாட்டாளிவர்க்கக்
கட்சியின் முன் உள்ளது.
குமணன்





Good.
ReplyDeleteSay only 8-8-8
It's a must.
With 2 days holidays.
✊✊✊
கட்டுரையாளர் தனது கடைசி பாராவில் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் உண்மையான பாட்டாளி வர்க்க கட்சி எது ?அந்தக் கட்சி எப்படிப்பட்ட திட்டத்தை வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் பாராளுமன்ற வாத கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றன. ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை அமைப்போம் என செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளி வர்க்கத்திற்கு போராடி பல சட்ட உரிமைகளைப் பெற்றுத் தந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான்.அந்தத் தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சங்கங்களில் இல்லாமல் முதலாளித்துவக் கட்சிகளின் சங்கங்களில் திறல்வது ஏன்? அதற்கான தேடுதலையும் தீர்வினையும் கட்டுரையாளர் விளக்கினால் நன்றாக இருக்கும்.
ReplyDelete