இந்தியாவை மாற்றி அமைப்பதற்காக அணு ஆற்றலின் நீடித்த பயன்பாட்டுக்கும் மேம்பாட்டுக்குமான சட்டம் (Sustainable Harnessing and Aarancement of Nuclear Energy for Transforming India - SHANTI) 2025 (சாந்தி) என்ற புதிய மசோதா ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் பாராளுமன்றத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது; இந்த மசோதா முறைப்படி பாராளுமன்றத்தின் நிலைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே மத்தியில் ஆளும் பாஜகவால் வழக்கம் போல நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டம்
இந்தச் சட்டம் இந்தியாவின் அணுசக்தித் துறையை தனியார் முதலீடுகளின் மூலம் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது; அணுசக்தி துறையின் ஒவ்வொரு பிரிவையும் தனியார்மயமாக்கம் ஊக்குவிக்கிறது; மக்களுக்கான பாதுகாப்பு விதிகளைப் புறந்தள்ளி நீர்த்துப் போகச் செய்துள்ளது. முன்னேற்றம் என்ற போலியான முகத் திரையுடன் இந்தச் சட்டம் மக்கள் பாதுகாப்பையும் தேசப் பாதுகாப்பையும் மற்றும் இந்திய பொருளாதாரத்தின் உறுதியையும் அச்சுறுத்துகிறது. இதன் மூலம் இந்த சட்டம் மிகக் கொடுமையான அணுசக்தி விபத்துகளுக்கும் நம் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கிறது.
மேலும், யுரேனிய சுரங்கங்கள், தூய்மைப்படுத்தப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக்க தக்க வகையில் வடிவமைப்பது, அணு உலை செயல்பாடுகளை தீர்மானித்து நடத்துவது என அணுசக்தி துறையின் ஒவ்வொரு பிரிவையும் தனியாருக்கு தாரை வார்க்கிறது; இதன் மூலம் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பை அச்சுறுத்துவதாக உள்ளது; இவற்றை வலியுறுத்தும், நாட்டின் இறையாண்மையை காக்கும் அணுசக்தி சட்டம் 1962-ஐ சாந்தி 2025 சட்டம் மதிப்பிழக்கச் செய்துள்ளது.
மொத்த உலகத்தையும் அச்சுறுத்தும், அதிகரித்துக் கொண்டிருக்கும் பருவநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து, பேரழிவுகளில் இருந்து மீள மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அணுசக்திக்கு ஆதரவான கும்பல், வெறியுடன் அணு ஆற்றலை " மாசு உருவாக்காத தூய்மையான ஆற்றல்" என்னும் பொய்யான கருத்தை பரப்பிக் கொண்டுள்ளது; அது அணுசக்தியைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனைத்து நாடுகளையும் வெறியுடன் தூண்டிக் கொண்டிருக்கிறது. அணுசக்தி மின் உற்பத்திக்காக மட்டுமல்லாமல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதம் என்பதற்கு ஜப்பானின் நாகசாகி மற்றும் ஹிரோஷிமா இன்றும் வாழும் சாட்சிகள் ஆகும்.
அணுமின்சார உற்பத்தி பல நிலைகளை உள்ளடக்கியது: சுரங்கங்களில் இருந்து யுரேனியம் எடுப்பது, அதைத் தூய்மைப்படுத்த கொண்டு செல்வது, அணு உலைகள் அமைப்பது, பிறகு அணு உலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது, இவற்றுடன் முக்கியமாக, மிகுந்த கவனத்துடன் அணுக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தும் நீண்ட கால திட்டம் ஆகிய பல நிலைகளை உள்ளடக்கியுள்ளது. முன்னேறிய நாடுகளிலும் கூட அணுக்கழிவுகளை கையாளுவதற்கான மிகுந்த கவனமான முக்கியமான திட்டம் இன்றும் கவலைக்குரிய பிரச்சனையாகவே நடைமுறையில் உள்ளது. மேலும், அணு உலைகளை சட்டபூர்வமாக பயன்பாட்டில் இருந்து நீக்குவது மிகுந்த செலவை உள்ளடக்கியது என்பது முக்கியமான விசயம் ஆகும். அத்துடன் அணுமின்சக்தி உற்பத்தியில் ஏற்படும் மிகச் சிறிய விபத்து கூட மிகக் கொடூரமான பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தும்.
அணு சக்தியின் இந்த மறுக்க முடியாத பேரழிவை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது பாதிக்கப்படும் மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக முக்கியமானதாகும். இதற்கு 1986--ஆம் ஆண்டில் உக்ரைனின் செர்னோபில் அணு உலை விபத்து, ஜப்பானின் ஃபுக்குஷிமா தாய்ச்சியில் பூகம்பம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு--- இதனால் இன்றும் அங்கு மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் சில சான்றுகளாகும். பொதுவான சுற்றுச் சூழல் பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவற்றோடு செர்னொபில் பகுதியில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது; ஃபுகுஷிமா அணு உலை பேரழிவுக்குப்பின், இடம் பெயர்தலால் பெரும் மன அழுத்தம், உறவுகளைப் பிரிந்ததால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு, இயற்கை வள இழப்பு போன்றவற்றால் மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாயினர்.
உற்பத்திச் செலவை அதிகம் கொண்ட அணு ஆற்றல்
1950---ஆம் ஆண்டுகளிலேயே இந்தியா அணு ஆற்றல் துறையில் ஈடுபட ஆரம்பித்தது; ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் 'சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு, 43,500 மெகாவாட் (43.5 ஜிகா வாட்) மின்சாரத்தை இந்தியா 2000-ஆம் ஆண்டில் அணுசக்தியில் இருந்து உற்பத்தி செய்யும் என்று 1960-ஆம் ஆண்டில் அறிவித்தது. ஆனால் உண்மையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் பிப்ரவரி, 2025ல் 8180 மெகா வாட் மின்சாரத்தையே உற்பத்தி செய்துள்ளது; இந்த உண்மையின் அடிப்படையில் அணுசக்தி இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2% க்கும் குறைவாகவே தருகிறது.
அக்டோபர் 2025 --இல் 505 ஜிகா வாட் மின்சாரத்தையே இந்தியா உற்பத்தி செய்தது; இதில் அனல்மின் உற்பத்தி 44.53%; நீர்மின்சார உற்பத்தி 9.97%; அணு ஆற்றலில் இருந்து பெறப்பட்ட மின்சக்தி 1.74%; புதுப்பிக்கும் ஆற்றலில் இருந்து அதாவது காற்று, சூரிய சக்தி, உயிரிகள் மற்றும் கழிவுகளில் இருந்து 38.64% மற்றும் நிலத்தடி எண்ணை மற்றும் வாயுக்களில் இருந்து 4.10% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆக, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் அணுசக்தி வெறும் 1.74% மின்சாரத்தை மட்டுமே வழங்குகிறது. ஆனால் உண்மை இப்படி இருக்கும்போது இந்திய அரசாங்கம் தன்னுடைய அணுசக்தி திட்டத்தின் அடிப்படையில் 100 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை 2047 --ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இயங்கும் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பௌதிக இயல் வல்லுநர் M.V. ரமணா, 'இந்தியாவின் இந்த லட்சியம் நடைமுறையில் சாத்தியமல்ல அதீதமான கற்பனையே' என்று உறுதியுடன் குறிப்பிடுகிறார். மேலும், அவர் உலக அளவில் மின் உற்பத்தியில் அணு ஆற்றலின் பங்கு 1997--ஆம் ஆண்டில் 16.7% இருந்தது என்றும், அது 2022--ஆம் ஆண்டில் 9.2% ஆகக் குறைந்துள்ளது என்றும் தெளிவாகக் கூறுகிறார்.
மேலும் உலக அணுசக்திதுறையின் அறிக்கையின்படி, சூரிய சக்தியில் இருந்து மெகாவாட் மின்சார ஆற்றல்/1மணி உற்பத்தி செய்ய 36--44 அமெரிக்க டாலர்களும், அதே ஆற்றலை காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய 29--56 அமெரிக்க டாலர்களும் செலவாகிறது; இதற்கு மாறாக அணு ஆற்றலின் மூலம் அதே அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய 112--189 டாலர்கள் அதாவது மூன்று, நான்கு மடங்குகளுக்கு மேல் அதிகமாக செலவாகிறது; மேலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அணு உலைகள் தங்களது செயல்பாட்டை நிறுத்திய பிறகு அவற்றை நீக்கவும், அணுக் கழிவுகளை பாதுகாப்பாக நீக்குவதற்கும் 50 கோடி முதல் 200 கோடி அமெரிக்க டாலர்கள் தேவை; இந்த அணு உலைகளை நீக்குவதற்கு குறைந்தபட்சம் 15--20 ஆண்டுகளாகும்; உண்மையில் இந்த காலக்கெடு அதிகரிப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.
அணு உலைகளினால் ஏற்படும் ஆபத்துகளும்
குறைவான இழப்பீடும்
எல்லாவற்றையும் விட முக்கியமாக அபாயகரமான, பிரிக்கவே முடியாத தொடர்பு அணுசக்திக்கும் ஆயுதங்களுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்ததே! "விஞ்ஞான ரீதியில் நுட்பமாக பார்த்தால் அணு உலைகளின் மீது உரிமை என்பது அணு ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான ஒன்றே" என்று பௌதிக வல்லுநர் M.V. ரமணா உறுதியுடன் கூறுகிறார்.
ஆகவே அணுசக்தி நிறுவனங்கள் மிக அதிக அளவிலான உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்; இத்தகைய பாதுகாப்பை அரசாங்கம் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டும். இதுவே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் இறையாண்மை ஆகும். இதில் நடக்கும் மிகச் சிறிய தவறு கூட மிகப் பெரிய பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் ஆளும் பிஜேபி அரசாங்கம் ஏற்படுத்தி உள்ள சாந்தி (SHANTI) சட்டம் இவற்றையெல்லாம் ஒரு துளியும் பொருட்படுத்தவில்லை; அரசாங்கத்தின் உறுதி வாய்ந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய திட்டம் தனியார்களுக்கு, முதலாளிகளுக்கு மின்சார உற்பத்தி என்ற பெயரில் தாரை வார்க்கப்படுகிறது; ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் தி எர்த் இந்தியா மற்றும் நேஷனல் அலையன்ஸ் ஆஃப் பீப்பிள்'ஸ் மூவ்மென்ட்ஸ் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகள், இந்தச் சட்டம் மிகவும் ஆபத்தானது, இதனால் அணு உலைகளால் ஏற்படும் விபத்துகளும் பாதிப்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம் என்று எச்சரிக்கின்றன; அணுப் பிளவின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் கதிரியக்கப் பொருட்களை கையாளுவதற்கான அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது மிகப் பெரும் பேரழிவுகளையும் சரி செய்ய முடியாத பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட தனியார் நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் அணு உலைகளின் தரக் கட்டுப்பாட்டில் ஆழ்ந்த பொறுப்புக் கொள்ளாமல் சமரசம் செய்து கொள்ளலாம்; ஏனென்றால் இந்தச் சட்டம், மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர்களின் உரிமைகள், பாதிக்கப்படும் மக்களின் நலனை விட முதலாளிகளின் இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உரிமையாளர்கள், முறைகேடாக மூலப் பொருள்களை ஆயுத உற்பத்திக்கு மடை மாற்றவும், மக்கள் விரோத, செல்வாக்கு மிகுந்த சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் சாத்தியம் அதிகம். இது உள்நாட்டிலும் பிறநாடுகளிலும் அழிவு வேலைகளுக்கு வித்திடும்.
மேலும், தனியார் பொறுப்பில் உள்ள அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்புகள் இந்த சட்டத்தில் முழுமையாக தெளிவாக வரையறுக்கப்படவில்லை; இந்த சட்டத்தின்படி ஒரு விபத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு கொடுக்கப்படும் 46 கோடி அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் 3910 கோடி ரூபாய்கள், அணு சக்தி விபத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய எந்த விதத்திலும் போதாது. பாதிப்பின் மிகப்பெரிய அளவை கணக்கில் கொள்ளாமல் சிறிய அளவு நிவாரணத்தை நிர்ணயிப்பது மக்கள் விரோத செயலாகும். இந்த நிவாரணம் போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் அளித்த நிவாரணமான 47 கோடி அமெரிக்க டாலர்களை விடக் குறைவானது என்று, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் இந்தியா மற்றும் நேஷனல் அலையன்ஸ் ஆஃப் பீப்பிள்'ஸ் மூவ்மென்ட்ஸ் அமைப்புகளின் ஆய்வு தெளிவாக உரைக்கிறது. இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவில் இத்தகைய விபத்துக்கு 1050 கோடி டாலர்கள் நிவாரணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக சாந்தி சட்டம், இதற்கு முன்பு வரையறுக்கப்பட்ட அணு உலை நிறுவனங்கள் தங்களுக்கு உபகரணங்களை விற்றவர்களிடமிருந்து இழப்பீடு பெறும் வாய்ப்பையும் நீக்கிவிட்டது. இதனால் அணு உலைத் தவறால் உற்பத்தியின் போது விபத்து நேர்ந்தாலும் அல்லது உபகரணங்களின் தரத்தில் உள்ள குறைவினால் நடந்தாலும், அந்த உபகரணங்களை வழங்கியவர்கள், விபத்தின் பாதுகாப்புகளுக்காக நிவாரணம் அளிப்பதிலிருந்து மிக எளிதில் தப்பிக்கலாம்; இப்படி இந்தச் சட்டம் முதலாளிகளுக்கு அனைத்து வகைகளிலும் பாதுகாப்பு அளிக்கிறது.
அதோடு இந்தச் சட்டம், இழப்பீட்டுக்காக சட்ட உதவி கோரும் காலத்தை, அதாவது சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடு கோரும் காலம் 10 ஆண்டுகளாகவும் தனிமனிதப் பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரும் காலம் 20 ஆண்டுகளாகவும் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டதை வெறும் 3 ஆண்டுகளாக குறைத்துள்ளது. இவ்வாறு மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டதால், அணுசக்தி விபத்தின் நீண்ட கால கதிரியக்க விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
அத்துடன், இந்தச் சட்டம் பாதிக்கப்பட்ட மக்கள், மக்கள் நல செயல்பாட்டு அமைப்புகள், ஏன் மாநில அரசாங்கங்கள் கூட, அணு விபத்து பாதிப்புகளுக்காக கிரிமினல் குற்ற நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை விலக்கி விட்டது. மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள், அணு ஆற்றல் மின் உற்பத்தியை முறைப்படுத்தும் அமைப்பு மட்டுமே சட்ட ரீதியாக குற்ற நடவடிக்கைக்கு அணுக முடியும்; "இது தனி நபர்களும் சமூக அமைப்புகளும் விபத்துகளுக்காக, குறிப்பாக அணு ஆற்றல் சார்ந்த விபத்துக்கள் சமூகத்தில் பரவலாக நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளபோது கூட, விஞ்ஞான பூர்வமாகவும் நடைமுறையில் பல விபத்துகளால் அனுபவரீதியாக அனுபவித்த போதும் கூட, சட்ட ரீதியாக நீதி கோரும், இழப்பீடு கோரும்உரிமையை மீறுகிறது" என்று அணுசக்தியின் அழிவு சக்திக்கு எதிரான செயல்பாட்டாளர் சௌம்யா தத்தா குறிப்பிடுகிறார்.
மிகப்பெரும் அணுசக்தி பேரழிவுகளான ஃபுக்குஷிமா, செர்னோபில் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டது போல இந்தியாவிலும் அணு உலை விபத்துகளால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும்; ஃபுக்குஷிமா கதிரியக்க சீரழிவுகளை நீக்குவதற்கான செலவு இதுவரை 18200 கோடி அமெரிக்க டாலர்களை விஞ்சிவிட்டது. சாந்தி சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இழப்பீட்டைப் போல பல நூறு மடங்கு அதிகமாக இதற்கு செலவிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் மத்திய அரசாங்கத்தின் அணுமின் துறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மத்திய அரசாங்கமே அணு ஆற்றல் மின்உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில் பாதுகாப்பு விதிகளை நீர்த்துப்போக வைத்துள்ளது; ஆகையால் இதற்குப் பதிலாக சுதந்திரமான வெளிப்படையான மற்றும் பல பங்குதாரர்களை உள்ளடக்கிய முறைப்படுத்தும் அமைப்பு முக்கியமான உடனடி தேவையாகும். அதோடு அணு ஆற்றல் துறை விரிவுபடுத்தப்படுவது முழுமையாக, ஆழமாக, ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும்.
முதலாளிகளுக்கு இலாபம்! மக்களுக்கு உயிரிழப்பு!
இந்தியாவின் மத்திய ஆளும் அரசாங்கமான பிஜேபி 'சாந்தி' சட்டத்தை, அணுத்துறையில் தனியார் மயத்தை அனுமதித்தல், இழப்பீட்டை வெறும் 46 கோடி டாலர்களாக நிர்ணயித்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இரண்டு நாட்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'தேசிய பாதுகாப்பு அதிகார சட்டத்திற்கு' (National Defence Authorization Act ---NDAA) 19.12.2025-இல் ஒப்புதல் அளித்தார்; இந்தச் சட்டம் அமெரிக்க அரசாங்கத்தின் செயலாளர் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து "இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி பாதிப்புகளுக்கான இழப்பீட்டு விதிகளை சர்வதேச விதிகளின்படி அமைக்க" செயலாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. இது இந்திய மத்திய அரசாங்கம், அணுசக்தி துறையை தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது, விபத்துகளின் போது அணு உலைகளை அமைப்பதற்கான சாதனங்களை வழங்கியவர்கள் தரவேண்டிய இழப்பீட்டை முழுமையாக நீக்கியதன் அரசியல் பின்னணியை தெளிவாக விளக்குகிறது.
இதனால், வெஸ்ட்டிங்ஹவுஸ், GE வெர்னோவா, பிரான்ஸின் எலெக்ட்ரிசைட் டி பிரான்ஸ் முதலிய அணு சக்தித் துறையில் முன்னணியில் இருக்கும் அயல் நாட்டு நிறுவனங்களை, அவை ஏற்றுமதி செய்த கருவிகளின் குறைபாடால் உண்டாகும் பாதிப்புகளுக்கான இழப்பீடு என்னும் விதி இனிமேல் அவர்களை துளியும் பாதிக்காது; அதனால் தடையின்றி அவை ஏற்றுமதியை மட்டுமே கவனத்தில் கொள்ளும்; அவை ஏற்றுமதி செய்யும் கருவிகளின் தரத்தை பற்றி அல்ல. இந்த சமநிலையற்ற தன்மை, இலாபவெறி கொண்ட பன்னாட்டு நிறுவனங்களை ஒரு கேடயம் போலப் பாதுகாப்பதோடு இந்தியாவை மிகப் பெரிய அழிவுக்கு அபாயத்துக்கு எடுத்துச் செல்லும். இதுவரை அணுசக்தி பேரழிவுகளை, பாதிப்புகளை சீர்படுத்த செய்யப்பட்ட செலவுகள், இந்த நிறுவனங்களின் பொறுப்பின்மைக்கு சரியான உதாரணமாகும். செர்னோபில் பாதிப்புகளை சரிப்படுத்த 70000 கோடி அமெரிக்க டாலர்களும், ஃபுக்குஷிமா அணு உலை விபத்தின் கழிவுகளை நீக்க நிர்ணயிக்கப்பட்ட ஏறக்குறைய 20000 கோடி டாலர்களும் நிர்ணயிக்கப்பட்டன; ஆனால் இதோடு ஒப்பிடும்போது நமது நாட்டின் "முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட" சாந்தி சட்டம் பாதிக்கப்பட்ட நமது மக்களின் நலனைப் புறந்தள்ளி முதலாளித்துவத்தின் இலாபத்தை உறுதிப்படுத்த தரும் இழப்பீடு பல நூறு மடங்கு குறைவானதாகும்.
மக்களின் வாழ்வாதாரமும் இந்த திட்டத்தால் கேள்விக்குறியாகி உள்ளது. 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையில் ஏற்படும் கசிவு அந்தப் பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதோடு, 30--100 கிலோமீட்டர் சுற்றளவில் அங்கு பொருளாதார ரீதியாக நடக்கும் திட்டங்களை நிறுத்தி விடும்; கதிரியக்க பாதிப்பால் விவசாயமும் மீன்பிடிப்பும் அழியும்; ஃபுகுஷிமா கதிர்வீச்சு பாதிப்பால் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18700 கோடி டாலர்கள் குறைந்தது போலவே இங்கும் உற்பத்தி முழுமையாகக் குறைந்து விடும். மக்களின் வருமானம் மற்றும் வாழ்விட இழப்போடு, கதிரியக்கத்தால் ஏற்படும் புற்று நோய்ப் பாதிப்புகள் பல பத்தாண்டுகள் சென்ற பிறகு தெரியும்; இதற்கான செலவு 50,000 கோடியை தாண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது; பருவநிலை மாற்றத்தாலும், விவசாயத்திற்கான உள்ளீட்டுப் பொருட்களின் விலைவாசி உயர்வாலும், நிலையற்ற மிகக் குறைந்த வருமானத்தாலும் ஏற்கனவே நொறுங்கி சிதையும் நிலையில் உள்ள கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாக நிரந்தரமாக சிதைந்து அழியும்.
இயற்கையாகவே பூகம்ப பாதிப்பு பகுதியில்
அமைந்துள்ள இந்தியாவில் மக்களை அனைத்து வகையிலும் பாதிக்கக் கூடிய, பொருளாதார ரீதியாக தோல்வி என்று நிரூபிக்கப்பட்ட இந்தத்
திட்டத்தை, சட்டத்தை மக்கள் உறுதியுடன் எதிர்க்க வேண்டும். மக்களின் உண்மையான கட்டுப்பாட்டுக்குள்
அணுசக்தி துறை வர வேண்டும்; விபத்துகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்க வேண்டும்; மற்றும் புதிய நிலையான, பாதுகாப்பான,
வாய்ப்பான அனைத்து வகைகளிலும் மின்னாற்றல் உற்பத்தி செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும்; மக்கள் நலனை முன்னிறுத்தி கார்ப்பரேட்
நலன்களை புறந்தள்ளும் முன்னேற்ற திட்டங்களில் மட்டுமே மக்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக மக்கள் உறுதியுடன்
போராட வேண்டும் - தங்களுடைய வாழ்வு மற்றும் வருங்காலத் தலைமுறைகளைக் காப்பதற்காக!
- கவிதா






Comments
Post a Comment