2012--ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போர்களாலும் மோதல்களாலும் வருடத்திற்கு 5 லட்சம் சாதாரண குடிமக்களின் உயிர்கள் பறிபோனதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இதையும் விட அதிகமாகவே பொருளாதாரத் தடையால் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் பல்கலைக்கழகமான பிரவுன் நடத்திய ஒரு ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது. இந்தப் பொருளாதாரத் தடைகள் பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் ஐரோப்பாவாலும் வளரும் நாடுகள் மற்றும் வறுமையில் திணறிக் கொண்டிருக்கும் நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன.
பேராசிரியர் பிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ், டாக்டர் சில்வியா ரெண்டான் மற்றும் டாக்டர் மார்க் வெய்ஸ்ப்ரோட் ஆகியவர்களால் நடத்தப்பட்ட, "சர்வதேசப் பொருளாதாரத் தடைகளால் பல்வேறு நாடுகளில் ஏற்படும் 'குறிப்பான வயது மரணங்கள்'---பற்றிய ஆய்வு" 2025--ஆம் ஆண்டு 'த லேண்ட்செட் குளோபல் ஹெல்த்' (The Lancet Global Health) இதழில் தனது அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆய்வு 2012 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஒரு வருடத்தில் சராசரியாக பொருளாதார நடவடிக்கைகளால் 5, 64, 258 மரணங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 60லிருந்து 80 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் இந்தப் பொருளாதாரத் தடைகளால் அதிகமாக இறந்துள்ளார்கள். இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதி அளவு சிறு குழந்தைகளின் மரணமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தனக்கு ஏற்றபடி ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றது. பொருளாதாரத் தடைகள் மூலம் இலக்கு நாடுகளின் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, அதனால் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்ற ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரத் தந்திரமாக விதிக்கப்படுகின்றன.
முக்கியமாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் தங்களது திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, வலிமையான ஆயுதமாக டாலர்களையும் யூரோக்களையும் பெருமளவில் பரிவர்த்தனைக்கான விதியாக்கி உள்ளன; தங்களது இலக்கு நாடுகளுடனான பணப் பரிவர்த்தனைக்கு இதைக் கட்டாய விதியாக்கி, அந்த நாட்டு மக்களின் மீதும் அதன் பொருளாதாரத்தின் மீதும் பெரும் தாக்குதலைத் தொடுக்கின்றன; இதனால் சர்வதேச வங்கிகள் மூலமான பரிவர்த்தனையிலும் இலக்கு நாடுகளின் அந்நியச் செலாவணி சேமிப்பாகவும் அமெரிக்க டாலர்களும் ஐரோப்பாவின் யூரோக்களும் நிறுவப்பட்டு இலக்கு நாடுகளின் சேமிப்பில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இதில் முன்னிலை வகிக்கிறது.
இந்த பொருளாதார தடைகளின் வீச்சு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதன் பாதிப்புகளும் எல்லை இல்லாமல் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 1960-களில் 8% நாடுகள் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் 2012 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்த பொருளாதாரத் தடை 25% நாடுகளை பாதித்துள்ளது.
இந்த ஆய்வு 2021-ஆம் ஆண்டு வரையிலான நிலைமைகளை மட்டுமே ஆய்வு செய்து இருந்தாலும், இன்று இத்தகைய சீரழிவுகள் மிக அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காணலாம். பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட இலக்கு நாடுகளின் மக்கள் மத்தியில் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை பற்றிய அச்சம், மன அழுத்தம், அதிருப்தி ஆகியவை பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்கு இடைவிடாமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம்.
குறிப்பிட்ட இலக்கு நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்ப இந்த பொருளாதாரத் தடை வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, பணமதிப்பு, மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருள்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு மற்றும் அவற்றின் விலை, வாழ்வாதாரம், மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பு, அடிப்படைப் பொருள்களின் வரத்தில் தடை இதனால் ஏற்படும் அத்தியாவசிய உணவு மற்றும் பிற அடிப்படை பொருள்களின் குறைவான இருப்பு, மன அழுத்தம் மற்றும் எதற்குமே உறுதியில்லாத நிலைமை இப்படி கோடிக்கணக்கான மக்களை துன்ப துயரங்களில் ஆழ்த்தி அவர்களது ஆரோக்கியத்தில் மிகக் கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு கொடுமையான மரணங்களையும் அதன் திட்டப்படி ஏற்படுத்தி வருகிறது.
பொருளாதாரத் தடைகளால் மட்டுமின்றி, வெளிப்படையான போர் நடவடிக்கைகள், நேரடித் தாக்குதல்கள், மற்றும் நிதி, ஆயுத உதவிகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்குவது மற்றும் இலக்கு நாடுகளின் ராணுவத்திற்கு உதவி, மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மூலமும் இலக்கு நாடுகளில் கலவரம், மோதல்கள் என்று உள்நாட்டுப் போர்களையும் ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கி வருகின்றன. "தீவிரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் உலகம் முழுவதும் பேரழிவுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் 'பிரவுன் பல்கலைக் கழகத்தின் 'போர்களின் விலை' என்னும் ஆய்வு அறிக்கை, செப்டம்பர் 11, 2001-ஆம் வருடம் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்களின் மீது ஆப்கானிஸ்தானத்தின் அல்- கொய்தா அமைப்பு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக 'தீவிரவாதத்திற்கு எதிராக' என்று அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 9,20,000 மக்கள் உயிர் இழந்தனர் என்று வெளிப்படுத்தி உள்ளது;
இது போரின் நேரடி விளைவாக இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே. போரின் மறைமுகமான விளைவாக - குண்டு வீச்சுகளால் ஏற்பட்ட மருத்துவ மனைகளின் அழிவு மற்றும் சுகாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பால் உண்டான நோய்கள் மற்றும் ஆரோக்கிய குறைவால் ஏற்பட்ட மரணங்கள் பல மடங்கு அதிகம். இந்தப் போரினால் மறைமுகமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 36 முதல் 37 இலட்சம் ஆகும். எனவே நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் இந்தப் போரினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் ஏறக்குறைய 45 - 46 இலட்சம் ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை, நேரடியாகப் போர்க்களத்தில் ஏற்பட்ட மரணங்களை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
இந்த விவரங்கள், பல்வேறு ஆதாரங்களுடன் "போரை விட மரணங்கள் எவ்வாறு பெரிதாக இருக்கின்றன---- 11.9.2001 தாக்குதலுக்குப்பின் நடத்தப்பட்ட போர்களால் மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சீர்கேடு (How Death Outlives War ----The Reverberating Impact of the Post 9/11 Wars on Human Health) என்று பொருத்தமாக இந்த ஆய்வுக்குத் தலைப்பிடப்பட்டது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் -- சர்வதேச மற்றும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய நிர்வாக அமைப்பான வாட்சன் நிறுவனத்தின் இந்த ஆய்வின் இணை இயக்குனரான ஸ்டெஃபெனி சாவேல் என்னும் மானிடவியல் வல்லுநரால் எழுதப்பட்டு 2023 ---ஆம் வருடம் மே மாதத்தில் இதன் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை 2001, செப்டம்பர் 9ஆம் தேதி தாக்குதலுக்குப் பின் ஏற்பட்ட போரின் மறைமுகமான விளைவாக, மக்களுக்கான பொதுச் சேவைகள் அழிக்கப்பட்டதாலும், அந்த நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் பலஇலட்சம் மக்களின் மரணங்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இது முன்பு கொரியாவின் மீது அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல் போன்ற போர்கள், அவை முடிந்த பின்னும் அவற்றின் பின் விளைவாக நீண்ட காலம் உருவாக்கிய ஏராளமான மரணங்கள், போர்க்களத்தில் ஏற்பட்ட மரணங்களைவிட அதிகமானவை என்னும் உண்மையை உதாரணமாகக் குறிப்பிடுகின்றது.
11.9.2001 தாக்குதலுக்குப் பிறகு இதன் விளைவாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் நடந்த போர்களினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 45முதல் 46 இலட்சம் வரையாகும். மேலும் மிக மோசமாக ஊட்டச்சத்து குறைவினால் உடல் நலிந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்த நாடுகளில் மிக மிக அதிகம். மேலும் பசி, உணவுப் பற்றாக்குறை இந்த நாடுகளில் பரவியுள்ளது; இந்தச் சோகங்கள், துன்பங்கள், துயரங்கள் இன்னும் அங்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்தக் கணக்கெடுப்பு முக்கியமாக மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து நாடுகளின் மக்களின் நிலைமை பற்றிக் குறிப்பிட்டாலும், சோமாலியா மற்றும் லிபியா போன்ற நாடுகளின் சோகமான வறுமை நிறைந்த நிலைமைகளும் இந்த அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் நிறைந்த இன்றைய நிலைமையில் உணவில்லாமல் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு மிக மிக அவசியமான துயர் துடைப்பு நிவாரண நடவடிக்கைகளை தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் கட்டுப்பாடுகள் பாதிக்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும்,
போர் முடிந்த பிறகு, போரினால்
சீர் குலைக்கப்பட்ட நாடுகள் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தில் இருந்து மறைந்து
விடுகின்றன; உலகின்
கவனத்தை இழந்து விடுகின்றன என்ற உண்மையை இந்த ஆய்வு பதிவு செய்துள்ளது. போர் முடிந்த பிறகும் போரின் பின் விளைவுகளால்
மிக ஏராளமான மரணங்கள், ஊனங்கள்
மற்றும் துன்பங்கள் தொடர்ந்த போதும் சர்வதேசக்
கவனம் குறைந்து மறைந்து விடுகிறது. இந்த மரணங்களின் தொடர்ச்சி பல ஆண்டுகளுக்கு
நடந்து கொண்டே இருக்கும். உதாரணமாக, ஏகாதிபத்திய
நாடுகளால், அவர்களின் அடி வருடிகளால் மறுக்கப்பட்டாலும் கூட, இன்றும்
இராக்கில் பிறவிக் குறைபாடுகள் மற்றும் ஊனமாகக் குழந்தைகள் பிறப்பது மிகவும் அதிகம்.
போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும், அபாயகரமான
போர்த் தளவாடங்களாலும் குண்டுகளாலும் வெடிபொருளாலும்
ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளுக்கு இத்தகைய ஏராளமான உதாரணங்களை
நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று ஏறக்குறைய 23.9 கோடி மக்கள் வாழ்வின் அடிப்படைத் தேவைகளான உணவு, பாதுகாப்பான குடியிருப்பு, குடிநீர் மருத்துவ வசதி ஆகியவற்றை இழந்து எதிர்பார்த்து நிற்கிறார்கள்; இவர்கள் சமீபகாலங்களில் நடந்த போர்களாலும், பொருளாதாரத் தடைகளாலும் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதாரத் தடைகளால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெனிசுலாவின் மக்கள் வாழ்வைச் சீரழித்து வந்தது. அண்மையில் அமெரிக்க பாசிஸ்ட் ட்ரம்ப் சர்வதேச சட்டங்களைச் சிறிதும் மதிக்காமல் அந்த நாட்டின் தலைவர் மதுரோவையும், அவரது மனைவியையும் இரவோடு இரவாகக் கடத்தி வந்து தனது நாட்டில் சிறை வைத்துள்ளார். அதன் மூலம் அந்த நாட்டின் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக, வெனிசுலாவின் எண்ணையைச் சார்ந்திருந்த க்யூபாவில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
உற்பத்தியைத் தடுத்து, கெடுத்து, உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தி புரட்சிகர க்யூபாவைச் சிதைக்க அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சதி செய்து கொண்டிருக்கிறது. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் சீரழித்து வருகிறது. இன்று அமெரிக்கா கியூபாவின் மீதான தனது பொருளாதாரத் தடையை எரிசக்தியில் விரிவுபடுத்தி உள்ளது.
சட்டத்தை மதிக்காத பாசிஸ்ட் ட்ரம்ப்பின் காட்டாட்சியை அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்கள் அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் முதலாளிய வர்க்கங்கள் ட்ரம்ப்பைப் பகைத்துக் கொள்ளாமல் அவரால் எந்த வகையிலாவது இலாபம் அடைய முடியுமா எனக் கணக்குப் போட்டு வருகின்றன. இந்த நிலையில், ரசியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் அறுபது ஆண்டு காலமாகத் தாக்குப் பிடித்து வந்த க்யூபா, இன்று பிற நாடுகளின் ஆதரவு இல்லாமல் தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
நேரடிப் போர்களை மட்டும் அல்லாமல், பொருளாதாரத் தடைகளால் ஏகாதிபத்தியங்கள் மறைமுகமான போர்களையும் உலகம் எங்கும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. அதனால் பசியாலும், பட்டினியாலும், மருத்துவ வசதி கிடைக்காமலும், வாழ்வாதாரங்களை இழந்தும் மக்கள் உலகெங்கும் இலட்சக்கணக்கில் இறந்து வருகின்றனர்; பல இலட்சக்கணகான மக்கள் தங்களுடைய குழந்தைகளையும், குடும்பங்களையும் இழந்து அகதிகளாக நாடு விட்டு நாடு ஓட வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி வருகின்றனர். மனித குல விரோதிகளான இந்தக் கொடூரமான ஏகாதிபத்தியங்கள் புவிப் பரப்பில் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?
ஜெகதா
ஆதாரம்: Killing half a million
people in a year without waging war—the disastrous impact of sanctions by Bharat Dogra
Countercurrent
23/01/2026






பொருளாதாரத் தடைகளாலும், நேரடியான இராணுவ தலையீடுகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் எந்த அளவிற்கு உலக மக்கள் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் வருகிறார்கள் என்பதையும், அதற்கு மூல காரணமாக ஏகாதிபத்திய பேராசையும், நோக்கங்களும் இருக்கின்றன என்பதையும் இந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகளோடும், புள்ளி விவரங்களோடும் விளக்கியிருக்கிறது. நேரடி ஆக்கிரமிப்புப் போர்கள் மற்றும் தலையீடுகளும், பொருளாதாரத் தடைகளும், நெருக்குதல்களும் ஏகாதிபத்திய நாடுகளின் அப்பட்டமான வழி முறைகளாக இருப்பதையும் இக்கட்டுரை மூலம் நாம் அறிய முடிகிறது.
ReplyDeleteமுதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் முடிவு கட்டாமல் இந்த பேரழிவுகளுக்கும், பல இலட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் கொல்லப்படுவதற்கும் முடிவு கட்ட முடியாது என்பது உண்மை.