இந்தியாவின் அதிகார வர்க்கமும்,
முதலாளித்துவச் சுரண்டலும் ஒன்றுக்கொன்று துணையாக இணைந்து செயல்படும் சூழலை நாம் தொடர்ந்து காண்கிறோம்.
அரசின் கொள்கைகளாக முன்னேற்றம், வளர்ச்சி, எதிர்கால நலன், பாதுகாப்பு என்று அறிவிக்கப்படுகின்றன.
ஆனால், அதன் உண்மையான விளைவு கனிம வளங்களை, இயற்கையைச் சூறையாடுவது, உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எதிர்காலப் பாதுகாப்பு இன்மை,
தொடரும் வேலை இழப்பு, குறைந்த ஊதியம், அதிக வேலை நேரம் என்ற வடிவில் வெளிப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களும் கூட லாப நோக்கை முதன்மை இலக்காகக் கொண்டு இயங்கும் சூழலில், உழைப்பின் மீதான சுரண்டல் தீவிரப்படுத்தப்படுகின்றது.
ஒப்பந்த
வேலை, நிரந்தரமற்ற வேலை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நீக்கம்,
தொழிற்சங்க உரிமை மீதான கட்டுப்பாடு இவை அனைத்தும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல, ஒரு பெரிய பொருளாதார–அரசியல் அமைப்பின் நெருக்கடியின் அறிகுறிகள்.
இந்த அமைப்பில் லாபமே முதன்மை. மனித வாழ்வே நவீன அடிமை முறையாக மாறுகிறது. தொழிலாளர்களின் உழைப்பு வளர்ச்சியின் அடித்தளமாக இருந்தாலும், அந்த வளர்ச்சியின் பலன் அவர்களிடம் சேராமல், மூலதன உடைமையாளர்களிடம் குவிகின்றது.
கடந்த ஆண்டு மோடி அரசு அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் கலைத்து புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்தது. இந்தப் புதிய தொழிலாளர் சட்டம் பணிப் பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை, போராடும் உரிமை, கூட்டுப் பேர உரிமை, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளைப் பறித்துள்ளது. பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி, உயிர் நீத்து, போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகள் ஒரே அடியில் நீக்கப்பட்டுள்ளன.
இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கு தீவிரமாகி
வரும் சூழலில், தற்பொழுது அரியானாவில் உள்ள பொதுத்துறை நிறுவனத்தில் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
பானிபட்
அரியானா மாநிலம் பானிபட் என்ற மாவட்டத்தில் உள்ள பகோலி என்ற கிராமத்தில், பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் (Panipat Oil
Refinery), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indian Oil
Corporation Limited – IOCL) என்னும்
பொது நிறுவனத்தால் 1998 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இது IOCL நிறுவனத்தின் ஏழாவது சுத்திகரிப்பு நிறுவனமாகும். இது தென் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று.
தொடக்கத்தில் ஆண்டுக்கு 6 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக இருந்தது தற்போது 15 மில்லியன் மெட்ரிக்
டன் திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரியானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பகுதிகளுக்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்கள் இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றன.
இங்கு பெட்ரோல், டீசல், திரவ நிலை பெட்ரோலிய வாயு
(LPG), விமான எரிபொருள் மற்றும் பென்சீன், பியூட்டின் பாலிமர் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருள்களும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு இருபதாயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும்,
ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிப்ரவரி 21 ஆம் தேதி, தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயம் அடைந்து ஒரு காலை இழந்தார். இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரினர்.
ஆனால், நிர்வாகமோ அலட்சியம் காட்டியதால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கோபம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 23ஆம் தேதி காலை 11 மணியளவில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள், இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு
கேட்டும் மற்றும் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கோரிக்கைகளாக முன்வைத்தும் போராட்டத்தில் இறங்கினர்.
வேலை 12 மணி நேரமாக உள்ளது. ஆனால் ஊதியமோ 8 மணி நேர வேலையின் அடிப்படையில் தரப்படுகிறது,
மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு உள்ளது, சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை,
பி.எப் பிடித்தங்களில் மோசடி உள்ளது, அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவறை சரியாக பராமரிப்பது இல்லை மற்றும் கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் இல்லை. இந்தக் குறைகளை நீக்க
வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடி வந்த தொழிலாளர்கள் மீது நிர்வாகமும், அரசும் சேர்ந்து தடியடி நடத்தின. தொழிலாளர்களின் போராட்டத்தைக் கலைக்க மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை (Central Industrial
Security Force - CISF) துப்பாக்கிச் சூடு நடத்தியது.
போராட்டச் செய்திகள் பிற பகுதிகளுக்கு பரவுவதைத்
தடுக்க இணையச் சேவைகள்
முடக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அடையாளம் தெரியாத 2500 தொழிலாளர்களுக்கு எதிராகக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட
விபத்து மற்றும் சட்ட விதிமுறைகள் மீறல் ஆகியவற்றிற்குக் காரணமான நிர்வாகம் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் அரியானாவின் மாநில ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசும், போலீசும் எடுக்கவில்லை.
பிப்ரவரி 25 அன்று மாலை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொழிலாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யபட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக கிரேடு 'சி' க்குப் பதிலாக, கிரேடு 'ஏ' க்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும், இறப்பு மற்றும் காயங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, 8 மணி நேர வேலை, 8 மணிக்கும் அதிகமான வேலைக்கு இரட்டிப்பு சம்பளம், மாதத்தின் 7 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். வேலை நிறுத்தக் காலத்திற்கு ஊதிய வெட்டு கூடாது ஆகியன தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.
மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள முன்வந்தாலும்,
முக்கிய கோரிக்கையான, கிரேடு 'சி' வகைக்குள் மட்டுமே தொழிலாளர்களை வைத்து அதற்கான ஊதியத்தை வழங்க முடியும் என நிர்வாகம் உறுதியாக இருந்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
சமீப காலம் வரை கிரேடு பி ஊதியங்களை வழங்கி வந்த நிர்வாகம் அதனைக் குறைத்து கிரேடு சி வகை ஊதியங்களை வழங்கி வருகின்றது. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் கிரேடு ஏ வகை ஊதியத்தை வழங்காமல் தங்களின் ஊதியத்தை பின்னோக்கித் தள்ளியதால் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 26 ஆம் தேதி வியாழக்கிழமை வரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
IOCL
போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்டவை.
ஆனால், அவை நடைமுறையில் அதிகாரவர்க்கத்தின் சொத்துகளாக
இருக்கின்றன. இங்கு ஒப்பந்த முறையின் மூலம் நிரந்தர வேலை தவிர்க்கப்படுகிறது. குறைந்த ஊதியம், சுகாதாரமற்ற பணிச் சூழல், அதிக வேலை நேரம் ஆகியவை இங்கு விதியாக இருக்கின்றது தொழிற்சங்க உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. இங்கு அரசு, தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் பாதுகாவலராக இல்லாமல், லாப நோக்கில் செயல்படும் நிறுவனங்களுக்கும்,
முதலாளிகளுக்கும் சேவை செய்யும் அரசாக உள்ளது.
ஒரு விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த பின்னரும் போராடும் தொழிலாளர்கள் மீது வழக்கு போடும் போலீஸ் நிர்வாகத்தின் மீது அல்லது ஒப்பந்ததாரர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசு அமைப்புகள், சட்டம், போலீஸ் அனைத்தும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கான ஆளும் முதலாளிய வர்க்கத்தின் கருவிகள்தான் என்ற உண்மையை தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் தெளிவாக அறிந்து வருகின்றனர்..
சூரத்
இந்தப் போராட்ட அலையைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் அருகில் உள்ள ஹசிரா (Hazira) பகுதியில் உள்ள ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனத்தின் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் எல் அண்ட் டி நிறுவனத்தின்
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிப்ரவரி 26 அன்று தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு மற்றும் 10 மணி நேர வேலையைக் குறைத்து எட்டு மணி ஆக மாற்றித் தர வேண்டும் என்றும், கூடுதல் வேலை நேரத்திற்கு இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்றும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் நிர்வாகமோ அவர்களைப் போலீசார் உதவியுடன் தடியடி நடத்திக் கலைந்து போக அறிவுறுத்தினர்.
ஆனால் தொழிலாளர்களின் கோபமோ நிர்வாகத்திற்கு எதிராகத் திரும்பியதால் அங்குள்ள பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டன. போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தைக் கலைத்து 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளது.
நிர்வாகம் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை கூடத் தீர்த்து வைக்காமல் எதேச்சதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. இந்த ஒப்பந்த வேலை முறை, நிரந்தர வேலை வாய்ப்பைக் குறைக்கிறது. சமூகப் பாதுகாப்பை அழிக்கிறது. குறித்த கால வேலை முறை (Fixed-term
employment) போன்ற சட்ட மாற்றங்கள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றன.
எதிர் காலங்களில் நிரந்தர வேலை என்பது இல்லவே இல்லை என்பதை உருவாக்கி வருகின்றன.
சத்திஷ்கர்
சத்தீஷ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள லாரா மின் உற்பத்தி நிலையத்திலும் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது. எட்டுமணி நேர வேலை நாள், ஊதிய உயர்வு கோரிக்கைகளையே இங்கும் தொழிலாளர்கள் எழுப்பினர். என் டி பி சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் லாரா மின் நிலையத்தில் தொழிலாளர்களிடம்
14 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகின்றது.
எட்டு மணி நேரத்திற்கும் மேலான கூடுதல் வேலை நேரத்திற்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
பானிபட் மற்றும் சூரத் நகரங்களின் தொழிலாளர்கள் இதே கோரிக்கைகளாகப் போராடியதையடுத்து,
அந்தப் போராட்டத்தின் தாக்கம் இந்தத் தொழிலாளர்களிடமும் போராட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு இடங்களில் இந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு
ஆதரவு தெரிவித்துத் தொழிலாளர்கள் தங்களுடைய வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டங்களைத் தனித்தனிப் போராட்டங்களாகப் பார்க்க முடியாது. இவை அனைத்தும் ஒரே உண்மையை வெளிப்படுத்துகின்றன உழைக்கும் மக்களின் உழைப்பின் மீது கட்டப்பட்டுள்ளதுதான் இங்கு
நிலவி வரும் முதலாளியப் பொருளாதார அமைப்பு. இலாபத்தையும் மூலதனத்தையும் பெருக்குவதுதான்
இந்த அமைப்பின் ஒரே நோக்கம். அதற்காகவே தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறது.
தொழிலாளர்களின் உழைப்பே இலாபத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பில்
முதலாளிய வர்க்கம் நாளொரு மேனியாகக் கொழுத்து வருகிறது. ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கையோ
நாள்தோறும் நசிந்துவருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில்,
உழைக்கும் மக்களாகிய நாம் நம்மை ஒரு வர்க்கமாக வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். சிதறிய போராட்டங்களை ஒற்றுமையான சக்தியாக மாற்ற வேண்டும். தொழிலாளர்களின் மீதான கடுமையான சுரண்டல்களும்
ஒடுக்குமுறைகளும் ஓரிடத்தில் தொடங்கிய போராட்டங்கள் நாடு முழுவதும் பற்றிப் பரவ செய்கின்றன.
அதற்குத் தலைமை கொடுத்து அதனை அரசியல் போராட்டமாக, ஆட்சியதிகாரத்திற்கான போராட்டமாக
முன்னெடுத்து செல்லும் வலுவான பாட்டாளி வர்க்கக் கட்சி இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.
உழைக்கும் மக்களாகிய நமக்கு அடையாளம் சாதி, மதம், இனம், மொழி அல்ல, உழைப்புதான் நமது
அடையாளம். அந்த உழைப்பின் சக்தியை உணராமல், பிரிவினைகளில் சிக்கிக் கொண்டால், சுரண்டல் மேலும் வலுப்பெறும். ஆகையினால் தொழிலாளர்கள் எல்லா வேறுபாடுகளையும் கடந்து, உழைக்கும் வர்க்கம் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்தால் இந்தக் கூலி அடிமைச் சமூக அமைப்பைத்
தூக்கியெறிந்து சமத்துவ சமுதாயத்தைப் படைக்க முடியும்.
மாறன்





Comments
Post a Comment