Skip to main content

முதலாளிகளின் நலன்களுக்காக விவசாயிகளின் நலன்களைப் பலியிடும் மோடியின் அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம்!

 

6.02.26-அன்று அறிவிக்கப்பட்ட இந்தியா அமெரிக்கா வணிக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும் என்ற பெரும் அச்சத்தை இந்திய விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம வேதியியல் பொருள்கள் மற்றும் குறிப்பிட்ட இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா 18% வரி விதிக்கும்; ஆனால் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அமெரிக்கத் தொழில்துறை பொருள்கள், உணவு மற்றும் விவசாயப் பொருள்களுக்கு மிகவும் குறைவான அளவு அல்லது 0% வரி முதலிய பல சலுகைகளையும் நம் நாடு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெளிவாக உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க பொருள்களை வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. 

ஆனால், அமெரிக்கா அதிபர் இந்த ஒப்பந்தத்தை அறிவித்த 40 நிமிடங்கள் கழித்து மோடி இந்த ஒப்பந்தத்தைக் கொண்டாடி இது இந்தியாவிற்கான புதிய வாய்ப்புகளையும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அறிவித்தார். ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா அமெரிக்க பொருள்களின் இறக்குமதிக்கு கொடுத்துள்ள வரிச்சலுகைகள், அதே சமயத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருள்களின் மீது நம் நாடு செலுத்த வேண்டிய 18% வரி மற்றும் பிற விவரங்களை மக்களுக்கு அறிவிக்கவில்லை. 

ஆனால் இந்திய விவசாய சங்கங்கள், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் விவசாயத் துறை சார்ந்த பெரும் முதலாளிகளிடம் இந்தியா சரணடைந்துள்ளதாக அறிவிக்கின்றன; "இந்தியத் தொழில் துறையும் விவசாயமும் இந்தியச் சந்தையில் அமெரிக்காவின் மலிவான பொருட்களின் இறக்குமதியால் மிகப்பெரிய அழிவை சந்திக்கும்" என்று இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பான "சம்யுக்த் கிசான் மோர்ச்சா", இந்த ஒப்பந்தத்தைப் பற்றி அறிவித்துள்ளது. பாதாம், வால்நட் போன்ற கொட்டைகள்,, சில வகை பழங்கள், சோயா எண்ணெய், திராட்சை ரசம், மது வகைகள் மற்றும் "சில பொருட்கள்" (இவை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை) ஆகியவை அமெரிக்காவில் இருந்து நம் நாட்டுக்கு 18% வரியுடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களாகும். இந்தியச் சந்தையில் கொட்டைகளுக்கு தேவை அதிகம் இருப்பதால் இந்த இறக்குமதி உள்நாட்டு உற்பத்தியை, விற்பனையைப் பாதிக்காது என்று விவசாய அமைச்சகத்தின் முன்னாள் உயர் அதிகாரியான சிராஜ் ஹுசைன் கூறுகிறார்; ஆனால் மிக மலிவான விலை உள்ள அமெரிக்க ஆப்பிள்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களை, விவசாயிகளை மிகப் பெரிதும் பாதிக்கும். மேலும் மிக மிகக் குறைவான வரிகளுடன் இறக்குமதி ஆகும் மது உற்பத்திக்கான உலர்ந்த தானியங்கள் மற்றும் கால்நடை தீவனமான சிவப்புச் சோளம் ஆகியவை நம் நாட்டில் சோயா பீன்ஸ் உற்பத்தியைக் குறைக்கும். இதனால் சோயா பீன்ஸ் உற்பத்தி செய்யும் மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். இந்திய விவசாயம் சிறு நில உடைமையாளர்களைப் பெரும் எண்ணிக்கையில் கொண்டுள்ளது. பெரிய அளவில் மானியங்கள் அளிக்கப்படும் அமெரிக்க விவசாயத் துறையுடன் உண்மையில் இந்திய விவசாயம் போட்டியிடவே முடியாது என்று மத்திய விவசாய துறையின் முன்னாள் உயர் அதிகாரியான சிராஜ் உசைன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி குறைந்தபட்ச அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் மிகக் குறைந்த விலையில் அமெரிக்கா ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படுவதும் இந்தியச் சந்தையில் வெளிநாட்டுப் போட்டியை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு அமைச்சரும் அதிகாரிகளும் கூறுகிறார்கள்; 

ஆனால் 2012--ஆம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட அமெரிக்க--கொலம்பியா வியாபாரத்தை அதிகரிக்கும் ஒப்பந்தம் (TPA), கொலம்பிய சந்தையில் மிகக் குறைந்த விலையில் மிகக் குறைந்த வரியுடன் வந்த அமெரிக்காவின் மக்காச்சோளம் அங்கு வெள்ளமாகப் பெருகுவதை கொலம்பிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை; 2012ஆம் வருடம் 5.3% இருந்த அமெரிக்க மக்காச்சோளத்தின் வரவு ஐந்தே ஆண்டுகளில், 2017 ஆம் ஆண்டில் 99.7% ஆக அமெரிக்காவின் இறக்குமதியை அதிகரித்தது; மானியங்களின் உதவியுடன் மிகக்குறைந்த செலவில் அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்த மக்காச்சோளம், மேலும் மேலும் கொலம்பிய சந்தையில் வந்து கொண்டிருந்த அதே வேளையில் கொலம்பிய விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு உள்ளானார்கள்; இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொலம்பியா அரசாங்கத்தால் அமெரிக்காவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கச் சுரண்டலுக்கு இது ஒரு உதாரணமாகும். இதே நிலைமை இந்திய விவசாயிகளுக்கு வராது என்பதற்கான உத்தரவாதம் எதுவும்இல்லை. 

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தானியங்கள், மசாலாக்கள், பால் பொருட்கள், கோழி, வாத்து போன்ற பண்ணைப் பறவைகள் மற்றும் இறைச்சி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் போன்ற முக்கியமானவற்றில் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று கூறும் அதே வேளையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறார்; தீவிரமான சந்தைத் தேடலில் உள்ள மரபணு மாற்றப்பட்ட அமெரிக்காவின் சோயா பீன்ஸ் இந்தப் பட்டியலில் முக்கியமாக உள்ளது. அதனால் மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தின் சோயாபீன்ஸ் விளைவிக்கும் நமது விவசாயிகளின் வருங்கால பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 

பருத்தி, சோயா எண்ணெய், எத்தனால் மற்றும் பாதாம் பருப்பு போன்ற பலவிதமான பருப்புகள் முன்பே இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்த போதிலும் இவற்றிற்கான வரி இந்திய அரசாங்கத்தால் கொஞ்சம் குறைக்கப்பட்டதாலேயே இவற்றின் இறக்குமதி பல மடங்கு அதிகரித்துள்ளது; இந்த ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்த போதே இவற்றின் இறக்குமதி 34%-ஆக அதிகரித்தது; அமெரிக்க விவசாயத்துறையின் வருமானம் 2.13 பில்லியனில் இருந்து 2.85 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 

உதாரணமாக, 

1) 2025-ஆம் ஆண்டின் ஜனவரியில் இருந்து நவம்பர் வரை பாதாம், பிஸ்தா ஆகியவற்றின் இறக்குமதி 32.2% அதிகரித்து 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்காவிற்கு வழங்கி உள்ளது. 

2) இறக்குமதி வரியற்ற அமெரிக்க பருத்தியால் அந்த நாட்டுக்கு வருமானம் 2025 ஆகஸ்டில் இருந்து டிசம்பர் வரையில் 29 மில்லியனில் இருந்து 378 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது; இது ஒவ்வொரு வருடமும் மேலும் அதிகரிக்கும்.  

3) 31, மே மாதம் 2025 ஆம் ஆண்டு கச்சா சோயா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 27.5% லி ருந்து 16.5% -- ஆக குறைத்ததால், அமெரிக்காவின் இந்த இறக்குமதி 0--விலிருந்து 212 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. பருத்தி மற்றும் சோயாபீன் கச்சா எண்ணெய் ஆகிய அமெரிக்க விவசாய பொருட்களின் அதிகமான இறக்குமதி இந்த ஒப்பந்தம் போடப்படும் முன்பே ட்ரம்பை சந்தோசப்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கத்தால் மேற்கொண்ட நடவடிக்கைகளாகும்.

இப்போது இந்த ஒப்பந்தத்தால் வரி மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி "இன்னும் ஏராளமான அமெரிக்கப் பொருள்கள் அடுத்து வரும் வருடங்களில் இந்தியாவிற்கு இறக்குமதியாகும்" என்ற இந்திய விவசாயிகள் பற்றிய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அச்சம் உண்மையான நிலைமைகளின் அடிப்படையில் ஆனது; வெறும் கற்பனையில் உதித்த அர்த்தமற்ற, அடிப்படையற்ற அச்சம் இல்லை என்பது தெளிவாகும். 

அமெரிக்காவின் விவசாயத்துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ், இந்த ஒப்பந்தத்தால், "ஏராளமான அமெரிக்க விவசாயப் பொருள்கள், மிகப்பெரிய இந்தியச் சந்தையை நிரப்பும்; அதிகரிக்கப்பட்ட விலையால் அமெரிக்க கிராமங்களுக்கு ஏராளமான வருமானம் கிடைக்கும். இதன்மூலம் இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலர்கள் குறையும்”. என்று அறிவித்துள்ளார். 

தற்போது ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 79 பில்லியன் முதல் 87 பில்லியன் டாலர் வரையிலான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அமெரிக்காவிலிருந்து 39 பில்லியன் முதல் 41.5 பில்லியன் டாலர் வரையிலான பொருட்கள் இறக்குமதி ஆகின்றன. இந்தியாவிற்கு 40 முதல் 45 பில்லியன் டாலர் வரையிலான வர்த்தக மிகை இப்பொழுது உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி ஆண்டு தோறும் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதன்படி இனி அமெரிக்கவினுடனான வர்த்தகத்தில் வர்த்தகப் பற்றாக் குறையைத்தான் இந்தியா கொண்டிருக்கும். 

2024 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அமெரிக்கா வெறும் 18.8 லட்சம் விவசாயக் குடும்பங்களைக் கொண்டுள்ளது; ஆனால் 2015 ஆம் ஆண்டின் இந்திய விவசாயத் துறையின் கணக்கெடுப்பின்படியே இந்தியாவில் 14. 65 கோடி நேரடியாக செயல்படும் விவசாயக் குடும்பங்கள் உள்ளன; இந்தியாவின் 48% வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 18.8 லட்சம் குடும்பங்களின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கப் பாடுபடும்போது இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை சிதைக்கும், விவசாயத்துடன் இணைந்த 65% இந்தியர்களின் நலனை அழிக்கும் இந்த ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்டது கீழ்த்தரமானது, வெட்கக்கேடானது. 

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் பருத்தி, சோயா பீன்ஸ், மக்காச்சோளம் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்; ஏனென்றால் ஏராளமான மானியங்களுடன் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்க விவசாயப் பொருள்கள் கோடிக்கணக்கான சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் குடும்பங்களைச் சீரழிக்கும். 

2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் பிரதம மந்திரி மோடி, செங்கோட்டையில் கொடியேற்றும்போது, "இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க, எந்த நிலைமையிலும் அனைத்து வகைகளிலும் உறுதியாக இருப்பேன்" என்று அறிவித்தார்; ஆனால் இப்போது துளியும் வெட்கமில்லாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக அமெரிக்கப் பொருள்களுக்கு 0% வரி என்பதை ஏற்றுக் கொண்டு, அமெரிக்க விவசாயப் பொருள்கள் இந்திய சந்தைகளில் வெள்ளமாகப் பெருகி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையை அழிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்; இந்திய விவசாயிகள் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட மோடியை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 

டிரம்ப்பின் தன்னிச்சையான வரி விதிப்புகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. அந்த வழக்குகளின் முடிவுகளுக்குக் காத்திருக்காமல் அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தை டிரம்ப்பின் வலுக்காட்டாயத்தால் மோடியின் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்பொழுது அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் அமெரிக்கக் காங்கிரசின் (பாராளுமன்றம்) ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக விதித்த இறக்குமதி வரிகள் செல்லாது எனத் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் டிரம்ப்போ இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் இருக்காது என்கின்றார். இந்த நிலையில் மோடியின் அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அமெரிக்க- இந்திய ஒப்பந்தத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுமா, இல்லை மறுக்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மோடியின் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் உள்ள முதலாளியப் பண்ணையார்கள், அமெரிக்கா மற்றும் இந்திய கார்ப்பரேட் மற்றும் பெரும் வியாபார நிறுவனங்களின் இலாப வேட்டைக்கானது; மானியங்களால் விலை மலிவாக விளைவிக்கப்பட்ட அமெரிக்கா விவசாயப் பொருள்களின் போட்டி ஏற்கனவே பெரும் சிக்கலில் உள்ள இந்திய விவசாயத்தை மேலும் கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்கும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கை இங்கு அழிக்கப்படும். இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 85 விழுக்காட்டினர் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள்தான். இந்த ஒப்பந்தத்தினால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான். அவர்கள் தம்மிடம் வைத்துள்ள சிறு நிலத்தையும் இழந்து ஓட்டாண்டியாக்கப்படுவார்கள். இங்குள்ள முதலாளிய வர்க்கத்தின் அரசின் நோக்கம் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் நலன்களைப் பலி கொடுத்து கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தை மென்மேலும் பெருக்குவதுதான். சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் நலன்களை முதலாளி வர்க்கத்தின் அரசு காப்பாற்றாது. அவர்கள் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், இங்கு அதிகாரத்தில் உள்ள முதலாளிய வர்க்க அரசுக்குப் பதிலாக, உழைக்கும் மக்களின் நலன்களைக் காக்கக் கூடிய ஒரு சோசலிச அரசு உருவாக வேண்டும். அத்தகைய அரசை உருவாக்க அவர்கள் தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்து ஓரணி திரள வேண்டும்.

 

கவிதா

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...