Skip to main content

முதலாளிகளுக்குச் செய்து வரும் சேவைக்காக மோடிக்குக் கிடைத்த இஸ்ரேலின் உயரிய விருது!

 

சர்வதேச அதிகார வர்க்கத்தினர், அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் ஆகியோரின் பாலியல் கொடுமைக்கு சிறுமிகளை இரையாக்கி காரியம் சாதித்து வந்த அதிகாரத் தரகன் அமெரிக்காவின் எப்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்து நேர்மை நிறைந்த வலிமை மிக்க” மோடி மௌனம் காக்கிறார். 2014 - 17 வருடங்களில், இன்றைய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் புரி சிங்கும் அனில் அம்பானியும் எப்ஸ்டீனுடன் அன்றைய ஆளும் கட்சியான பிஜேபியின் ராஜ்ய ரீதியான உறவுகள், வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பது பற்றி விவாதித்து முடிவெடுத்தார்கள். இதன் அடிப்படையிலேயே இன்று மோடி அரசாங்கம் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் மோடியால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கான உறுதி செய்யப்பட்ட நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகும் கூட பிரதமர் மோடி மௌனம் காக்கிறார். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. 

வியாபார உறவுகள் தொடர்ந்த போதும் கூட, தங்கள் நாட்டு மக்களும் உலக மக்களும் தங்களைப் பற்றி கொண்டுள்ள பிம்பம் உடைந்து விடுமோ என்ற அச்சத்தால், பாலஸ்தீனத்தின் காசாவில் கொடூரமாக இனப் படுகொலை செய்த இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவை நேரில் சந்திப்பதையோ, இஸ்ரேலுக்கு செல்வதையோ பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தவிர்க்கும் நிலைமையில் இந்திய பிரதமர் மோடி, சில மாதங்களில் தேர்தலை எதிர் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அவருடைய "தனிப்பட்ட" அழைப்பின் பேரில் சென்றார்.  

பாலஸ்தீனக் காசாவில் எழுபதாயிரத்திற்கும் மேல் மக்களைக் கொன்று குவித்த, இலட்சக்கணக்கான மக்களை ஊனமாக்கிய யூத இன வெறியன், பாசிஸ்ட் நெதன்யாகுவின் அழைப்பில் சென்ற மோடி அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. அதற்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவோம்’ எனக் கூறி விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறார். இவ்வாறு அவர் பேசுவதற்கு என்ன காரணம்? இந்திய முதலாளி அதானி இஸ்ரேலில் குத்தகைக்கு எடுத்துள்ள ஹைபா துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் பெரும் இலாபமும், இந்தியாவில் உள்ள அதானி குழுமத்திற்கும் இஸ்ரேலுக்கும் சொந்தமான ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலையில் கிடைக்கும் பெரும் இலாபமும்தான் அதற்குக் காரணம்.

2022ல் அதானியின் குழுமம் இஸ்ரேலில் உள்ள ஹைபா துறைமுகத்தில் 120 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. அந்தத் துறைமுகத்தின் மொத்த முதலீட்டில் 70 விழுக்காட்டுப் பங்கை அது கொண்டுள்ளது. இஸ்ரேலின் 30 விழுக்காடு ஏற்றுமதி-இறக்குமதி இந்தத் துறைமுகத்தின் வழியாகவே நடக்கிறது. 

மேலும், இந்தியாவில் அதானி குழுமத்திற்கும் இஸ்ரேலின் ஆயுதத் தொழிற்சாலைகள் (Israel Weapon Industries) குழுமத்திற்கும் சொந்தமான ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அது ஆயுத விற்பனை மூலம் இலாபம் குவித்து வருகிறது. 

இவ்வாறு இந்திய முதலாளிகளும் இஸ்ரேல் முதலாளிகளும் கூட்டுத் தொழில்கள் மூலம் பெரும் இலாபம் சம்பாதித்து வரும் நிலையில், அதற்குத் தடையாக இருக்கும் அனைவருமே மோடிக்கு பயங்கரவாதிகள்தான். 

இரண்டு நாடுகளைச் சேர்ந்த முதலாளிகளின் நலன்களுக்காக மோடி செய்து வரும் சேவைக்காகவே இஸ்ரேல் அந்த நாட்டின் உயரிய விருதை அளித்துக் கவுரவித்துள்ளது. பிரதமர் மோடி தனது X இணைய தளத்தில், "இஸ்ரேலின் இந்த உயர்ந்த விருதை அடக்கத்துடனும் ஆழமான நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்; இது இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறுதியான நிலையான நட்பின் வெளிப்பாடாகும்; இது இரண்டு நாடுகளையும் வழி நடத்தும் மதிப்பீடுகளை உணர்த்துவதாகும்" என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இது இரண்டு நாடுகளின் முதலாளிகளுக்கு இடையிலான இலாபத்தின் அடிப்படையிலான நட்பின் உயர்ந்த வெளிப்பாடு ஆகும். 

உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் மோடிக்கு தமது உயரிய விருதுகளை அளித்து வருகின்றன. மோடியின் தனிச் சிறப்புகளுக்காகவோ, சிறந்த ஆற்றல்களுக்காகவோ அந்த விருதுகள் அளிக்கப்படுவதில்லை. உலகில் அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியா என்ற பெரிய நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையிலே அந்த விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா என்ற பெரிய சந்தையில் தங்கள் பொருட்களை விற்கவும், முதலீடு செய்யவும், அதன் மூலம் கொழுத்த இலாபம் சம்பாதிக்கவும் அந்தந்த நாட்டு முதலாளிகள் விரும்புகின்றனர். அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தக் கூடிய அதிகாரத்தில் மோடி இருக்கின்றார். அவரைப் பெருமைப்படுத்தி, மனங்குளிர வைப்பதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அந்தந்த நாட்டு முதலாளிகள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றனர். அதற்காக அவர்கள் அளிக்கும் கையூட்டுகள்தான் இந்த விருதுகள். அவ்வாறுதான் மோடிக்கு இஸ்ரேல் முதலாளிகளின் அரசும் இந்த விருதைக் கொடுத்துள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து விட்டு இங்குள்ள பாஜகவினரும் சங்கிகளும் ஏதோ மோடியின் ஒப்பற்ற பண்புகளுக்கும் திறமைகளுக்கும் அந்த விருதுகள் கொடுக்கப்படுவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். 

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்ரேலின் யூத இனவெறிப் பாசிஸ்டுகளும் இரானின் மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசிக் கொன்று வருவதோடு, அந்த நாட்டின் தலைவர்களையும் கொலை செய்து வருகின்றனர். ஆனாலும் மோடியின் அரசாங்கம் இந்த அநியாயத்தை எதிர்த்துச் சிறிதும் வாய் திறக்கவேவில்லை; மோடியின் இஸ்ரேல் பயணமும் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவிப்பதே. இத்தகைய சித்தாந்தங்களும் ராஜதந்திர நடவடிக்கைகளும் சமாதானத்தை விரும்பும், மேலாதிக்கங்களின் அனைத்துப் போர்களையும் எதிர்க்கும் இந்திய மக்களின் கருத்தையோ நிலைப்பாட்டையோ அடிப்படையாகக் கொண்டதல்ல.

அரசியல் சந்தர்ப்பவாதம், தந்திரங்கள், ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகளுடன் இணைந்து செயல்படுவது, அவற்றின் அநீதியான, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்க்காமல் மவுனம் சாதிப்பது ஆகியவற்றின் மூலம் எப்படியாவது தனது இலாபத்தை வளர்த்துக் கொள்ள நினைக்கிறது இந்திய முதலாளி வர்க்கம். அதன் திறமையான பிரதிநிதியாக மோடி இருக்கின்றார். இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நீதி, நேர்மை, அறம் என்பது எல்லாம் ஒரு பொருட்டல்ல. கார்ப்போரேட் முதலாளிகளுக்குத் தேவை இலாபம் மட்டுமே. 

உலக அமைதி, மனித விழுமியங்கள் மற்றும் நமது நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற உலகின் அனைத்து விதமான போர்களுக்கும் எதிராக, அனைத்து மேலாதிக்கங்கள், காலனியவாதிகள், ஜியோனிஸ்ட்டுகள் மற்றும் இந்துத்துவா அரசியலுக்கு எதிராக இன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மற்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டி, கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் அனைத்து ஏகாதிபத்திய, மேலாதிக்கங்களுக்கும் மத, இன வெறி பிடித்த பாசிஸ்ட்டுகளுக்கும் எதிராக உழைக்கும் வர்க்கம் மட்டுமே சமரசம் இல்லாத உறுதியான போராட்டத்தை மேற்கொள்ள முடியும்.

-ஜெகதா

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...