Skip to main content

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

 

1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவற்றை அதிகரிக்கும் எனவும் உறுதிமொழி கொடுத்தது. இது மட்டுமல்லாமல் வேறு பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வந்தது. அதிமுகவும் ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், திமுகவும் அதிமுகவும் வாக்குகளைப் பெற வாக்களர்களுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்தன. ஆனால் தவெக வாக்காளர்களுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இருந்தும் மக்கள் தவெகவிற்கு பெரும்பான்மையாக வாக்களித்துள்ளார்கள்.

விஜய்க்கு வாக்களித்த மக்களில் பலரும் கூறும் பதில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று கருதியும், ஒரு மாற்றம் வேண்டும் எனக் கருதியும் விஜய்க்கு வாக்களித்தோம் என்கின்றனர். என்ன மாற்றத்தை விரும்புகின்றீர்கள்? என்று கேட்டால் அவர்களுக்கு தெளிவான பதில் கூறத் தெரியவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகள் மீதும் மக்கள் மனதில் ஆழ் மனதில் ஊறியிருந்த அதிருப்தியும் வெறுப்புமே விஜய்க்கு வாக்களிக்க வைத்துள்ளன.

கடந்த அறுபதாண்டு காலம் திமுக, அதிமுக என்று மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்து வந்தபோதும் அடித்தட்டு உழைக்கும் மக்களும் கீழ் நடுத்தர மக்களும் கடினமான வாழ்நிலையிலேயே இருக்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் வீட்டு வாடகை உயர்வும் அவர்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. ஆட்சியாளர்களின் ஆதரவுடன் மணல் குவாரி, கல் குவாரி மாஃபியாக்கள் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவது பற்றிச் சிறிதும் கவலையின்றி, இயற்கை வளங்களைச் சூறையாடி கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றனர். வீட்டு மனை (real estate) முதலாளிகளும் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து பொதுச் சொத்துகளையும், வலிமையற்றவர்களின் சொத்துகளையும் அபகரித்து வருகின்றனர். ஆட்சியாளர்கள் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர். வீதிக்கு வீதி சாராயக் கடைகளைத் திறந்து உழைக்கும் மக்களின் குடும்பங்களைச் சிதைத்து வருகின்றனர்.

இவர்களுடைய அரசாங்கம் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் தொழிலாளர்களையும், தூய்மைப் பணியாளர்களையும், விவசாயிகளையும், செவிலியர்களையும், அரசு ஊழியர்களையும் அடக்கி ஒடுக்கி வருகின்றன. இவர்கள் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் இலஞ்சமும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. மேலும், மக்களைச் சிறிதும் மதிக்காத உள்ளூர் கட்சித் தலைவர்களின் ஆணவமும், அதிகாரப் போக்குகளும், கட்டப் பஞ்சாயத்துகளும் மக்கள் மத்தியில் இக்கட்சிகள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில்தான் விஜய்யின் வருகையை மாற்றத்திற்கான ஒரு நல்ல வாய்ப்பாக மக்கள் கருதினர். விஜய், திமுக ஒரு தீய சக்தி, ஊழல் கட்சி, அது ஒரு குடும்ப ஆதிக்கத்தைக் கொண்ட கட்சி’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார். ‘தனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக’ என்றார். திராவிட இயக்கக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னுடைய கட்சி சிறந்த ஆட்சியை வழங்கும் என்று உறுதி அளித்தார்.

ஏற்கனவே சினிமா என்ற சக்திமிக்க ஊடகத்தால் விஜய் நேர்மையானவர், தூய்மையானவர், துணிச்சலானவர், அநீதிகளைக் கண்டு எதிர்த்துப் போராடுபவர், அதிகார வர்க்கத்தினரையும், ஊழல் அரசியல்வாதிகளையும் துணிச்சலுடன் எதிர்கொள்பவர், திமிர் பிடித்த பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் அடிபணியாதவர், அன்பு மிக்க சகோதரன், பாசம் மிக்க மகன், எந்தக் கஷ்டத்திலும் காதலியைக் கைவிடாத காதலன், குழந்தைகளிடம் அன்பு கொண்ட தாய் மாமா, உற்ற நண்பன் போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு மாமனிதன் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது மக்களை மிகவும் கவரக் கூடியதாக இருந்தது. விஜயை தங்களுடைய சகோதரனாக, நண்பனாக, காதலனாக, அன்பு மிக்க மாமாவாக மக்களில் குழந்தைகள் முதல் பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக விஜய்யைக் கற்பிதம் செய்து கொண்டனர். தங்களுடைய பிரச்சினைகளில் அக்கறை கொண்ட ஒரு குடும்ப உறுப்பினர், அதே சமயத்தில் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய மாமனிதர் என்று மக்கள் கருதினர். அவருடைய பிரச்சாரங்களும் மக்களின் உணர்வைத் தொடும் வகையில் ‘உங்களுடைய சகோதரன், குழந்தைகளின் மாமா, உங்கள் மகன்’ என்று கட்டமைக்கப்பட்டன.

திமுக, அதிமுக கட்சிகளைப் போல பெரிய அளவுக்கு தவெக பிரச்சாரம் செய்யவில்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை. தமது தொகுதியில் நிற்கும் தவெக வேட்பாளர் யார் என்பது கூட மக்களுக்குத் தெரியாது. ‘எல்லாத் தொகுதிகளிலும் தானே நிற்பதாகக் கருதி மக்கள் விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’ என விஜய் பிரச்சாரம் செய்தார். முதலாளிய ஊடகங்கள் அனைத்தும் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் கதாநாயகத் தன்மையுடன் சித்தரித்தன. தவெக கட்சியின் தகவல் தொடர்பு பிரிவைச் சேர்ந்த “மெய்நிகர் வீரர்கள்” (virtual warriors) மூலம் Facebook, Instagram, Whatsapp, Youtube ஆகிய சமூக ஊடகங்கள் வழியாக தமிழ் நாட்டின் சமையலறைகள் உட்பட அனைத்து இடங்களிலும் தவெகவின் பிரச்சாரமும் விசில் சின்னமும் கொண்டு செல்லப்பட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் தவெகவின் ஆதரவாளர்களாக மாற்றியது. தமது தொகுதியில் போட்டியிடும் தவெக-வின் வேட்பாளரின் பெயர் தெரியாது, முகம் தெரியாது, மதம் தெரியாது, சாதி தெரியாது. மக்களுக்குத் தெரிந்தது எல்லாம் விஜய்யின் முகமும் விசில் சின்னமும்தான். தவெக தனிப் பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சமூக ஊடகத்தின் மூலமாக அந்தக் கட்சியின் பிரச்சாரம் வலிமை வாய்ந்ததாக இருந்தது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும் வெறுப்பும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையும், விஜய் பற்றிக் கட்டப்பட்டுள்ள மாமனிதன் என்ற பிம்பமும், சமூக ஊடகங்களில் வலிமையாகச் செய்யப்பட்ட தவெகவின் பிரச்சாரமும் விஜய்யே எதிர்பாரத வெற்றியை அக்கட்சிக்கு அளித்துள்ளது. 107 இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக அது உள்ளது.

‘இங்கு நிலவி வருவது ஒரு ஜனநாயக அமைப்பு. மக்களுக்கான அமைப்பு. ஆனால் ஆட்சிக்கு வந்த திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள். அதன் தலைவர்களும் அதில் உள்ள மற்றவர்களும் ஊழல் பேர்வழிகள். அதனால்தான் தங்களுக்கு எதுவும் செய்வதில்லை’ என மக்கள் கருதுகின்றனர். அதனால் விஜய் போன்ற நல்லவர் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை வழங்குவார். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவார் என மக்கள் கருதி விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.

ஆனால் இங்கு உண்மையில் நிலவி வருவது நிரந்தரமான அதிகாரவர்க்கத்தைக் கொண்ட ஒரு அதிகாரவர்க்க ஆட்சிமுறையாகும். அதிகார வர்க்கத்தைக் கொண்டுதான் இங்கு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அதிகார வர்க்கம் முதலாளிய வர்க்கத்தின் நலன்களுக்காக சேவை செய்து வருகிறது. வேலை இல்லாப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, ஊழல் ஆகிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது முதலாளி வர்க்கத்தின் சுரண்டல்தான். இந்த முதலாளியச் சுரண்டலை ஒழிக்காமல் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. முதலாளியச் சுரண்டலை அதிகார வர்க்கம் கட்டிக் காப்பாற்றி வருகிறது. அதிகாரவர்க்க ஆட்சிமுறையையும் முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலையும் மக்களுக்குத் தெரியாமல் மறைக்கவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சிதான் இங்கு முழுமையான அதிகாரத்துடன் ஆட்சி நடத்துவதாக ஒரு நாடகம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

உண்மை என்னவென்றால் ஆட்சியில் இருக்கும் கட்சி முதலாளி வர்க்கத்திற்குத் தேவையான சட்டங்களை இயற்றுகிறது. அதிகார வர்க்கத்தைக் கொண்டு அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதிகார வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது. முதலாளிய வர்க்கத்தின் கொள்ளையில் ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும் பங்கு கொள்கின்றன. இவ்வாறு முதலாளி வர்க்கம், அதிகார வர்க்கம், ஆளும் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான முக்கூட்டே இலஞ்சத்திற்கும் ஊழலுக்கும் காரணமாக அமைகிறது. எனவே முதலாளி வர்க்கச் சுரண்டலை ஒழிக்காமல், அந்தச் சுரண்டலைக் கட்டி காப்பாற்றி வரும் இந்த அதிகார வர்க்க அமைப்பை மாற்றாமல் ஊழலையும், இலஞ்ச லாவண்யங்களையும் ஒழிக்க முடியாது. இந்த அமைப்பு செயல்படும் விதத்தை மக்கள் அறியாததால்தான், நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் எத்தகைய நேர்மையானவர்கள் வந்தாலும் இந்த ஆட்சி அமைப்பு முறையை மாற்றாமல் ஊழலை ஒழித்து விட முடியாது என்பதுதான் உண்மை.

ஆட்சியில் உள்ள கட்சி மக்களின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் உள்ளாகும்போது தனக்குச் சேவை செய்யவும், மக்களை ஏமாற்றவும் முதலாளி வர்க்கத்திற்கு புதிய முகமூடி தேவைப்படுகிறது. அவ்வாறு முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்ய ஊடகங்களால் மக்களின் இசைவுடன் தயாரிக்கப்பட்ட முகமூடிதான் விஜய்.

ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள விஜய்யின் பிம்பம் உண்மையானதல்ல. மக்கள் கருதுவது போல அவர் நேர்மையானவரல்ல. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஊதியமாகப் பெறும் அவர், அவற்றிற்கு உண்மையான கணக்குக் காட்டுவதில்லை. தனது உண்மையான வருமானத்தைக் கூறாமல் வரியை ஏய்த்து, கருப்புப் பணமாக பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வரும் முதலாளி அவர். சட்டத்திற்கு முன்பு நேர்மையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு சிறிதும் இல்லாதவர். இவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பார் என்று நம்புவர்களை விட ஏமாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

மேலும், இவருடைய கட்சி ஜனநாயகப் பண்பு கொண்ட அமைப்பல்ல. அது கட்டுப்பாடற்ற கும்பலைக் கொண்ட கட்சி; மக்கள் நலன்களின் மீது அக்கறை கொண்ட கட்சி அல்ல. மக்களின் வாக்குகளைக் கவர்ந்து ஆட்சியில் அமர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் சுயநலவாதிகளையும் உதிரிகளையும் கொண்ட கட்சி அது. கட்சியில் விஜய்யின் எதேச்சதிகாரமே நீடிக்கும். எப்பொழுதும் அடியாட்கள் சூழ இருக்கும் அவரை மக்கள் அணுக முடியாது. அவருக்கு நெருக்கமாக உள்ள துதி பாடுபவர்களின் கூட்டம் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்தும்; நாட்டைக் கொள்ளையடிக்கும். ஜெயலலிதாவின் ஆட்சியின்போது கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்த சசிகலா கும்பல் நாட்டைக் கொள்ளையடித்ததை தமிழ்நாடு ஏற்கனவே அனுபவித்துள்ளது. விஜய்யின் ஆட்சியிலும் அது திரும்ப நடைபெறும்.

இது நாள் வரையிலும் திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ், விஜய்க்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றதும் பதவி வெறி கொண்டு இரவோடு இரவாக “இந்தியக்” கூட்டணிக்கு முழுக்குப் போட்டுவிட்டு தவெகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. ‘தங்கள் கூட்டணி கொள்கைக் கூட்டணி’ என்றும், தவெகவை ‘பாஜகவின் ‘B’ டீம்’ என்றும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த இபொக, இபொக (மா), விடுதலைச் சிறுத்தைக் கட்சி ஆகிய கட்சிகள் இன்று தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்துள்ளன. பாஜக தமிழ் நாட்டில் காலூன்றி விடக் கூடாது என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக அக்கட்சிகள் தங்களுடைய சந்தர்ப்பவாதத்திற்கு கொள்கை முலாம் பூசுகின்றன.

முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்ய ஒரு பெரும்பான்மை கொண்ட கட்சி இல்லாத நிலையில், ஒரு ஸ்திரமான ஆட்சி அமைக்க முடியாமல் ஆளும் முதலாளி வர்க்கம் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலைமையில், இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை எவ்வாறு மேலெடுத்துச் செல்வது என்று பாட்டாளி வர்க்கத்திற்காகப் பாடுபடும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட வேண்டும். ஆனால் இங்குள்ள போலிக் கம்யூனிஸ்டுகளான இபொகவும், இபொக(மா)வும் முதலாளி வர்க்கத்தின் ஆட்சி நிர்வாகம் நிலைகுலைந்து விடக் கூடாது எனக் கருதி, முதலாளிய வர்க்கக் கட்சியின் ஸ்திரமான ஆட்சி அமைய வேண்டும் எனக் கூறி முட்டுக் கொடுத்துள்ளன. அதன் மூலம் தனது அணிகளையும் பாட்டாளி வர்க்கத்தையும் அந்தக் கட்சிகள் ஏமாற்றியுள்ளன.

ஊழலை ஒழிக்கப்போவதாகப் புறப்பட்ட விஜய் ஊழல் கட்சியான காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து தன்னுடைய உண்மை வடிவத்தை தொடக்கத்திலேயே மக்கள் முன் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

தெளிவான, கறாரான எந்தக் கொள்கையையும் கொண்டிராத கட்சி தவெக. இத்தகைய ஒரு கட்சியை முதலாளி வர்க்கமும் அதிகாரவர்க்கமும் பணத்தாலும் அதிகாரத்தாலும் தம்முடைய விருப்பம் போல ஆட்டிப் படைக்கும். தவெகவிற்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் கொள்கை. அந்தக் கொள்கை வெற்றி பெற்றுவிட்டது. இனி முதலாளி வர்க்கத்துடனும் அதிகார வர்க்கத்துடனும் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டைக் கொள்ளையடிக்கும். ஒட்டுமொத்தத்தில், திராவிடக் கட்சிகளின் மாற்று எனக் கூறிக் கொண்டு தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜயின் தவெக அமைத்துள்ள கூட்டணி ஆட்சி திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விட மோசமாகவும் மக்கள் விரோத ஆட்சியாகவும் இருக்கும்.

மு.வசந்தகுமார்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...