Skip to main content

பற்றிப் படரும் தொழிலாளர் போராட்டங்கள்– விடுதலையை நோக்கி!

 

தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைக்கான உரிமையை நிலை நாட்டி 140 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால், இன்று தொழிலாளர்களின் நிலைமைகளோ 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய நெருக்கடியை தணித்துக் கொள்ள ஒருபுறம் தொழிலாளர்களின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தும் அதே வேளையில், மற்றொருபுறம் சிறிய நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்து அங்கிருந்து வளங்களைக் கொள்ளையடித்தும், ஆயுதங்களைக் கொண்டு அந்தநாட்டின் மக்களையும், கட்டமைப்புகளையும் அழித்தொழித்தும் வருகின்றன. மீண்டும் அந்த நாடுகளில் மறு கட்டமைப்புப் பணிகளைச் செய்வதன் மூலமும், ஆயுத விற்பனை செய்வதன் மூலமும் இலாபங்களைக் குவித்தும் வருகின்றன. இதற்கு . பாலஸ்தீனம், வெனிசுலா, ஈரான், கியூபா ஆகியவை சமீபத்திய உதாரணங்களாகும்.

ஏகாதிபத்திய சக்திகளில் முக்கிய சக்தியான அமெரிக்காவில், இந்த ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வுகளுக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாள் தோறும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொழிலாளர்கள் வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோன்று இந்தியாவிலும், தொழிலாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் பல்வேறு நகரங்களில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வீதிக்கு வந்து போராட்டக் களங்களில் குதித்துள்ளனர். 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு, இஎஸ்ஐ/பிஎஃப், நிர்ணயிக்கப்பட்ட நாளில் ஊதியம் வழங்குதல், பணியிடப் பாதுகாப்பு, கூடுதல் நேர வேலை நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம், குடிநீர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் தொழிலாளர்களின் போராட்டங்கள் பல்வேறு நகரங்களுக்கும் காட்டுத் தீயாய் பரவிவருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா ஓப்ரா'சி' (Obra C Extension) மின் திட்டத்தில் பணிபுரியும் 6,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு மாற்றாக 8 மணி நேர வேலை மற்றும் கூடுதல் நேரப் பணிக்கு (Overtime) முறையான ஊதியம் வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள பிற நகரத் தொழிலாளர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. பீகாரின் பரௌனியில் உள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். பரௌனியில் நடந்த வேலைநிறுத்தம் பானிபட்டிலும் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தியது

‎‎‎அரியானா மாநிலத்தில் பானிபட்டில் உள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ள லார்சன் & டூப்ரோ (L&T)-வில் பிப்ரவரி 22 அன்று 8 மணி நேர வேலை, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், மாதத்திற்கு 26 வேலை நாட்கள், ஊதிய உயர்வு, கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் விபத்து ஏற்பட்டால் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தி சுமார் 30,000 முதல் 40,000 வரையிலான ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்பு படை(CISF) மற்றும் துணை ராணுவப் படைகள் தொழிலாளர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அடையாளம் தெரியாத 2500 தொழிலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்துள்ளது. . இந்தப் போராட்டத்தால் உந்தப்பட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ஹசிரா நகரத்தில் லார்சன் & டூப்ரோ (L&T)-வில் பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.

பின்னர் போரட்டம் அரியானா மாநிலத்தில் பெருந்தீயாகப் பரவியது. அரியானாவில் ஏப்ரல் 3 ஆம் தேதி ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் தொடங்கிய போராட்டம் அனைத்துப் பகுதிகளிலும் பரவியது. 9 ஆம் தேதி அன்று ஊதியத்தை உயர்த்தி அரசு அறிவித்தாலும் தொழிலாளர்களின் போராட்டம் குறையவில்லை. போராடும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் ஒடுக்குவதற்காக அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தின் குறைந்தபட்ச ஊதியக் குழுவே ரூ.23,196-ஐ அடிப்படை ஊதியமாகப் பரிந்துரைத்திருந்தபோதிலும், அரியானா அரசு திறன் இல்லாத (Unskilled) தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 15,220, பகுதித் திறன் (SemiSkilled) உள்ளவர்களுக்கு 15,780, திறன் பெற்ற (Skilled) தொழிலாளர்களுக்கு 18,500, உயர்திறன் (Highly Skilled) பெற்ற தொழிலாளர்களுக்கு 19,425 என்றவாறு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில குறைந்தபட்ச ஊதியக் குழு பரிந்துரைத்த 23,196 ரூபாயை அரசு அறிவிக்க வேண்டுமென தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் கோரி வருகின்றன.

அரியானா, மானேசர் தொழிலாளர்களின் போராட்டமே, ஏப்ரல் 13 ஆம் தேதி நொய்டா தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி இடங்களில் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது. ஏற்கனவே வீட்டு வாடகை உயர்வு, விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளர்களை, அமெரிக்கா- ஈரான் யுத்தத்தால் ஏற்பட்ட எரி பொருள் விலை ஏற்றம் மேலும் கடுமையாகப் பாதித்தது; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் போராட்டத்தில் குதித்தனர். ஏப்ரல் 14 ஆம் தேதி நொய்டாவில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பணியாற்றி வரும் வீட்டுப் பணியாளர்களும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

80க்கும் மேற்பட்ட இடங்களில் 40ஆயிரம் முதல் 45 ஆயிரம் தொழிலாளர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தெரிவிக்கின்றது. 300 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதிகாரபூர்வற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினமான ஒன்றாக உள்ளது. ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்கள், குடும்பத்தை விட்டு இங்கு வந்து பணிபுரிபவர்கள், அதனால், அவர்கள் காணாமல் போனது குறித்து அறிவது என்பது கடினமானதாக உள்ளது. சீருடை அணியாத காவலர்களால் போராட்டத்தில் ஈடுபடாத தொழிலாளர்களும் கைது செய்யபட்டு கடும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2016 இல் திறன் இல்லாத தொழிலாளர்களுக்கு 7,107 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, 2026 இல் 11,313 ரூபாயாக அதிகரித்துள்ளது. போராட்டத்திற்கு பிறகு இது 13,690 ஆக உயர்த்தப்பட்டது. தொழில் நகரங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த அளவிற்கான ஊதியம் வழங்கபட்டு வருகின்றது. மற்ற நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஊதியம் இதைவிடக் குறைவான அளவிலேயே வழங்கப்படுகின்றது. நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு வாடகை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நிறுவனங்கள் வீட்டு வாடகைக்கான படியை உயர்த்த மறுக்கின்றன.

2027 இல் சட்டசபை தேர்தலை உத்திரப்பிரதேசம் சந்திக்க உள்ளதால், தொழிலாளர்களின் இந்தப் போராட்டங்களுக்கு 20-21 % ஊதிய உயர்வு என்ற குறைந்தபட்ச அறிவிப்புகளைச் செய்ததன் மூலம் தொழிலாளர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்கின்றது உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கம்.

உத்திரப்பிரதேசத் தொழிலாளர்கள் 18,000 லிருந்து 25, 000 வரை ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரி வந்த நிலையில் அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் இல்லை. உத்திரப்பிரதேசத்தில் நொய்டாவில் தொழிலாளர்களின் கூலி, அருகிலுள்ள டெல்லி மற்றும் அரியானா தொழிலாளர்களின் கூலியைக் காட்டிலும் மிக குறைவாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்தியத் தொழில்கள் சங்கத்தின் கிரேட்டர் நொய்டா கிளையின் தலைவர், 'தி பிரிண்ட்' பத்திரிகையில் “போராட்டம் நடைபெறும் நேரம் மிகவும் தனித்துவமானது. இதற்கு முகமோ, தலைவரோ, அமைப்போ இல்லை. அது திடீரென வெடித்தது, அதை யாரும் உணரவில்லை.” என்று கூறினார்.

‎‎ஆனால், உத்திரப்பிரதேச மாநில அரசோ, இது பொருளாதாரச் சூழலைச் சீர்குலைக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டவர்களுடன் தொடர்புடையதாக, சந்தேகிக்கப்படும் நான்கு பேர் மீரட் மற்றும் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறைவான ஊதியமும், விலைவாசி ஏற்றமும் தொழிலாளர்களைப் பட்டினியில் தள்ளும்போது அவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடவே செய்வார்கள். இது உயிர் வாழ்வதற்கான போராட்டம். ஆனால் இந்த அரசாங்கமோ இந்தத் தன்னெழுச்சியான போராட்டத்தை அந்நிய நாட்டின் சதி எனக் கொச்சைப்படுத்தி போராடும் தொழிலாளர்களைக் கடுமையாக ஒடுக்கி வருகின்றது; முதலாளி வர்க்கத்தின் ஏவல் நாயாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டம் குறைந்தது 12 மாநிலங்களுக்குப் பரவியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தவிர, பிற மாநிலங்களில் பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சியின் தலைமையிலான அரசுகள் உள்ளன. புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் பாஜக/என்டிஏ தலைமையிலான மாநிலங்களில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, ஏறக்குறைய எல்லா இடங்களிலும் 10-12 மணி நேர வேலை நாள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரம் வரை நீட்டித்துக் கொள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் வழி வகை செய்யப்பட்டுள்ளதால், சட்டபடியாகவே இது தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் 12 மணி நேர வேலை என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சில சமயங்களில் இரண்டு ஷிப்ட்டுகள் வேலை செய்தாலும், ஒரு ஷிப்ட்டிற்கான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகின்றது. வருங்கால வைப்பு நிதி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவையும் முறையாக வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இடைத்தரகர்களாகச் செயல்படும் முகவர்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொள்கின்றார்கள். முகவர்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை அபகரித்துக் கொள்வதைத் தடுக்க ஆலை நிறுவனங்கள் நேரடியாக தங்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோருகின்றனர்.

உற்பத்தி நிலையங்களில் மொத்தத் தொழிலாளர்களில் நிரந்தரத் தொழிலாளர்களின் விகிதம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கும் அமர்த்தும் போக்கு அதிகரித்து வருகின்றது. அந்த எண்ணிக்கை 2014-15 இல் 35%ஆக இருந்தது; 2023-2024 இல் 42% ஆக அதிகரித்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நேரடிப் பணிகளில் ஈடுபடுத்த அனுமதி அளித்துள்ளதால், முதலாளிகள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பணிப் பாதுகாப்பு இல்லாத நிலையில் தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதற்கும் வழியற்று இருக்கின்றனர்.

2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி 58.2% தொழிலாளர்களுக்கு பணி நியமனம் குறித்து எழுத்துபூர்வமான கடிதங்கள் எதுவும் இல்லை. 51.7% பேருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பது எதுவும் இல்லை. அதே போன்று 47.3% தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு என்பது வழங்கப்படுவதில்லை. உத்திரப்பிரதேசத்தில் இதன் அளவு இன்னும் அதிகமாக உள்ளது. அது பணி நியமனம் குறித்தான அறிவிப்புகள் இல்லாதவர்கள் 67.8%, சமூகப் பாதுகாப்பு திட்டம் இல்லாதவர்கள் 62.4%, ஊதியத்துடன் கூடிய விடுப்பு இல்லாதவர்கள் 59.2% என்றவாறு உள்ளது. பீகார், சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தொழிலாளர்கள் இதே போன்று வஞ்சிக்கப்படுகின்றனர்.

முந்தைய போராட்டங்களில், ஒவ்வொரு போராட்டமும் ஒரு தனி ஆலையிலோ அல்லது ஒரு தனித் தொழிற்பகுதியிலோ தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒரு போராட்டம் மற்றொரு போராட்டத்திற்கு வழிவகுக்கவில்லை. தற்போதைய ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஒரு ஆலையிலிருந்து மற்றொரு ஆலைக்கும், ஒரு தொழிற்துறையிலிருந்து மற்றொரு தொழிற்துறைக்கும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும் என எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றன. தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்டு அச்சமடைந்துள்ள அரசு, இந்தப் போராட்டங்கள் ஒரு சதி திட்டம் என்று கூறி திசை திருப்பும் வேலையைச் செய்து, தொழிலாளர்களின் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கி வருகின்றது. அதன் மூலம் முதலாளி வர்க்கத்தின் கொடுஞ்சுரண்டலைப் பாதுகாத்து வருகின்றது.

ஆளும் வர்க்கத்தை நெருக்கடியிலிருந்து பாதுகாக்க ஆளும் கட்சிகள் பாசிச அடக்குமுறைகளை முன்னெடுக்கின்றன. முதலாளித்துவ நெருக்கடிகள் முதலாளிகளைப் பாதிக்கும்போது, அந்த நெருக்கடிகளை முதலாளிகள் தொழிலாளர்களின் தலையில் சுமத்துகின்றனர். அதனால் முதலாளிகளையும், அதற்குச் சேவகம் செய்யும் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் பாசிச அடக்குமுறைகளையும் எதிர்த்து வட இந்தியப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள், அதுவும் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள், போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். வட இந்தியா என்றாலே அது பாஜகவின் கோட்டையாக உள்ள பகுதியாகவும், அங்குள்ள மக்கள் அறிவில் பின்தங்கியவர்கள், பாஜகவை ஆதரித்து அதனை ஆட்சியில் அமர வைத்தவர்கள் என்றும் தென் இந்தியப் பகுதிகளில் உள்ள குட்டி முதலாளியப் போக்கினர் அவர்களை எள்ளி நகையாடி வருகின்றனர்.

மேலும், வட இந்திய தொழிலாளர்கள் பாஜக அரசால் திட்டமிட்டே தென் இந்தியப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களை வாக்கு வங்கிகளாக மாற்றி ஆட்சியைப் பிடிக்கவும், தங்களுடைய இந்துத்துவா கொள்கையை பரப்பவும் செய்கின்றது என்ற வினோதமான கதைகளை அவர்கள் பரப்பி வருகின்றனர். ஆனால், இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரசும், மாநில கட்சிகளும்தான் ஆட்சிக் கட்டிலில் நீண்ட காலம் இருந்தன. இந்தக் கட்சிகள் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் நலன்களைப் புறந்தள்ளி, முதலாளி வர்க்கத்திற்கு சேவகம் செய்து, ஊழலிலும் இலஞ்சத்திலும் திளைத்திருந்தன. இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக சரியான அரசியல் திட்டத்தைக் கொண்டுள்ள இடதுசாரிகள் இல்லாத காரணத்தால் அந்த இடத்தை பொய்ப் பிரச்சாரங்களின் மூலமும், வகுப்புவாத பிரச்சாரங்களின் மூலமும் பாஜக கைப்பற்றிக் கொண்டது.

பாஜகவும், ஆளும் வர்க்கத்தின் மற்றொரு பிரதிநிதியே என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து தற்பொழுது தன்னெழுச்சியாக போராட்டக் களங்களில் இறங்கியுள்ளது. ஆனால், பாசிசத்திற்கு எதிராக ஐக்கிய முன்னணி அமைப்பதாக கூறிக் கொள்ளும் சீர்த்திருத்தவாத இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கட்சிகளும், மார்க்சிய லெனினியக் கட்சிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றொரு பிரிவான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் பின்னால் வால் பிடித்து நிற்கின்றன. உண்மையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் பாசிசத்தின் மூலவேரான ஆளும் முதலாளிய வர்க்கத்தினை எதிர்த்து நிற்கின்றனர். தொழிலாளி வர்க்கம் இந்தச் சீர்த்திருத்தவாத இடதுசாரிகளின் மீது நம்பிக்கை இழந்திருப்பதால் அவை தன்னெழுச்சியான போராட்டங்களாக வெடிக்கின்றன.

தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அரசினால் கடுமையாக ஒடுக்கப்படும்போது, இந்த அரசு எவ்வாறு முதலாளிய வர்க்கத்தின் நலன்களுக்காக நிற்கும் அரசாக இருக்கின்றது என்பதைத் தமது சொந்த அனுபவத்தின் மூலம் மேலும் மேலும் தொழிலாளர்கள் உணர்ந்து கொள்வார்கள். சரியான கம்யூனிஸ்ட் கட்சி அதற்குத் தலைமை கொடுக்கும் பொழுது தொழிலாளர்கள் அரசியல் உணர்வும் வர்க்க உணர்வும் பெற்று பேரலையாகத் திரண்டு எழுவார்கள்; கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.

குமணன்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...