தொழிற்சாலைகள் பல நேரங்களில் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் கூடங்களாக மாறி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடந்துள்ள அம்மோனியா வாயு கசிவு விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலி கொடுக்கும் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் கொடூர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைபேர் என்ற கிராமத்தில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயிண்ட் பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் ('St. Peter & Paul Sea Foods Exports ) என்ற ஆலை இயங்கி வருகிறது. கடல் சார்ந்த மீன், இறால் போன்ற உணவுகளைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலையின் வருவாய் ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் அளவில் உள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர் மட்டுமல்லாது, கடலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை போன்ற கடலோர மற்றும் முக்கிய நகரங்களில் இதுபோன்ற ஆலைகள் இயங்கி வருகின்றன. கோடி கோடியாய் இலாபம் ஈட்டும் இந்த நிறுவனங்கள், தங்களின் வளர்ச்சிக்குக் காரணமான தொழிலாளர்களின் பாதுகாப்பில் காட்டும் அலட்சியமே இத்தகைய பேரழிவுகளுக்கு வித்திடுகிறது.
விபத்து நடந்த இந்த ஆலையில் ஜார்க்கண்ட், அஸ்ஸாம், ஒரிசா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21-06-2026) காலை 10:30 மணி அளவில், ஆலையின் குளிர்சாதனப் பிரிவில் உள்ள அம்மோனியா வாயு பைப்லைனின் 'வால்வில்' (Valve) திடீரெனக் கசிவு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவுப் பணி முடிந்து நிறுவனத்தின் மேல்தளத்தில் உள்ள தங்களின் அறைகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களும், ஞாயிறு அன்று வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களும் இந்த நச்சு வாயுவால் நிலைகுலைந்து போயினர். நச்சு வாயுவை சுவாசித்த சில நிமிடங்களிலேயே தொழிலாளர்களுக்குக் கடுமையான மூச்சுத்திணறலும், சுவாசக்குழாய் எரிச்சலும் ஏற்பட்டு, பலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் துரிதமான உதவியால், பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் தனியார் மருத்துவமனைகளிலும், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுவரை அதிகாரபூர்வமாக 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், இவர்களில் இரண்டு பேர் பதினைந்து வயது சிறுமிகள் ஆவர். 70-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தொழிலாளர்களிடையே
வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆலையின் கீழ்த்தளத்தில் தொழிற்சாலையும், அதன் மேல் தளத்திலேயே தொழிலாளர்களின் தங்கும் விடுதியும் இயங்கியுள்ளது. இந்தியத் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி (Factory Act), அபாயகரமான வாயுக்களைப் பயன்படுத்தும் ஒரு வளாகத்திற்குள் தொழிலாளர்களைத் தங்க வைப்பது மிகப்பெரிய குற்றமாகும். விபத்து நடந்தவுடன் தொழிலாளர்கள் தப்பித்து ஓட முடியாமல் போனதற்கு இந்த அடுக்குமாடி அமைப்பே முதன்மைக் காரணம்.
தொழிலாளர் சட்டங்களை
மதிக்காமல், 12 மணி நேரத் தொடர்
வேலை (இரண்டு ஷிப்ட் முறை) இங்கு நடைமுறையில் இருந்துள்ளது.
அவசர காலங்களில்
எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற முறையான பயிற்சியோ,
அதற்குரிய நவீன பாதுகாப்பு உபகரணங்களோ
(Safety Gears) இங்குள்ள
கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு
ஒரு தொழிற்சாலை முறையாக இயங்குகிறதா, பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பது சட்டம். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த ஆலையை முறையாக ஆய்வு செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். முதலாளிகளின் விதிமீறல்களுக்குத் துணை போயுள்ளனர்.
அதைவிடக் கொடுமை என்னவென்றால், இதே ஆலையில் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளிலும் சிறிய அளவில் வாயுக்கசிவு விபத்துகள் நடந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், அரசிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கே, இன்று 14 உயிர்கள் பறிபோகக் காரணமாய் அமைந்துள்ளது.
தற்போதைய நடவடிக்கை விபத்தைத் தொடர்ந்து தமிழகக் காவல்துறை ஆலைக்குச் சொந்தமான மூன்று முக்கிய நபர்களைக் கைது செய்துள்ளது. அரசின் முதற்கட்ட விசாரணையில் 'வால்வு கசிவு' தான் காரணம் என்று கூறப்பட்டாலும், விதிமீறலாக அமைக்கப்பட்ட தங்கும் விடுதி குறித்தோ, அதிகாரிகளின் கடமை தவறல் குறித்தோ முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
முதலாளிகளின் இலாப
வெறிக்கும், அரசு அதிகாரிகளின் லஞ்ச
லாவண்யத்திற்கும், மெத்தனப் போக்கிற்கும் ஏழை எளிய தொழிலாளர்களின்
உயிர்கள் தொடர்ந்து பலியாகத்தான் வேண்டுமா? கூலி தேடி வந்த
இடத்தில், பிணமாகத் திரும்பும் அவலம் தொடர்கதையாக இருக்கத்தான் வேண்டுமா?
உள்ளூர் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மறுபுறம் வௌிமாநிலத் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், மனிதநேயமற்ற தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
கட்டிட வேலைகள், சாலைப் பணிகள் மற்றும் பெரும் தொழிற்சாலைகளில் ஒப்பந்த (Contract) அடிப்படையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களின் இன்னல்களை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. மிகக் குறைந்த கூலிக்கு வட மாநிலத் தொழிலாளர்களின் உழைப்பு சுண்டப்படுகிறது.
மூலதனத்தை ஈர்ப்பது மட்டுமே லட்சியம் என்று அலையும் இந்த முதலாளித்துவ ஆட்சியில், தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. கோடை வெயிலிலும் அல்லது கொட்டும் மழையிலும் பாதுகாப்பு இல்லாத ஒரு சிறிய தகரக் கொட்டகைக்குள் 15 முதல் 20 தொழிலாளர்களை ஆடு, மாடுகளை போல அடைத்து வைக்கப்படுகின்றனர்.
தொழிலாளர் நலத்
துறையோ அல்லது அதிகாரிகளோ, அமைச்சர்களோ இந்த அவலங்களை எப்போதாவது
எட்டிப் பார்த்ததுண்டா? எப்பொழுதும் இல்லை.
அதிகார வர்க்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் தொழிலாளர்கள் மீது அக்கறையிருந்து, தொழிற்சாலைகளிலும்
பிற பணியிடங்களிலும் சட்டவிதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கவனித்து நடவடிக்கை எடுத்திருந்தால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடிவிபத்துகளும், ரசாயன
ஆலைகளில் ஏற்படும் மரணங்களும், நச்சுவாயுக் கழிவுகளால் ஏற்படும் மரணங்களும், கட்டிட
வேலைகளில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் நடக்கும் மரணங்களும், சிறு
உணவகங்களில் கொத்தடிமைகளாக உழைக்கும் ஏழைத் தொழிலாளர்களின் துயரங்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இதுவரை
எந்தவொரு தொழிலாளர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கவில்லை, குற்றம் புரிந்த எந்த முதலாளியும் தண்டிக்கப்படவில்லை
என்பதே நிதர்சனமான உண்மை.
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளாக இருந்தாலும் சரி, இவர்களின் முதன்மைப் பணி என்பது மூலதனத்தைப் பாதுகாப்பது, அதனை மென்மேலும் பெருக்குவதற்கு வழிவகுப்பது என்பதாகவே உள்ளது.
அதற்கு கைமாறாக.
முதலாளிகளிடமிருந்து தங்கள் கட்சிகளுக்குத் தேர்தல் நிதியையும், கோடி கோடியாகப் பணத்தையும்
சுருட்டுவதுதான் இந்த முதலாளித்துவக் கட்சிகளின்
பிரதான வேலை.
தொழிலாளி வர்க்கத்திற்கு
சாதி, இனம், மொழி, மாநிலம் என்ற வேறுபாடுகள் கிடையாது.
பீகாரில் இருந்தோ, உத்தரப்பிரதேசத்தில் இருந்தோ இங்கு வந்து உழைப்பவரும் நம் வர்க்கத்தைச் சேர்ந்தவரே!
சுரண்டப்படும் அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கமாக, ஒரே வர்க்கமாக ஒன்றிணைவதன்
மூலமே தமது கூலி அடிமைத்தனத்திலிருந்து
விடுதலை அடையமுடியும்.




மிக நன்று. ✊
ReplyDelete