Skip to main content

தோழர். முகம்மது கனிக்கு (நல்லசிவம்) செவ்வணக்கம்!



நன்கு நரைத்து வெளுத்த முடி, மழிக்கப்பட்ட முகம், வெள்ளை முழுக்கைச் சட்டை, பாலியஸ்டர் இரட்டை மடிப்பு வேட்டி, சில நேரங்களில் மூட்டப்பட்ட வெள்ளை லுங்கி, எப்போதும் பார்த்த உடனேயே நம்மையும் தொற்றிக்கொள்ளும் சிரிப்பு, கொஞ்சம் கரகரத்த குரல் இவர்தான் என்.எஸ். என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நல்லசிவம் எனப்படும் தோழர் முகமது கனி என்னும் மா-லெ புரட்சியாளர்.
அடிப்படை நூல்களை வாசிக்கும் முறையை அவர் கற்றுக்கொடுப்பது அலாதியானது. கடினமான மார்க்சியச் சொல்லாடல்களைப் பொருள் விளக்கி, புரிந்துகொள்வதற்கு இலகுவாக மிகவும் எளிமையான முறையில் எடுத்துக் கூறுவார். ‘குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’, ‘அரசும் புரட்சியும்,’ ‘கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை’ ஆகிய நூல்களை தொடக்கநிலை ஆதரவாளர்களுக்கு அவரைப் போல் எளிமையாக யாரும் விளக்க முடியாது என்றே கூறலாம்.. மூத்த தோழராக இருந்தபோதும் இளைஞர்களை அவர் வசப்படுத்தும் விதம் மெஸ்மெரிசம் போன்று இருக்கும். இளம் தோழர்களை அவர்கள் அரசியல்ரீதியாகத் தயாராவதற்கு முன்பே முழுநேர அரசியலுக்கு உணர்வூட்டிக் கொண்டுவந்துவிடுவார்.
 புரட்சிகரப் பணியை உற்சாகமிக்க கொண்டாட்டமாக காணச் செய்யும் அவரது ஊக்குவிப்பு தோழர்களுக்கு அச்சத்தை நீக்கி துணிச்சலை வரவைக்கும். அவருடைய பேச்சில் எப்போதும் நகைச்சுவைக்குக் குறைவிருக்காது. தோழர்களிடம் நிலவும் அறியாமையை ஒருவிதமான, காயப்படுத்தாத எள்ளலுடன் அணுகி அகற்றுவார். அவர் அருகாமையில் எப்போதும் மகிழ்ச்சி ததும்பும்.  அதே போல புரட்சியாளர்கள் மக்களிடம் அணுகவேண்டிய முறையை அவரைப் போல யாரும் கற்றுக்கொடுக்க முடியாது எனக் கூறலாம். தோழர்களின் குடும்பத்தினர், அதிலும்  பெண்கள் அவரால் ஈர்க்கப்படுவார்கள். அதனால் தோழர்களுக்கு அமைப்புப் பணிகளைச் செய்வதற்கு அவர்களுடைய குடும்பத்தின் மூலம் எந்த நெருக்கடியும் வராது. அதுமட்டுமல்லாமல் பிற தோழர்கள் வீட்டுக்கு வரும்போதும் உறவினர்களைப் போல் அன்புடன் பெண்கள் உபசரிப்பார்கள்.
இத்தகைய சிறப்பான பண்புகளைக் கொண்டிருந்த தோழர் என்.எஸ். அவர்கள்  11.10.2019 அன்று மாலை திருச்சியில் தனது  86 வது வயதில் காலமானார்.   ரெயில்வேத் துறையில் பணியாற்றிய தோழர் தமது இளமைக் காலத்திலேயே இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். பிறகு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்டபோது அவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்)  தனது பணியைத் தொடர்ந்தார்.  1960. களின் பிற்பகுதியில் நக்சல்பாரி எழுச்சி தோன்றிய பிறகு அவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னை இணைத்துக் கொண்டு முழு நேரப் புரட்சியாளராகத்   தனது புரட்சிப் பணியைத் தொடர்ந்தார். அக்கட்சியின் மாநிலக் குழுவில் செயலராக இருந்த தோழர் ஏ .எம். கோதண்டராமன் அவர்கள் அரசால் கைது செய்யப்பட்ட பிறகு தோழர் என்.எஸ். சிறிது காலம் அந்தக் குழுவின் செயலராக இருந்தார்.
பிறகு அக்குழுவில் 1970 களின் மத்தியில்  இடது தீவிரவாதத்திற்கு எதிராக விவாதம் எழுந்தபோது, இடது தீவிரவாதத்தை விமர்சித்து மக்கள் திரள் பாதையே சரியானது என்று கூறி அந்தக் குழுவில் இருந்து பிரிந்து புதியதாக உருவாகிய மாநில அமைப்புக் குழுவில் இணைந்தார். அதன் பிறகு அக்குழுவில்  1980 களின் தொடக்கத்தில் கட்சியின் 1970 ஆம் ஆண்டுத் திட்டத்தைப் பற்றி எழுந்த விவாதத்தின்போது எழுந்த மாறுபட்ட கருத்தின் காரணமாக தமிழ் நாடு அமைப்புக் குழு தோன்றியபோது தோழர் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் நாடு அமைப்புக் குழுவில் இருந்தபோது தோழர் என்.எஸ். தன்னுடைய சிறந்த அமைப்பாக்கும் திறனால் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.
இளம் தோழர்கள் மக்களை அணுகுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக       மக்கள் கலாச்சாரக் கழகத்தின் ‘மனஒசை’ மக்கள் உரிமைக் கழகத்தின் ‘கேடயம்’ ஆகிய இதழ்களின் விற்பனையை உத்தியாகப் பயன்படுத்தி, பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் முச்சந்திகளிலும் அமைப்பின் குரலை ஒலிக்கச் செய்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அதே போன்ற இன்னொரு உத்தி கலை நிகழ்ச்சிகள். ஊர் தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவற்றின் மூலம் மக்கள் மத்தியில் அரசியலை எடுத்துச் செல்லவும் ஊக்கம் ஊட்டினார்.
பிறகு தமிழ் நாடு அமைப்புக் குழுவிலிருந்து 1980களின் மத்தியில் விலகிய பின் வழக்குகளைச் சந்தித்தும் சிறைக்குச் சென்றும் பெருந்துன்பத்துக்கு ஆளானார். தொடர்ந்து பல அமைப்புக்களையும் சேர்ந்த தோழர்கள் அவரைச் சந்தித்துப் பேசியும் விவாதித்தும் வந்தார்கள். மா.லெ. இயக்கத்தின் தொடக்ககாலத் தவறான மூலஉத்திகளும் செயலுத்திகளும் இயக்கத்தைக் கலைத்துப் போட்டிருந்தாலும், அவர் முன்னாள் தோழர்கள் பலருடனும் ஒர் ஒன்றுபட்ட அமைப்பை நோக்கிச் செல்வதற்கான உரையாடல்களில் உற்சாகத்துடன் பங்கேற்று வந்தார். தனது வாழுங்காலத்திற்குள் ஒரு பலம் வாய்ந்த புரட்சிகர இயக்கத்தைக் கண்டுவிட வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவராக இருந்தார்.
தனது இறுதி மூச்சு வரையிலும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் புரட்சிகர அரசியலைப் பற்றியே சிந்தித்தும் பேசியும் வந்தார்.  தனது இறுதிக் காலத்திலும் ‘சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துடன்’ இணைந்து செயல்பட்டார். அவருடைய மறைவு புரட்சிகர அரசியல் இயக்கத்திற்கு ஓர் ஈடு செய்ய இயலாத இழப்பு என்றே கூற வேண்டும். இந்தியப் புரட்சிக்கு இப்பொழுது முதன்மையான தேவையாக இருக்கும் ஐக்கியப்பட்ட புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான சிவப்பு அஞ்சலியாக இருக்கும் என ‘சோசலிசத் தொழிலாளர் இயக்கம்’ கருதுகிறது. அதற்காக சோசலிசத் தொழிலாளர் இயக்கம் தனது முழுமையான பங்கினை ஆற்றும்.




தோழர் என்.எஸ்ஸின் செயல்திறனுக்கு ஒர் எடுத்துக்காட்டு

       இ.பொ.க (மா.லெ) தமிழ் நாடு அமைப்புக் குழுவின் அரசியல் வழிகாட்டுதலின் கீழ் மக்கள் உரிமைக் கழகமும் மக்கள் கலாச்சாரக் கழகமும் இணைந்து கோவையில் 1986, ஜனவரி 4,5 ஆகிய தேதிகளில்    பாசிச எதிர்ப்பு தேசிய மாநாட்டை நடத்தின. அப்போது ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த நடிகர் என்.டி. ராமா ராவ் கோவை வந்திருந்தார். ஆந்திராவில் அவர் புரட்சியாளர்களை வேட்டையாடிக் கொன்று கொண்டிந்த நேரம் அது.  அதைக் கண்டிக்கும் வகையில் அவருக்கு எதிராகக் கருப்புக் கொடிப் போராட்டத்தை நடத்துவது என்று அமைப்பு முடிவெடுத்தது.  அதற்கு வழி காட்டும் பொறுப்பினைத் தோழர் என்.எஸ். ஏற்றிருந்தார். மாநாட்டுப் பணி பாதிக்கப்படாமல், கடுமையான போலிஸ் பாதுகாப்புடன்  என்.டி.ஆர். வரும் வழியில் பெண் தோழர்கள் உட்படச் சில தோழர்களை மட்டும் வைத்துக் கொண்டு,  மிகவும் துணிகரமாக யாரும் எதிர்பாராத வகையில் கருப்புக் கொடி காட்டச் செய்தார். அது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மாநாட்டுக்கு மிகப் பெரிய விளம்பரமாகவும் அமைந்தது. இது புரட்சியாளர்கள் தங்கள் கொள்கைகளை ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னெடுப்பது என்பதற்கு ஒரு சிறந்த வழி காட்டுதலாக அமைந்தது.

Comments

Popular posts from this blog

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...