Skip to main content

இந்திய வகுப்பறைகளில் மதவெறி எதிர்ப்பு!

 

நான் பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குஉன்னைக் கண்டறிதல்என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடத்தி வருகிறேன். அது பதின்ம வயதினர் தங்களுடைய சொந்த தனித்துவக் குரலையும் அடையாளத்தையும் கண்டறியவும் விடலைப் பருவ ஆண்டுகளில் மாறுபாட்டுக்கிடமின்றி உடன்வரும் இருத்தலியப் பதட்டநிலையைக் கையாளவும் உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இந்தப் பயிற்சிப் பட்டறைகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஒன்று, செய்தித் தாள்களிலிருந்தும் இதழ்களிலிருந்தும் படங்களை வெட்டி, அவர்களுடைய எதிர்பார்ப்புக்களையும் கனவுகளையும், தனித்துவ ஆளுமைகளையும் சித்தரிக்கும் வகையில் ஒட்டி வைப்பதாகும். இதற்காக, நான் அவர்களுடைய வீடுகளிலிருந்து  பழைய இதழ்களையும் செய்தித்தாள்களையும் கொண்டுவருமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்வேன்.

கோவிட் –19 பெருந்தொற்றும் அதன்விளைவாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதும் இந்த அமர்வுகளில் இரண்டு ஆண்டுகள் இடைவெளியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அந்தப் பயிற்சிப் பட்டறைகளை மீண்டும் தொடங்கியதால் இந்த மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த அளவுக்கு உலகக் கண்ணோட்டத்தில் மாற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அறிய விரும்பினேன், ஏனென்றால் இந்துத்வா பிரச்சாரம் இப்போது அச்சு, மின்னணு, மற்றும் சமூக ஊடகங்களில் திகட்டத்திகட்ட நிரம்பி வழிவதைக் கருத்தில் கொண்டே இவ்வாறு விரும்பினேன்.

விரைவிலேயே எனக்குப் பதில் கிடைத்து விட்டது. பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர்கள் மேற்குறிப்பிட்ட படங்களை வெட்டி ஒட்டும் பயிற்சிக்காக இந்தியா டுடே, கான்டே நாஸ்த் ட்ராவலர், வாக் இன்னபிற இதழ்களைக் கொண்டுவருவார்கள். இம்முறை எனக்குப் பீதியூட்டும் வகையில் நான் இதுவரை பார்த்திராத ஆர்.எஸ்.எஸ். வெளியீடான பஞ்சஜன்யா இதழின் பிரதிகளைக் கொண்டுவந்தனர். அது இந்துராஷ்ட்ரா கருத்தை வெளிப்படையாக ஆதரிக்கக் கூடியது. நான் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, விடயங்கள் எவ்வாறு மாறியுள்ளன என்று காண விரும்பினேன். உண்மையில் மாறிவிட்டன தாம்!

அவர்கள் தங்களுடைய படத்தொகுப்புக்களைச் செய்துகொண்டிருந்தபோது, அவர்களில் ஓரிருவருக்கு முன்னோர்கள் என்ற தலைப்பு வந்தது. அவர்களில் ஒருவன் அருகிருந்த மாணவனிடம்என்னுடைய தாத்தா பாட்டி பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள், நான் அங்கு செல்ல சிறிதுகூட தயங்கமாட்டேன், அங்குள்ள மக்கள் மிகவும் விருந்தோம்பும் பண்பு கொண்டவர்கள், அங்கு உணவு மிகவும் நன்றாக இருக்கும்என்ற, உற்சாகத்துடன் கூறினான்.

நான் ஒருபோதும் அங்கு செல்ல மாட்டேன். நான் முஸ்லிம்களை வெறுக்கிறேன்என்று உடனடியாக இன்னொரு மாணவி பதிலுக்குக் கூறினாள். இதைக் கேட்டு, நான் கூறினேன், அது கடுமையான கூற்று, நீ ஏன் முஸ்லிம்களை வெறுக்கிறாய்? அவர்கள் யாராவது உனக்கு ஏதாவது தொல்லை கொடுத்தார்களா?”

இல்லை, ஆனால் அவர்கள் ஆபத்தான ஆட்கள் என எனது பெற்றோர்கள் கூறுகிறார்கள்என்று தயக்கத்துடன் அவள் பதிலளித்தாள்,

ஆனால் நீ தனிப்பட்ட முறையில் முஸ்லிம் மக்கள் எவரிடமாவது உரையாடி இதை உறுதிப்படுத்திக் கொண்டாயா?” என்று நான் விடாமல் கேட்டேன்.

இல்லை, ஆனால் என்னுடைய பெற்றோர்கள் அவர்களை வெறுக்கிறார்கள், அதனால் நானும் வெறுக்கிறேன்.”

நான் அஞ்சியிருந்த விடயம் நிகழ்ந்திருந்தது. வகுப்புவாத நஞ்சு அவர்கள் இல்லங்களிலும் மனங்களிலும் நுழைந்துவிட்டிருந்தது. அன்றிரவு இதை எப்படிச் சரி செய்வது என்று நான் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். அடுத்தநாள் காலை அந்தத் தப்பெண்ணம் பற்றிப் மாணவர்களிடம் பேசுவது என்று முடிவு செய்தேன். மாணவர்களிடம் ஒரேவகையான சிந்தனைக்கு எடுத்துக்காட்டுக்கள் தருமாறு கேட்டேன்.  அவர்கள் பல பதில்களைக் கூறினார்கள், இறுதியாக பாகிஸ்தான் உணவை ருசிக்க விரும்பிய மாணவன், எப்போதும் பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்று கேள்விப்படுகிறேன்என்று மெதுவாகவும் உறுதியில்லாமலும் கூறினான்.


இதற்கு முன்பு எவ்வளவு பேர் இதைப் போல கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் கேட்டேன். மெதுவாக அவர்கள் அனைவரும் கரங்களை உயர்த்தினார்கள்.

2020 மார்ச்சில் நடந்த முதலாவது பெரிய முடக்கம் நினைவிருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டேன். நினைவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  அவர்களுடைய நினைவாற்றலைப் புதுப்பிப்பதற்காக, வெறும் நான்கு மணிநேர முன்னறிவுப்புக்குப் பிறகு எப்படி நாடு முழுதும் இருபத்தியொரு நாட்கள் முடக்கப்பட்டு இருந்தது என்பதை அவர்களுக்கு நினைவூட்டினேன்.  லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் திடீரென்று வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல், தங்குவதற்கு இடமும் இல்லாமல் தவித்தார்கள். நகரங்களில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியின்றி எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில் தங்கள் சொந்த நகரங்களுக்கோ கிராமங்களுக்கோ நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே சென்றார்கள், சிலர் மிதிவண்டிகளில் சென்றார்கள். பலரும் காவல்துறையால் அடித்து விரட்டப்பட்டனர். சிலர் மீது இரசாயனங்கள் தூவப்பட்டன. பலர் வழியிலேயே இறந்தும் போனார்கள்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர்திரும்பத் தொடங்கிய பின்னர் எனது நண்பர் ஒருவர்இந்த மக்களுக்கு நாங்கள் உதவ வேண்டும்என்று நள்ளிரவில் வேதனையூட்டும் செய்தி ஒன்றை அனுப்பினார் என்பதை நான் மாணவர்களிடம் கூறினேன்.

அடுத்தநாள், உண்மையில் உத்தரபிரதேசம் சீதாப்பூரைச் சேர்ந்த அந்த நண்பர் டெல்லியில் வசித்துவந்தார். அந்த நேரத்தில் டெல்லியில் சிக்கிக்கொண்ட சீதாபூரைச் சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள் அவரிடம் உதவி வேண்டும் என்று கேட்டார்கள் என்று கூறினார். நாம் ஏதாவது பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து இந்த மக்கள் ஊர்திரும்ப ஏற்பாடு செய்வோம் என்று அந்த நண்பர் கேட்டார், நானும் ஒப்புக்கொண்டேன்.

நாங்கள் அந்தத் திட்டத்துக்குவீடு சென்று சேர்தல்என்று பெயரிட்டு சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்தோம். சில மணி நேரத்தில் உதவி வந்து குவியத் தொடங்கியது, இரண்டு மாத காலத்தில் நாங்கள் ஏறத்தாழ இடம் பெயர்ந்த 2000 தொழிலாளர்களை பேருந்துகளிலும் தொடர்வண்டியிலும் அனுப்பி வைக்க முடிந்தது.

அந்த நேரத்தில் இந்தப் பேருந்துகள் எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதிகள் வாங்குவதற்கு எவ்வளவு தொல்லைப்பட்டோம், பேருந்து அனுமதிகளைப் பெறுவதற்கு எனது நண்பர் எவ்வளவு அலைக்கழிக்கப்பட்டார், கொளுத்தும் வெய்யிலில் அவர் ஒவ்வொரு நாளும் இங்குமங்குமாக அவர் அலைய வேண்டியிருந்தது, அந்தக் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது, இடம்பெயர் தொழிலாளர்களை ஒருவர் விடாமல் தொடர்புகொண்டு யாரும் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் மாணவர்களிடம் எடுத்துக் கூறீனேன்.

சீதாப்பூர் செல்வதற்காக இடம்பெயர் தொழிலாளர்கள் பேருந்துகளில் ஏறும் புகைப்படங்களையும் காணொளிகளையும் மாணவர்களுக்குக் காண்பித்தேன். இந்தப் பேருந்தைப் பிடிப்பதற்காக அந்த ஆண்டின் மிகக்கடுமையான வெயில் நாளில் ஒரு தொழிலாளர் சோனிபேட்டிலிருந்து  தெற்கு டெல்லி வரை மிதிவண்டியிலேயே வந்து சேர்ந்திருந்தார்.  அவருடைய கரங்கள் புண்ணாகி, கால்கள் வீங்கிப் போயிருந்தன.

மாணவர்கள் கலங்கிப் போனார்கள் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

பின்னர், “நான் எனது நண்பரின் முயற்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன் அல்லவா, அவர் பெயர் ஜர்தாப் பாய். அவர் ஒரு முஸ்லிம், இத்தனையையும் அவர் நோன்புக்கிடையே தண்ணீர் கூட அருந்தாமல் செய்துகொண்டிருந்தார். இப்போது சொல்லுங்கள், முஸ்லிம்களைக் கண்டு அச்சப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று அந்த மாணவர்களிடம் கேட்டேன்.

அடுத்து நிகழ்ந்ததுபேரமைதிஅதன் பிறகு மெதுவாக ஒரு மாணவர் கரவொலி எழுப்பத் தொடங்கினான், அதைத் தொடர்ந்து இன்னொருவர், மேலும் இன்னொருவர். ஒட்டுமொத்த வகுப்பும் உண்மையான, உளமார்ந்த கரவொலியை நீண்ட நேரம் எழுப்பிக் கொண்டிருந்தது, அது மிகவும் அழகான தருணம்.

மதவெறியை  எதிர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய நீண்ட விவாதம் தொடர்ந்தது. முஸ்லிம்கள் குறித்து உள்ளார்ந்து ஏதோ பயங்கரமாக இருக்கிறது என்று இதுவரை தாங்கள் நம்பி வந்ததாக வகுப்பின் பெரும்பாலான மாணவர்கள் ஒப்புக்கொண்டார்கள், ஆனால் இந்த நிகழ்வு அவர்களை ஓரளவுக்குச் சிந்திக்கச் செய்தது. (வகுப்பில் முஸ்லிம் மாணவர்கள் யாரும் இல்லை என்பது ஆர்வமூட்டும் விடயமாகும்). இறுதியாக, மத ரீதியாகவோ சாதி ரீதியாகவோ மனிதர்கள் ஒன்றே போல இருப்பது தவறாகும் மேலும் அபாயகரமானதும் ஆகும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

முஸ்லிம்களை வெறுப்பதாகக்கூறிய மாணவி ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களைப் பொதுமைப்படுத்துவதில் எவ்வளவு தவறாக இருந்தாள் என்பதைக் குறித்து தான் மனத்தொல்லைக்கு ஆளானதாக என்னிடம் தெரிவித்தாள். தனது மனதை மாற்றிக்கொள்ள முன்வந்த அந்த மாணவியை நான் பாராட்டினேன். இதை அவள் தனது பெற்றோருடன் விவாதிப்பாளா என்று என்று வியந்தேன். அவள் அப்படிச் செய்தால் அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள் என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது.

நமது இளைஞர்கள் மீதான இரக்கமற்ற இந்துத்வா பிரச்சாரத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் அவர்கள் திறனாய்வுச் சிந்தனையை இழந்துவிட்டார்களோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது. ஆனால் அது உண்மையல்ல. இந்த அனுபவம் காட்டியது போல, இளைஞர்கள் (குறிப்பாக பதின்ம வயதினர்) பகுத்தறிவதில் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். நாம் அவர்களுடன் அமைதியாக, புறவயநிலையில், உரிய மரியாதையுடன் நாம் தழுவிக்கொண்டுள்ள   மெய்யான வாழ்க்கை விழுமியங்களின்  எடுத்துக்காட்டுக்களுடன் உரையாடுவோமானால், அவர்கள் உண்மை நிகழ்வுகளைக் கவனித்துக் கேட்பதற்கு மிக நல்ல வாய்ப்பு இருக்கிறது.


                                                                நன்றி: ஜனதா வீக்லி

                                                         ஆங்கிலத்தில் ரோகித் குமார்

                                                                தமிழில் நிழல்வண்ணன்

Comments

  1. பள்ளிச் சிறுவர்களுடைய சிந்தனைகளையும், அனுபவங்களையும் பொருள்ள வகையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

    இன்றுள்ள அமைப்பில் மக்களைப் பிளவுபடுத்தி ஆளுவதே ஆட்சி செய்பவர்களுடைய குறுகிய சுய நலன்களுக்கும் சுரண்டலுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் தொகுப்பாகத் தெரிகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...