திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் தாலுகாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு, முண்டந்துறை, வனப்பகுதியில் 8,373 ஏக்கரில் அமைந்துள்ளது மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டம், தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தியில் இது முக்கியப் பங்கு
வகிக்கிறது.
சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து, 1929இல் பாம்பே பர்மா
டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் 99 வருட குத்தகைக்கு எடுத்து,
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும், கேரளாவிலிருந்தும் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு, தேயிலைத்
தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தேயிலைபயோடு சேர்த்து ஏலக்காய், மிளகு ஆகியவையும் பயிரிடப்பட்டன .
1947 ஆட்சி கைமாற்றத்திற்குப் பிறகு தமிழ்நாடு இனாம் எஸ்டேட் ஒழிப்புச்சட்டம் 1948இன் படி 1952இல்
சிங்கம்பட்டிக்குச் சொந்தமான மாஞ்சோலைத்தோட்டம், தமிழ்நாடு அரசின் வசமானது. எனினும் அந்நிறுவனம் 99 வருடத்துக்கான குத்தகையை அனுபவிக்கலாம் எனத் தீர்மானமானது. 1962ஆம் ஆண்டு
இந்தப்பகுதியில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டு, 1976இல் நடைமுறைக்கு வந்தது.
சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை 2028-ம் ஆண்டு பிப்ரவரி
11-ம் தேதியுடன் முடிவடைந்த பின்பு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிற்கு வரவிருக்கிற நிலையில் நிறுவனம் தொழிலாளர்களை முன்கூட்டியே வெளியேற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.
இத்தனை ஆண்டுகாலமாகத் தேயிலைத் தோட்ட வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்த 700 குடும்பங்களை இன்று அந்த வேலையிலிருந்து அப்புறப்படுத்தும்
நடவடிக்கையைத் தோட்ட முதலாளியும் அரசும் இணைந்து செய்து வருகின்றன. அவர்களுடைய எதிர்காலம் குறித்து தமிழக அரசும் இந்திய அரசும் எவ்வித அக்கறையற்றும் இருக்கின்றன. தோட்ட முதலாளி கொடுக்கும் சொற்ப இழப்பீட்டுத்தொகையைக் கொடுத்து அவர்களை வெளியேற்றுவதற்கு முதலாளியோடு தமிழக அரசின் அதிகார வர்க்கமும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
கரடுமுரடாக இருந்த மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி மலைப்பகுதியை சீராக்கி தேயிலை தோட்டங்களை தொழிலாளர்கள் தங்கள் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கினர். ஒரு நூற்றாண்டு காலம்
கடும்பனி, குளிர், விசப் பூச்சிகளின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் தேயிலை உற்பத்தியைச் செய்து வந்தனர். இத்தனையாண்டு காலம் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டு மொத்தக் குடும்ப உழைப்பையும் சுரண்டி வந்த முதலாளி அவர்களுக்கு
நியாயமான கூலியை வழங்காததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூடச் செய்துக் கொடுக்கவில்லை.
180 சதுரஅடி கொண்ட ஆஸ்பிட்டாஸ் வேயப்பட்ட வீடுகளில் தொழிலாளர்கள் குடும்பங்களோடு தங்க வைக்கபட்டனர். பல
வீடுகளில் மின்சாரவசதி கூட இல்லை; 90% குடியிருப்புகளில்
கழிப்பிடங்களுக்கு கதவுகள் இல்லை என கூறப்படுகின்றது.
இவர்களுக்கு சட்டப்படியாக வழங்கவேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட பெற்றுத் தராத
அதிகார வர்க்கம், இத்தனையாண்டு காலம் உழைத்த தொழிலாளர்களுக்கு இழப்பீடுகள் பெற்று தருவதில் கூட ஆளும் முதலாளி
வர்க்கத்திற்கே சாதகமாகச் செயல்படுகின்றது. ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இழப்பீட்டை வாங்கி
கொண்டு வெளியேறுமாறு நிர்பந்தித்து வருகின்றது. தற்காலிகமாக மதுரை உயர்நீதிமன்றம் வெளியேற்றத்திற்கு தடைவிதித்தாலும், அது எவ்வளவு காலம்
நீடிக்கும் எனச் சொல்ல முடியாது.
இதற்குப் பின்பு தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களின் எதிர்காலம் குறித்து தமக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும், அவர்களின் பிழைப்பை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும் என்பது போன்றும் அடித்தட்டுத் தொழிலாளர்களின் வாக்கைப்பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் இந்திய அரசும் தமிழக அரசும் செயல்பட்டு வருகின்றன.
அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத்தைப் பெறுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற
வேண்டி ஆளும்
அரசாங்கத்தை வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கடமை இன்று அனைத்துத்
தொழிலாளர்களுக்கும் உள்ளது.
தமிழக அரசே!
- மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றாதே!
- தேயிலைத் தோட்டத்தைக் கூட்டுறவுத் துறையின் கீழ் கொண்டு வா!
- அதில் வேலை செய்யும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்தில் பங்கு கொடு!
- தொழிலாளர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை நடத்தும் அளவுக்குக் கூலி நிர்ணயம் செய்!
- தொழிலாளர்களுக்கு அடிப்படைக் குடியிருப்பு வசதிகளைச் செய்து கொடு!
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு


Comments
Post a Comment