Skip to main content

கியூபாவின் விடுதலைப் போராளி: வில்மா லுசிலா எஸ்பின் கில்லாய்ஸ்

 

வில்மா எஸ்பின் கியூபா புரட்சியாளர், பெண்ணியவாதி, வேதியியல் பொறியாளர். அவர் கியூபா புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். கியூபாவின் பெண்கள் கூட்டமைப்பை உருவாக்குவதில் துணை நின்று, கியூபா பெண்களின் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களுக்கான சம உரிமைகளை உயர்த்திப் பிடித்தார்.

கியூபா புரட்சியின் முன்னோடி இயக்கமான 26 ஜூலை இயக்கத்தின் தோற்றத்திற்கு உதவினார். பின்னர் கியூபா அரசாங்கத்தின் தோற்றத்திலிருந்து தனது மரணம் வரை அதன் பல பிரிவுகளிலும் செயலூக்கமிக்க பங்கினை வகித்து வந்தார்.

வில்மா எஸ்பின் 1930 ஏப்ரல் 7 அன்று சாண்டியாகோ டி கியூபாவில் பிறந்தார். அவருடைய தந்தை ஜோஸ் எஸ்பின் செல்வச் செழிப்புமிக்க வழக்கறிஞர். தாயார் மார்கரிட்டா கில்லாயிஸ். 1940 களில் வில்மா தொடக்கக் கல்வியுடன் பாலே நடனமும் பாடவும் கற்றுக்கொண்டார். 1950களில் ஓரியன்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் பயின்றார். கியூபாவில் இந்தப் பாடத்தைப் பயின்ற முதல் பெண் அவர்தான். பல்கலைக்கழகத்தில் அவர் பயின்ற போது, கைப்பந்து, வரிப்பந்து (டென்னிஸ்) விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தார், மேலும் பல்கலைக்கழக இசைக்குழுவிலும் பாடகராக இடம் பெற்றிருந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தில் ஓரியன்ட் புரட்சிகர நடவடிக்கைக் குழு என்றழைக்கப்பட்ட குழுவைச் சார்ந்த ஃபிரேங்க் பாய்ஸ் என்பவரைச் சந்தித்தார். அந்தக் குழுதான் மான்காடா பாசறைத் தாக்குதல்களை நடத்தியதற்குப் பொறுப்பாக இருந்தது.

வில்மா பட்டப்படிப்பை முடித்த பிறகு அவருடைய தந்தை அவரை மாஸ்ஸாசூசெடில் கேம்பிரிட்ஜில் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு ஊக்குவித்தார். அமெரிக்காவிற்கு அனுப்பிவைப்பதன் மூலம் தன் மகளை சமூகச் செயல்பாடுகளிலிருந்து விலக்கி வைக்கலாம் என்று அவர் நம்பினார். இறுதியாக வில்மா அதற்கு ஒப்புக்கொண்ட போதும் அமெரிக்கக் கல்வி நிறுவனத்தில் பயின்ற குறுகிய காலத்திலேயே அமெரிக்காவின் மீதான அவருடைய வெறுப்பு மிகுதியானது. அவர் மெக்சிகோ வழியாக கியூபா திரும்பி ஜூலை 26 இயக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்துகொண்டார்.

கியூபா திரும்பிய வில்மா, சர்வாதிகாரி ஃபல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியை எதிர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். ஃபிரேங்க் பாய்சைச் சந்தித்து, ஓரியன்ட் மாகாணத்தில் புரட்சிகர இயக்கத்துக்குப் பொறுப்பேற்றார். 1953 ஜூலையில் மான்காடா பாசறை ஆயுதத் தாக்குதல் தோல்வியுற்ற பிறகு, காஸ்ட்ரோ சகோதரர்கள் 1955 சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மெக்சிகோ சென்றனர். மெக்சிகோவிலில் இருந்த காஸ்ட்ரோ சகோதரர்களுக்கும் கியூபாவில் இருந்த ஃபிரேங்க் பாய்ஸுக்கும் இடையில் செய்திகளை எடுத்துச் செல்லும் தூதுவராக வில்மா செயல்பட்டார். பின்னர் 1956 நவம்பரில் ஜூலை 26 இயக்கத்தினர் கிரான்மா படகில் கியூபா திரும்பியபோது, வில்மா சியரா மாஸ்ட்ரா மலைகளில் அவர்களுக்கு உதவுவதற்காகச் சென்றார்.

வில்மா எஸ்பின் ஸ்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நன்கு உரையாடக் கூடியவராக இருந்ததால், அவரால் கியூபப் புரட்சி இயக்கத்தை சர்வதேச அளவில் அறியச் செய்ய முடிந்தது. 1957 இல் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் ஹெர்பர்ட் மேத்யூசுக்கும் காஸ்ட்ரோவுக்கும் இடையில் நேர்காணல் ஒன்றுக்கு வில்மா தனது தொடர்புகள் மூலம் ஏற்பாடு செய்தார். கியூபா புரட்சி பற்றிய செய்தியையும், ஃபிடல் காஸ்ட்ரோ உயிருடன் இல்லை என்ற பாடிஸ்டாவின் பொய்ச் செய்தியையும் அது உலகறியச் செய்தது.

ஜூலை 26 இயக்கம் சர்வாதிகாரி பாடிஸ்டாவை தூக்கியெறிந்த ஒரு சில வாரங்களுக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரரும் கியூபா கம்யூனிஸ்டு கட்சியின் முதல் செயலாளராகவும் இருந்த ராவுல் காஸ்ட்ரோவை வில்மா எஸ்பின் மணந்துகொண்டார்.

வில்மா கியூபாவில் பாலின சமத்துவத்திற்கு மிகச் சிறந்த முறையில் ஆதரவாக இருந்தார். புரட்சியில் அவருடைய ஈடுபாடு கியூபாவில் பெண்களின் பாத்திரத்தை மாற்றியமைத்தது. அவர் கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் தலைவராக ஆனார். அவர் இறக்கும் வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

பெண்கள் கல்வி, அவர்கள் நல்ல வேலையில் அமர்வதற்கான திறன் பயிற்சி, பெண்கள் அரசியலில் பங்கேற்க ஊக்குவிப்பது, புரட்சிகர அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கச் செய்வது ஆகியவை அந்த அமைப்பின் முதன்மையான குறிக்கோள்களாக இருந்தன. 1960 இல் பிக்ஸ் வளைகுடா படையெடுப்புக்கு சற்று முன்பாக கியூபாவெங்கும் சர்க்கரை ஆலைகளும் கரும்பு வயல்களும் தாகுதலுக்கு உள்ளான போது பெண்கள் கூட்டமைப்பு எதிர்ப்புரட்சிக்கு எதிராகப் பெண்களைத் திரட்டுவதற்கு அவசரகால மருத்துவ உதவிப் படையணிகளை உருவாக்கியது.

பெண்களைத் தொழிலாளர் படையணியில் சேர்வதற்கு கியூப அரசாங்கமும் பெண்கள் கூட்டமைப்பும் ஊக்குவித்தன. கியூபக் குடும்பச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது ஆண்கள் வீட்டு வேலைகளிலும் குழந்தை வளர்ப்பிலும் பெண்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உதவுவதைக் கட்டாயம் ஆக்கியது.

வில்மா எஸ்பின் 1965 இலிருந்து 1989 வரை கியூபா கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகப் பங்கேற்றிருந்தார். கியூப அரசாங்கத்தில் அவர் பல பொறுப்புக்களில் ஈடுபட்டிருந்தார்,. 1967 இலிருந்து 1971 வரை சமூகத் தடை ஆணையத்தின் தலைவராகவும், 1969 இல் உணவு அமைச்சகத்தின் தொழில்துறை வளர்ச்சி இயக்குனராகவும், 1971 குழந்தைகள் பராமரிப்புக் கழகத்தின் தலைவராகவும், 1976 இல் கியூப மத்திய அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தார். ஐ.நா மன்றத்தின் கியூபா பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றினார்.

ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்துக்கு வந்தபோது அவர் மணவிலக்குப் பெற்றிருந்தார். எனவே அவருடைய தம்பி மனைவியான வில்மா கியூபாவின் முதல் பெண்மணியின் பாத்திரத்தை வகித்து வந்தார். 2007 இல் அவருடைய கணவர் ராவுல் காஸ்ட்ரோ தலைவரான போது அதிகாரபூர்வமாக கியூபாவின் முதல் பெண்மணியாக ஆனார். கியூப அரசாங்கத்தின் அரசுச் செயலர்என்ற பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

நீண்டகால உடல்நலக் குறைவுக்குப் பின்னர், 2007 ஜூன் 18 அன்று வில்மா எஸ்பின் ஹவானாவில் இறந்துபோனார். ஹவானாவில் கார்ல் மார்க்ஸ் நாடக அரங்கில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கியூபா புரட்சி சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கியூப மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நமது நாட்டிலும் உலகிலும் பெண்கள் விடுதலைக்காகப் போராடிய மிகச் சிறந்த போராளிகளில் ஒருவர்என்று கியூப அரசாங்கம் புகழாரம் சூட்டியது. எரியூட்டப்பட்ட அவரது அஸ்தி சாண்டியாகோ மாகாணத்தில் ஃபிரென்ட் நகராட்சியில் ஃபிரேங்க் பாய்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.


- நிழல்வண்ணன்

ஆதாரம்: விக்கிபீடியா

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...