Skip to main content

உதவி என்ற பெயரில் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க, இஸ்ரேல் பாசிச அரக்கர்கள்!

 

27.5.2025 செவ்வாய்க்கிழமை அன்று தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் உதவி வேண்டி இருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் குறைந்தபட்சம் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்; 46 பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனர்களுக்கு மற்ற உலக நாடுகள் அளிக்கும் எந்த உதவியும் கிடைக்காமல் மூன்று மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் உறுதியாகத் தடுத்து வந்த நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கும் மையங்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உணவும் அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குவிந்தனர். ஆனால் ஆய்வாளர்களால் இந்நிகழ்வு படுகொலைக்காகத் திட்டமிட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. 

‌குவட்ஸ் செய்தித் தளத்தின், (Quds News Network) காசா ஊடக அலுவலகம், " இன்று ரஃபாவில் நடந்த நிகழ்வு பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கத் திட்டமிடப்பட்ட ஒரு செயலாகும்; இது முழு அளவிலான போர்க் குற்றமாகும்; சாதாரண குடிமக்களை--- ஏறத்தாழ 90 நாட்கள் முற்றுகை என்ற பெயரில் பட்டினிக்குள் தள்ளப்பட்டு பலவீனமாக இருந்த மக்களைத் திட்டமிட்டுச் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாகச் செய்த படுகொலையாகும்" என்று கூறுகிறது.

 

நிவாரணப் பொருட்கள் வழங்கும் மையங்களில் வேலி மீது ஏற முயற்சித்த பாலஸ்தீனர்களைத் தடுப்பதற்கு வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் அறிவித்தன; ஆனால் இந்த விளக்கம் காசாவில் உள்ள ஊடகங்களால் வன்மையாக எதிர்க்கப்பட்டது; மறுக்கப்பட்டது; காசாவின் ஊடகங்கள் இஸ்ரேலிய ராணுவம் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டதாகக் கூறுகின்றன. பல இலட்சக்கணக்கான காசா மக்கள் போதுமான அளவிலான உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைக்காமல் பட்டினிக் கொடுமையின் விளிம்பில் முற்றுகை என்ற பெயரில் இஸ்ரேலால் உந்தி தள்ளப்பட்டுள்ள மிகக் கொடுமையான நிலையில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள். ஏறக்குறைய 14,000 குழந்தைகள் 48 மணி நேரத்திற்குள் எந்த உதவியும் கொடுக்கப்படவில்லை என்றால் இறந்து விடுவார்கள் என்று 20.5.2025அன்று ஐ.நா. மனிதநேய அமைப்பின் தலைவர் டாம் ப்ளெட்சர் எச்சரித்துள்ளார். 

19.5.2025 அன்று உலக நாடுகளின் அழுத்தம் அதிகரித்ததால் இஸ்ரேல், நிவாரணப் பொருட்கள் கொண்ட ஒன்பது ட்ரக்குகளை காசாவுக்குள் அனுமதித்தது; குறைவான அளவு உணவுப் பொருள்களை வழங்கிய போதும் இஸ்ரேல் தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்க உறுதியாக மறுத்துவிட்டது.  

அத்தியாவசியப் பொருள்கள் காசாவுக்குள் நுழைய ராணுவம் தடுத்ததற்கு உலக அளவில் உருவான வலிமையான எதிர்ப்பால், பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் என்னும் ஐக்கிய நாடுகளின் அமைப்பையும் மற்றும் அங்கு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு உதவும் பிற அமைப்புகளையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து "காசா மனிதநேய அமைப்பு” என்னும் பெயரில் ரஃபாவில் நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய ஒரு மையத்தை ஏற்படுத்தின.  

இந்தத் திட்டம், காசாவின் பாலஸ்தீனர்களுக்கு அவசியமான பொருட்கள் பிற அமைப்புகள் மூலம் விநியோகப்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க முயற்சியின் ஒரு பகுதியாகும்; "காசா மனிதநேய அமைப்பு", காசா மக்களுக்கான நிவாரணப் பொருள்கள் வீணாவதைத் தடுக்கும் என்றும், ஹமாஸ் அமைப்பினர் அந்தப் பொருட்களைத் 'திருடுவதைத் தடுக்கும் என்றும் ' அமெரிக்காவும் இஸ்ரேலும் அதை நியாயப்படுத்துகின்றன. 

காசாவில் செயல்படும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனமும்’ பிற உதவி மையங்களும் ஹமாஸ் அமைப்பினருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, அவர்கள் அந்த நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காமல் ஹமாஸ் அமைப்பினர் திருடுவதற்கு உதவுகின்றன என்று இடைவிடாமல் தொடர்ந்து இஸ்ரேல் குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் ராணுவப் படைகள் திட்டமிட்டு வேண்டுமென்றே நிவாரண மையங்களில் பணியில் இருப்பவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை அக்டோபர் 2023-ஆம் ஆண்டில் இருந்து கொன்று குவித்துள்ளது; ஆனால் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி மையம் ஹமாஸ் அமைப்பினரால் ஊடுருவப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொய்யாகக் குற்றம் சாட்டி வருகிறது. 

உதவியைத் தாக்குதலுக்கான ஆயுதமாக்குவது: 

காசா மனிதநேய அமைப்பின் உதவிச் செயல்பாட்டுத் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நிவாரண அமைப்புகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ரஃபாவில் உள்ள காசா மனிதநேய அமைப்பு மையத்தில் இரும்புக் கூண்டுகளுக்குள் பெருந்திரளான மக்கள் பல மணி நேரங்கள் நீண்ட வரிசைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டெரஸ் அவர்களின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜார்ரிக், ரஃபாவின் காசா மனிதநேய அமைப்பின் விநியோக மையத்தில் நடக்கும் காட்சிகள் “இதயத்தை நொறுக்குவதாக” உள்ளன என்று குறிப்பிடுகிறார்.  

28.05.2025 புதன்கிழமை ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவன அமைப்பின் தலைவர் ஃபிலிப் லஸ்ஸாரினி, "பசியால் நிலை குலைந்த மக்கள் கிடைத்த உணவை இழக்க இயலாத நிலையில் ஒருவரோடு ஒருவர் வேலிகளுக்குள் மோதிய காட்சி அதிர்ச்சி ஊட்டுகிறது; இது சீரற்ற, மரியாதைக் குறைவான, கண்ணியமற்ற, சிறிதும் பாதுகாப்பு இல்லாத ஒரு செயல்" என்று நிருபர்களிடம் கூறினார். 

மேலும் அவர், "காசாவில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை உதவிகளை ஆயுதமாக்குவதன் மூலமும், அரசியல் மற்றும் ராணுவ அழுத்தங்கள் மூலமும் சரி செய்ய முடியாது” என்று உறுதியுடன் கூறுகிறார். 

மனிதநேய அமைப்பு நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கும் மையங்கள் அமைந்துள்ள இடங்களைக் குறித்து ---குறிப்பாக திட்டமிட்டு காசாவின் தெற்குப் பகுதிகளில் அமைத்திருப்பது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் காசாவின் மக்களை உதவிக்காக அதன் தெற்குப் பகுதிக்கு துரத்துவதுடன் அவர்கள் மீண்டும் காசாவின் வடக்குப் பகுதிக்கு எப்போதுமே திரும்பி வராமல் இருப்பதற்காகத் திட்டமிட்டு இஸ்ரேல் இவ்வாறு செய்கிறது குற்றம் சாட்டுகின்றனர். 

‘பாலஸ்தீன கிரானிக்கல்' செய்தித்தளம், காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் உதவியை ஆயுதமாகப் பயன்படுத்தும் செயலை உறுதியுடன் எதிர்க்கிறார்கள் எனக் கூறுகிறது. அவர்கள் அதைத் "தங்களை ஏமாற்றுவதற்காக, அவர்களுக்கு வாய்ப்பான முறையில் மனிதாபிமான முயற்சிகளை இராணுவமயமாக்கச் செய்யும் முயற்சி” என விவரிக்கின்றனர். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிவாரண மையங்களின் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணி தங்கு தடையின்றி நடக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  

மேலும் காசாவின் பாலஸ்தீனர்களுக்கு சர்வதேச மனிதநேய அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்ட உதவிகளை மக்களுக்கு கிடைக்காமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்துக் கைப்பற்றி இருந்தது. அந்த உதவிப் பொருட்களையே இஸ்ரேல் இப்பொழுது விநியோகிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.  

இதே சமயத்தில் இஸ்ரேலால் காசாவின் மற்ற பகுதிகளில் பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  

28.5.2025 புதன்கிழமை காலை வடக்கு காசாவில் உள்ள அல்--சஃப்டாவியில் உள்ள பாலஸ்தீன பத்திரிகையாளர் ஆன ஒசாமா அல்--- ஆர்பிட்டின் குடும்பத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் அவரது வீடு குண்டுகளால் தாக்கப்பட்டதில் இறந்தனர்; இந்தத் தாக்குதலில் மேலும் ஏராளமான மக்கள் காயம் அடைந்தனர். அல்---ஜஸீரா பத்திரிக்கை 28.05.2025 புதன்கிழமை காலையில் இருந்து மொத்தம் 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், 2023 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் காசாவின் மீது போர் தொடுத்ததில் இருந்து அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போய் உள்ளனர்; ஒரு லட்சத்து 23 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  

அப்துல் ரஹ்மான்

 தமிழில்: கவிதா

  

நன்றி: Monthly Review Online ல் 30.5.2025 அன்று வெளி வந்த கட்டுரை.

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...