Skip to main content

தேர்தல் - ஐந்து வருடக் குத்தகைக்கான ஏலம்!

தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரப் போகின்றது. ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க் கட்சியான அதிமுகவும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆட்சியில் உள்ள திமுக ஏற்கனவே 1.3 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது; அரசு பள்ளிகளில் பயின்று பிறகு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் மகளிருக்கு இலவசமாக நகரப் பேருந்துப் பயணச் சலுகைகளை வழங்கி வருகிறது; பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 3000 ரூபாயை தைப் பொங்கலின்போது வழங்கியது. போதாக்குறைக்கு மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதத் தொகையான 3000ரூபாயை முன் கூட்டி வழங்குவதுடன், அத்தோடு கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாயையும் சேர்த்து 5000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக இந்த மாதம் வழங்கி மகளிரைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இவை அனைத்தும் தேர்தலில் வாக்குகளாக மாறி தன்னை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற்றும் எனத் திமுக பெரும் நம்பிக்கையுடன் இருந்து வருகிறது.

அதே சமயத்தில் எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோதாவில் இறங்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.2000 வழங்கப் போவதாகவும், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ.25000 மானியம் வழங்கப் போவதாகவும், பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணச் சலுகை அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக மற்றும் நித்திஷ் குமாரின் ஜனதா தளக் கூட்டணி ஆட்சி அங்குள்ள பெண்களுக்கு 10000 ரூபாயை வாரி வழங்கி அமோக வெற்றி பெற்றது. அதைப் பின்பற்றி இங்குள்ள கட்சிகளும் மக்களின் வாக்குகளைப் பெறத் திட்டமிடுகின்றன.

இந்தக் கட்சிகளின் நோக்கம் இலவசங்களை வாரி வழங்குவதன் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதுதான். 1947 க்குப் பிறகு கட்சிகள் ஆரம்ப காலத் தேர்தல்களில் வாக்களிக்கும் மக்களுக்கு உப்புமா, காபி வழங்கி வாக்குகளைக் கவர்ந்து வந்தன. பிறகு அவை பணமாகவும், பொருள்களாகவும் கொடுத்து வாக்குகளைப் பெறுவது எனப் பரிணாம வளர்ச்சி பெற்றன; அதற்காக கட்சிகள் ஒவ்வொன்றும் தாம் ஆட்சியில் இருந்தபோது இலஞ்சம் மற்றும் ஊழல்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்தன. இப்பொழுது ஆட்சியில் இருக்கும்போது மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே மக்களுக்கு சலுகைகளை வழங்கி வாக்குகளைப் பெறும் புதிய முறை தோன்றியுள்ளது. தாம் ஆட்சியில் இருக்கும்போது கொள்ளையடித்த பணத்தைக் குறைவாகச் செலவழித்தால் போதும்; வாக்குகளைப் பெற்று விடலாம்; ஆட்சிக்கும் வந்து விடலாம்.

வாக்குகளின் மதிப்பை முதலாளியக் கட்சிகள் நன்கு அறிந்துள்ளன. அதற்காகத் தேர்தலின்போது மக்களின் வாக்குகளைக் கவரப் பல்வேறு வழிகளில் திட்டமிடுகின்றன. மக்களின் ஒப்புதலை வாக்குகளின் மூலம் பெற்று ஆட்சிக்கு வரும் கட்சி ஐந்தாண்டுகளுக்கு அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு முதலாளிய வர்க்கத்திற்கு சேவை செய்கிறது; அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச லாவண்யங்கள் மூலமும், ஊழல்கள் மூலமும் தமது பண பலத்தையும், சொத்துகளையும் பெருக்கிக் கொள்கிறது.

மக்களின் வறுமைக்கும், ஏழ்மைக்கும், வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும் முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலைக் கட்டிக் காப்பாற்றவும், அதற்குச் சேவை செய்யவும்தான் இந்தக் கட்சிகள் இருக்கின்றன. முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலினால்தான் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக மக்கள் அற்பச் சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவலநிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை இந்தக் கட்சிகள் சொல்லாது. உண்மையில் இங்கு நடைபெற்று வருவது முதலாளிய வர்க்கத்தின் ஆட்சிதான் என்பதை இந்தக் கட்சிகள் மூடி மறைத்து வருகின்றன; தாங்கள்தான் உண்மையாக ஆட்சி செய்வதாக நாடகமாடி வருகின்றன.

இந்தக் கட்சிகளுக்கு இடையில் உள்ள போட்டியெல்லாம் தேர்தல் மூலம் மக்களின் ஒப்புதல் பெற்று யார் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டில் முதலாளிகளின் ஏஜண்டாக சேவை செய்வது என்பதுதான். தமிழ் நாட்டைக் குத்தகை எடுக்கத்தான் இப்பொழுது இந்தக் கட்சிகள் மக்களின் வாக்குகளுக்கு ஏலம் கூறிக் கொண்டிருக்கின்றன.

மாநிலமாக இருந்தாலும் இந்திய ஒன்றியமாக இருந்தாலும் இதுதான் உண்மை. முதலாளி வர்க்கத்தின் ஏஜண்டுகள்தான் இந்தக் கட்சிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது இந்தக் கட்சிகளின் நாடகத்திற்கும் முடிவு கட்டப்படும்.

மு.வசந்தகுமார் 

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...