Skip to main content

ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் ஒன்றிணைவோம்!

 

அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது அகோரப் பசிக்கு உலக நாடுகளின் மீதான ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலை நாட்டி வருகின்றது. பின் தங்கிய, வளரும் நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாடவும், சந்தையைக் கைப்பற்றவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தங்கள் தருகின்றன. தமது எண்ணம் நிறைவேறாத நிலையில் அங்குள்ள ஆட்சியை அகற்றி, தமக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவி அந்த நாட்டைக் கொள்ளையடித்து வருகின்றது. இந்தப் போக்கானது சமீபத்தில் அதிகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஈராக், லிபியா, சிரியா, பாலஸ்தீனம், வெனிசுலா, நைஜீரியா, ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நிறுத்தி வருகின்றது. கிரீன்லாந்தை பிடிக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வருகின்றது.

சதாம் புஷ் ஆட்சியில் கொல்லப்பட்டார்; கடாபி ஒபாமா ஆட்சிக் காலகட்டத்தில் கொல்லப்பட்டார்; டிரம்ப் அதிகாரத்தின் கீழ் மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரானின் அதிஉயர் தலைவர் கோமியேனியும் கொல்லபட்டுள்ளார்.

’கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகாரத்தின் நுகத்தடியிலிருந்து ஈரான் மக்களை விடுவிப்பதற்கான போர்’ என்று பாசிஸ்ட் ட்ரம்ப் கூறுகிறார். அதே சமயத்தில் வளைகுடா நாடுகளில் எங்கும் முழுமையான ஜனநாயகம் இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். அந்த நாடுகளுடன் ட்ரம்ப் கூடிக் குலாவி வருகிறார். ஏனென்றால் அந்த நாடுகள் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்குத் தடையாக இல்லை என்பதுதான்.

ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலிலிருந்து அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் பாதுகாத்துக் கொள்ளவே இந்தத் தாக்குதல் நடத்தப்படுகின்றது என அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் அடியாள் இஸ்ரேலும் தம்முடைய ஆக்கிரமிப்புப் போரை நியாயப்படுத்தி வருகின்றன. உண்மையில் தான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றும், தம்முடைய நாட்டிற்குத் தேவையான ஆற்றல் உற்பத்திக்காவே அணு சக்தியைப் பயன்படுத்தி வருவதாகவும் ஈரான் பலமுறை கூறியும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அதை ஒப்புக் கொள்ளாமல் ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சுமத்துவது போல் ஈரான் இதுவரையிலும் எந்த ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டதில்லை. உண்மையில் அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் தொடர்ந்து ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டு உலக அமைதிக்கே ஆபத்தாக இருந்து வருகின்றன.

மேலும், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்காவும். இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என நாட்டாண்மை செய்கின்றன. அவ்வாறு கூறுவதற்கு அந்த நாடுகளுக்கு எந்த விதமான தார்மீக உரிமையையும் இல்லை.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரான் அமெரிக்காவிற்கு அடிபணிய மறுத்து வருகிறது. ஈரானின் ஆட்சியாளர்கள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தேவைகளுக்குப் பணிந்துப் போகவில்லை என்பதால், அந்த ஆட்சியை அகற்ற நீண்டகாலமாகவே முயற்சி செய்து வருகின்றன.

நேரடியாக ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்காகவும், அந்த நாட்டின் இறையாண்மையை மறுத்து அதன் உள்விவகாரங்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த ஏகாதிபத்தியக் கூட்டணி ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகவும், தங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஓமன் நாட்டின் ஏற்பாட்டில் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த பொழுதே அமரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கி விட்டன. ’அமெரிக்கா ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது, பின்னர் பேச்சு வார்த்தையைப் பாதியிலேயே கைவிட்டுத் தாக்குதலைத் தொடங்கியது எனத் தெரியவில்லை’ என்கிறார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அர்காட்சி.

இந்த ஏகாதிபத்தியக் கூட்டணியின் நோக்கம் ஈரானைத் தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து அதன் பெட்ரோலிய வளங்களைக் கொள்ளையடிப்பதும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் தமது இராணுவக் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வருவதுமேயாகும்.

ஈரானில் கொடுங்கோன்மையை வீழ்த்தி ஜனநாயகத்தை மலர வைக்கப் போவதாக டிரம்ப் கூறுகின்றார். இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ. ஈரானின் ஏவுகணைத் திட்டத்தைச் சீரழிப்பதே இதன் நோக்கம் என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகிறார். இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடுகளைத் தாக்கும் ஈரானின் திறனை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் கூறுகின்றார். இவ்வாறு இவர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறினாலும் அமெரிக்காவின் நோக்கம் ஈரானைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தான்.

இதுவரை, ஈரானின் வளங்களைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வந்த சீனாவும், ரசியாவும் இந்தத் தாக்குதல் குறித்து வெற்று அறிக்கைகளை மட்டுமே கொடுத்துள்ளன. அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்க மறுக்கின்றன.

இந்தத் தாக்குதலில் ஈரானிலும், வளைகுடா நாடுகளிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். போரில் ஈடுபடுத்தப்படும் அனைத்து நாடுகளின் இராணுவ வீரர்களும் பலியாகின்றனர். வெகுசில ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக, சாதாரண மக்களின் உயிர்கள் பணயமாக்கப்படுகின்றன.

இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அரசால் எதுவும் செய்ய இயலாது என்றும், அமெரிக்கர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.

முதலில், சனிக்கிழமை (28.02.2026), டிரம்ப் "இரண்டு அல்லது மூன்று நாட்களில்" போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று கூறினார். ஒரு நாள் கழித்து, அவர் ஒரு நேர்காணலில் "நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேல்" போர் நீடிக்கும் என்று கூறுகிறார். தயாரித்து வைத்துள்ள ஆயுதங்களைப் போரில் அழிப்பதன் மூலம் ஆயுத உற்பத்தியாளர்களுக்கு உற்பத்திக்கான புதிய ஆணைகள் கிடைக்கும். அவர்களுக்கு இலாபம் கொழுக்கும். ஆனால், தாக்குதலுக்கு உள்ளான நாடுகள் சூறையாடப்பட்டு, அதன் கட்டமைப்புகள் அனைத்து அழிக்கப்பட்டு, பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, நாடு பல தசாப்தங்கள் பின்னோக்கிக் கொண்டு செல்லப்படும்.

எந்த ஒரு நாட்டின் மீதான தாக்குதல்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு நாடுகள் பங்கினைக் கொண்டுள்ளன. அதே போன்று உள்நாட்டில், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சிகளை அடக்கி ஒடுக்குவதிலும், அந்த நாட்டு இராணுவம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிற நாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்காற்றுகின்றன. இனி வரும் காலங்களில் தொழிலாளர்களும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் ஒவ்வொரு அரசின் எல்லைகளுக்குள் மட்டும் ஒருங்கிணைந்தால் போதாது. அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் ஒற்றுமையும் சர்வதேசிய உணர்வும் அவசியம். தொழிலாளர்கள் தங்கள் அரசு பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தவோ, தாக்குதல் நடத்தவோ முயலும்பொழுது, தங்கள் சொந்த நாட்டு அரசுகளுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாட்டைச் சார்ந்த தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் மக்களின் நலன்களுக்காகவும் நிற்க வேண்டும்.

ஈரானின் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர். இஸ்ரேலிலும் நெதன்யாகுவின் பாசிசத்திற்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அந்த நாடுகளில் உள்ள மக்களின் போராட்டங்கள் பாசிஸ்ட்டுகளான ட்ரம்பையும் நெதன்யாகுவையும் தூக்கி எறிய வேண்டும். அவர்களை மட்டும் அல்லாமல், அவர்களை இயக்கி வரும் ஏக போக முதலாளிகளையும் தூக்கி எறிய வேண்டும். போருக்குக் காரணமாக இருக்கும, முதலாளியத்தை, ஏகபோக மூலதனத்தை, ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதன் மூலமே உலகில் போரை ஒழிக்க முடியும்.

ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் ஒன்றிணைவோம்!

குமணன்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...