Skip to main content

அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் யுத்தமும் பாட்டாளி வர்க்கத்தின் அணுகுமுறையும்!

 


கடந்த பிப்ரவரி 28-ல் தொடங்கிய இப்போரானது மூன்று மாதத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொமேனியின் கொடுங்கோன்மை எனும் நுகத்தடியின் கீழ் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈரான் மக்களை விடுவிப்பதற்காகவும், அணு ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்து தன்னையும் தனது நட்பு நாடுகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஈரான் மீது போர் தொடுத்திருப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறிவருகிறது.

ஆஹா! ஈரான் மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எவ்வளவு அக்கறை? "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை" தான். மறுபுறம் அமெரிக்க, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது.ஆனால் இவர்களின் கூற்றுக்களை மெய்விவரங்களில் இருந்து ஆராய்ந்து பார்த்தோமேயானால் அவை உண்மை அல்ல என்பது விளங்கும்.

இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் (ஏகாதிபத்தியத்தினதும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தினதுமான) நடைபெறும் அனைத்து வகையான யுத்தங்களும் அது உலக யுத்தமாக இருப்பினும் ஆக்கிரமிப்பு யுத்தங்களாக இருப்பினும் உலக முதலாளித்துவ, ஏகாதிபத்திய நெருக்கடிகளின் விளைவாக தோன்றுகின்ற அதாவது ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ கூட்டுக்களுக்கிடையில் உலகை, பிரதேசங்களை மறுபங்கீடு செய்து கொள்வதற்கான அநீதி யுத்தங்களே அன்றி வேறல்ல என்பதே மார்க்சியம் நமக்கு அளித்துள்ள போதனை. மேற்கண்ட மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ள அமெரிக்க,இஸ்ரேல் மற்றும் ஈரான் யுத்தத்தை எவ்வாறு அணுகுவது? என்பதே நம்முன்னுள்ள கேள்வி. 

அமெரிக்க,இஸ்ரேலின் ஈரான் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்ப்போம்!

        ஈரானின் தற்காப்பு யுத்தத்தை ஆதரிப்போம்!

      இந்திய மோடி அரசே! அமெரிக்க இஸ்ரேல் போருக்கு துணை போகாதே!

என்று அமெரிக்க ஏகாதிபத்திய அணியை எதிர்த்து ஈரானுக்கு ஆதரவாக இங்குள்ள கம்யூனிஸ்டுகள், புரட்சியாளர்கள், ஜனநாயகவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அனைவரும் ஒரே குரலில் கோரஸ் பாடி கொண்டுள்ளனர்.

அதாவது ஆக்கிரமிப்பாளனை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஆக்கிரமிக்கப்படும் நாட்டின் தற்காப்பை ஆதரிப்பதே நமது கடமையாகும் என்கின்றனர். ஆனால் ஒரு மார்க்சியவாதி அல்லது பாட்டாளி வர்க்க இயக்கம் என்ற முறையில் போரில் ஈடுபட்டுள்ள இரு பிரிவினரில் ஏதாவது ஒரு பிரிவை ஆதரிப்பது மார்க்சிய அணுகுமுறை ஆகுமா?

வரலாற்று பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் இன்றைய உலக நிலைமைகளானது இரண்டாம் உலகப் போரின் போது நிலவிய காலனியாதிக்க வரலாற்றுக் கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அறியலாம்.இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அரசியல் சுதந்திரம் அதாவது ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கைகளில் இருந்து அரசியல் அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளுக்கு-தேசிய விடுதலைப் புரட்சியின் மூலமோ அல்லது சமரசங்களின் மூலமோ-மாற்றப்பட்டுள்ள சகாப்தம் ஆகும். முதலாளித்துவ அரசானது தனக்கென ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தையும் அச்சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள முதலாளித்துவ ஜனநாயக குடியரசுகளே ஆகும். அதன் வடிவங்களில் (ஜனநாயக குடியரசு, இஸ்லாமிய குடியரசு, மதச்சார்பற்ற சோசலிச குடியரசு என) வேறுபாடுகள் இருப்பினும் சாரம்சத்தில் அனைத்து குடியரசுகளும் முதலாளித்துவ ஜனநாயக குடியரசுகளே ஆகும்.

ஈரானும், இந்தியாவும் அத்தகைய ஒரு முதலாளித்துவ ஜனநாயக குடியரசுகளே ஆகும். அதனடிப்படையிலேயே நாம் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து சோசலிசத்தை படைப்பதற்கான சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கிறோம். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிய- லெனினிய குழுக்கள் அனைவரும் சமுதாய வரலாற்று வளர்ச்சி பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் இல்லாததன் விளைவாக தற்போதும் (புதிய காலனி, நவ காலனி, மறுகாலனி என்கிற) காலனிய வரலாற்றுக் கட்டமே நிலவுகிறது என்று வாதிடுகின்றனர். மேற்கண்ட தவறான கண்ணோட்டத்தின் விளைவாகவே வரலாற்றில் காலாவதியாகிவிட்ட தேசிய விடுதலைப் புரட்சி திட்டத்தை (ஜனநாயக புரட்சித் திட்டத்தை), புதிய ஜனநாயக புரட்சித் திட்டத்தை தங்களது வேலைத்திட்டமாகக் கொண்டுள்ளனர்.

எனவே இன்றைய வரலாற்றுக் கட்டத்தில் நடைபெறும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போராக இருப்பினும் ஏகாதிபத்திய நாட்டிற்கும் முதலாளித்துவ நாட்டிற்கும் இடையிலான போராக இருப்பினும் போரானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களிலிருந்து நடைபெறுகின்ற போர் என்பதை எடுத்துக் காட்டி அதை எதிர்த்து அம்பலப்படுத்தி சோசலிசத்திற்கான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதும், போர்களை ஒழிப்பதற்கான வழி சோசலிசமே என்பதையும் பிரச்சாரம் செய்வதே நமது கடமை. ஆனால் அதற்கு மாறாக போரில் ஈடுபடும் இரு பிரிவினரில் ஒருவன் ஏகாதிபத்தியவாதி, ஆக்கிரமிப்பாளன் மற்றொருவன் ஒடுக்கப்படும் நாடு, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாடு என்று வகைப்படுத்துவதன் மூலம் அதாவது ஒடுக்கும் நாடு ஒடுக்கப்படும் நாடு என்று (ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கம் என்ற வர்க்க கண்ணோட்டத்தில் அல்ல) வகைப்படுத்துவதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து ஒடுக்கப்படும் நாட்டிற்கு ஆதரவளிப்பதே நமது பிரதான கடமையாகும் என்று கூறுகின்றனர். மேற்கண்ட இவர்களது நிலைப்பாடு மார்க்சியம் அல்ல.

பாட்டாளி வர்க்கம் எத்தகைய போர்களை ஆதரிக்க முடியும். ஆதரிக்க வேண்டும்?

1.   ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள ஒரு நாடு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தேச விடுதலை மற்றும் ஜனநாயகத்திற்காக நடத்தப்படும் யுத்தங்கள்.

2. ஒரு சோசலிச அரசின் மீது ஏகாதிபத்தியம் அல்லது முதலாளித்துவ அரசுகள் நடத்தும் யுத்தத்தை எதிர்த்து அந்நாடு நடத்துகிற யுத்தம் ஒரு தற்காப்பு யுத்தம் ஆகும்.

மேற்கண்ட இரு வகையான யுத்தங்கள் நீதி யுத்தங்கள் ஆகும் அத்தகைய நீதி யுத்தங்களை பாட்டாளி வர்க்க இயக்கம் எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதரிக்க வேண்டும். மாறாக ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ கூட்டுக்களுக்கிடையில் உலகை மறு பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்படும் யுத்தங்கள் அநீதி யுத்தங்கள் ஆகும். அத்தகைய யுத்தங்களை எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும். (எடு:)முதல் மற்றும் இரண்டாவது உலக யுத்தங்கள், ஈரான் -ஈராக், ரஷ்ய- உக்ரைன், அமெரிக்க -ஆப்கான்யுத்தங்கள்...)

மேற்கண்ட மார்க்சிய தத்துவார்த்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் இப்போரை ஒப்பு நோக்குவோம் எனில் ஈரான் ஒரு ஏகாதிபதிய ஆதிக்கத்தின் கீழ் உள்ள காலனிய நாடோ அல்லது சோசலிச நாடோ அல்ல.மாறாக அது ஒரு முதலாளித்துவ குடியரசாகும். 1979 -இல் அன்றைய அமெரிக்க ஆதரவு ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த மன்னர் ஷா-வின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய கோமேனி ஈரானை ஒரு இஸ்லாமிய குடியரசாக பிரகடனப்படுத்தினார். 1979-ல் புதிய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் அது மேற்கத்திய எதிர்ப்பு (அமெரிக்க எதிர்ப்பு) என்ற பெயரில் ரஷ்ய, சீன நாடுகளுடன் தனது அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியிலான உறவுகளை பலப்படுத்திக் கொண்டது.

உதாரணமாக ரஷ்ய உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கியது. பதிலுக்கு ரஷ்யா ஈரானுக்கு தொழில் நுட்பம் மற்றும் ஆயுதங்கள் வழங்கியது. மேலும் 2025- ம் ஆண்டில் தங்களுக் கிடையில் இருபது ஆண்டுகளுக்கு யுத்ததந்திர ரீதியிலான உடன்பாடு (Strategic agreement) மற்றும் நிதி, வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளது. அதே போல சீனாவானது ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர் மற்றும் பொருளாதார கூட்டாளியும் ஆகும். 2021- ல் சீனாவுடன் 25 ஆண்டுகளுக்கு யுத்ததந்திர உடன்பாட்டை எட்டியுள்ளது. BRICS, SOC (shangai co-operation organization) அமைப்பில் ஈரானை இணைப்பதன் மூலம் தனது பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. தற்போதைய யுத்தத்திலும் ஈரானுக்கு உதவியாக ரஷ்யாவும் சீனாவும் இருக்கிறது என்பதும் உலகறிந்த ஒன்றாகும்.

1979-ல் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய கோமேனி அரசு சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஆட்சியில் இருந்த சன்னி பிரிவு ஆதிக்கத்திற்கு எதிராக தனது ஷியா கருத்தியலை விஸ்தரிக்க முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக ஏமனில் ஹவுதிஸ் அமைப்பு தோன்றியது. ஈரானின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ஹவுதிஸ் அமைப்பும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு அவ்வப்போது தாக்குதலையும் நடத்தி வருகிறது. இவ்விரு அமைப்புகளுக்கும் ஈரான் ஆயுதங்களையும், இராணுவப் பயிற்சிகளையும் நிதி உதவியையும் வழங்கி வருகிறது. இந்த இரு அமைப்புகளும் ஈரானின் பிராந்திய நலன்களின் விஸ்தரிப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இப்பொழுது அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் நடைபெறும் போரில் இவ்விரு அமைப்புகளும் ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ளன.

ஆகவே, இப்போரில் ஈடுபட்டுள்ள இரு பிரிவினரும் போரை நியாயப்படுத்துவதற்காக எத்தகைய காரணங்களைக் கற்பித்தாலும் அதன் நோக்கமானது தத்தமது பலத்திற்கேற்ப உலகை மறுபங்கீடு மற்றும் பிராந்திய மேலாதிக்கத்திற்கான யுத்தமே என்பதை எடுத்துக்காட்டி அதை எதிர்த்து அம்பலப்படுத்துவதே நமது கடமையாகும். இந்த நிலைமையில். அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கம் இப்போரை எதிர்த்து அம்பலப்படுத்துவதோடு தங்களது சோசலிச லட்சியத்திற்கான அதாவது சொந்த ஆளும் வர்க்கங்களுடன் கணக்கு தீர்த்துக் கொள்வதற்கான வர்க்கப் போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதே அவர்களது கடமையாகும்.

மேலும் எந்த வர்க்கம் போரை நடத்துகிறது? போரின் வர்க்கத் தன்மை என்ன? என்பதிலிருந்தே அது நீதிக்கான போரா? அநீதி போரா? என்பதையும் போரில் ஈடுபடும் இரு பிரிவினரின் வர்க்கத் தன்மையின் அடிப்படையிலேயே யாரை ஆதரிப்பது அல்லது எதிர்த்து அம்பலப்படுத்துவது என்பதை தீர்மானிக்க முடியும்.அதற்கு மாறாக போரை யார் முதலில் துவக்கினான். எதிரி எந்த நாட்டில் இருக்கிறான் என்பதிலிருந்தோ அல்லது ஒருவன் ஏகாதிபத்தியவாதி (ஆக்கிரமிப்பாளன்) மற்றொருவன் சிறிய நாட்டினன் ஆக்கிரமிப்புக்கு உள்ளானவன் என்பதிலிருந்தோ அணுகக் கூடாது, அணுக முடியாது.

சோசலிசம் தேசங்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கிறது அதாவது ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேலின் வன்முறையை எதிர்க்கிறது. ஆகவே எனது நாடு படையெடுப்பிற்கு ஆளாகும் போது ஒருவன் தன்னையே தற்காத்துக் கொள்கிறேன் என்று ஒரு ஈரானியன் கூறினால் அவன் சோசலிசத்திற்கும் சர்வதேசியவாதத்திற்கும் துரோகம் புரிந்தவன் ஆகிறான். அதாவது தனது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தை எல்லாவற்றுக்கும் மேலாக வைத்துப் பார்க்கிறான். போர் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர் என்பதையும் தனது முதலாளித்துவ வர்க்கமும் (ஈரானும்) ஏகாதிபத்திய சூரையாடல் எனும் சங்கிலியில் உள்ள ஒரு கண்ணியாக உள்ளது என்பது பற்றியும் அவன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆனால் புரட்சிகர தொழிலாளி மற்றும் கம்யூனிஸ்டின் கடமையானது ஏகாதிபத்தியப் போராக இருப்பினும் ஆக்கிரமிப்புப் போராக இருப்பினும் அதன் வர்க்க நலன் எவ்வாறு முதலாளித்துவ வர்க்க நலன்களுடன் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதும் அதன் அடிப்படையில் சொந்த நாட்டுப் பாட்டாளி வர்க்க விடுதலையை அதாவது சோசலிசம் மற்றும் உலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குரிய தயாரிப்பு நிலையிலிருந்து தனது செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

யுத்தத்தில் ஈடுபடும் நாடுகளும் அதன் வர்க்கத் தன்மையும்:

ஈரான் அரசனது இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்ட ஒரு குடியரசு ஆகும். அந்நாட்டரசு தனது சொந்த நாட்டு பாட்டாளி வர்க்கத்தையும், மக்களையும், பெண்களையும் எவ்வாறு ஒடுக்கிச் சுரண்டி வருகிறது என்பதற்கு சமீப ஆண்டுகளில் நடைபெற்ற இரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.

2022-ம் ஆண்டு ஹிஜாப் அணிவதற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் கொமேனி ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். மத பிற்போக்கு மற்றும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளில் ஒன்றான ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஜனநாயக உரிமை கோரிய போராட்டத்தின் மீது கொமேனி அரசானது கொடிய அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது. அதன் விளைவாக 500க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர் 20,000 மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இப்போராட்டத்தை பற்றி ஈரானின் உச்ச தலைவரான கொமேனி இவ்வாறு வருணித்தார். "இது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமமானது" என்று.

அடுத்து 2025-ம் ஆண்டு டாலருக்கு எதிரான ரியாலின்(ஈரான் நாணயம்) மதிப்பு வீழ்ச்சி அடைந்ததின் விளைவாக வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஈரான் சந்தித்தது. கடுமையான பணவீக்கம், எரிவாயு தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் விளைவு கொமேனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற அடிப்படையில் எழுந்த மக்கள் எழுச்சி தலைநகர் டெக்ரானை தொடர்ந்து அனைத்து நகரங்களுக்கும் பரவியது. இப்போராட்டத்தையும் பாதுகாப்பு படையினரை கொண்டு ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தும், 20,000க்கும் மேற்பட்டோரை சிறைப்படுத்தியும் ஈரான் அரசு நசுக்கியது. அத்துடன் அரசு எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனையே பரிசாக வழங்கப்படும் என அறிவித்தது. தற்போதைய போர்ச் சூழலிலும் போர் எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்கிற நிலையே உள்ளது.

இதிலிருந்து ஈரான் நாடானது உலக முதலாளித்துவ வர்க்கம் என்ற சங்கிலியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கண்ணியே என்பதும் இவர்களது தற்காப்பு போர் என்பது முதலாளித்து வர்க்கத்தின் தற்காப்பு போரே அன்றி பாட்டாளி வர்க்கத்தின் தற்காப்புக்கான போர் அல்ல என்பதை அறியலாம். ஆனால் முதலாளித்துவ வர்க்கமானது அறியாமையில் இருக்கும் மக்களை தேசபக்தி என்ற கோஷத்தின் மூலம் ஏய்த்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் வர்க்கத்தன்மை பற்றி:

அமெரிக்க ஏகாதிபத்தியமானது உலக மேலாதிக்கம், அணு ஆயுத ஏகபோகம், டாலர் மேலாதிக்கத்திற்காக உலகின் பிற நாடுகள் மீது எத்தகைய ராஜதந்திர, போர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கு தனிதனியே விபரங்களோ ஆதாரங்களோ தேவையில்லை. அமெரிக்காவில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் தோன்றும் போதெல்லாம் அதற்கெதிரான மக்களின் தன்னியல்பான போராட்டங்களையும் கடுமையாகக் ஒடுக்குவதிலும் கருப்பின மக்களுக்கு எதிரான இனவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்துவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து அங்கு பணி புரியும் தொழிலாளர்களுக்கு எதிரான தேசிய வெறியையும் கிளப்பி விட்டு பாட்டாளி வர்க்கத்திற்கான வர்க்க போராட்டத்தை திசை திருப்பும் பணிகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருவதையும் உலகப் பாட்டாளி வர்க்கமும், மக்களும் அறிந்த ஒன்றுதான்.

இஸ்ரேல் இரண்டாவது உலகப் போருக்கு பிறகு உருவன யூத இனவெறியை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ நாடாகும். அது பாலஸ்தீனர்களை அவர்களுடைய தாயகத்திலிருந்து விரட்டி அகதிகளாக்கியது. இன்றும் பாலஸ்தீனர்கள் தங்களுக்கென்று ஓர் இறையாண்மை கொண்ட நாட்டை உருவாக்கத் தடையாக உள்ளது. அமெரிக்கா மற்றும் தனது நலன்களில் இருந்து பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு போரை 2023 அக்டோபரில் தொடங்கி இன்று வரை நடத்திக் கொண்டிருப்பதை உலகம் அறியும்.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறுவது என்ன? கோமேனியின் கொடுங்கோன்மையிலிருந்து ஈரான் மக்களை விடுதலை செய்வதற்காக யுத்தம் செய்வதாக பாசாங்கு செய்கிறது. ஆனால் மெய் நடப்பில் இந்த யுத்தமானது ஈரான் கூறுவது போல தற்காப்பு யுத்தமோ அமெரிக்க ஏகாதிபத்தியம் கூறுவது போல கோமேனியின் கொடுங்கோண் மையிலிருந்து ஈரான் மக்களை விடுதலை செய்வதற்கான யுத்தமோ அல்ல. மாறாக உலகை மறுபங்கீடு செய்வது, டாலர் மேலாதிக்கம், அணு ஆயுத ஏகபோகத்திற்காக அமெரிக்காவும் தனது முதலாளித்துவ வர்க்க நலன்களில் ஈரானும் நடத்தும் இப்போரானது ஒரு அநீதிப்போர் ஆகும் என்பதால் இப்போரை எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும்.

அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் யுத்தத்தில் இன்றைய உலகின் பிரதான எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் உலக மேலாதிக்கத்தையும் எதிர்த்து ஈரானை ஆதரிக்க வேண்டும் என்பவர்கள் கடந்த கால வரலாற்று அனுபவங்களில் இருந்தும் படிப்பினைகளை கற்றுக் கொள்ள மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

முதல் மற்றும் இரண்டாவது உலகப்போரும் அதன் படிப்பினைகளும்:

முதல் உலகப்போரின்போது, உலக யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவோம்! என்கிற அகிலத்தின் முடிவை கைவிட்ட “தந்தையர் நாட்டு பாதுகாப்பு” என்ற பெயரில் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் சொந்தநாட்டு ஆளும் வர்க்கங்களுடன் சேர்ந்து கொண்டு சமூக தேசிய வெறியர்களாக மாறி சோசலிசத்திற்கு துரோமிழைத்தனர். அதை எதிர்த்து மார்க்சிய நிலைப்பாடான சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தது லெனின் தலைமையிலான ஜிம்மர் வேர்ல்டு இடதுசாரி அணி. லெனின் தலைமையிலான ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியே ரஷ்யாவில் சோலிசப் புரட்சியை சாதித்தது.

இரண்டாவது உலகப்போரில் ஹிட்லரின் பாசிசமே உலக நாடுகள், மக்களுக்கு ஆபத்தானது என்றும் ஹிட்லரின் பாசிச அணியை அமெரிக்க, பிரிட்டன் தலைமையிலான ஜனநாயக அணியுடன் இணைந்து வீழ்த்துவதன் மூலமே சோசலிச தாயகம் (ரஷ்யா), உலகஅமைதி, தேசங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று கூறி சோவியத் ரஷ்யா என்று அழைக்கப்பட்ட ரஷ்யா நேச நாடுகள் அணியுடன் இணைந்து உலகப்போரில் ஈடுபட்டது. மூன்றாவது அகிலத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘ஏதாதிபத்தியப் போரை உள்நாட்டுப்போராக மாற்றுங்கள்’ என்ற லெனினிய நிலைப்பாட்டைக் கைவிட்டு நேசநாடுகள் அணியை ஆதரித்தன. அதன் விளைவாக தமது சொந்த விடுதலையை (சோசலிசப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி) கைவிட்டன. அப்பொழுது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அகிலத்தின் தவறான வழிகாட்டுதலால் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தேசிய விடுதலைப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு மாறாக நேசநாடுகள் அணியில் இருந்த பிரிட்டனுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. இந்தச் செயலினால் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. அந்தச் சமயத்தில்,’வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தை காங்கிரஸ் முன்னெடுத்தது. விடுதலைப் போராட்டத்தின் தலைமையைக் காங்கிரஸ் கைப்பற்றியது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியானது அகிலத்தின் தவறான முடிவை விமர்சனமின்றி ஆதரித்த போதிலும் சீன நிலைமைகளில் இருந்து உலகயுத்தம் குறித்த மார்க்சிய நிலைப்பாட்டை அதாவது ஜப்பான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசிய விடுதலைப் புரட்சியில் ஊன்றி நின்றதன் மூலமே சீனப்புரட்சி வெற்றிபெற்றது. போரில் பாசிச அணி வீழ்த்தப்பட்டது. ஆனால் உலக அமைதி நிலைநாட்டப்படவில்லை. நாடுகளின் சுதந்திரம் பாதுகாக்கப்படவில்லை. சோசலிச தாயகம் பாதுகாக்கப்படவில்லை என்பதே இதுவரையிலுமான வரலாற்று அனுபவம்.

மேலும் இரண்டாவது உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பிராந்திய அளவிலான போர்கள் நடைபெற்றுள்ளன. இப்போர்களின் சாரம் ஏகாதிபத்திய சுரண்டல் கொள்ளை மற்றும் ஆதிக்கத்திற்கான போர்களாகவே இருந்து வந்துள்ளது. அதேபோன்று சுரண்டும், முதலாளித்துவ வர்க்கங்களுக்கிடையிலான போரில் சொந்த நாட்டு ஆளும் வர்க்கத்தையோ அல்லது இருபிரிவில் ஏதாவது ஒரு பிரிவையோ ஆதரித்த பாட்டாளி வர்க்க கட்சிகள் அனைத்தும் சமூக தேசியவெறி கட்சியாகவோ, திருத்தல்வாத கட்சியாகவோ சீரழிந்து போனது தான் வரலாற்று அனுபவமாகும்.

ஆகவே யுத்தம் குறித்த மார்க்சிய கோட்பாட்டு அடிப்படையிலும் சரி கடந்த கால வரலாற்று அனுபவங்களில் இருந்தும் படிப்பினைகளை கற்றுக் கொண்டு, அதனடிப்படையில் அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளின் பாட்டாளி வர்க்க இயக்கமானது இப்போரை எதிர்த்து அம்பலப்படுத்தி தமது சொந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து சோசலிசத்திற்கான வர்க்கப் போராட்டத்திற்கு தயாரிப்பு செய்திடல் வேண்டும். இந்திய பாட்டாளி வர்க்கமும் உலகப் பாட்டாளி வர்க்கமும் மேற்கண்ட கருத்து நிலையில் இருந்து தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

ஆனால் அதற்கு மாறாக இந்தியாவில், தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள், புரட்சியாளர்கள், ஜனநாயகவாதிகள், தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர்கள் அனைவரும் அமெரிக், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்ப்போம்! ஈரானின் தற்காப்பு யுத்தத்தை ஆதரிப்போம்! என்று குரல் எழுப்புவதன் மூலம் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்து நிலையில் இருந்து சோசலிசத்திற்கும் சர்வதேசியவாதத்திற்கும் துரோகம் புரிபவர்களாகவே இருந்து வருகின்றனர். இத்தகைய மார்க்சிய விரோத கருத்துகளை அம்பலப்படுத்துவதும் மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து பாதுகாப்பதும் நமது கடமையாகும். முதலாளித்துவ தேசியவாதம் எனும் பிற்போக்கு சுனாமி பேரலையால் சர்வதேச பாட்டாளி வர்க்கம் அடித்துச் செல்லப்பட்டுள்ள இன்றைய சூழலில் நாம் சிறிய சக்தியாக இருப்பினும் மார்க்சிய தத்துவத்தை பற்றி நிற்பதும் பாட்டாளி வர்க்கத்திற்கு போதனை அளிப்பதன் மூலம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதும் நமது கடமையாகும்.

        முதலாளித்துவ தேசியவாதம் எதிர்ப்போம்!

        பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் உயர்த்திப் பிடிப்போம்!

        ஏகாதிபத்தியம் உள்ளவரை யுத்தங்கள் நீடிக்கும்!

 சோசலிசமே யுத்தங்களை ஒழிப்பதற்கான ஒரே வழி. மாறாக போரில் ஈடுபடும் ஒரு பிரிவை தோற்கடிப்பதல்ல!


-  அனுப்பூர் செல்வராஜ்


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...