Skip to main content

முதலாளிகள் கொழுக்க மக்கள் பட்டினி கிடக்க வேண்டும்!

 

10.05.2026 அன்று ஹைதராபாத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சி பேரணியில் இந்திய பிரதமர் இந்திய மக்களுக்கு ஏழு வேண்டுகோள்கள் விடுத்தார்; அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்ய வேண்டும்; அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்; பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; சமையல் எரிவாயு உபயோகத்தைக் குறைக்க வேண்டும்; ரசாயன உரப் பயன்பாட்டை 50% குறைக்க வேண்டும்; வெளிநாட்டுப் பொருள்களை தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்க வேண்டும்; மேலும் வெளிநாட்டுப் பயணங்களை ஒரு வருடத்திற்கு தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்நியச் செலாவணி இருப்பை அதிகப்படுத்த, பாதுகாக்க இந்த நடவடிக்கைகள் தேவை என்று காரணம் கூறினார். 

ஆனால் ரிசர்வ் வங்கி கவர்னரும், நிதி அமைச்சரும், அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் நிலைமைகளை ஆராய்ந்து அறிவுறுத்தும் கமிட்டிகளும், பல்வேறு வகையான நிலைப்பாடு கொண்ட பல பொருளாதார வல்லுநர்களும், ஊடகங்களும் பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் இந்தியா தேவையான அளவு அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கும் போது, இந்திய பிரதமர் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்க மக்களை வேண்டுவது குழப்பமூட்டுவதாக உள்ளது. மீண்டும் மீண்டும் நம்பத் தகுந்த நிபுணர்களின் விஞ்ஞானபூர்வமான விளக்கம் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் பிரதமரின் உரைக்கு அடுத்த நாளே இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் பங்குச் சந்தை விலைகள் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தன.

அதிகார வர்க்கம் எதைத் தெரிவிக்கக் கூடாது என்று கருதி மறைத்ததோ அது அந்நியச் செலாவணிச் சந்தைக்கும் பங்குச் சந்தைக்கும் தெளிவாகத் தெரியும். இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு அதன் இறக்குமதியின் அளவை விட அதிகமாக இந்தியப் பொருள்களையும் சேவைகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலமாக கிடைத்தது அல்ல; இந்த இருப்பு இந்தியா பிற நாடுகளிடமிருந்து பெற்ற கடனால் உருவாக்கப்பட்டது; கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடன் கொடுப்பதை நிறுத்தினாலும் அல்லது கொடுத்த கடனை முழுமையாகத் திரும்பப் பெற்றாலும் இந்த இருப்பு இல்லாமல் போகும்; ஆகவே இதை இந்தியாவின் துன்ப காலங்களில் மக்களை காப்பாற்றும் ஒன்றாகக் கருதவே முடியாது.

இந்த அடிப்படையில் இந்திய பிரதமர் மிகச் சரியாக எச்சரித்து இருப்பது போலவே தோன்றும். ஆனால் அவர் இந்த இருப்பைக் காப்பாற்ற ஏற்கனவே சிரமமான நிலையில் இருக்கும் மக்களைத் தியாகம் செய்ய, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் கீழே இறக்கிக்கொள்ளச் சொல்கிறார். ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தையும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்கச் சொல்கிறார்; இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான, ஏற்கனவே துன்பத்தில் வாடும் விவசாயிகளை, ஏற்கனவே பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களைப் பாதி அளவுக்குக் குறைத்துப் பயன்படுத்தச் சொல்கிறார். இத்தகைய வழிகாட்டுதல்கள் மக்கள் மீது திணிக்கப்படும் கட்டாயமான தியாகங்களுக்கு முன்னுரையாகும். அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் உண்மை நிலைமைகளையும் அதற்கான திட்டங்களையும் அறிவுறுத்தும் கமிட்டிகள் தேவையான அளவு கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தும் அதே வேளையில், இவற்றின் விலைகளை இப்போது இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது இன்றைய நிதி நிலைமையில் மிகவும் கடினமானதாகும்; அதுவும் கடுமையான சர்வதேச நிலைமைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் சாத்தியப்படாது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் இந்த அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் அந்நியச் செலாவணி இருப்பில் ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த வகையிலும் காரணமாக இல்லாத பொதுமக்கள் மீது திணிக்கப்படுகிறது.

உண்மையில் அந்நிய செலாவணி இருப்பு குறைவதற்குக் காரணம் என்ன?

1) 2025--இல் இந்தியாவின் தங்க இறக்குமதி 24 சதவிகிதம் அதாவது 7200 கோடி டாலர்களாக அதிகரித்தது. உலகத் தங்கக் கவுன்சிலின் தரவுகளின் படி இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் நாற்பது சதவீதம் நகைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை, மாறாக பெரும் நிதி முதலீட்டாளர்களால், அவர்களது சொத்தைப் பாதுகாக்க, மதிப்பு குறையும் இந்திய ரூபாய்க்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டது; இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது. இந்தியப் பண்பாடு என்ற அடிப்படையில் மக்கள் 2025-ல் மிகக் குறைவாகவே, ஆனால் அதிக விலை கொடுத்து தங்கம் வாங்கினார்கள்.

2) 2014-- ஆம் ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கியால் 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வெளிநாடுகளுக்கு தாராளமாகப் பணம் அனுப்பும் திட்டத்தின்' அடிப்படையில் மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 20200 அமெரிக்க டாலர்களை, அந்நியச் செலவணி இருப்பை தங்களது உலகு தழுவிய சுற்றுலாவுக்காகவும் மற்ற ஆடம்பரங்களுக்காகவும் செலவழித்துக் குறைத்தார்கள்; 2026 -- பிப்ரவரி வரை, கடந்த நான்கு வருடங்களில் மட்டும் 11200 அமெரிக்க டாலர்களைச் செலவழித்து இந்திய அந்நிய செலாவணி இருப்பைக் குறைத்துள்ளார்கள்.

3) அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்கள் மேல்நாடுகளில் தங்களது அலுவலகங்களை அமைத்து, 2023 - ஆம் ஆண்டு மட்டும் 1300 கோடி அமெரிக்க டாலர்களை தங்களுடைய சிங்கப்பூர் அலுவலகங்களுக்கும் 1500 கோடி டாலர்களை ஹாங்காங்குக்கும் அனுப்பி உள்ளார்கள்; இத்தகைய வேலைகளுக்கு மிகவும்சாதகமாக உள்ள துபாய்க்கு எவ்வளவு கடத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடியவில்லை; இதில் சில சட்டப்பூர்வமாகவே அனுப்பப்பட்டுள்ளன; சட்டத்திற்கு புறம்பாகவும் இவ்வாறு கடத்தப்படுகிறது.

இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர்கள் சட்டவிரோதமாகப் பணத்தைக் கடத்துகின்றனர். உதாரணத்திற்கு, இறக்குமதி செய்ததாக கூறப்பட்ட பொருளுக்கு பணம் அனுப்பப்படும். ஆனால் பொருள் இங்கு வராது. அந்தப் பணம் வெளி நாட்டில் டாலரில் இருப்பு வைக்கப்படும். 2000-- 2018 காலகட்டத்தில் மட்டும் இவ்வாறு 65900 கோடி டாலர் அந்நிய நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளது. இது இப்போது உள்ள இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பிற்குச் சமமானது. அம்பானிகள், அதானி, வேதாந்தா நிறுவனத்தின் அகர்வால் போன்ற பெரும் திமிங்கிலங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்திய வரி விதிப்பு அமைப்பால் பாதிக்கப்படுவதில்லை; மாறாக மிகச் சிறு முதலாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்

4) இந்திய கார்ப்பரேட்டுகள் 29200 கோடி அமெரிக்க டாலர்களை வியாபார ரீதியான கடன்களாக வெளிநாடுகளில் இருந்து வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கடன்கள் கார்ப்பரேட் முதலைகளால் அயல்நாட்டு கம்பெனிகளை வாங்கப் பயன்படுத்தப்பட்டன. இதனால் இந்தியாவின் வெளிநாட்டு கடன்கள் அதிகரித்தன; உதாரணத்திற்கு டாட்டா ஸ்டீல், அதைப் போன்று நான்கு மடங்கு பெரிதான பிரிட்டனின் "கொரஸ்" நிறுவனத்தை மிக அதிக விலை கொடுத்து 1200கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உலகின் மிகப்பெரிய பத்து இரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாகியது; இதனால் டாடா நிறுவனத்திற்கு 800—900கோடி அமெரிக்க டாலர்கள் கடனாகியது; வருடத்திற்கு 70கோடி டாலர்களுக்கும் அதிகமாக வட்டி கட்டவேண்டி நேரிட்டது. அப்போது இருந்து கொரஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருந்தது; ஆனால் லாபகரமான இந்தியாவில் உள்ள டாட்டா நிறுவனம் அயல் நாட்டுக் கடன்களை அடைப்பதற்கான லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருகிறது. இப்படி டாடா ஸ்டீல் தனது லாபத்தை அயல்நாடுகளுக்கு மடை மாற்றியது.

5. இத்தகைய வெளிநாட்டு கடன்கள் மூலம் இந்திய நிறுவனங்களுக்குத் தேவையான முக்கியமான மூலப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கி இந்திய தொழில் துறையை மேலும் சிறப்பாக்க முடியும் என்று கார்ப்பரேட்டுகள் கூறினாலும் இந்த மொத்த காலத்திலும் இந்திய தொழில்துறையின் வியாபாரப் பற்றாக்குறை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது;

ஆனால் அந்த நிறுவனங்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றன; இந்த லாபத்தின் சிறு பகுதி கூட ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை விஞ்ஞான முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப் படுவதில்லை; மீண்டும் மீண்டும் அயல்நாடுகளில் இருந்தே தொழில்நுட்பங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6---0.7% மட்டுமே செலவு செய்யப்படுகிறது; இதுவும் 2010-- இல் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

6) புதிய தாராளமயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சர்வதேச ஊகபேர மூலதனம் இந்தியாவில் ஏராளமாக அதிகரித்துள்ளது; இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் நிதி நிலையற்ற முதலீடாக உள்ளது. இந்த முதலீடுகளை எந்த நிபந்தனையும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் முழுவதுமாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவின் பொருளாதார நிலைமைகள் சிறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும் இத்தகைய அயல்நாட்டு மூலதனங்கள் திரும்பப் பெறப்படுகின்றன; சிங்கப்பூர் மற்றும் மொரிசியஸ் நாடுகளிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகளும் இத்தகைய ஊகபேர அடிப்படையிலேயே நடை பெறுகின்றன. வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கும் இத்தகைய மூலதனங்களை பெற, இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான வரி விலக்குகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆக, மூலதனக் கணக்கில் ஏற்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல்தான், அதாவது மூலதனம் நாட்டிற்கு உள்ளே வருவது,, நாட்டிலிருந்து வெளியேறுவது ஆகியவற்றின் மீது இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதுதான் இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணம். அமெரிக்க --இரான் போரோ, சராசரி இந்திய மக்கள் பொருட்கள் வாங்குவதோ காரணம் அல்ல!!

அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறைக்கு யார் காரணம்?

7. உரப் பயன்பாட்டை பாதியாகக் குறைக்க சொல்லும் அறிவுரை ரசாயன உரப்பற்றாக் குறைக்கு இந்திய விவசாயிகளின் பொறுப்பற்ற பயன்பாடுதான் காரணம் என்பது போன்றது; மேலும் மாறுபடும் மண்ணின் இயல்பிற்கு ஏற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும். 2000 --இல் இந்தியா குறைந்த பட்சம் யூரியா உர உற்பத்தியில் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும் நிலையில் இருந்தது. இதில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. பிறகு தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கங்களால் பொதுத் துறையில் முதலீடுகள் நிறுத்தப்பட்டன; மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களும் மூடப்பட்டன; ஆனால் மிகச் சிறிய அளவிலேயே இதில் கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்தன; ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் மூடப்பட்ட 5 பொதுத் துறை உரத் தொழிற்சாலைகளில் 2016--இல் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது என்றாலும் உரப் பற்றாக் குறையைப் போக்க முடியவில்லை. இன்று இறக்குமதியை நம்பி இருக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இன்று, விதைக்கும் பருவத்தில் உரப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று விழி பிதுங்கி நிற்கின்றது இந்திய அரசாங்கம்.

கோவிட் காலத்தில் யூரியாவின் விலை மூன்று மடங்காக அதிகரித்தது. ரஷ்ய --உக்ரைன் போரினால் அதன் விலை மேலும் உயர்ந்தது. உர விலை அதிகரிப்பினாலும், உரப் பற்றாக் குறையினாலும் இந்தியாவின் பல பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டன; பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2025 ஜூனில்-இல் அமெரிக்க--இஸ்ரேல் இரானைத் தாக்கியது; அப்போதே விரைவில் ஹோர்முஸ் நீர் இணைப்பு மூடப்படும், அதனால் கடல் வழியாகப் பெறப்படும் உரமும், உரங்கள் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப் பொருளான திரவ வடிவ இயற்கை வாயுவும் (LNG (Liquefied Natural Gas) தடைபடும் என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் இந்திய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டன.

இன்று இந்திய விவசாய உற்பத்தியில் 50--55% உணவு தானிய உற்பத்தி ரசாயன உரங்களையே சார்ந்துள்ளது. எனவே உரப் பயன்பாட்டைக் குறைப்பது என்பது உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும் செயலாகும்.

8) 1986-- ஆம் ஆண்டு எண்ணெய் வித்துக்களுக்கான தேசியத் திட்டத்தின் வழிகாட்டுதல்படி 1990களில் இந்தியாவின் விவசாயிகள் நாட்டின் சுய தேவையை நிறைவேற்றும் அளவுக்கு சமையல் எண்ணெய் வித்துக்களை விளைவித்தார்கள்; ஆனால் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாட்டில் இந்தியா நுழைந்ததும், இறக்குமதி செய்யப்பட்ட மலிவான பாமாயிலுடன் போட்டி போட முடியாமல் உள்நாட்டுத் தேவைக்கான சமையல் எண்ணெய் வித்து உற்பத்தி சீர்குலைந்தது. இன்று இந்தியா அவசியமான சமையல் எண்ணெய் தேவையில் 56% ஐ வெளி நாடுகளைச் சார்ந்துள்ளது. இன்று உலக நாடுகளில் மிக அதிக அளவில் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக, தனது அந்நியச் செலாவணியை இழக்கும் நாடாக இந்தியா உள்ளது.

9) இன்று இந்திய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டுக்கு நமது அரசாங்கத்தின் திட்டமிடல் காரணம் இல்லை; ஏனென்றால் அது திட்டமிடவே இல்லை. இந்தியாவின் பெட்ரோல் டீசல் கொள்கையை தீர்மானித்தது அமெரிக்க அரசாங்கமே! 2019-- ஆம் ஆண்டு மே மாதத்தில், ட்ரம்ப் இரான் மற்றும் வெனிசுலாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்ற உடனேயே இந்திய அரசாங்கம் அப்படியே அடிபணிந்தது. ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடன், மிகுந்த தள்ளுபடிச் சலுகைகளுடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுவதுமாக நிறுத்த வேண்டும், இல்லையென்றால் ஏற்கனவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25% வரியுடன் மேலும் அதிகமாக 25% வரி விதிக்கப்படும் என்று ஆணையிட்டார்; உடனடியாக இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்தது; 03.01.2026 அன்று வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை அமெரிக்கா கடத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளங்களின் மீது தனது ஆதிக்கத்தை நிறுவிய உடன் டிரம்ப் இந்தியாவை வெனிசுவேலாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க நிர்ப்பந்தித்தார். இந்தியா அப்படியே நடந்து கொண்டது.

அமெரிக்க --இரான் போரால் குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கலாம் என்று டிரம்ப் கூறியதால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கிக்கொண்டிருக்கிறது; இந்த விதிவிலக்கு காலாவதியாகும் போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படும்; திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவை ரஷ்யா அதை நீண்ட கால அடிப்படையில் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்ட போதிலும் இந்திய அரசாங்கம் ரஷ்யாவின் சலுகையை புறக்கணித்துள்ளது; மாறாக திரவம் ஆக்கப்பட்ட இயற்கை வாயுவை மிக மிக அதிகமான விலை கொடுத்து வாங்க அமெரிக்க அரசாங்கம் இந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்கிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய்-- பெட்ரோல், டீசல் மற்றும் ரசாயன உர உற்பத்தி கொள்கையை திட்டமிடாத, நம் நாட்டின் இறையாண்மையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத இந்திய ஆட்சியாளர்களுக்கு இன்று உள்ள ஒரே வழி தனது குடிமக்களை ரசாயன உரம் உட்பட, பெட்ரோல் டீசல் போன்ற அனைத்து பொருட்களின் பயன்பாட்டையும் குறைத்து வீட்டிற்குள்ளேயே இருக்கச் செய்வதே!

10) 11.05.26 அன்று அமைச்சரவை கூடி அமெரிக்க--இரான் போர் தொடர்ந்தால் இந்தப் பொருள்களின் இப்போதுள்ள விலையை இன்றைய இந்திய அரசாங்கம் தொடர முடியாது என்று மக்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கிறது. பெட்ரோலியத்தை சந்தைப்படுத்தும் இந்திய பெட்ரோலியக் கம்பெனிகள் ஒரு நாளுக்கு ரூபாய் 1000 கோடி நஷ்டம் அடைகிறது எனக் கூறியது. இத்தோடு இந்திய நிதி அமைச்சரகம் மிக வெளிப்படையாக மிக அதிகபட்ச இறக்குமதி விலை பெட்ரோலியப் பொருள்களின் கடைசி நுகர்வோர் வரை செல்ல வேண்டும்; அதனால் அவற்றிற்கான தேவை குறையும்; அரசாங்கத்தின் மீது இப்போதுள்ள சுமையும் குறையும் என்று கூறுகிறது. அதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கலாம் என்கிறது.

இந்திய அரசாங்கம் கச்சா எண்ணெய் மற்றும் பிற பெட்ரோலிய பொருள்களின் மீதான வரியாக மட்டும் ரூ.3.5 லட்சம் கோடிகள் ஒவ்வொரு வருடமும் வசூலிக்கிறது. 2024--25 உட்பட கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 19 லட்சம் கோடி பெட்ரோலிய பொருள்களின் மீது வரியாக அள்ளிக் குவித்துள்ளது. இப்போது மக்கள் உள்ள சிரமமான நிலைமையில் மக்களிடமிருந்து ஏராளமான வரியைக் கொள்ளையடித்த ஒன்றிய அரசாங்கம் பொறுப்பெடுத்து ஏன் விலையைக் கட்டுக்குள் வைக்கக் கூடாது?

இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மட்டுமல்ல வயிற்றிலேயே கை வைக்கும் --- "சிரமமான நிலைமையில் வாழ வழி காட்டும்" இதே மத்திய அரசாங்கம்தான் 2019--இல் இந்தியா கார்ப்பரேட்டுகளுக்கு நேரடியான வரிகளில் உலகிலேயே மிகப்பெரிய சலுகையைக் கொடுத்தது. இதனால் மத்திய அரசாங்கத்திற்கு கிடைக்கும் மொத்த வரி வருவாயில் 2019--இல் 32% ஆக இருந்த கார்ப்பரேட்டுகளின் மீதான வரி 2025--இல் 25% ஆகக் குறைந்தது. இதனால் 2019, 2020---இரண்டு வருடங்களில் மட்டும் ரூபாய் 1.84 லட்சம் கோடிகள் மத்திய அரசாங்கம் இழந்தது. இந்த இழப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் முதலீட்டை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் இந்தச் சலுகைகளை, வரி விலக்குகளால் கிடைக்கும் செல்வத்தை அவை இங்கு முதலீடு செய்வதில்லை; வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கின்றன. ஆக, நமது அரசாங்கம் அம்பானிகளும் அதானிகளும் இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களைக் குவிக்க வழி வகுக்கிறது; அதே சமயத்தில் ஏற்கனவே விலைவாசி உயர்வால் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் சாதாரணக் குடிமக்களை செலவுகளைச் சுருக்குங்கள், வயிற்றைக் கட்டுங்கள், பட்டினியோடு வாழுங்கள் என உபதேசிக்கிறது. ஆனால் அண்மையில் நடைபெற்று வரும் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டாங்கள் ஆட்சியாளர்களின் உபதேசத்தைக் கேட்க மக்கள் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன.

தமிழில்: ஜெகதா

நன்றி: Research Unit for Political Economy (RUPE), மும்பை

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...