"எல்லாவற்றிற்கும்
மேல், எப்போதுமே உலகின் எந்த மூலையிலும் ஒருவருக்கு எதிராக
இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தீவிரமாகக் கவலைப்படுவது – இதுதான் புரட்சியாளரின் மிக
அழகிய பண்பு ஆகும்." - 1965- ஆம் ஆண்டு தன்னுடைய குழந்தைகளுக்கு சே குவேரா
எழுதிய இறுதிக் கடிதம்.
உலக மக்களால்
பெரிதும் அறியப்பட்ட புரட்சியாளர்களில் சேகுவேரா முக்கியமான ஒருவர். சே குவேரா என
அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் எர்னெஸ்ட்டோ குவேரா டெ லா செர்னோ ஆகும். அவர் 14.6.1928 இல் அர்ஜென்டினாவின் ரொசாரியோவில், ஐரிஸ் புரட்சியாளரான
ஜெர்னெஸ்டோ குவேரா லின்ச்சுக்கும், அர்ஜென்டினாவின் உறுதியான
மார்க்ஸிஸ்ட்டும் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளருமான செலியா டெ லா செர்னா
லோசாவுக்கும் மூத்த மகனாக பிறந்தார்.
மேல் தட்டு மத்திய
வர்க்கத்தில் பிறந்ததால் மிகச்சிறந்த பள்ளிகளின் மேல்படிப்பும் இவருக்கு வாய்த்தன;
ஆஸ்த்துமாவினால்
துன்பப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் தனது குழந்தைப் பருவத்திலும் இளம் வயதிலும்
அவர் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார்.
இளம் வயதிலேயே
இடதுசாரி அரசியலையும், பலவகைப்பட்ட இலக்கியங்களையும் கவிதைகளையும் ஆழ்ந்து படிக்கும்
ஆர்வத்தை, திறனை அவருள், அவரது பெற்றோர்கள் வளர்த்தார்கள். இதனால் சே குவேரா,
மார்க்ஸ்,
ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நூல்களையும், சார்த்தர்,
காம்யூ, நேரு,
நீட்சே, கஃப்கா, ஃப்ரோஸ்ட், க்விரோகா, டேரியோ ஆகியோரின் நூல்களையும் ஆழ்ந்து படித்தார்.
அமெரிக்க அரசாங்கத்தின் முதுகெலும்பான மத்திய புலனாய்வு அமைப்பு (CIA),
சேகுவேராவின்
அறிவு மற்றும் உலகின் பல்வேறு துறைகளையும் பற்றிய அவரது ஆர்வம் ஆகியவற்றால் அவரை,
"லத்தின்
மக்களில் மிகச்சிறந்த அறிவு ஜீவி" என்று குறிப்பிட்டது.
பள்ளிக்கல்வியை
மிகச் சிறப்பாக முடித்த சேகுவேரா 1948 - ஆம் ஆண்டில் ரசியாவிற்கு மருத்துவம் படிக்கச்
சென்று, 1953 - ஆம் ஆண்டில் மருத்துவர் ஆனார். அவருடைய
படிப்பின்போது அவர் ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது நண்பரான ஆல்பர்ட்டோ
கிரனடோவுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் சென்றார். வழக்கமான கோடை விடுமுறைப் பயணமாக இல்லாமல்,
இந்தப் பயணம் உலகைப்
பற்றிய அவரது பார்வையையும், உலகில் அவருடைய பாத்திரம் பற்றிய பார்வையையும் மாற்றியது.
அவருடைய "மோட்டார்
சைக்கிள் குறிப்பேடு" நூலில் இருந்து இந்த மாற்றத்தை நாம் காணலாம்.
8000
மைல்கள் கொண்ட
இந்த நீண்ட பயணம் அவரை அர்ஜென்டினா, சிலி, பெரு. ஈக்வடார்,
கொலம்பியா,
வெனிசுவேலா,
பனாமா மற்றும்
மியாமிக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட பெரு நாட்டைச்
சேர்ந்த ஒரு கிராமத்தில் அவரை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தொண்டர் ஆக்கியது.
அவர்களுடைய அந்தப் பயணத்தில், மோட்டார் சைக்கிள்
பழுது அடைந்த போது, அவர்கள் சாலையில் சென்ற பிறருடைய உதவியுடன் மீதிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட வறுமையிலும் துயரத்திலும் தவித்த உலகின் ஒரு
கண்டத்தின் மக்கள் மீது அவர் மிகுந்த அனுதாபம் கொண்டார்.
"நான் வறுமை,
பசி,
நோய்,
அத்தியாவசிய
அடிப்படைத் தேவையான பொருட்கள் இல்லாததால் ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடியாத நிலை
ஆகியவற்றை நெருக்கமாகக் கண்டேன். அவர்களுக்கு உதவியபோது, மருத்துவத்துறையின் புகழ்பெற்ற
ஆராய்ச்சியாளர் அல்லது மருத்துவ விஞ்ஞானத்திற்கு முக்கியமான பங்களிப்பு செய்தது போல்
உணர்ந்தேன்" என அவர் தனது மோட்டார்சைக்கிள் குறிப்பேட்டில் இவ்வாறு எழுதுகிறார்.
இந்த நிலையில் அவர்
குவட்டெமாலா சென்று, அப்போது அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சோசலிசத் தலைவர்
ஜேகொபோ அர்பென்ஸின் நிலச் சீர்திருத்த பிரச்சாரத்தைக் கண்டார். அர்பன்சே அமெரிக்க ஐக்கிய
பழக் கம்பெனிக்கு சொந்தமான நிலங்களை ஏழைகளுக்கும் நிலம் இல்லாத விவசாயிகளுக்கும்
விநியோகித்தார். அவர் அங்கேயே தங்கி அர்பென்ஸின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு
உதவ முடிவு செய்தார். இங்கு நண்பர்களை அழைக்கும் வார்த்தையான "சே" என்பதை அவர்
அடிக்கடி பயன்படுத்தியதால் அவர்கள் அவரை "சே" என்று அன்புடன்
அழைத்தார்கள். ஆனால் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA)
உதவியுடன்
அடர்பென்ஸின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. மேற்கு முதலாளிய
மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக நிற்க முயற்சிப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை
அங்கு அவர் நேரடியாகக் கண்டார்; இதிலிருந்து அமெரிக்கா எந்த ஒரு இடதுசாரி முற்போக்கு அரசாங்கத்தையும் அமைதியாக வளர்ச்சியடைய விடாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்.
குவேட்டமாலாவில் அவரது மார்க்சிய அரசியல் அறிவை திடப்படுத்திய ஹில்டா காடியாவை
சந்தித்தார்; பிறகு அவர் அவருடைய முதலாவது மனைவி ஆனார்.
சிறிது காலத்திலேயே
அவர் மெக்சிகோ சென்றார். க்யூபாவிலிருந்து வெளியேறி மெக்சிகோவில் இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவையும்
அவரது தோழர்களையும் அங்கு சந்தித்தார். அப்போது கியூபா அமெரிக்காவின் உறுதுணையுடன் ஃபுல்ஜெனிசியோ
பாட்டிஸ்டாவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்தது. பாடிஸ்டா, மிக மோசமான ஊழல்
மற்றும் வன்முறையுடன் கொடுங்கோன்மையான ஆட்சியின் மூலம் அமெரிக்கா மற்றும் கியூபாவின்
மேல் தட்டு வர்க்கத்தின் வலிமையான கட்டுப்பாட்டில் கியூபாவின் பொருளாதாரம் .
இருக்கும்படி செய்தார். 26.07.1953 அன்று மோன்கடோ ராணுவ
முகாம்களின் மீது நடத்திய தாக்குதல் தோல்வி அடைந்ததின் விளைவாக ஃபிடல் காஸ்ட்ரோ
தலைமறைவானார்; அந்தத் தாக்குதல் கியூப புரட்சிகர
இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற கொரில்லா ராணுவத்திற்கு ஜூலை 27 இயக்கம் என்ற
பெயரைப் பெற்றுத் தந்தது. மீண்டும் கியூபாவிற்குத் திரும்பி ஒரு புரட்சிகரத் தாக்குதலை நடத்த கேஸ்ட்ரோ
திட்டமிட்டார். தான் இப்போது இணைந்துள்ள தோழர்களுக்குத் துணையாக இருக்க சேகுவேரா
ஆரம்பத்தில் அந்தப் படையின் மருத்துவராக வர விரும்பினார்; ஆனால் பிறகு ஆயுதப்பயிற்சி
எடுத்து, அவரது அர்ப்பணிப்பான புரட்சிகரப் பணியால் கேஸ்ட்ரோவின் மிகுந்த
நம்பிக்கைக்குரியவரானார்.
1956ன் இறுதியில் கியூபாவின் ஆலெக்ரீயா டெ பியோ கடற்கரையில் ஒரு சிறிய கொரில்லா
படை இறங்கியது; ஆனால் அவர்கள் அங்கு பதுங்கி இருந்த பாடிஸ்டாவின் ராணுவத்தால் உடனடியாகத்
தாக்கப்பட்டனர்; இந்தத் தாக்குதலிலிருந்து 22 பேர் மட்டுமே உயிர்
பிழைத்தார்கள்; இவர்கள் விவசாயிகள் மற்றும் பாட்டாளி வர்க்கத்தினரிடம் அரசியல்
விவாதங்கள் நடத்தி, புதிய தோழர்களை வென்றெடுத்து, பயிற்சி கொடுத்து
வலிமையான ராணுவத்தை மூன்று ஆண்டுகளில் மீண்டும் உருவாக்கினார்கள். அப்போது
சேகுவேரா பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்ததைக் கண்டார்;
பள்ளிகள்,
மின்சாரம், மக்களுக்கு போதுமான ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவை இல்லாமல்
இருப்பதை கண்டார்; கல்வி அறிவு அற்றவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்
கொடுக்க பள்ளிகளை நிறுவினார்; வெடிகுண்டுகள் தயாரிக்க தொழிற்சாலைகளையும் ரொட்டிகளைத் தயாரிக்க
பெரிய அடுப்புகளையும் நிறுவினார். மேலும் அவர் அரசியல் தகவல்களை பரப்ப ஒரு
செய்தித்தாளையும் மக்களின் உடல் நலனை மேம்படுத்த சிறு மருத்துவமனைகளையும்,
ராணுவத்
திட்டங்களை விளக்க பயிலரங்குகளையும் நிறுவினார். புரட்சியின் மீது மிகுந்த
ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருந்த விவசாயிகள் மத்தியில் அவர் மிகப் பெரிய அளவில்
வரவேற்பு பெற்றார்; கேஸ்ட்ரோவுக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்கவராக விரைவிலேயே
அங்கீகரிக்கப்பட்டார்.
சியரா மேஸ்ட்ராவில் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரது தோழர்களும்:
1959 -ஆம் ஆண்டில், புத்தாண்டுக்கு முந்திய
நாளில், சாண்டா கிளாராவின்
மீதான தாக்குதலுக்கு
சேகுவரா நேரடியாகத் தலைமை தாங்கினார்; தன்னுடைய படையை விட எண்ணிக்கையில் பத்து
மடங்கு அதிகமாக இருந்த எதிரியின் படையைத் தாக்கி வெற்றி பெற்றார். இது கியூபா
புரட்சியின் முக்கியமான வெற்றியாகும். இதனால் பாடிஸ்டா கியூபாவில் இருந்து தப்பி
ஓடினார்; புரட்சிப் படை கியூபாவின் தலைநகரைக் கைப்பற்றியது;
இந்த புரட்சிப்
படை கியூபா மக்களால் வரவேற்கப்பட்டது; அதே சமயத்தியல் பல வருடங்களாக கொடுமையான
சர்வாதிகாரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மக்கள் நியாயம் கோரினார்கள்;
ஏறக்குறைய 20,000
மக்கள் புரட்சிகரப் போரின்
போது அந்த சர்வாதிகார ஆட்சியால் கொல்லப்பட்டார்கள்; சர்வாதிகார ஆட்சியில்
மக்களின் மீதான ஒடுக்குமுறையை நிகழ்த்திய பாடிஸ்டாவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்க
தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
கியூபாவில் இருந்த
முதல் சில வருடங்களில் சே கியூபப் புரட்சியாளரான அலைடா மார்க்கை சந்தித்தார்;
முதல் மனைவியியுடனான
விவாகரத்துக்குப் பிறகு 1959 ஆம் ஆண்டின் மத்தியில் அலைடாவை மணந்தார். இந்த வருடத்தின் துவக்கத்தில் புரட்சிப் படை
வீரர்களுக்காக "கொரில்லா போர் நடைமுறை" என்னும் இராணுவக் கையேட்டை எழுதத்
துவங்கி இருந்தார்.
இதன் பிறகு தொடர்ந்த
வருடங்களில் சேகுவேரா கியூப அரசாங்கத்தில் பல முக்கிய
பொறுப்புகளில் இருந்தார்; கியூபாவின் தேசிய வங்கியின் தலைவராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தபோது அவர் பெரும் நிலச்
சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார்; மேலும் மிகவும்
வெற்றிகரமான வகையில் கியூபாவின் கல்வி அறிவை மேம்படுத்தும் திட்டத்தை நடத்தி
கியூபாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதத்தை 60%--இலிருந்து 90%
ஆக ஒரு வருட
காலத்தில் மேம்படுத்தினார். 1961ல் நடந்த இழிவான பே ஆஃப் பிக்ஸ் தாக்குதல் அமெரிக்காவின்
தவறான யுத்ததந்திரத் திட்டங்களால் தோல்வி அடைந்தது. எவ்வாறாயினும், அமெரிக்காவும்
மற்ற மேற்கு மேலாதிக்க சக்திகளும் உலகம் முழுவதும் புரட்சிகர நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தி
வீழ்த்த தொடர்ந்து முயற்சிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
கியூப அரசாங்கத்தில்
சேகுவேரா செயல் ஆற்றியபோது, அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு அவர்
உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு அரசு ரீதியாக சென்றார்; அவர் கிழக்கு உலக
நாடுகளுடன் அரசு தந்திர உறவுகளை உருவாக்கப் பல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்;
கியூபா,
சோவியத்
யூனியன் இடையிலான அரசு ரீதியான உறவுக்கு சேகுவேரா முக்கியமான பங்காற்றினார். ஆனால் கியூபாவில் ஏவுகணைப்
பிரச்சினைக்குப் பிறகு ஏற்பட்ட விளைவுகளால் சோவியத் யூனியன் மீதும் அதன்
உள்நோக்கத்தின் மீதும் இருந்த அவருடைய பிரமைகள் கலைந்தன.
1965- ஆம் வருடம் கேஸ்ட்ரோவுக்கு,
சேகுவேரா
பிரியாவிடை பெறும் கடிதத்தை எழுதினார்; உலகின் வேறு நாடுகளில் புரட்சியை
முன்னெடுத்துச் செல்ல கியூபாவில் அவர் வகித்து வந்த பதவிகளையும் குடியுரிமையையும்
ஒப்படைத்தார்; பிறகு அவர் புதிதாக சுதந்திரம் அடைந்த காங்கோவுக்கு,
அமெரிக்க
ஆதரவுடன் புரட்சிகர சக்திகளுக்கு எதிராக உள்நாட்டு போர் நடத்திக் கொண்டிருந்த எதிரிகளுக்கு எதிராக அங்கிருந்த சோசலிஸ்ட்டுகளுடன் இணைந்து போரிட்டார்.
இதில் ஏராளமான பின்னடைவுகள் ஏற்பட்டன. திறமையின்மை, காங்கோ
போராளிகளுக்குள் இருந்த உள் சண்டைகள், அவர்களின் உறுதியின்மை ஆகியவையே அந்தப் புரட்சி தோல்வியுற்றதற்கு காரணம்
என்று அவர் தனது காங்கோ நாட்குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளார். இடைவிடாத ஏழு மாத முயற்சிகளுக்குப் பிறகு
அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது; அவர் மீண்டும் கியூபாவிற்கு திரும்பினார்;
ஆனால் அப்போது
அவர் எங்கு இருந்தார் என்பது வெளியில் தெரியாது.
இறுதியாக 1967
-- இல் இன்னொரு புரட்சியை நடத்த
சிறு சக்தியுடன் அவர் பொலிவியாவை அடைந்தார்; ஆனால் ஆரம்பத்தில்
சிறு வெற்றிகள் அடைந்த போதிலும் அமெரிக்காவின் ஆதரவும் மிகப்பெரிய படைபலமும்
கொண்டிருந்த பொலிவியாவின் சர்வாதிகாரி ரெனே பேரியன்டோஸ், புரட்சியாளர்களை பெரிதாக வளர
விடாதபடி நசுக்கி ஒழித்தார்; மேலும் இத்துடன் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்கள் சேகுவேராவின்
புரட்சிகரக் குழுவிற்கு துரோகம் இழைத்தார்கள்; சேகுவேராவின்
குழுவினரைக் காட்டிக் கொடுத்து தனிமைப்படுத்தினார்கள். பல மாதங்கள் தொடர்ந்த சண்டைக்குப் பிறகு
சேகுவேராவின் ஏறக்குறைய ஒரு டஜன் கொரில்லா வீரர்களைக் கொண்ட குழு ஏறக்குறைய 2000
பொலிவிய
ராணுவத்தினரால் தாக்கப்பட்டது; இறுதியில் சேகுவேரா சிறைபிடிக்கப்பட்டு, பேரியன்டோஸின் நேரடி
உத்தரவுகளின் படி உடனடியாக கொல்லப்பட்டார்; ஆனால் பல மாதங்களுக்கு முன்பு சேகுவேரா
தனது கல்லறையில் பொறிக்கப்பட அவரே எழுதிய செய்தி இது:
“நமது போர்க் குரல் சில காதுகளை அடைந்து, நமது ஆயுதங்களை ஏந்த ஒரு கை நீளும் என்றால் எங்கெல்லாம் மரணம்
நம்மை ஆச்சரியப்படுத்த பார்க்கிறதோ அங்கு நாம் அதை வரவேற்போம்”
இத்தகைய வாழ்வும்
மரணமும் கொண்டவர் சேகுவேரா! அவரது மரணத்திற்குப் பிறகு பல பத்தாண்டுகள் கடந்த போதும்,
மார்க்சிய
சித்தாந்தத்தின் அடிப்படையிலான அவருடைய புரட்சிகர உணர்வு உலகம் முழுவதும்
விடுதலைக்கான போராட்டங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
இருப்பினும், அவரது
புகழை இழிவுபடுத்தும் பிரச்சாரங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மேற்கு உலகத்தின்
சக்தி வாய்ந்த ஊடக நிறுவனங்கள் அவரது வாழ்வின் புரட்சிகப்ர போராட்டங்களை
மறைத்து அவரை ஒரு கேலிச்சித்திரமாக்க தீவிரமாக செயல்படுகின்றன.
நீண்ட காலத்துக்கு
முன்பு இறந்த ஒருவர், முதலாளித்துவத்தின் சூத்திரதாரிகளை ஏன் இன்றும் பெரும்
வெறுப்பில் ஆழ்த்த வேண்டும்? அதற்குக் காரணம், கட்டுப்படுத்த
முடியாத சுதந்திரம் மற்றும் சுரண்டலால் கொழுத்த மேலாதிக்கங்கள் கியூபா புரட்சியின்
சவாலை முன்பு சந்தித்தன என்பது மட்டுமல்ல; இன்றும் தொடர்ந்து
விடாமல் சேகுவாராவின் நினைவுகளை அவர்கள் புதைக்க முயற்சித்த போதும், அவர் உலகம்
முழுவதும் புரட்சியாளர்களின் கற்பனைகளைத் தொடர்ந்து தூண்டி வருகிறார் என்பதுதான்.
தமிழில்: கவிதா
நன்றி: Young Political Workers





Comments
Post a Comment