Skip to main content

வரவு - செலவுத்திட்டம் 2026-27 யாருடைய நலன்களுக்கானது?

பிப்ரவரி 1-ந் தேதி பாராளுமன்றத்தில் 2026 - 27க்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையை '140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வரலாற்று பட்ஜெட்' எனப் பாராட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை அவ்வாறுதான் அமைந்துள்ளதா? 

இந்த நிதிநிலை அறிக்கையை முதலாளிகளின் அனைத்து அமைப்புகளும் பாராட்டி வரவேற்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால் இதைக் குறை கூறி குறு, சிறு, நடுத்தர முதலாளிகள் விமர்சித்துள்ளனர் என்பதும், விவசாயிகளின் அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன என்பதும் உண்மை. 

இவை உணர்த்தும் உண்மை என்னவென்றால் உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை, பிரதமர் மோடி கூறுவது போல், 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதும் பெரும் குழுமங்களின் (கார்ப்பரேட்) விருப்பங்களையே பிரதிபலிக்கின்றன என்பதும்தான் உண்மை. 

விவசாயத் தொழிலாளர்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி விட்டு மோடி அரசாங்கம் புதியதாகக் கொண்டுவந்துள்ள ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமளிக்கும் (கிராமின்) திட்டத்திற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.95,000 கோடியாகும். சுமார் ஒன்பது கோடி குடும்பங்களுக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு ரூ 355 தினக் கூலி வீதம் வருடத்திற்கு 125 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டுமானால் மொத்தச் செலவு ரூ 4 இலட்சம் கோடி ஆகும். அதில் ஒன்றிய அரசின் பங்கான 60% ற்கு 2.4 இலட்சம் கோடி தேவைப்படும். ஆனால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியோ ஐந்தில் இரண்டு பங்குதான். எனவே இந்தத் திட்டம் கிராமப்புற ஏழைகளின் வேலை வாய்ப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் உண்மையில் உத்தரவாதமளிக்கும் திட்டமாக இருக்காது. விவசாயத் தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டமாகவே இருக்கும். 

கல்வியும் சுகாதாரமும் 

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, அதாவது உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதத்தை மட்டும் வைத்துத் தீர்மானிக்கக் கூடாது. அந்த வளர்ச்சியின் பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடைகின்றதா, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா என்பதை வைத்துத்தான் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்க வேண்டும்; ஒரு நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை அளவிடும் முக்கிய அளவுகோல்களில் முக்கியமானவை கல்வியும் சுகாதாரமும் ஆகும். ஒரு நாட்டிலுள்ள அரசாங்கம் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதிலிருந்து மக்கள் மீதான அதன் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும். 

இந்த நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக ரூ.1.39 இலட்சம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும் என 1966ல் கோத்தாரி ஆணையம் பரிந்துரைத்தது. 2020 ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையும் அதை வலியுறுத்தியது. இருந்தும் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்நாட்டு உற்பத்தியில் 0.5% க்கும் கீழேயே ஒதுக்கப்பட்டுள்ளது (இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026ல் சுமார் ரூ400இலட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது). தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக அண்டை நாடுகளான பாகிஸ்தான் 2.1%ம், இலங்கை 2.04% வங்காளதேசம் 1.72%ம், சீனா 4.02% ம் ஒதுக்கும் போது இந்திய அரசாங்கம் அதைவிடக் குறைவாகவே ஒதுக்கி உள்ளதைப் பார்க்கின்றோம். 

இங்கு மருத்துவம் என்பது மக்களுக்குப் பெரும் செலவு வைக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெரும்பான்மையான மக்கள் தம்முடைய மருத்துவத்திற்காக வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்ய வேண்டியுள்ளது; மருத்துவச் செலவுக்காக மக்கள் தமது சேமிப்புகளையும் இழந்து பெரும் கடன் சுமைக்கு ஆளாகி வருகின்றனர். அதற்குக் காரணம் அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கி தேவையான மருத்துவ உட்கட்டமைப்புகளை அரசுத் துறையில் உருவாக்கமாலிருப்பதுதான். இந்த நிதி நிலை அறிக்கையிலும் அதுதான் வெளிப்பட்டுள்ளது. ரூ.1.06 இலட்சம் கோடி மருத்துவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது நமது உள் நாட்டு மொத்த உற்பத்தியில் 0.3% க்கும் கீழ் உள்ளது. இது 2017ல் தேசிய சுகாதாரக் கொள்கை பரிந்துரைத்த அளவான 2.5% விட சுமார் 8 மடங்கு குறைவாக உள்ளது. அதே சமயத்தில் சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.05%ம், வங்காள தேசம் 2.36%ம், இலங்கை 1.76%ம், பாகிஸ்தான்1%ம் சுகாதாரத்திற்காக ஒதுக்கி உள்ளன. 

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதிய நிதி ஒதுக்காமல் இந்த அரசாங்கம் தொடர்ந்து கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையிலும் தனியார் துறைகள் மக்களைக் கொள்ளையடிக்க வழி செய்து வரு கின்றது. 

மேலும் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.6701 கோடி செலவிடப்படவில்லை. சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ3686 கோடி செலவிடப்படவில்லை. இவை மக்களின் நலனில்இந்த அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையின்மையைத்தான் வெளிப்படுத்துகின்றன. 

குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறையும் வேளாண்மைத் துறையும் 

சுமார் 11 கோடி பேர்களுக்கு, அதாவது நாட்டில் மொத்தத் தொழிலாளர்களில் 40 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள். மொத்த ஏற்றுமதியில் அவற்றின் பங்கு 40-45% ஆக உள்ளது. இந்தத் துறை அமெரிக்க ட்ரம்பின் கடுமையான வரி விதிப்பினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறையாகும். இந்த நிதிநிலை அறிக்கையில் அந்தத் துறைக்கு ரூ 10,000 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. "இது யானைப் பசிக்கு சோளப் பொரி போல உள்ளது" என குறு, சிறு, நடுத்தர முதலாளிகளைக் கொண்ட இந்தியத் தொழிலதிபர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் ரகுநாதன் கூறுகிறார். 

மேலும் அவர், அமெரிக்காவின் வரி விதிப்பால் பல நிறுவனங்கள் அழியக் கூடிய நிலையில் உள்ளன என்றும், வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டுமானால் சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், இந்த நிதி நிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பை எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமடைந்து விட்டோம் என்றும் கூறுகிறார். 

நாட்டிலுள்ள உழைக்கும் மக்களில் 45 விழுக்காட்டினருக்கு வாழ்வாதாரமாக இங்கு வேளாண்மைத் துறை இருந்து வருகிறது. ஆனால் அந்தத் துறைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1,31,561 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்பார்ப்பை இந்த நிதி நிலை அறிக்கை நிறைவேற்றவில்லை என இடதுசாரி அகில இந்திய விவசாயிகள் சங்கம் மட்டுமல்லாமல், சங் பரிவாரத்தைத் சேர்ந்த பாரதிய விவசாயிகள் சங்கமும் கண்டித்துள்ளன. 

பாதுகாப்புத் துறை 

பெரும்பான்மையான மக்களின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை அலட்சியப்படுத்தியும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர முதலாளிகளின் நலன்களைப் புறந்தள்ளியும் உள்ள வரவு செலவுத் திட்டம் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் ரூ. 7..84 இலட்சம் கோடியை, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 விழுக்காட்டை, ஒதுக்கியுள்ளது. இதனால் பெரும் பயன் அடைபவர்கள் ஆயுத உற்பத்தியாளர்களும், ஆயுத வியாபாரிகளும், அதிகார வர்க்கமும்தான். 

வரிச் சலுகை 

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் கிராமப்புற வேலை வாய்ப்புக்கும் மிகவும் குறைவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள அதே சமயத்தில் பன்னாட்டு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் ஆகியவற்றுக்கு மிகப் பெரும் வரிச் சலுகையை இந்த அரசாங்கம் வாரி வழங்கியுள்ளது. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் அமைக்க உள்ள தரவு மையங்களுக்கு (data centre) 2047 வரை வரிகள் கிடையாது என அறிவித்துள்ளது. 

கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்களும் கோடீசுவரர்களும் 

ஏற்கனவே இந்தியாவிற்குக் கடன் சுமார் ரூ 200 இலட்சம் கோடி உள்ளது. மேலும், இந்த வரவு - செலவுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஆண்டு ரூ17.2 இலட்சம் கோடியைக் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப் போகிறது இந்திய அரசாங்கம். கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வட்டி வாங்கிக் கொழுப்பவர்கள் கார்ப்பரேட்களும் கோடீசுவர்களும் தான்; நிதிப்பற்றாக் குறை வரவு செலவுத் திட்டத்தால் பெரும் பயன் அடைபவர்கள் அவர்கள் தான்.

 

இது பற்றி முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலர் எம்.ஆர்.சிவராமன் கூறுவது நமது கவனத்திற்குரியது. அவர் , "கடனுக்கான வட்டி 50 சதவீத வரி வருவாயை விழுங்கி விடுகிறது. அடுத்த நிதியாண்டில் (2026-27) மத்திய அரசின் நிகர வரிவருவாய் ரூ 28.66 இலட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இதிலிருந்து கடனுக்கான வட்டியாக ரூ..14.09 இலட்சம் கோடியைச் செலுத்த வேண்டியிருக்கும்... இந்த வட்டித் தொகை பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்), கோடீசுவரர்களுக்குச் சென்றுவிடும். இது அப்பட்டமான கொள்ளையாகும். ஆக, கோடிக் கணக்கான இந்தியர்கள் செலுத்தும் வரியில் 50 சதவீத அளவுக்கு பெரும் நிறுவனங்களுக்கும் கோடீசுவரர்களுக்கும் செல்லும் நிலை நீடிக்கிறது. இது மக்களின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறது" என்கிறார். (தினமணி நடுப்பக்க கட்டுரை 3.2.26) 

பாரதம் என்பது யார்? 

உலகப் பொருளாதாரம் வர்த்தகப் போரிலும், நிலையற்ற தன்மையிலும் கடும் சிக்கலிலும் மூழ்கியுள்ள நிலைமையிலும் இந்தியப் பொருளாதாரம் தடுமாறாமல் 7.2% வீதம் நிலையாக வளர்ந்து கொண்டிருக்கிறது என நிதி அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் பெருமை பாராட்டிக் கொள்கிறார் . இது வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட் என்றும், வளர்ந்த பாரதத்திற்கான வழிகாட்டும் பட்ஜெட் என்றும் புகழ் பாடுகிறார் பிரதமர். 

ஆனால் உண்மை நிலைமையோ அதற்கு முரணாக இருக்கின்றன. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி அட்டவணை 123 நாடுகளில் இந்தியா 102 வது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. நாட்டில் உள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் மான்ய விலையில் உணவு தானியங்களைப் பெற்று தங்களுடைய பசியைப் போக்கிக் கொள்ளும் அவல நிலையில் உள்ளனர்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் 17.6% வேலை இல்லாத் திண்டாட்டம் நிலவுவதாக மார்கன் - ஸ்டான்லி என்னும் நிதிச் சேவை நிறுவனம் கூறுகிறது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு முடிவு கட்டியதன் மூலம் கிராமப்புறங்களில் கடுமையான வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தையும் பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது மோடி அரசாங்கம். 

மேலும், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்ததன் மூலம் தொழிலாளர்களைக் கடுமையாகக் சுரண்டி முதலாளிகளை மேலும் கொழுக்க வைக்கிறது மோடியின் அரசாங்கம்; உலகிலேயே அதிக அளவு ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி உள்ளது. 

சமூகத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் கனவுகளையும் சிதைத்து விட்டு வளர்ந்த பாரதத்திற்கான வழிகாட்டும் பட்ஜெட் என மோடி கூறுவதன் பொருள் என்ன? அவருக்கு இந்தியா என்பது மக்கள் அல்ல. முதலாளிகள்தான். அவர்களின் வளர்ச்சிதான் மோடியைப் பொறுத்தவரையிலும் பாரதத்தின் வளர்ச்சி. 

எனவே, வழக்கம்போல, இந்த வரவு -செலவுத் திட்டமும் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, சமூகத்தின் அனைத்து வருமானங்களையும் நாட்டின் அனைத்து வளங்களையும் கார்ப்பொரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் பயன்படுத்துவதற்கான திட்டமாகவே உள்ளது.

  

மு.வசந்தகுமார்


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...