கார்லோஸ் காரிடோ
தொழில்நுட்ப
புரட்சி முன்னேறிச் செல்லச் செல்ல, (குறிப்பாக அண்மைக் காலத்தில் செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினால்), அது உலகுக்குக் கொண்டுவரவிருக்கும் தீமைகள் குறித்த விவாதங்கள் பெருகி வருகின்றன. இருப்பினும், இந்த வளர்ச்சிகள் முதலாளித்துவச் சுரண்டலில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது குறித்தும், குறிப்பாக பல்லாயிரம் கோடி டாலர்கள் மதிப்புள்ள தரவுகளை (Data) விற்பனை செய்யும் தொழில்துறைகள் பற்றியும் பகுப்பாய்வு அரிதாகவே இருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்துவோரால் உருவாக்கப்படும் தரவுகளை (Data) விற்பதன் மூலம் பல்லாயிரம் கோடி டாலர்கள் இலாபங்களாகக் குவிக்கப்படுகின்றன. இதில் நிக்ழ்த்தப்படும் முழுமையான, மும்முனைச் சுரண்டல் குறித்த கருத்தாக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் கூறுகிறேன். அதைப் புரிந்து கொள்ள சமகாலத்தில் மூன்று வடிவங்களில் மேற்கொள்ளப்படும் இந்தப் புதிய முதலாளித்துவச் சுரண்டல் வடிவம் பற்றிய புரிதல் தேவை என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. அதோடு கூட, இந்தப் புதிய வளர்ச்சிகள் இன்றைய அடையாள உருவாக்க காலகட்டத்தில் எவ்வாறு அடையாள உருவாக்கத்தைப் பாதிக்கின்றன என்பதையும் கண்டறியலாம்.
நமது
ஓய்வு நேரத்தில்
முழுமையான சுரண்டல்
“மக்களைப் பற்றிய தரவுகளைச் சேகரித்து, விற்கும் தொழிலின் மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் தரவுத் தரகு தொழிலின் வளர்ச்சி தொடரும் என்று அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுகின்றன” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ குறிப்பிட்டிருந்தது. உண்மையில் விற்கப்படுவதுதான் என்ன? தரவுகள் தாம், ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன?
நமது
ஓய்வு நேரத்தில்
நாம் உருவாக்கும்
தரவுகள்
தாம் விற்கப்படுகின்றன. அவை தரவுகள் சேகரிக்கும் நிறுவனங்களுக்கு பெருத்த இலாபங்களை ஈட்டித் தருகின்றன. இது ஒட்டுமொத்தமாக சுரண்டல் வீதத்தை அதிகபட்சமாக்குகிறது என்று கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? இணையத்தில் நமது சுய விவரங்களை நேர்த்தியாகத் தொகுக்கும்போதும் வலைத்தளங்களில் உலாவும் போதும் நாம் உற்பத்தி செய்வது என்ன? அது மூலதனம் அல்லவா? மனிதச் செயலும் (அல்லது உழைப்பும்) இயந்திரங்களும் (இந்த நேர்வில் அலைபேசிகளும் கணினிகளும்) சேர்ந்து உற்பத்தி செய்யப்படுவது என்ன? இங்கு மூலதனக் குவிப்புக்காக மாறும் மூலதனமும் நிலையான மூலதனமும் இங்கு ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது இன்றைய மிகவும் இன்றியமையா வடிவங்களில் ஒன்றாக உள்ளது. வகுக்கும் எண் 0 ஆக இருந்தால் சுரண்டலின் வீதம் என்னவாக இருக்கும்? எல்லையற்றதாக இருக்கும். இந்தச் சுரண்டலை வீதத்தின் அடிப்படையில் அளவிட முடியாது. இது முழுமையான சுரண்டல் (அப்பட்டமான சுரண்டல்) ஆகும். அந்தச் சுரண்டலில் உபரி மதிப்பை இலாபமாக (அதாவது தரவுகள்) உருவாக்குவோருக்கு அவ்வாறு செய்வதற்காக எவ்விதமான ஊதியமும் அளிக்கப்படுவதில்லை. தரவுகளை உற்பத்தி செய்வோர் தரவுகளை உற்பத்தி செய்வதற்கு வைஃபை (WI-FI), தொழில்நுட்பங்கள், பல்வேறு பணம் செலுத்தும் வலைத்தளங்கள் ஆகியவற்றுக்காகப் பணம் செலுத்துகின்றனர். தரவுகளை உற்பத்தி செய்யும் உழைப்பு ஒருபோதும் வாங்கப்படவில்லை என்றால் அதை ஒரு பண்டமாகக் கருதப்பட முடியுமா? (குறைந்தபட்சம் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது அவர்கள் உற்பத்தி செய்வது ஏற்கெனவே விற்கப்படுவதற்கு முன்பாகவோ) அது ஒருபோதும் வாங்கப்படவில்லை என்றால், தரவு சேகரிக்கும் முதலாளிகள் விற்கும் தரவுகளை எந்தச் சொற்களில் நாம் விவரிக்க முடியும்?
இது உபரி மதிப்பு “சூன்யத்திலிருந்து ” முதலாளிகளுக்காக “உருவாக்கப்படும்” ஒன்றாக, மந்திரம் போட்டது போலத் தோன்றச் செய்யும் பண்பைத் தீவிரப்படுத்திகிறது. அதிகரிக்கச் செய்கிறது. இந்த நிகழ்வை மூலதனம் தொகுதி 1 இல் மார்க்ஸ் ஏற்கெனவே விளக்கியுள்ளார். மார்க்ஸ் அளிக்கும் பதிலை நினைவுபடுத்திக் கொள்வோம்: “சூன்யத்திலிருந்து எதையுமே உருவாக்க முடியாது என லூக்ரடிஸ் கூறியதை விளக்கத் தேவை இல்லை. அது தெளிவானது. உழைப்புச் சக்தியை உழைப்பாக மாற்றுவதுதான் மதிப்பை உருவாக்குகிறது. உடலுக்கு வலுச் சேர்க்கும் சத்துப் பொருள் மூலம் மனித உயிரினத்துக்கு மாற்றப்படுவதே உழைப்புச் சக்தியாகும்” தரவு சேகரிக்கும் நிறுவனங்கள் ஈட்டும் 200 + பில்லியன் டாலர் இலாபம், சூன்யத்திலிருந்து வருவதில்லை. அது தரவுகளை உற்பத்தி செய்வோரை முழுமையாகச் சுரண்டுவதிலிருந்து வருவதாகும். இது சுரண்டப்படும் மக்களைக் (ஊதியம் பெறாமலே உபரிமதிப்பை உருவாக்குவோரைக்) கொண்ட சமுதாயமாகும். .அவர்கள் வரலாற்றில் முதன்முதலாக, ஓய்வு நேரத்தில் நுகர்வதன் மூலமாக சுரண்டப்படுகிறார்கள். சுரண்டலைத் திரையிட்டு மறைக்கும் தன்மை நிலையான கூலி உழைப்புச் சுரண்டலை விடத் தீவிரமானது. கூலி உழைப்பாளி தான் உழைக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறார், மேலும் அதன் அடிப்படையில் இறுதியாக தான் சுரண்டப்படுவதைப் புரிந்துகொள்கிறார். ஆனால் தரவுகளை உற்பத்தி செய்பவர் தனது கைபேசியில் சமூக ஊடகக் காணொளிகளை நகர்த்திக்கொண்டே தாம் ஒய்வெடுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறார். தாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. சுரண்டப்படுவதற்கு தாமே கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
மும்மடங்குச் சுரண்டல்
சுரண்டல்
இன்று மூன்று வடிவங்களில் நிலவுகிறது – மும்மடங்குச் சுரன்டல்:
1. உற்பத்தியின் வழக்கமான தருணத்தில் நாம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறோம். இது மூலதனம்
தொகுதி 1 இல் மார்க்ஸ் அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ள “முதன்மையான சுரண்டல்” ஆகும்.. (மூலதனம்
2 மற்றும் 3 தொகுதிகளில் இதை உறுதிப்படுத்துகிறார்)
2. கடன் உழைக்கும் மக்களை அழுத்தி முடக்குகிறது, அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட செலவழிக்க முடியாமல் செய்கிறது. மார்க்ஸ் இதை “இரண்டாம் நிலைச் சுரண்டல்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டாம் நிலைச் சுரண்டல் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கிலேயே முதன்மைச் சுரண்டலுக்கு இணையாகவே செல்கிறது என்று மார்க்ஸ் மூலதனம்
தொகுதி 3 இல் எழுதியுள்ளார்.
3. இறுதியாக, மூன்றாம் நிலைச் சுரண்டல்: தாம் உபரி மதிப்பை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே மக்கள் உற்பத்தி செய்துவரும் தரவுகளை விற்பனை செய்வதன் மூலமாக நிகழும் சுரண்டல். இதை நான் மூன்றாம் நிலைச் சுரண்டல் என்று குறிப்பிட்டுள்ளேன்.
முதலாளித்துவ
சுரண்டல் வடிவங்களில் இது முன்னெப்போதும் காணப்படாததாகும். இது முதலாளித்துவ ஒட்டுண்ணித் தன்மையின் ஒப்பீடு இல்லாத கட்டமாகும். முதலாளித்துவ அமைப்பின் அழிவோடு கூடிய உடன் நிகழ்வாகும்.
இன்னொரு
அவல நிலை உலகம் – பல்கிப் பெருகும் பரிமாணம்
நாம்
சுய விவரங்களின் காலத்தில் வாழ்கிறோம். நாம் யார், நமது அடையாளம் என்ன என்பது நமது நண்பர்களுக்கு நாம் அளிக்கும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்ட சுய விவரங்களில் பொதிந்துள்ளது. அவற்றைப் ‘பயன்படுத்துவோர்’ நமது உள்ளடக்கத்தைப் பல்வேறு உரையாடல் வழிகளில் (விருப்பக் குறியீடுகள், பகிர்தல்கள், பதிலளித்தல் இன்னபிற) மதிப்பீடு செய்கின்றனர். நமது முந்தைய பதிவுகளுக்கான எதிர்வினைகள் நமது எதிர்காலப் பதிவுகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. மிகவும் நன்றாக இருக்கக்கூடிய பதிவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன, அப்படியில்லாதவை மீண்டும் வருவதில்லை (பல நேரங்களில் அவை அழிக்கப்பட்டு விடுகின்றன) தனிநபர் மற்றும் சமூகத்தின் இயங்கியல் பரஸ்பரச் சார்புத் தன்மை பல்கிபெருகும் காலத்தில் ஒரு புதிய வடிவத்தைப் பெறுகிறது. இந்தச் சமூக மதிப்பீட்டு பின்னூட்டங்கள் மூலமாக நாம் நமது உள்ளடக்கத்தை பொதுவான நண்பர்களின் வரவேற்புக்கு ஏற்ப சரி செய்துகொள்கிறோம். ‘நாம் எவ்வாறு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்பதற்கு ஏற்ப நமது அடையாளம் வடிவமைக்கப்படுகிறது. இரண்டாம் நிலை பார்வையே இயல்பானதாக ஆகிவிடுகிறது. பொதுவான நண்பர்களின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து மதிப்பீடுகளும் ஓரளவுக்கு சமரசப்படுத்தப்படுவதற்கு உள்ளாகிறது.
தங்களுடைய
உற்பத்திப் பொருட்களை நமக்கு விற்கும் நிறுவனங்களுக்கு தரவு சேகரிக்கும் நிறுவனங்களால் நமது அடையாளங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நமது சுய விவரங்களிலிருந்தும் நமது இணைய வழிச் செயல்பாடுகளிலிருந்தும் நமக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களும் குடும்பங்களும் நம்மைப் பற்றி அறிந்திருப்பதைவிட, பெருமளவில் தரவு சேகரிக்கும் இந்த நிறுவனங்கள் சிறப்பான வகையில் நம்மைப் பற்றி அறிந்துகொள்கின்றன. நமது நெருங்கிய நண்பர்களுடன் நாம் பகிர்ந்துகொண்டாலும், தரவு சேகரிக்கும் நிறுவனங்களைப் போல நமது எதிர்கால நடத்தையை அவர்களால் ஒருபோதும் முன்கணிக்க முடியாது, அவை நவீன முதலாளித்துவ வாழ்க்கைக்கு தேவையானதாக ஆகிவிட்டதால் நமது ஆழமான சுயத்தை அவற்றால் அணுக முடிகிறது. நம்மைப் பற்றிய அவர்கள் அறிதலுக்கு இணையே கிடையாது. இப்போது நாம் மும்முனைச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களாக மட்டுமின்றி, நமது அடையாளங்களில் அடிப்படை தனிமனித அந்தரங்கம் மற்றும் நெருக்கத்தின் எந்த ஓர்மையிலிருந்தும் நாம் முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படுகிறோம். தரவு சேகரிக்கும் முதலாளிகள் நமது சுயத்தின் தனிப்பட்ட பரிமாணத்தை கைப்பற்றி விற்கிறார்கள்.
இந்த
நிறுவனங்கள் வர்க்க சமுதாயத்தின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அதிகாரத்தை, நமது ஓய்வுத் தருணங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. ஆளும் வர்க்க வரலாற்றில் எந்த ஒரு சர்வாதிகாரியும் ஒருபோதும் சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் இந்த அளவுக்கு ஆழமாக ஊடுருவவில்லை. பழைய காலங்களில் போல அல்லாமல், பாதுகாப்பு அரசுக்கு (நாம் நமது அடையாளங்களைப் பராமரிக்கும் கருவியான) நமது அலைபேசியின் நெருக்கத்துக்கு வரவேண்டிய தேவை இல்லை. பாதுகாப்பு அரசுக்கு, மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும்
அதிகாரவர்க்கத்திற்கு உங்களுடைய அலைபேசி அருகே கூட வரவேண்டிய தேவையில்லை. உங்களை உளவு பார்ப்பதற்கு காமிராக்களை பொருத்துவதற்கு உங்கள் வீட்டுக்கு வர வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் முன்னேறிய செயற்கை நுண்ணறிவு சுவர்களுக்குள் ஊடுருவிச் சென்று காணும் வகையில் இணைய வழிபடுத்திகளை (routers) காமிராக்களாக மாற்றும் திறன் கொண்டதாக இருக்கிறது. இது பல்வேறு ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
அவலங்கள்
மலிந்த உலகைச் சித்தரிக்கும் கடந்த நூற்றாண்டின் புதினங்கள் 21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவத்தின் மெய்நிலைக்கு அருகில் கூட வரமாட்டா.
இங்கு
நிலவுவது மனிதனை மனிதன் உண்ணும் உலகம். சோசலிசத்தால் மட்டுமே அதிலிருந்து நம்மை மீட்க முடியும்.
குறிப்பு
எல்லா வர்க்கங்களுமே தரவுகளை உற்பத்தி செய்வதால், ஒரு சமுதாயம் முழுதுமே தரவுகளை விற்கும் முதலாளிகளின் சுரண்டலுக்கு உள்ளாகிறது.
______________________________
கார்லோஸ்
எல்.காரிடோ கார்பண்டேலில் உள்ள தெற்கு இல்லியனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கியூப-அமெரிக்க தத்துவத்தைக் கற்பிக்கிறார். இவர் மத்திய மேற்கு மார்க்ஸ் கல்வி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். மார்க்சியமும் இயங்கியல் பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டமும் (2022) நூலின் ஆசிரியர். Midwestern Marx Institute
YouTube இல் பல்வேறு நேரடி ஒலிபரப்புக்களை நடத்தி வருகிறார்.
தமிழில்
நிழல்வண்ணன்
நன்றி:
ஜனதா வீக்லி.




Comments
Post a Comment