Skip to main content

கடல் அலையைக் கரங்களால் தடுத்து நிறுத்த முடியுமா?

 

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமையில் தில்லி ஜந்தர்மந்தரில் நடந்த நீட்(NEET) தேர்வுத் தாள் கசிவு மற்றும் பல்வேறு தேர்வு முறை முறைகேடுகளுக்கு எதிரான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் ஆட்சியாளர்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூலை 20ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கொடுரமான அடக்கு முறையை போலீஸ் கட்டவிழ்த்து விட்டது; ஆணிகள் பதித்த தடிகளாலும், பெல்லட் குண்டுகளாலும் தாக்கியது; பெண்கள் மீதும் அநாகரிகமான தாக்குதல்களை நடத்தியது. அதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என ஆட்சியாளர்கள் நினைத்தனர். ஆனால் இளைஞர்களும் மாணவர்களும் அடக்குமுறையைக் கண்டு அஞ்சவில்லை. விடாப்பிடியாக, உறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை பதவி விலக வைத்தனர். 

அண்டை நாடுகளான இலங்கை, நோபாளம், வங்காளதேசம் ஆகியவற்றில் நடந்த இளைஞர்களின் போராட்டங்கள் அந்த நாடுகளில் ஆட்சியாளர்களை விரட்டி அடித்தன. அதைப் போல இங்கும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஆட்சியாளர்கள் மனதில் இளைஞர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. 

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனக் கூறுவது போல, தர்மேந்திர பிரதான் 'கல்வித் துறையில் நடந்து வரும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுகிறேன்' என்று கூறாமல், இளைஞர்களின் போராட்டம் தேச விரோதிகளின் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது எனக் கருதியே தாம் பதவி விலகுவதாக அகம்பாவத்துடன் கூறினார். போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே 'இது தேசவிரோதிகளின் போராட்டம், அந்நிய நாடுகளின் தூண்டுதல்களால் நடைபெறும் போராட்டம்' என அரசாங்கமும் அதன் ஊது குழல் ஊடகங்களும் அவதூறுகளைப் பரப்பி வந்தன. ஆனால் மக்கள் இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை, கட்டுக் கதைகளை நம்பத் தயாராக இல்லை.

இப்போது ஆட்சியாளர்களின் மீதான இளைஞர்களின் கோபத்தைத் தணித்து, சாந்தப்படுத்தி, தாஜா செய்து தம் பக்கம் ஈர்க்கும் தந்திரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. எப்பொழுதும் இல்லாத அளவுக்கு 80வது சுதந்திர விழாவில் கலந்துகொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது பாஜக அரசாங்கம். தனது சுதந்திர தின விழா உரையில், ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இணையதளங்கள் மூலமாக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதன் மூலம் இளஞர்களின் வேலை வாய்ப்புக்கு வழி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதிமொழி அளித்து மோடி இளைஞர்களைத் தாஜா செய்யும் வேலையைச் செய்தார். 

அதே சமயத்தில், வனங்களில் ஆயுதமேந்திப் போராடிய நக்சல்களைத் தமது ஆட்சி ஒழித்துவிட்டதாகவும், ஆனால் இன்னும் "அறிவுஜீவி நக்சல்கள்" நாடெங்கும் இருக்கின்றனர், அவர்கள் தமது ஆட்சியைக் கவிழ்க்கச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றனர் என்ற விசமக் கருத்தையும் மக்கள் மனதில் மோடி விதைக்க முயன்றார். 

தமது கட்சியையும் ஆட்சியையும் விமர்சனம் செய்பவர்களையும், அதை எதிர்த்துப் போராடுபவர்களையும் இது நாள்வரை 'தேசவிரோதிகள்', 'அந்நிய நாடுகளிருந்து ஊடுருவல் செய்தவர்கள்', 'அந்நிய நாட்டு ஏஜண்டுகள்,' 'நகர்ப்புற நக்சல்கள் 'என அவதூறு செய்து அவர்களை அடக்கி ஒடுக்குவதை நியாயப்படுத்தி வருகின்றனர் பாஜகவினர். இப்பொழுது அதன் தலைவர் தனது ஆட்சிக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஒரு புதிய பெயரை "அறிவுஜீவி நக்சல்கள்" என்ற புனைபெயரைக் கண்டுபிடித்துள்ளார். 

ஜனநாயகத்தை விரும்பாத, பாசிச ஏகபோக முதலாளி வர்க்கத்தின் ஏஜண்டாகச் செயல்படும் கொடுங்கோன்மையர்கள் மக்களை ஏய்க்கவும், அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் பொய்யான எதிரிகளைக் கற்பிதம் செய்வார்கள். அவர்கள்தான் மக்களின் பிரச்சினைகளுக்கும், வாழ்வுக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரிகள் எனக் கதை கட்டுவார்கள். அவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள். ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக் கட்சி இவ்வாறுதான் யூதர்களை ஜெர்மானியர்களின் எதிரிகளாகக் கற்பித்து 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தது. கம்யூனிஸ்ட்டுகளையும் வேட்டையாடியது. அதே போல் தான் இங்கு ஆட்சியில் உள்ள பாஜகவும் அதன் சங்கப் பரிவாரங்களும் முஸ்லீம் மக்களை எதிரிகளாகக் கற்பித்து மக்களைப் பிளவுபடுத்தி, பல மதக் கலவரங்களை நடத்தி ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து தனது ஆட்சியைத் தக்க வைக்க அதற்கு புதிய புதிய எதிரிகளைக் கற்பிதம் செய்யவேண்டியுள்ளது. அத்தகைய புதிய கண்டுபிடிப்புகள்தான் "நகர்ப்புற நக்சல்கள்", "அறிவிஜீவி நக்சல்கள்" போன்றவை. 

ஒரு புறம் இளைஞர்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டவர்கள் போன்ற நாடகம். இன்னொருபுறம் இளைஞர்களின் போராட்டங்களைப் பற்றி அவதூறு செய்தல், இளைஞர்கள் மீது குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தி அச்சத்தை உருவாக்குதல். இது தான் பாஜகவின் தந்திரம். இராஜஸ்தானில் அண்மையில் ராம்புரா- கன்வர் புரா கிராமத்தில் மிகவும் மோசமான நிலையில், மாட்டுக் கொட்டகையில் நடைபெற்று வந்த ஒரு பள்ளியை ஆய்வு செய்யச் சென்ற கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக குண்டர்களை ஏவிக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது; அவர்கள் சென்ற வாகனங்களைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இவற்றை எல்லாம் செய்து விட்டு, `தாக்குதலுக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஊர் மக்கள்தான் அவர்களைத் தாக்கினார்கள்` என்று தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களைத் தம் அருகில் வைத்துக் கொண்டே நா கூசாமல் பொய் சொல்கிறார் அந்தத் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.

புனேவில் ராகுல் காந்தி ஆகஸ்ட் 22ந் தேதி இளம் பெண்கள் மத்தியில் உரையாடும் நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்ளமல் தடுக்க பயமுறுத்தல் உட்பட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டது பாஜக., பெண்கள் விடுதி மீது குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்த பாஜக அண்மையில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்று நாட்கள் குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. 

இவ்வாறு தமக்கு எதிரான இளைஞர்கள் அரசியல் அரங்கிற்கு வராமல் தடுக்க அவர்கள் மீது குண்டர்களைக் கொண்டு தாக்குதல்களையும் அச்சுறுத்தல்ளையும் தொடர்ந்து செய்து வருகிறது பாஜக. அதுமட்டுமல்லாமல் அவர்களை UAPA போன்ற ஆள் தூக்கிச் சட்டங்களின் கீழ் கைது செய்து பிணையில் வரமுடியாமல் சிறையில் அடைத்தும் வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இளைஞர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது போல நாடகமாடி வருகிறது. 

பாஜக வின் இந்த நிகழ்ச்சிநிரலை தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது முதுகெலும்பற்ற தவெக அரசாங்கம். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கல்வி ஆணையர் மூலம் ஜனநாயக விரோத தலைமைச் செயலர் ஆகஸ்ட் 17ந் தேதி சுற்றறிக்கை அனுப்பச் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், குஜிலியம்பாறையின் அதிகார வர்க்கத் திமிர் கொண்ட வட்டாட்சியர் தமது வட்டத்தில் உள்ள சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரித்து உடனே அனுப்ப வேண்டும் எனத் தம் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஆணை இட்டுள்ளார். 

இந்த நடவடிக்கைகளுக்கு மக்களிடமிருந்தும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளிடமிருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதும் இந்த ஆணைகள் ரத்து செய்யப்பட்டன. அமைச்சர்கள் பழியை அதிகாரிகள் மீது போட்டுவிட்டு தங்கள் போண்டித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். 

பாஜக தனது ஆட்சிக்கு எதிராகக் கருத்துகளைக் கூறுபவர்களையும் போராட்டம் நடத்துபவர்களையும் "தேசத் துரோகிகள்", "அந்நிய நாடுகளின் ஏஜண்டுகள்", "நகர்ப்புற நக்சல்கள்", "அறிவு ஜீவி நக்சல்கள்" எனக் கூறி மாணவர்களின், இளைஞர்களின், தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கி விடலாம் எனக் கருதுகிறது. தவெக அரசாங்கமும் சுற்றறிக்கைகள் மூலம் இடதுசாரிகளின், மாணவர்கள், இளைஞர்களின் போராட்டங்களைத் தடுத்து விடலாம் எனக் கனவு காணுகிறது. 

மக்கள் அமைதியாக வாழ விரும்பினாலும் அவர்களுடைய வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கடும் நெருக்கடிகளும் அவர்களை அமைதியாக வாழ அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை. 'இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2047 ல் இந்தியா வளர்ந்த நாடாகி விடும்' என ஆட்சியாளர்களும் அவர்களுடைய ஊடகங்களும் நாடெங்கும் இருபத்துநான்கு மணி நேரமும் பிரச்சாரங்களைக் கட்ட விழ்த்து விட்டாலும், வளர்ச்சியின் பெரும்பகுதியை அறுவடை செய்பவர்கள் அதானி, அம்பானி, டாட்டா போன்ற இந்த நாட்டுப் பெரும் முதலாளிகளும், இங்கு முதலீடு செய்து கொள்ளை இலாபம் சம்பாதித்து வரும் அந்நிய நாட்டு முதலாளிகளும், உயர் அதிகார வர்க்கத்தினரும், ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியினரும்தான். பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.

இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாத் திண்டாட்டம் கடுமையாக நிலவி வருகிறது. 15-29 வயதுடைய இளைஞர்கள் மத்தியில் 16% வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். பட்டதாரிகள் இளைஞர்களில் 29% வேலை இல்லாமல் இருக்கின்றனர். அத்துடன் விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றங்கள், விலைவாசி ஏற்றத்தை ஈடுகட்ட முடியாத அளவுக்குக் குறைந்த கூலி, சமாளிக்க முடியாத அளவுக்கு கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள், நிலையற்ற ஒப்பந்த வேலைமுறைகள், பாதுகாப்பற்ற உணர்வு, எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவை மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துப் பகுதியினரையும் போராட்டத்தை நோக்கித் தள்ளுகின்றன. இந்த நிலைமையில் மக்களின் போராட்டங்களை ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் அவதூறு செய்து அடக்கி ஒடுக்கப் பார்த்தாலும் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளின் தீர்வுக்காகத் தொடர்ந்து போராடவே செய்வார்கள். கடல் அலை என ஆர்ப்பரித்து எழுந்து வரும் மக்கள் போராட்ட அலைகளை ஆட்சியாளர்களால் தடுத்து நிறுத்தி விட முடியாது.

 

மு.வசந்தகுமார்

 

 

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...