Skip to main content

வீட்டு வேலை செய்வோரும், பெண்களின் உழைப்பும் நீதிமன்றங்களின் மொழியும்!

 

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சேமநல நடவடிக்கைகள் கோரி பெண் தொழிலாளர்கள் சங்கமும் பிற அமைப்புக்களும் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதி ஜோய்மால்யா ஆகியோர் அடங்கிய அமர்வின் பார்வை அறிவியல்பூர்வமாக இல்லை, அத்தோடு குறுகிய மனம் கொண்டதாகவும் இருக்கிறது, கிராமத்து நடைமேடைகளில் அமர்ந்திருக்கும் பாமரர்களின் அரட்டைப் பேச்சுகளைப் போன்ற கருத்துரைகளை நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசன நீதிமன்றத்திடமிருந்து கேட்கவேண்டியிருந்தது துரதிர்ஷ்டவசமானது. 

தலைமை நீதிபதி குறிப்பிட்டதாவது: “சட்டத்தின் மூலமாக பாகுபாடற்ற ஓர் அமைப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கில், பலநேரங்களில் நாம் நம்மை அறியாமலேயே பெரும் சுரண்டலுக்கு இட்டுச் செல்லும் நிலைமைகளை உருவாக்குகிறோம். குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றால், மக்கள் வேலைவாய்ப்பை அளிப்பதற்கு தயங்குவார்கள். இது இன்னும் கடினமான நிலைமைக்கு இட்டுச் சென்றுவிடும். இது வேண்டல் – வழங்கல் (Demand – Supply) பிரச்சனை.” எனக் கூறிய அவர் மேலும் தொழிற்சங்கங்களை இழிவுபடுத்தி நிராகரிக்கும் வகையில் “கொடிச் சங்கங்கள்” என்று குறிப்பிட்டு, தேசத்தின் வளர்ச்சியை சீர்குலைப்பதற்கு அவையே பொறுப்பாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். 

இந்தியாவில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் பெண்களே. அவர்கள் செய்யும் வேலை குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் காத்துப் பேணும் அடிப்படை உழைப்பாக உள்ளது. இருப்பினும், இன்றும் கூட, இந்த உழைப்பு “வேலையாக” அங்கீகரிக்கப்படுவதில்லை. குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் எழுப்பப்படுகிற போது, நீதிமன்றங்களிலிருந்து வரும் மொழிகூட நம்பமுடியாத அளவுக்கு வேறுபட்டதாக இருக்கிறது; “ஒவ்வொரு வீடும் சட்டப் போர்க்களமாக மாறிவிடும்” என்பது போன்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்வோருக்கான குறைந்தபட்ச ஊதியக் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்குக் கூட உச்ச நீதிமன்றம் தயக்கம் காட்டுகிறது; இது இந்த உழைப்பை குடும்பரீதியான தர்மச் செயல் என்ற வரையறுப்புக்குள் அடைத்து வைப்பதைத் தொடரச் செய்யும் ஆழமான மனப்போக்கைப் பிரதிபலிக்கிறது. “அவர்கள் நமது குடும்பத்தின் உறுப்பினர்கள் போன்றவர்கள்” என்று நீதிமன்றதால் வைக்கப்படும் வாதம் உண்மையில், உரிமைக்குப் பதிலாக கருணை என்ற சித்தாந்தத்தை வைப்பதாக இருக்கிறது. குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவோர் ஊதியம் கோரமாட்டார்கள் என்ற கருத்து பெண்களின் உழைப்பை இயற்கையானது என்று கூறுகிற ஆணாதிக்க உலகக் கண்ணோட்டத்திலிருந்து நேரடியாக வருவதாகும்.

குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வேலை வாய்ப்புக் குறைந்துவிடும் என்று வாதிடுவது பெண்களின் உழைப்பு உரிமைகளை சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக வைத்துப் பார்ப்பதாகும். இது அரசியல் சாசனத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்துடன் வாழும் உரிமை (பிரிவு21) மற்றும் கட்டாய உழைப்புக்கான தடை (பிரிவு23) ஆகிய அடிப்படை உரிமைகளை பொருளாதார வசதி என்ற சிந்தனைகளுக்கு கீழ்ப்படுத்துவதாகும். “கோரிக்கை – வழங்கல்” என்ற மொழி வீட்டு வேலை செய்வோரை தொழிலாளர்கள் நிலையிலிருந்து வெறும் பண்டங்களுக்குக் குறுக்கிவிடுவதாகும். அரசியல் சாசனத்துக்குக் கீழ்ப்படிய வேண்டிய நீதிமன்றங்கள் அதன் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிடுவது முரண்நகையாகும். 

மேலும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் அமைப்பாகும் உரிமை இருக்கும் போது, அப்படிப்பட்ட கூட்டு வலிமை குறித்து நீதிமன்றங்களின் ஐயப்பாடான கருத்து முரண்பாடானதாகும். பெண்களின் கூட்டுக் குரல்களை “தடைகளாக அல்லது அளவுக்கு மிஞ்சியவையாக” சித்தரிப்பது ஒன்றும் புதிதல்ல. அதே நேரத்தில், தொழிற்சங்கங்களுக்கான தேவையை மறுப்பதற்கான காரணமாக தனியார் முகாமைகள் மற்றும் இடைத்தரகர்களின் சுரண்டலைச் சுட்டிக்காட்டுவது எலிகளுக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதற்குச் சமமாகும். இவை அமைப்புமுறைகள் நியாயமாகச் செயல்படுவதை உறுத்திப்படுத்த வேண்டிய தங்கள் பொறுப்புக்களைக் கைவிடுவதற்கு அரசியல் சாசன நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடிய சாக்குப்போக்குகளாகத் தெரிகின்றன.

வீட்டு வேலை தொடர்பாகப் பேசுகையில், நம்பிக்கையும் மனித உறவுகளும் பற்றித் தலைமை நீதிபதி பேசியுள்ளார். நம்பிக்கை என்பது ஊதியங்களுக்குப் பதிலியாகாது. நம்பிக்கை இருக்குமிடத்தில் உரிமைகள் தேவையற்றவை என்ற வாதம் ஏற்றத்தாழ்வை ஆழப்படுத்துகிறது. உழைப்பு மதிப்பிடப்படுவதில்லை என்பதால்தான் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் தீவிரமான சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை அளிப்பது மாநிலச் சட்டமன்றங்களின் சட்ட எல்லைகளுக்கு உட்பட்டது என்று கூறுவதில் நீதிமன்றங்கள் தொழிநுட்ப ரீதியாகச் சரியாக இருக்கலாம், ஆனால் இது நீதித்துறையைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக ஆகாது. சட்டங்கள் இல்லாத போதும், உரிமைகள் மறுக்கப்படுகிற போதும் நீதிமன்றங்கள் கூட அரசியல் சாசன விழுமியங்களை முன்னெடுக்கும் கடமையை ஏற்கலாம். 

பெண்களின் உழைப்பை “முறை சாராதது”, “தனிப்பட்டது” அல்லது “குடும்ப விடயம்” என்று கருதுவதைத் தடுத்து நிறுத்துவது உடனடித் தேவையாகும். அதற்குப் பதிலாக அதை ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சனையாக அங்கீகரிக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிமைகள் அளிப்பது எந்த வகையிலும் ஒவ்வொரு வீட்டையும் குற்றச்செயல் நடக்கும் காட்சியாக மாற்றாது. அது ஒவ்வொரு வீட்டையும் மிகவும் நியாயமாக நடக்கச் செய்வதை நோக்கி அடி எடுத்து வைக்கச் செய்வதாகும்.


இராம சுந்தரி

தமிழில்: நிழல்வண்ணன்


நன்றி: ஜனதா வீக்லி


[இராம சுந்தரி பெண்களுக்கான முற்போக்கு அமைப்பில் (ஆந்திரா அலகின் துணைத் தலைவர்) இருக்கிறார். மேலும் மாத்ருகா திங்கள் இதழின் செயல் ஆசிரியராக இருக்கிறார்.

 

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...