எமது இயக்கத்தின் ‘புதிய (மக்கள்) ஜனநாயகப் புரட்சியா?
சோசலிசப் புரட்சியா? விவாதத்திற்கான ஒரு முன்மொழிவு’ என்ற ஆவணத்தின் மீது இலக்கு இணைய
இதழ் எமது இயக்கத்தின் பெயரைக் குறிப்பிடாமலேயே மார்க்சிய- லெனினிய விமர்சனம் என்ற
பெயரில் ஒரு விமர்சனத்தை வைத்துள்ளது.
“இந்த ஆவணத்தில்
இந்தியாவில் 1947ல் முதலாளித்துவப் புரட்சி நிறைவு பெற்றுவிட்டதாகவும், இந்தியா இன்று
ஒரு முழுமையான முதலாளித்துவ நாடாக இருப்பதால் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற திட்டம்
தவறானது என்றும் வாதிடுகிறது. ஆனால் இந்த முடிவு மார்சிய – லெனினிய ஆய்வு முறையிலிருந்து
முழுமையாக விலகிப் போய்விட்டதால் ஒத்துப்போவதில்லை.” என்று இலக்கு விமர்சனம் குறிப்பிடுகிறது.
ஆனால் மார்க்சிய –லெனினிய ஆய்வு முறையிலிருந்து அது எவ்வாறு விலகியுள்ளது என்பதைக்
குறிப்பான சான்றுகளுடன் எங்கும் விளக்கவில்லை.
புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிப்பது
எது?
ரசியாவில்
1905 புரட்சி தோல்வி அடைந்தது. முதலாளியப் புரட்சி நிறைவுறவில்லை. ஆனால் 1917 பிப்ரவரிப்
புரட்சி வெற்றியடைந்து முதலாளிய வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தது.
இதை லெனின், “முதலாளிகளுடைய பிரதிநிதிகளையும், ஏற்கனவே முதலாளிகளாக மாறுதலடைந்து விட்ட
நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளையும் கொண்ட புதிய அரசாங்கம் ஒன்று ரசியாவில் தோன்றிற்று” என்கிறார். அதாவது முதலாளிய வர்க்கத்தின்
தலைமையில் நடந்துள்ள முதலாளியப் புரட்சி என்கிறார்.
“புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால்
அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கண்டிப்பான
அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள்
இதுதான்.
இந்த அளவில் ரசியாவில் முதலாளிய அல்லது முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவுற்று
விட்டது.” இவ்வாறு லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரையில் கூறினார். (The April Thesis-
Lenin, p.15. Progress Publishers, Moscow,1980)
இங்கு லெனின்
அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கைகளில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் புரட்சியின்
கட்டம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார்.
அந்த ஆய்வுரையில்,
“புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்திற்கு மாறுதலடைந்து செல்லும்
கட்டத்தை இன்றைய ரசிய நிலைமை குறிக்கிறது. இதுதான் இன்றைய ரசிய நிலைமையில் காணப்படும்
குறிப்பான அம்சம். முதல் கட்டத்தில் பாட்டாளிகளிடம் போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்பு
பலமும் இல்லை. அதனால் அரசியல் அதிகாரத்தை முதலாளிகளிடம் புரட்சியின் முதல் கட்டம் ஒப்படைத்தது.
புரட்சியின் இரண்டாவது கட்டம் பாட்டளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாகக்
கீழ்ப்படியில் உள்ளவர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்” என லெனின் கூறுகிறார். (மேலே குறிப்பிடப்பட்ட அதே நூல். பக்.8)
இங்கு லெனின், “புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம்
என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும்.
கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின்
பொருள் இதுதான்” என்பதை வலியுறுத்துகிறார்.
ஆனால் இலக்குவோ
அரசியல் அதிகார மாற்றத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொள்வது அரசியல் குறுக்குவாதம்
என்றும், லெனின் அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும் ஒருபோதும்
அரசியல் அதிகார மாற்றம் மட்டுமே போதுமான அளவுகோல் என்று கூறவில்லை என்றும் கூறுகிறது.
மேலும் ஒரு நாட்டின் பொருளாதார அடித்தளம், நிலவுடைமை அமைப்பு, ஏகாதிபத்திய சார்பு,
வர்க்க உறவுகள் ஆகியவற்றையும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும் என லெனின் கூறுகிறார்
என்றும் இலக்கு கூறுகிறது. லெனின் இவ்வாறு எங்கு கூறுகிறார் எனச் சான்றுகளுடன் விளக்க
வேண்டும். அதற்குப் பதிலாக பொத்தாம் பொதுவாக லெனின் இவ்வாறு கூறுகிறார் எனக் கூறுவதை
எல்லாம் லெனின் பெயரால் இலக்குவால் முன் வைக்கப்படும் அதன் சொந்தக் கருத்துகள்தான்.
மேலும், அரசியல்
அதிகார மாற்றத்தை மட்டுமே அளவுகோலாக எடுத்துக்கொள்வது அரசியல் குறுக்குவாதம் எனக் கூறி
லெனின் மீது விமர்சனம் வைக்க முடியாமல், லெனின் வேறு பல விடயங்களையும் கணக்கில் எடுத்துக்
கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளார் என இலக்கு சப்பைக் கட்டு கட்டுகின்றது.
1917ல் பிப்ரவரியில்
நடந்த புரட்சியின் போது, முதலாளிய வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது; ஆனால்
தொடர்ந்து முதலாவது யுத்தத்தில் ஈடுபட்டு வந்தது. ஏனென்றால் ரசியா பிரிட்டிஷ் - பிரஞ்சு
மூலதனத்துடன் கட்டுண்டிருந்தது. அது பற்றி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சியின்
வரலாறு பின்வருமாறு கூறுகிறது:
“ரசிய உலோகத்
தொழிற்சாலைகளில் மிக மிக முக்கியமானவை பிரஞ்சு முதலாளிகளிடம் இருந்தன. மொத்த உலோகத்
தொழிலில் முக்கால்வாசி பாகம் அந்நிய நாட்டு மூலதனத்தைச் சார்ந்திருந்தது. டானேத்ஸ்
நதிப் பிரதேசத்திலிருந்த நிலக்கரித் தொழில்களும் இவ்விதம் அந்நிய நாட்டு முதலாளிகளின்
கைகளில் இருந்தன. தேசத்தில் உள்ள எண்ணைக் கிணறுகள் அனேகமாக பாதியளவு பிரிட்டிஷ், பிரஞ்சு
முதலாளிகளுக்குச் சொந்தமாக இருந்தன. ரசிய இயந்திரத் தொழிற்சாலைகளில் கிடைத்த இலாபத்தில்
ஒரு பெரும் பகுதி அந்நிய நாட்டு வங்கிகளுக்கு - பிரிட்டிஷ், பிரஞ்சு வங்கிகளுக்கு போய்ச்
சேர்ந்தது. இவையெல்லாம் போதாமல், பிரான்சிடமிருந்தும், பிரிட்டனிடமிருந்தும் ஜார் அரசன்
கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருந்தான். இவையெல்லாம் சேர்ந்து பிரிட்டிஷ் – பிரஞ்சு
ஏகாதிபத்தியங்களுடன் ஜார் அரசாங்கத்தைக் கட்டிப் போட்டன.
இந்த நாடுகளுக்கு
கப்பம் கட்டும்படியான ஒரு நாடாக, பாதி அடிமை நாடாக ரசியாவை இவை மாற்றி விட்டன”. (சோவியத்
கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சியின் வரலாறு, சவுத் விஷன், சென்னை,2006, பக்.264-265)
மேலும் அன்றைய
ரசிய விவசாயத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மாறுதல் கட்டத்திலிருந்தது. முதலாளிய
உற்பத்திமுறை வளர்ச்சி நிலையில் இருந்தது.
ரசியா பொருளாதாரரீதியாக
ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தும், பிரஞ்சு – பிரிட்டிஷ் மூலதனத்துடன் கட்டுண்டிருந்தது.
விவசாயத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை முழுமையாக அழியாமல் முதலாளிய உற்பத்திமுறை
வளர்ச்சியில் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் முதலாளிய வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக்
கைப்பற்றியது. ஜார் அரசனிடமிருந்து அரசியல் அதிகாரம் முதலாளிவர்க்கத்தின் கைகளில் வந்தததைத்
தவிர 1917 பிப்ரவரியில் பொருளாதாரரீதியாக எந்த மாற்றமும் நிகழவில்லை. ஒரு வர்க்கத்திடமிருந்து
இன்னொரு வர்க்கத்தின் கைகளில் அதிகாரம் வந்ததைத்தான் லெனின் புரட்சியின் பொருள் என்றார்;
முதலாளியப் புரட்சி முடிவுற்றது எனக் கூறினார்.
அன்றைய நிலையில்
ரசியாவில் ஏகாதிபத்தியச் சுரண்டல் இருந்தது. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை இருந்தது.
ஆனாலும் லெனின் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைக்கவில்லை. அரசியல் அதிகாரம் முதலாளி
வர்க்கத்தின் கைகளில் இருந்ததைக் கொண்டு சோசலிசப் புரட்சியைத்தான் லெனின் முன்வைத்தார்.
1917 பிப்ரவரி வரை போல்சுவிக் கட்சி ரசியாவில் ஜனநாயகப் புரட்சி திட்டத்தைத்தான் வைத்திருந்தது.
பிப்ரவரியில் அதிகாரம் ஜார் அரசனிடமிருந்து முதலாளி வர்க்கத்தின் கைகளுக்கு வந்ததும்
கட்சி தனது திட்டத்தை சோசலிசப் புரட்சித் திட்டமாக மாற்றியது.
வரலாற்றிலிருந்து
இந்த மார்க்சிய – லெனினியப் படிப்பினையைக் கற்றுக் கொண்டு, 1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து
இந்திய முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைப் பெற்றதும். இந்தியா சோசலிசப் புரட்சிக்
கட்டத்தில் நுழைந்து விட்டது என்ற முடிவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வந்திருக்க
வேண்டும். அதன் அடிப்படையில் தனது திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். அதனுடைய தவறான
திட்டம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சந்தர்ப்பவாதங்களுக்கும், சமரசங்களுக்கும் இட்டுச்
சென்றது. தவறான திட்டத்தினால் கட்சி மேலும் மேலும் பிளவு பட்டு இன்று கம்யூனிஸ்ட் இயக்கம்
சிபிஐ, சிபிஎம், எம்- எல், எனப் பல கட்சிகளாகப் பிளவு பட்டுக் கிடக்கின்றன.; நடத்த
வேண்டியது புதிய (மக்கள்) ஜனநாயகப் புரட்சிதான் என்று இன்றும் கிளிப்பிள்ளைகள் போலத்
தொடர்ந்து கூறி வருகின்றன.
நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை நீடிக்கின்றதா?
அரசியல் அதிகாரம்
எந்த வர்க்கத்தின் கைகளில் உள்ளது என்பதுதான் புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிக்கும்
என்பது லெனினிய நிலைப்பாடாகும். முதலாளிய வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருப்பதால்
இங்கு நடத்தப்பட வேண்டியது பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சிதான்
என எமது ஆவணம் கூறுகிறது. ஆனால் இங்குள்ள சிபிஐ, சிபிஎம், எம்–எல் கட்சிகள் இன்னும்
அரை நிலப்பிரபுத்துவம் நிலவி வருகிறது; எனவே புதிய ஜனநாயகப் புரட்சிதான் நடத்த வேண்டும்
எனக் கூறி வருகின்றன. இது முழுக்க முழுக்க லெனினிய நிலைப்பாட்டுக்கு விரோதமானதாகும்.
மேலும் விவசாயத்தில்
கூட இவர்கள் கருதுவது போல நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை இல்லை என்றும், முதலாளிய உற்பத்திமுறைதான்
நிலவுகிறது என்றும், அதன் எச்சங்கள்தான் நிலவுகின்றன என்றும் எமது ஆவணம் விளக்கியுள்ளது.
ஆனால் இந்தக் கட்சிகள் தமது தவறான நிலைப்பாட்டை நியாயப்படுத்த இன்னும் இங்கு நிலப்புரபுத்துவ
உற்பத்திமுறை நீடித்து வருவதாகக் கூறி வருகின்றன. அந்தத் தவறான அடிப்படையில்தான் இலக்கும்
எமது ஆவணத்தின் மீது, “இன்று நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை இல்லை; அதன் எச்சங்கள்தான்
உள்ளன” என ஆவணம் கூறுகிறது. . “இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட முடிவு” என்ற விமர்சனத்தை
வைத்துள்ளது.
இவர்கள் வாதப்படி,
“இந்தியக் கிராமப் புறங்களில் சாதி ஆதிக்கம், நிலக் குவிப்பு, குத்தகைச் சுரண்டல்,
கொத்தடிமை போன்ற தொழிலாளர் உறவுகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இன்றும் பரவலாக
உள்ளன.” எனக் கூறும் இலக்கு இவை அரை நிலப்புரபுத்துவத்தின் அடையாளங்கள் எனக் கூறுகிறது.
சாதி
எமது ஆவணத்தில்
சாதி ஆதிக்கம், சாதி பாகுபாடுகள் இருப்பதினாலேயே நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை நிலவுகிறது
எனக் கூறுவது சரியானதல்ல என விளக்கியுள்ளோம். அதைப் பற்றி எந்தவிதமான கருத்தும் கூறாமலேயே
இலக்கு தனது விமர்சனத்தை வைத்துள்ளது.
நிலப்பிரபுத்துவ
உற்பத்திமுறை இங்கு நிலவவில்லை. சாதி அடிப்படையில், விவசாய உற்பத்தியில் ஒவ்வொரு சாதிக்கும்
ஒரு வேலைப் பிரிவினை என்ற அடிப்படையில், குலத் தொழில் என்ற அடிப்படையில் மக்கள் இன்று
பங்கு கொள்ளவில்லை. இன்று விவசாயம் விவசாயிகளின் சுய தேவையையை நிறைவு செய்யும் அடிப்படையில்
இல்லை; முழுக்க முழுக்கச் சந்தைக்கான பண்ட உற்பத்தியாக மாறி விட்டது. இன்று விவசாய
உற்பத்தி குடும்ப உழைப்பை மட்டும் சார்ந்து இல்லாமல் விவசாயக் கூலித் தொழிலாளர்களைச்
சார்ந்துள்ளது. விவசாயத்திற்குத் தேவையான கருவிகளை இன்று தொழிற்சாலைகள் பெரும் அளவில்
உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. அதனால் முன்பு விவசாயத்திற்குத் தேவையான கருவிகளைத்
தயாரித்து வழங்கி வந்த கொல்லர், தச்சர் போன்ற சாதியினரும், பிற சேவை சாதியினரும் தமது
தொழிலை இழந்து கூலி விவசாயிகளாக மாறியுள்ளனர். நில உடைமையாளர்களுக்கும் கூலி விவசாயிகளுக்கும் இடையில் இன்று நிலவி வரும்
உறவு முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான உறவுதான்; நிலப்பிரபு – பண்ணையடிமை
என்ற உறவு அல்ல. சாதி அடிப்படையில் ஒருவரை அவரது குலத் தொழிலைத்தான் செய்ய வேண்டும்
என்று யாரும் இன்று கட்டளை இடமுடியாது. எனவே சாதி அடிப்படையிலான நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையும்,
நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவும்தான் இன்னும் நீடிக்கிறது எனக் கூறுவது மார்க்சியத்திற்குப்
புறம்பான கருத்து.
சாதி அடிப்படையிலான
நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையில் சாதி தன் இருப்பைக் கொண்டிருந்தது முற்றிலும் உண்மை.
ஆனால் சாதிகள் இருப்பதினாலேயே இன்னும் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை நிலவுகிறது என்று
கூறுவதில் ஒரு சிறிதும் உண்மையில்லை. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இன்றும் நிறத்தின்
அடிப்படையில் கருப்பு இன மக்கள் மீது பாகுபாடும் ஒடுக்குமுறையும் நிலவி வருகின்றன.
அதைக் கொண்டு அங்கு இன்னும் அடிமைச் சமூக உற்பத்திமுறை நிலவி வருகிறது எனக் கூற முடியாது.
அதைப் போலவேதான், இங்கு நிலவி வரும் சாதியப் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் கொண்டு
நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை இன்னும் நீடிக்கிறது எனக் கூற முடியாது.
ஒவ்வொரு சமூகத்திலுள்ள
ஆதிக்க வர்க்கங்கள் கடந்த காலப் பண்பாட்டுக் கூறுகளைத் தமது ஆதிக்கத்திற்காகவும் சுரண்டலுக்காகவும்
பயன்படுத்திக் கொள்ளும். அவ்வாறுதான் இன்றுள்ள முதலாளிய வர்க்கம் தனது ஆதிக்கத்திற்காகவும்,
சுரண்டலுக்காகவும் சாதியைப் பயன்படுத்திக் கொள்கிறது.
நிலக் குவிப்பும் குத்தகைச் சுரண்டலும்
நிலப்பிரபுத்துவத்தின் அடையாளங்களா?
அடுத்து நிலக்
குவிப்பு, குத்தகைச் சுரண்டல் இருப்பதினால் அரை நிலப்பிரபுத்துவம் நிலவுவதாக இலக்கு
கருதுகிறது.
ஒரு சிலரிடம்
பெரும் அளவு நிலம் குவிந்து கிடப்பதினாலும். அல்லது சிறு நிலவுடைமையாளர்கள் அதிகம்
இருப்பதினாலும் அதை நிலப்பிரபுத்துவம் எனக் கூற முடியாது. நிலத்தின் பரப்பு எவ்வளவு
என்பது முக்கியமல்ல. அதில் உற்பத்திமுறை எந்த அடிப்படையில் உள்ளது என்பதுதான் முக்கியம்.
”பண்ணையில் கூலி உழைப்பு எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முதலாளிய
வளர்ச்சியின் உறுதியான, சிறந்த, மிகவும் நேரடியான அடையாளமாகும்.” என்கிறார் லெனின்.
(New Data on the Laws Governing the Development of Capitalism in
Agriculture,Lenin, C.W.Vol.22, p.59)
மேலும், “... முதலாளியப் பொருளுற்பத்திமுறை தொடக்க
காலத்தில் சந்திக்கிற நிலச் சொத்து வடிவம் அதற்குப் பொருத்தமாய் இருப்பதில்லை. பயிர்த்
தொழிலை மூலதனத்துக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலம் அது தனக்கேற்ற வடிவத்தைத் தானே தோற்றுவித்துக்
கொள்கிறது. இவ்விதம் பிரபுத்துவ நிலச் சொத்து, கணச் சொத்து அல்லது மார்க் கிராமச் சமூகங்களில்
காணப்படும் சிறு விவசாயிகள் நிலத்தை, இவற்றின் சட்ட வடிவங்கள் எவ்வளவுதான் பல்வேறுபட்டவையாக
இருந்தாலும் - இந்தப் பொருளுற்பத்தி முறைக்கு இசைவான பொருளாதார வடிவமாக மாற்றி அமைக்கிறது”
(மூலதனம், தொ. 3, பக்.872, தமிழில்:தியாகு, NCBH, சென்னை, 1998).
நில உரிமையின் வடிவம் எதுவாக இருந்தாலும் முதலாளியம்
அதை மூலதனத்திற்குக் கீழ்ப்படுத்தும் என மார்க்ஸ் கூறுகிறார். விவசாய நிலத்தினுடைய
பரப்பின் அளவு முதலாளியத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை, கூலி உழைப்பைப் பயன்படுத்தி
உபரி உழைப்பைச் சுரண்டுவதே விவசாயத்தில் முதலாளிய உற்பத்திமுறையின் அடையாளங்கள் என
லெனின் விளக்குகிறார். எனவே இலக்கு கருதுவது போல நிலக்குவிப்பு உற்பத்திமுறையைத் தீர்மானிப்பதில்லை.
அடுத்து, குத்தகைச் சுரண்டல் உள்ளதால் இங்கு அரை நிலப்பிரபுத்துவ
உற்பத்திமுறை நிலவுகிறது என இலக்கு கூறுகிறது. குத்தகை முறையில் நிலப்பிரபுத்துவ குத்தகை
முறை உள்ளது. முதலாளியக் குத்தகை முறை உள்ளது. இங்கு இப்பொழுது நிலவி வருவது முதலாளியக்
குத்தகை முறைதான். இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இலக்கு புரிந்து கொள்ளவில்லை.
அதனால்தான் குத்தகை முறை இருந்தாலே அது அரை நிலப்பிரபுத்துவம் எனக் கருதுகிறது. குத்தகையின்
பல்வேறு வடிவங்களைப் பற்றி மார்க்ஸ் தனது மூலதனம், தொகுதி.3 ல் விரிவாக விளக்குகிறார்.
அதை இலக்கு வாசிக்க வேண்டும்.
கொத்தடிமையும், விவசாயத் தொழிலாளர்களும்
அடுத்து கொத்தடிமை போன்ற தொழிலாளர் உறவுகள் இருப்பதினால்
இது அரை நிலப்பிரபுத்துவமுறை என்கிறது. கொத்தடிமை முறை மிக மிக அரிதாக சில பகுதிகளில்
நிலவலாம். ஆனால் அவை ஆதிக்க நிலையில் உள்ள உறவு அல்ல. மேலும் கொத்தடிமை என்பது அடிமைச்
சமூகத்தின் எச்சம். அது நிலப்பிரபுத்துவத்திலும் நீடித்தது. முதலாளியம் வளர்ச்சியுற்றுள்ள
ஒரு சமூகத்தில் கூட மிகவும் பின்தங்கிய உற்பத்தி உறவுகள், பழங்குடிச் சமூகங்கள் இருக்கும்.
அதனாலேயே அந்தச் சமூகத்தை முதலாளியச் சமூகம் அல்ல எனக் கூறி விட முடியாது. ஆதிக்க நிலையில்
என்ன உற்பத்திமுறை நிலவுகிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு சமூகத்தைத் தீர்மானிக்க
வேண்டும்.
மேலும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் இன்றும் பரவலாக
இருப்பதும் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் கூறு எனக் கூறுகிறது இலக்கு. இதன்
மூலம் மார்க்சியம் பற்றிய தனது அறியாமையைத்தான் அது வெளிப்படுத்திக் கொள்கிறது. விவசாயத்
தொழிலாளர்கள் இன்று கூலிக்காக தனது உழைப்புச் சக்தியை விற்பவர்கள். உழைப்புச் சக்தியை
விற்கக் கூடிய பண்டமாக மாற்றுவதுதான் முதலாளிய உற்பத்திமுறையின் குறிப்பான அடையாளம்.
எனவே விவசாயத் தொழிலாளர்கள் பரவலாக இருப்பது முதலாளிய உற்பத்தி முறையின் கூறுதானே தவிர,
இலக்கு கருதுவது போல அரை நிலப்பிரபுத்துவத்தின் அடையாளம் அல்ல.
ஏகாதிபத்தியச் சார்பும் அரசியல் சுதந்திரமும்
அடுத்து, ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதன ஆதிக்கம் இருப்பதால்
இந்தியாவை அரசியல் சுதந்திரம் கொண்ட நாடாகக் கருதக் கூடாது. அவ்வாறு கருதுவது மார்க்சிய
– லெனினிய அடிப்படைகளை மறுப்பதாகும் என்கிறது இலக்கு. லெனின் எங்கு இவ்வாறு கூறியுள்ளார்
எனச் சான்றுடன் இலக்கு விளக்க முடியுமா? உண்மையில் லெனின் இவ்வாறு எங்கும் கூறவில்லை.
அதற்கு நேர்மாறாகத்தான் லெனின் கூறுகிறார்.
பொருளாதார
ரீதியான சார்பு இருப்பதினாலேயே அந்த நாட்டிற்கு அரசியல் சுதந்திரம் இல்லை எனக் கூறுவது
மார்க்சியமும் அல்ல. அது அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக்
கொள்வதாகும் என்றும், அவ்வாறு கூறுவது ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதமாகும் என்றும் லெனின்
கூறுகிறார்; அர்ஜன்டைனாவும் போர்ச்சுகல்லும் பொருளாதார ரீதியாக இங்கிலாந்தைச் சார்ந்திருந்தபோதும்
எவ்வாறு அவை அரசியல் சுதந்திரத்தைக் கொண்ட நாடுகளாக இருந்தன என்பதை லெனின் விளக்குவதைப்
பார்ப்போம்:
“ஒரு நாட்டிலுள்ள
பெரும் நிதி மூலதனம் இன்னொரு சுதந்திரமான நாட்டிலுள்ள போட்டியாளர்களை விலைக்கு வாங்க
முடியும், தொடர்ந்து அவ்வாறு செய்யவும் முடியும். பொருளாதாரரீதியாக இது முழுமையாகச்
சாதிக்கக் கூடியதுதான். அரசியல்ரீதியான இணைப்பு இல்லாமல் “பொருளாதாரரீதியான இணைப்பு” முழுமையாகச் சாதிக்கக் கூடியதுதான், அது
விரிவாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏகாதிபத்தியம் பற்றிய இலக்கியங்களில்
அது பற்றிய குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம்; எடுத்துக்காட்டாக, அர்ஜன்டைனா
உண்மையில் பிரிட்டனின் “வர்த்தகக் காலனியாக” உள்ளது; போர்ச்சுகல் உண்மையில் பிரிட்டனின் “செல்வாக்கு மண்டலமாக” உள்ளது. உண்மையில் அது அவ்வாறுதான் உள்ளது;
பிரிட்டிஷ் வங்கிகளின் மீதான பொருளாதாரச் சார்பு, பிரிட்டனிடம் கடன்பட்ட நிலைமை, அவற்றின்
இருப்புப்பாதைகள், சுரங்கங்கள், நிலம், இன்ன பிறவற்றை பிரிட்டிஷ் வாங்கியுள்ள நிலைமை
– இவை அனைத்தும் அந்த நாடுகளின் சுதந்திரத்தை மீறாமலேயே பிரிட்டன் அந்த நாடுகளைப் பொருளாதாரரீதியாக
“இணைத்துக்” கொள்வதைச் சாத்தியமாக்கியுள்ளது.
தேசத்தின்
சுய-நிர்ணயம் என்பது அரசியல் சுதந்திரம் ஆகும். அத்தகைய சுதந்திரத்தை ஏகாதிபத்தியம்
மீற முயற்சி செய்கிறது, ஏனென்றால் அரசியல்ரீதியான இணைப்பு பொருளாதாரரீதியான இணைப்பை
எளிதாக்குகிறது, மலிவாக்குகிறது, (அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதும், சலுகைகள் பெறுவதும்,
சாதகமான சட்டங்களை இயற்றுவதும், இன்ன பிறவும் எளிதாகிறது), அதிக வசதியானது, குறைந்த
தொந்தரவு கொண்டது- ஏகாதிபத்தியம் ஜனநாயகத்திற்குப் பதிலாக குழு ஆட்சியை நிறுவ முயல்வது
போல. ஆனால் ஏகாதிபத்தியத்தின் கீழ் பொருளாதாரரீதியாகச் சுயநிர்ணயத்தைச் “சாதிக்க முடியாது” என்பது முழு முட்டாள்தனமாகும். (மார்க்சியம்
மற்றும் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம் ஒரு கேலிச் சித்திரம் –லெனின்).
இங்கு பெரும்
அளவு ஏகாதிபத்தியச் சார்பைக் கொண்டுள்ள அர்ஜன்டைனாவையும் போர்ச்சுகல்லையும் கூட லெனின்
அரசியல் சுதந்திரம் கொண்ட நாடுகளாகத்தான் வரையறுக்கிறார். அவற்றோடு ஒப்பிடும்போது அந்த
அளவுக்கு ஏகாதிபத்தியச் சார்பு கொண்ட நாடாக இந்தியா இல்லை என்பது தெளிவான ஒன்று. மேலும்
இன்று இந்திய முதலாளிய வர்க்கம் அந்நிய நாடுகளுக்கு நிதி மூலதனத்தை ஏற்றுமதி செய்யும்
அளவுக்கு வளர்ந்துள்ளது. எகாதிபத்தியத்தியத்தின் இளநிலைப் பங்குதாரராக மாறியுள்ளது.
இந்நிலையில் ஏகாதிபத்திய மூலதனச் சார்பு இருப்பதினாலேயே இந்தியா அரசியல் சுதந்திரம்
கொண்ட நாடல்ல எனக் கூறுவது லெனினின் கூற்றுப்படி ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதமே தவிர
மார்க்சியமல்ல.
இலக்கின் கூற்றுப்படி மாவோவின் ஆய்வு இயங்கியலுக்கு
முரணானது!
அடுத்து, ‘இந்திய சமூகத்தில்
இன்றும் கூட சாதி ஒடுக்குமுறை, தேசிய இன ஒடுக்குமுறை, நிலப் பிரச்சினை, ஏகாதிபத்தியச்
சார்பு, மதவாத அரசியல் போன்ற பல முரண்பாடுகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன.. இந்தப்
பல அடுக்குகளான முரண்பாடுகளை ஒரு “முதலாளி Vs தொழிலாளர்” என்ற ஒரே வடிவமாகக் குறைப்பது
இயக்கவியல் ஆய்வாகாது என இலக்கு கூறுகிறது.’
சமூகத்தில் பல முரண்பாடுகள் இருந்தாலும் அவை ஒன்றோடொன்று
நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பது உண்மை. பல முரண்பாடுகள் நிலவினாலும் அவற்றில் மிக
மிக முக்கியமானது முதன்மை முரண்பாடாகும். அதனுடைய தீர்வு பிற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என்பதுதான் மார்க்சியம். முதலாளிய
சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடுதான்
முதன்மை முரண்பாடு. இந்த முதன்மை முரண்பாட்டைத் தீர்க்கும்போதுதான் பிற முரண்பாடுகளையும்
தீர்க்க முடியும் என்பதுதான் இயங்கியல் . இதைத்தான் மாவோ தனது முரண்பாடு பற்றிய கட்டுரையில்
விரிவாக விளக்குகிறார்.
“சிக்கலான ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகள்
இருக்கின்றன. அவற்றில் இன்றியமையாத ஒன்று முதன்மை முரண்பாடாகும். இதன் இருத்தலும் வளர்ச்சியும்
பிற முரண்பாடுகளின் இருத்தலையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கவோ செல்வாக்கு செலுத்தவோ
செய்கின்றன.
எடுத்துக் காட்டாக, முதலாளிய சமூகத்தில் முரண்பாட்டில்
உள்ள இரு சக்திகளான பாட்டாளி வர்க்கமும் முதலாளிகளும் முதன்மை முரண்பாடாக அமைகின்றன.
எஞ்சியுள்ள நிலவுடைமை வர்க்கத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையிலும், விவசாயக் குட்டி
முதலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயக்
குட்டி முதலாளிகளுக்கும் இடையிலும், ஏகபோகமற்ற முதலாளிகளுக்கும் ஏகபோக முதலாளிகளுக்கும்
இடையிலும், முதலாளிய ஜனநாயகத்திற்கும் முதலாளிய பாசிசத்திற்கும் இடையிலும், முதலாளிய
நாடுகளுக்கு இடையிலும், ஏகாதிபத்தியத்திற்கும் காலனிகளுக்கு இடையிலும் உள்ள பிற முரண்பாடுகள்
இம்முதன்மை முரண்பாட்டினால் தீர்மானிக்கப்படவோ செல்வாக்கு செலுத்தப்படவோ செய்கின்றன.”
(‘முரண்பாடு பற்றி’ மாவோ, தே,ப. தொ.1, பக்.461 -462. விடியல் பதிப்பகம், கோவை,2012)
மேலும். “இம்முதன்மை முரண்பாடு உட்கிரகிக்கப்பட்டவுடன்
அனைத்து சிக்கல்களும் உடனடியாகத் தீர்க்கப்பட இயலும். மார்க்ஸ் முதலாளிய சமூகம் குறித்த
தனது ஆய்வில் நமக்குக் கற்பித்த வழிமுறை இதுவே. அதே போன்று லெனினும் ஸ்டாலினும் ஏகாதிபத்தியத்தையும்,
முதலாளியப் பொது நெருக்கடியினையும் ஆய்வு செய்தபொழுதும் சோவியத் பொருளாதாரத்தை ஆய்வு
செய்தபோதும் இவ்வழிமுறையினையே நமக்குக் கற்பித்தனர். இதைப் புரிந்துகொள்ளாத ஆயிரக்கணக்கான
அறிஞர்களும் செயல்வீரர்களும் இருக்கின்றனர். அதன் விளைவாய் அவர்கள் குழப்ப நிலையில்
விழுந்து சிக்கலின் இதயத்தை அடைய இயலாமல்தான் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒரு வழியையும்
காண இயலாதது இயல்பே ஆகும். ( மேலே குறிப்பிடப்பட்ட நூல், பக்.463 -464)
இங்கு மாவோ முதலாளிய சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கும்
முதலாளிகளுக்கும் இடையிலான முதன்மை முரண்பாடு எவ்வாறு பிற முரண்பாடுகளின் இருத்தலையும்
வளர்ச்சியையும் தீர்மானிக்கும் அல்லது அவற்றின் மீது செல்வாக்கு செலுத்தும் என்றும்,
முதன்மை முரண்பாடு உட்கிரகிக்கப்பட்டவுடன் அனைத்து சிக்கல்களும் உடனடியாகத் தீர்க்கப்பட
இயலும் என்றும் கூறுகிறார். இலக்குவின் பார்வையின்படி மாவோவின் கருத்தும் இயங்கியல்
பார்வைக்கு முரணானது. ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக்
கொண்டு, மார்க்சிய அடிப்படை இல்லாமல் இந்த விமர்சனத்தை இலக்கு வைத்துள்ளதன் மூலம் தனது
அறியாமையை வெளிப்படுத்திக் கொள்கிறது
மேலும், மாவோவின் புதிய ஜனநாயகக் கோட்பாடு காலனிய
மற்றும் அரைக் காலனிய நாடுகளுக்கான ஒரு பொதுவான வழிகாட்டுதல் என்றும், அதன் பொதுத்தன்மை
மற்றும் குறிப்பான தன்மையைப் புரிந்து கொள்ளாமல் நிராகரிப்பது மார்க்சிய அணுகுமுறை
அல்ல என்கிறது இலக்கு. இந்தியா காலனி நாடாகவோ அரைக் காலனி நாடாகவோ இல்லை என்பதுதான்
உண்மை. இந்த நிலையில் பொதுத் தன்மைகளையும் குறிப்பான தனமைகளையும் இலக்குதான் விளக்க
வேண்டும். அது எந்த வகையில் இந்தியப் புரட்சியைத் திட்டமிட உதவும் என்பதையும் விளக்க
வேண்டும்.
வர்க்க அணி சேர்க்கையில் ஏற்படும் மாற்றம்
மேலும் வர்க்கக் கூட்டணிகளின் தந்திர முக்கியத்துவத்தைக்
குறைத்து மதிப்பிடுவதாக இலக்கு கூறுகிறது. புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்க அணி
சேர்க்கை வேறு; சோசலிசப் புரட்சிக்கான வர்க்க அணி சேர்க்கை வேறு. இந்த வேறுபாட்டைக்
கூட இலக்கு புரிந்து கொள்ளவில்லை.
புதிய ஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும்
சீனப் பெரும் சுவர் எதுவும் இல்லை எனக் கூறி, இரண்டு கட்டங்களிலும் வர்க்க அணி சேர்க்கையில்
ஏற்படும் மாற்றத்தை அறியாமல் புதிய ஜனாயகம் பேசுபவர்கள் இருக்கின்றனர். புதிய ஜனநாயகப்
புரட்சிக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் அனைத்து விவசாயிகளுடன் கூட்டணி வைக்கிறது.
ஆனால் சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் வறிய, ஏழை விவசாயிகளுடன் மட்டும்
கூட்டணி சேர்கிறது. எடுத்துக்காட்டாக, புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் நட்பு சக்திகளாக
கருதப்படும் பணக்கார விவசாயிகள் சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் எதிரிகளாக மாறுவார்கள்.
இந்த வேறுபாட்டை அறியாமல் அனைத்து விவசாயிகளுடன் கூட்டு வைப்பதன் மூலம் புதிய ஜனநாயகம்
பேசுபவர்கள் சமரசவாதிகளாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கின்றனர். புரட்சியின் நண்பர்கள்
யார், எதிரிகள் யார் என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்காமல் கூட்டணி சேர்வதன் மூலம் சமூக
மாற்றத்திற்குத் தடையாக இருக்கின்றனர்.
சோசலிசப் புரட்சிக்
கட்டத்தில் ரசியாவில் எவ்வாறு அணி சேர்க்கையில் மாற்றம் ஏற்பட்டது
என்பதை ஸ்டாலின் விளக்குவதைப் பார்ப்போம்.
“1917 பிப்ரவரி
புரட்சிக்குப் பிறகு பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரம் மற்றும்
“அனைத்து விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி” என்ற பழைய மூல உத்தி முழக்கத்திற்குப்
பதிலாக, பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயி வர்க்கத்தின் சர்வாதிகாரம்
மற்றும் “ஏழை விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி” என்ற புதிய மூல உத்தி முழக்கத்தைக் கட்சி
வைத்தது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.
“பாட்டாளி
வர்க்கம் மற்றும் ஏழை விவசாயி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற புதிய மூல யுத்தி முழக்கத்தை
வெற்றிகரமாக நடைமுறையில் வைத்ததால்தான் அக்டோபரில் கட்சி வெற்றி பெற முடிந்தது என நான்
உறுதியாகக் கூறுகிறேன்; அனைத்து விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி என்ற பழைய முழக்கத்திற்குப்
பதிலாக ஏழை விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி என்ற புதிய முழக்கத்தைக் கட்சி வைத்திருக்காவிட்டால்,
அது அக்டோபரில் வெற்றியையோ அல்லது அக்டோபர் புரட்சியின் போக்கில் அனைத்து விவசாயிகளின்
ஆதரவையோ பெற்றிருக்காது; அதாவது, போல்சுவிக்குகள் முதலாளியப் புரட்சியை நிறைவடையும்
நிலைக்கு எடுத்துச் செல்லும் வரையில்தான் அனைத்து விவசாயிகளும் போல்சுவிக்குகளை ஆதரித்தார்கள்,
அக்டோபர் புரட்சியின் அடிப்படை நோக்கம் முதலாளியப் புரட்சி அல்ல, மாறாக சோசலிசப்
புரட்சிதான் என்பதால் அனைத்து விவசாயிகளின் ஆதரவு என்பது நிபந்தனைக்கு உட்பட்டதாகவும்,
வரையறைக்கு உட்பட்டதாகவும் இருந்தது.” (எஸ்.போக்ரோவ்ஸ்கிக்கு பதில்-ஸ்டாலின் தொகுதி.9 அலைகள் பதிப்பகம், சென்னை)
வர்க்க அணி
சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால்தான், அக்டோபரில் கட்சி வெற்றி பெற்றது என்பதை ஸ்டாலின்
கூறுவதைப் பார்த்தோம்.
ஒரு கட்சியின்
திட்டம் சரியாக இருக்கும்போதுதான், புரட்சியின் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைச்
சரியாகத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் வர்க்க அணி சேர்க்கைகளை உருவாக்கி வழி நடத்திச் செல்லும்போதுதான் புரட்சி வெற்றி பெறும்.
இதைத்தான்
மாவோ “புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார்
நமது நண்பர்கள்? என்பதாகும். சீனாவில் முந்தைய அனைத்துப் புரட்சிகரப் போராட்டங்களிலும்
மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம், உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற
உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்துக்கொள்ளத் தவறியதுதான்” என்கிறார் (சீன சமூகத்தில் வர்க்கங்களின்
பகுப்பாய்வு - மாவோ தே.ப.1, பக்.15).
ஒரு சமூகத்தின்
நிகழ்ச்சி நிரலில் உள்ள புரட்சியின் கட்டத்தைப் பொறுத்து வர்க்க அணி சேர்க்கைகளில்
மாறுதல் ஏற்படும். புரட்சியின் கட்டத்தைச் சரியாகத் தீர்மானிக்கும்போதுதான் நண்பர்கள்
யார், எதிரிகள் யார் என்பதையும் தெளிவாக வரையறுக்க முடியும். எனவே ஒரு திட்டம் புரட்சியின்
கட்டத்தைச் சரியாகத் தீர்மானித்ததாக இருக்க வேண்டும்.
இன்று இந்தியாவில்
அரசியல் அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதைச் சரியாக வரையறுக்காத காரணத்தால்தான் புதிய
ஜனநாயகப் புரட்சி பேசுபவர்கள் எதிரிகளையும் நண்பர்களாகக் கருதிக் கொண்டு அவர்களிடம்
கூட்டணி சேர வேண்டும் என்கின்றனர். அதனல்தான் அவர்களால் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல
முடியவில்லை.
புதிய ஜனநாயகப்
புரட்சி என்ற கருத்தாக்கத்தை ஆய்வில்லாமல் வேதம் போல ஏற்றுக் கொண்ட இவர்களால் அதை நியாயப்படுத்த
முடியவில்லை. அதே சமயத்தில் சோசலிசப் புரட்சி என்ற நிலைப்பாட்டை அவர்களால் மார்க்சிய
– லெனினிய அடிப்படையில் மறுக்கவும் முடியவில்லை. அதனால்தான் இவர்கள் லெனினின் குறிப்பான
சான்றுகளிலிருந்து ஆதாரத்தைக் காட்டாமல், லெனின் இவ்வாறு கூறினார், அவ்வாறு கூறினார்
எனப் பொத்தாம் பொதுவாகக் கூறி வருகின்றனர். குறிப்பாக மார்க்சிய ஆசான்களின் எந்தச்
சான்றையும் காட்டி எமது ஆவணத்தில் வைக்கப்பட்டுள்ள கருத்துகளை இவர்களால் மறுக்க முடியவில்லை.
அதற்கு மாறாக குறுக்கல்வாதம், இயக்க மறுப்பியல் ஆய்வு, மார்க்சிய -லெனினிய ஆய்விலிருந்து
விலகல் போன்ற பொதுவான வார்த்தைகளை ஆங்காங்கு அள்ளித் தெளித்துள்ளனர். இதுதான் இவர்கள்
அறித்துள்ள மார்க்சிய – லெனினிய அடிப்படையிலான வாதம் போலும்!
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

Comments
Post a Comment